விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் திரைப்படம்!
மருத்துவத்துறையில் Ai-ன் பங்களிப்பு குறித்து இன்னும் ஆழமாக தெரிந்துகொள்ள அந்த மருத்துவமனை டீனை சந்திப்பதற்காக காத்திருந்தேன். அப்பாயின்மெண்ட் வாங்கி இருந்த நேரத்துக்கு முன்பே சென்றுவிட்டதால் காத்திருந்தேன்.
காத்திருந்த நேரத்தில் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்த சுட்டிப் பையன் வெகுவாகக் கவர்ந்தான். அவனைக் கட்டுப்படுத்த முடியாமல் அவன் அம்மாவும் பாட்டியும்.
பேச்சுக் கொடுத்தேன். இரண்டாம் வகுப்புப் படிக்கிறான். ஐந்தாறு நாட்கள் பள்ளி விடுமுறை. பெயரை ‘விஜய் ஆண்டனி’ என்றபோது ஆச்சர்யமாக அவன் அம்மாவை பார்த்து நீங்கள் ‘விஜய் ஆண்டனியின் ரசிகரா?’ என்றேன்.
இல்லை என்று மறுத்தவர் மகனின் பெயர் காரணத்தைச் சொன்னார். தன் கணவர் பெயரின் முதல் இரண்டு எழுத்து, தன் பெயரின் முதல் மூன்றெழுத்து மற்றும் கடவுளின் பெயர், இவற்றின் கலவையே தன் மகனின் பெயர் என்று சொல்லிவிட்டு விஜய் ஆண்டனி பிச்சைக்காரர்கள் பற்றி படம் எடுப்பதால் ‘நாங்கள் பிச்சைக்காரர்கள் குடும்பம்… படிக்கவே மாட்டோம்’ என மகன் படிப்பில் நாட்டமில்லாதை விளையாட்டாகச் சொல்லி அணைத்துக்கொண்டு கொஞ்சினார்.
‘படிக்கவில்லை என்றால் அந்த படங்களில் வருவதைப் போல்தான் பிச்சை எடுக்கணும். படித்தால் உன்னை சந்திக்க இப்படி நிறைய பேர் கால் கடுக்கக் காத்திருப்பார்கள்…’ என்று உற்சாகமாக சொன்னார்.
இதற்குள் அந்த சுட்டி ‘ஏன் நான் படிக்காததை எல்லாம் வெளில சொல்றே’ என்று அம்மாவை செல்லமாக குத்த ஆரம்பிக்க அவனை அழைத்துக்கொண்டு மருத்துவமனை ரிசப்ஷனை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.
ஒரு சினிமா எத்தனை பேருக்கு எத்தனை விதமான கோணத்தை பிரதிபலிக்கிறது என்று நினைத்துக்கொண்டேன்.
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
காம்கேர் சாஃப்ட்வேர்
செப்டம்பர் 28, 2023 | வியாழன்