இன்றைய இளைஞர்கள்!
அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்! என் வாழ்நாளில் தீபாவளிக்கு முதல் நாள் வெளியூரில் இருந்ததில்லை. இதுவே முதல் முறை. திருச்சி, கும்பகோணம், மயிலாடுதுறை, தஞ்சாவூர் என எல்லா ஊர்களிலும் கூட்டமான கூட்டம். எறும்புகள் இடைவெளி இல்லாமல் சாரை சாரையாக செல்வதைப் போல் சாலை முழுவதும் சிறு இடைவெளி இல்லாமல் ஜனக்கூட்டம்.
திருச்சியில் நாங்கள் தங்கி இருந்த நாட்களில் ஓட்டல் கீதாஞ்சலியில்தான் காபி, சாப்பாடு எல்லாமே. தங்கி இருந்த லாட்ஜுடன் இணைந்த ஓட்டல்.
அங்கு நான் கண்ட காட்சி மனதுக்கு அத்தனை இதமாக இருந்தது. என்னடா இது, சாப்பிட சென்ற ஓட்டல் சாப்பாட்டின் ருசியை சொல்லாமல் காட்சியை சொல்கிறாளே என குழப்பமாக இருக்கும்.
குழம்ப வேண்டாம். சொல்லி விடுகிறேன்.
முதல் நாள் மாலை நாங்கள் டிபனும் காபியும் சாப்பிடச் சென்றபோது இரவு 7.
துறுதுறுவென சுறுசுறுப்பே அசந்து போகும் அளவுக்கு அங்கும் இங்கும் ஓட்டல் சீருடையில் பரபரப்பாக 19, 20 வயதுகளில் இளைஞர்கள்.
‘எங்களிடம் ஒரு இளைஞர் வந்து என்ன சாப்படறீங்க மேம்…’ என்று கேட்டபோது என் குடும்பத்தினர் தங்களுக்கு வேண்டியதை சொல்ல, நான் லைட்டாக சாப்பிடலாமே என நினைத்து ‘பஜ்ஜி கிடைக்குமா?’ என்றேன்.
அதற்கு அந்த இளைஞர் ‘ஸ்னாக்ஸ் ஐட்டம் முடிஞ்சு போச்சு…’ என சொல்ல அதற்குள் மற்றொரு இளைஞர் அருகில் ஓடி வந்து ‘செஞ்சு கொடுத்துடலாம் மேம்’ என சொல்லி அந்த இளைஞரை கூட அழைத்துச் சென்று, ‘யாராவது ஏதாவது இப்படி கேட்டால் சமயோஜிதமாக செயல்பட வேண்டும். பஜ்ஜி மாவு கரைத்து பஜ்ஜி போடுவது சுலபம் தானே. செஃப்விடம் சொல்லி போட்டுக் கொடுக்கலாம்…’ என்று சொல்லிக் கொண்டே போனார்.
நான் அவரை கொஞ்சம் சப்தமாக அழைத்தேன். ‘எல்லோருடைய டிபனும் இலைகளில் வேண்டும். மர ஸ்பூன் வேண்டும்’ என சொன்னேன்.
‘செஞ்சுடலாம் மேம்’ என இரண்டு இளைஞர்களும் சொன்னார்கள்.
சொன்னபடி வாழை இலை, மர ஸ்பூனுடன் சகல மரியாதையுடன் டிபன் வந்தது. எங்களுக்கு சாப்பாடு முன்னே பின்னே இருந்தாலும் வாழை இலையும், மர ஸ்பூனும் முக்கியம். கொஞ்சம் நிம்மதியாக சாப்பிடுவோம்.
இதற்குள் ஓட்டல் கூட்டம் குறைய மற்ற இரண்டு இளைஞர்களும் அவர்களுடன் சேர்ந்து வந்து எங்களை கவனித்தார்கள். சம்மந்தி வீட்டினர் வந்தால் ஸ்பெஷல் கவனிப்பு இருக்குமே அதுபோல்.
காபி எப்படி வேண்டும் என கேட்டு அதே பக்குவத்தில் கொண்டுவந்தார்கள்.
‘எப்படி இருக்கு மேம்?’ என கேட்டு தெரிந்துகொண்டு கை கட்டி நின்றார்கள்.
காபி குடித்த சூட்டுடன் அவர்களிடம் ‘என்ன படித்திருக்கிறீர்கள்?’ என வழக்கம்போல் நேர்காணல்.
