யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்! (திருமந்திரம்)
2023 ஜூலையில் மலேசியாவில் நடைபெற இருக்கும் 11-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் தொழில்நுட்பம் குறித்து பேசுவதற்காக 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திலேயே ‘உங்களால் கலந்துகொள்ள முடியுமா?’ என கேட்டிருந்தார்கள்.
இதற்கு முன்பில் இருந்தே, அதாவது இந்த மாநாட்டுக்காக குழு அமைத்து விவாதங்கள் நடைபெற ஆரம்பித்த நாளில் இருந்தே (2021) இந்தக் குழுவுடன் இணைந்து செயல்படும் வாய்ப்பு கிடைத்தது.
இந்தக் குழுவுக்குத் தேவையான வீடியோக்கள் தயார் செய்து தருவதிலும், அவர்களின் பணிகளை முழுமையாக டிஜிட்டல் மயமாக்கித் தரும் ப்ராஜெக்ட்டிலும் இணைந்து செயலாற்றி வந்திருக்கிறேன்.
எங்கள் ‘காம்கேர் சாஃப்ட்வேர்’ நிறுவனம் நம் நாட்டில் கம்ப்யூட்டர் அடி எடுத்து வைக்கவே தயங்கிக்கொண்டிருந்த 1990-களிலேயே தொடங்கப்பட்ட சாஃப்ட்வேர் நிறுவனம். ‘இந்தியாவில் ஐடி நிறுவனம் தொடங்கிய முதல் பெண் கம்ப்யூட்டர் பொறியாளர்’ என்ற அங்கீகாரங்களை எல்லாம் பெற்றிருக்கிறேன். மேலும் தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழுமையும் தொழில்நுட்பம் சென்றடைய நாங்கள் எடுத்த முயற்சிகளும், முன்னெடுப்புகளும் ஏராளம். தமிழிலேயே 150-க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப நூல்களை எழுதியுள்ளேன். அவை உலகம் முழுவதும் பல்வேறு பல்கலைக்கழங்களால் பாடத்திட்டமாக அங்கீகாரம் பெற்றுள்ளன. பல நூல்கள் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்ப்பும் ஆகியுள்ளன.
அது மட்டுமல்லாமல், ஒலி, ஒளி வடிவிலும் எங்கள் காம்கேரின் சாஃப்ட்வேர் தயாரிப்புகள் உலகமெங்கும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
தற்போது மெட்டாவெர்ஸ், ப்ளாக் செயின், செயற்கை நுண்ணறிவு என பல்வேறு தொழில்நுட்பங்களில் எங்கள் சாஃப்ட்வேர் தயாரிப்புகள் செய்துவருகிறோம்.
அந்த வகையில் கடந்த 32 வருடங்களுக்கு மேலான என் தொழில்நுட்ப அனுபவங்களை உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் எடுத்துரைப்பதற்கு, என் உரைக்கான தலைப்புகளை மட்டும் இன்று அனுப்பி வைத்தேன்.
மெட்டாவெர்ஸ், ப்ளாக் செயின், செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில்நுட்ப புரட்சிகள் கல்வி, மருத்துவம், இராணுவம், கேம்ஸ், பங்குசந்தை, போக்குவரத்து, சட்டம், காவல்துறை என பல்வேறுதுறைகளிலும் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்த உள்ளது என்றும், இனி வரும் காலம் எப்படி இருக்கும் என்றும் என் உரையின் போக்கு அமைந்திருக்கும்.
வீடுகளில் பலகாரம் செய்யத் தொடங்கும் முன் என்ன பலகாரம் செய்கிறோமோ அந்த மாவில் பிள்ளையார் பிடித்து சுவாமிக்கு நிவேதனம் செய்து விட்டுத் தொடங்குவதைப் போல, ஜூலையில் நடக்க இருக்கும் அந்த மாநாட்டிற்காக தினமும் நாங்கள் தயாரிக்கும் சாஃப்ட்வேர் தயாரிப்புகளின் சிறுதுளியை மாதிரியாக எடுத்து வைக்கிறோம்.
‘யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்!’ – எனும் திருமந்திரத்தின் வாக்கிற்கேற்ப தொழில்நுட்பம் எனக்குக் கொடுப்பதை இந்த உலகிற்கு அவ்வப்பொழுது திரும்ப அளித்து வந்தாலும், என் ஒட்டு மொத்த தொழில்நுட்ப அனுபவங்களை தொகுத்து ஒரு அரங்கின் வாயிலாக இந்த உலகுக்கு அளிக்க இருப்பதில் மகிழ்ச்சி என்பதைவிட திருப்தி.
நான் கடந்து வந்த பாதையை திரும்பிப் பார்ப்பதைப் போன்ற ஓர் அனுபவமாக இருக்கும்.
தொழில்நுட்ப உலகில் எனை இதுவரை இழுத்து வந்த இயற்கைக்கும், இறைவனுக்கும் நன்றி.
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
ComPcare Software
ஏப்ரல் 10, 2023