குழந்தையும், தெய்வமும்!

குழந்தையும், தெய்வமும்!

கும்பகோணத்துக்கு அருகில் ஒரு சிறு கிராமம். ஓட்டு வீடுகள் நிறைந்த அந்த சிறு கிராமத்தில் நான் சென்றிருந்த வீடு இருந்த தெருவின் ஒரு எல்லையில் கோயில். மறு எல்லையில் மற்றொரு கோயிலும் அதை ஒட்டி ஒரு பள்ளியும். பார்க்கவே தெய்வீகமாக இருந்தது.

அந்த வீட்டின் வாசலில் பூத்துக் குலுங்கி இருந்த செம்பருத்திப் பூக்களை பறிக்க பள்ளி மாணவிகள் மூன்று பேர் வந்திருந்தார்கள்.

நான் சிரித்தபடி ‘பூக்கள் கோயிலுக்கா…’ என கேட்டேன். ‘இல்லை… ஸ்கூலுக்குள்ள இருக்கும் பிள்ளையாருக்கு…’ என சொல்லிவிட்டு என்னை பார்த்தபடி பூக்களைப் பறித்து பக்கத்தில் நின்றிருந்த பெண்ணிடம் கொடுத்துக்கொண்டே இருந்தாள்.

இடையில் அவர்கள் பெயர், என்ன படிக்கிறார்கள், எங்கிருந்து பள்ளிக்கு வருகிறார்கள் என்றெல்லாம் கேட்டு தெரிந்து கொண்டேன்.

பிறகு செல்ஃபி எடுத்துக் கொள்ளலாமா என கேட்டேன். ஆர்வத்துடன் அவர்கள் தலையை ஆட்ட சுடச்சுட செல்ஃபி மொபைலுக்குள் அடைக்கலமானது.

அவர்கள் கிளம்ப முற்பட்டபோது, ‘சரி, உங்கள் பெயரை எல்லாம் கேட்டேன். என் பெயர் என்னன்னு உங்களுக்குத் தெரிய வேண்டாமா?’ என்றேன்.

தெரியணும் என்று பொருள்படும் வகையில் வெட்கச் சிரிப்புடன் தலையை ஆட்ட, ‘புவனேஸ்வரி’ என சொல்ல, அவர்களில் ஒரு சிறுமி ‘ஹை எங்க அம்மா பேரும் அதுதான்’ என்றாள். மற்ற இரண்டு சிறுமிகளும் நான் கேட்காமலேயே அவர்கள் தங்கள் அம்மா பெயரை சொன்னார்கள்.

குழந்தைகள் உலகம்தான் எத்தனை அழகாக இருக்கிறது. அவர்களின் மகிழ்ச்சிக்கு சொற்ப காரணங்கள் போதுமானதாக உள்ளது. அந்த கிராமம் தெய்வீகமாக இருப்பதற்கான காரணம் புரிந்தது.

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
காம்கேர் சாஃப்ட்வேர்
நவம்பர் 14, 2023 | செவ்வாய்

(Visited 1,107 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon