யாரையும் எதுவும் சொல்ல முடியலை!
ஆசிரியர் தலைமுடியை திருத்தச் சொல்லியதால் மாணவர் ஒருவர் தற்கொலை என்ற செய்தியை படித்தபோது எனக்கு என்னத் தோன்றுகிறது தெரியுமா?
பள்ளியில் என்ன, அலுவலகத்தில் கூட கொஞ்சம் வலுவாக நிர்வாக விதிமுறைகளை சொல்ல முடிவதில்லை. அப்புறம்தானே பள்ளி மாணவர்களைச் சொல்ல?
பள்ளி மாணவர்களுக்கு மட்டுமா, பொதுவாக இப்போதெல்லாம் யாரையுமே, அவர்கள் நமக்கு தீங்கை யே செய்தாலும் எதையும் சொல்ல முடிவதில்லை. சொன்னால் விலகி விடுகிறார்கள். சிலர் அவர்களின் ஆத்திரம் அடங்கும் வரை அவதூறு பரப்பிவிட்டு தலைமறைவாகிறார்கள்.
யாரையும் எதுவும் சொல்லக் கூடாது… நாம் அமைதியாக இருந்து நமக்கு வேண்டுமென்றே பிறர் அடாவடித்தனம் செய்தாலும், அநியாயம் செய்தாலும் எதையும் கேட்கக் கூடாது… அப்படியே அமைதியாகக் கேட்டாலும் நம் மீது வன்மம் வைத்துக் கொண்டு செயல்படும் கண்ணோட்டம் பெருகிவிட்டது. வன்மம் வைத்துக்கொண்டு செயல்படுதல் என்பது நம்மை ஒதுக்கலாம், தாக்கலாம், மன ரீதியாக துன்பம் தரலாம்.
சிறு உதாரணம். என் எழுத்தைப் பாராட்டி ஒருவர் வீடியோ தயாரித்து அனுப்பி இருந்தார். அந்த வீடியோவில் அவர் நான் எழுதிய ஒரு பதிவை உதாரணத்துக்கு எடுத்துக்கொண்டு விளக்கி இருந்தார். ஆனால் நான் சொன்ன கருத்துக்கு முற்றிலும் மாறாக (தலைகீழாக) புரிந்துகொண்டு விளக்கம் சொல்லி இருந்ததால் ‘நான் அப்படி சொல்லவில்லை. எனவே வீடியோவை அப்படியே நீங்கள் வெளியிட்டால் அதைப் பார்த்து பலர் அதே கருத்தை பரப்புவார்கள். நான் தவறாக சொன்னதைப்போல் சென்றடையும், எனவே வீடியோவில் எடிட் செய்து போடுங்கள்’ என சொன்னேன்.
அதற்கு அவர் ‘நான் வீடியோவையே நீக்கி விடுகிறேன்’ என சொல்லி யு-டியூபில் இருந்து நீக்கிவிட்டார். அத்துடன் என் பதிவுகள் பக்கம் தலை வைத்தும் பார்ப்பதில்லை. அதற்கு முன்பெல்லாம் தினமும் லைக் செய்பவர் முற்றிலும் இப்படி நடந்துகொள்வது அதிசயமாக இருந்தது. இத்தனைக்கும் படித்தவர், நிறைய நூல்கள் வாசிப்பவர். வாசிப்பும், கல்வியும் எந்த ஒரு பரந்த மனப்பான்மையையும் கொடுப்பதில்லை. அடிப்படையில் நல்லவர்களாக இருந்தால் மட்டுமே வாசிப்பு, கல்வி எல்லாம் அவர்களின் நற்குணங்களை மேம்படுத்தும்.
இப்படியாகத்தான் இன்றைய உலகம் சென்றுகொண்டிருக்கிறது என் அனுபவத்தில்….
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
காம்கேர் சாஃப்ட்வேர்
செப்டம்பர் 27, 2023 | புதன்