அவர்கள் திருச்சியிலேயே உள்ள கல்லூரியில் ஓட்டல் மேனேஜ்மெண்ட் படிக்கிறார்கள். ஒரு அறை எடுத்து தங்கி இருக்கிறார்கள். காலையில் கல்லூரி. மாலையில் ஓட்டலில் வேலை. விடுமுறை தினம் என்றால் ஊருக்குச் செல்கிறார்கள். முசுரி, விருதாச்சலம் என் வெவ்வேறு ஊர்வாசிகள்.
‘சமைக்கத் தெரியுமா… சமையலில் ஆர்வம் உண்டா?’ என கேட்டோம். அந்தக் கேள்வியை கேட்டிருக்கக் கூடாதல்லவா? ஓட்டல் மேனேஜ்மெண்ட் படிக்கிறவர்களுக்கு சமைக்கத் தெரியாமல் இருக்குமா?
‘ஓ…. ரொம்ப ஆர்வம் உண்டு மேம். அதனால் தான் இந்த குரூப் படிக்கிறோம்’ என்றார்கள்.
தீபாவளிக்கு டிரஸ் எடுத்தாச்சா, ஊருக்கு எப்போ, அம்மா அப்பா என்ன செய்கிறார்கள் என அனைத்துக்கும் அனைவருமே பதில் சொன்னார்கள். அவர்கள் பதில் சொன்ன விதம் ஏதோ ஹெச்.ஆர் நேர்காணலில் பதில் சொல்லும் பக்குவம்.
அந்த இறுக்கத்தைக் குறைக்க, என் சகோதரி ‘சகஜமா இருங்க… தீபாவளிக்கு ஊருக்குப் போனால் அம்மாவை உட்கார வைத்து சமைச்சுப் போடுங்க… அம்மா ரொம்ப சந்தோஷப்படுவாங்க…’ என்றார்.
‘இல்லை மேம். விட மாட்டாங்க… ஊருக்குப் போறதே ஒரு நாள் இரண்டு நாள்… படிப்பதும் கேட்டரிங், வேலை செய்வதும் ஓட்டலில், வீட்டிலாவது நான் சமைப்பதை சாப்பிட்டு போய் நல்லா படிடா, அது போதும் எனக்கு என்பார்கள்’ என்றார் அதில் ஓர் இளைஞர். மற்ற இளைஞர்களும் அதனை ஆமோதித்தார்கள்.
திருச்சியில் வேலை முடிந்ததும், சென்னைக்குக் கிளம்பும் நாள் அன்று அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள நிர்வாகத்திடம் அனுமதி கேட்டோம்.
புகைப்படம் எடுக்கும்போது ஒரு இளைஞர் மட்டும் ‘எனக்கு போட்டோ எடுத்துக்கொள்ள பிடிக்காது’ என்று சொல்ல மற்ற இளைஞர்கள் ‘டேய் நீ என்ன பெரிய இவனா, வாடா மேம் கூட போட்டோ எடுத்துக்கலாம்…’ என்று சொல்ல அனைவருடனும் புகைப்படம் எடுத்துக் கொண்டேன்.
என்னை ஈர்த்த ஒரு விஷயம் என்ன தெரியுமா? ‘அவர்களுடன் நான் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வாட்ஸ் அப்பில் ஷேர் செய்யுங்கள் மேம்’ என அந்த இளைஞர்களில் ஒருவருமே கேட்கவில்லை. இந்த சமூக ஊடக யுகத்தில் இப்படியான இளைஞர்கள் அதிசயமல்லவா?
யார் சொன்னது இளைஞர்கள் பொறுப்பற்றவர்கள், சமூக வலைதளங்களில் பொழுதைக் கழிப்பவர்கள் என?
இதோ நம் பாரதத்தின் பெருமையை பறைசாற்ற திருச்சி இளைஞர்கள். இப்படி எல்லா ஊர்களிலும் இருப்பார்கள்.
அவர்கள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டு விடைபெற்றோம்.
திருச்சியை விட்டு கார் கிளம்பிய போது ஓட்டல் சாப்பாட்டின் சுவை நாவை விட்டு விலகாமல் இருக்க, மனதுக்குள்ளோ அந்த இளைஞர்களின் பொறுப்பான செயல்பாடுகள் அழகு ஓவியமாய்.
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
காம்கேர் சாஃப்ட்வேர்
நவம்பர் 12, 2023 | ஞாயிறு