பேச்சாயிகள் சூழ் உலகு!
முக்கியமான விஷயமாக திருச்சி பயணம். வேலை முடிந்த பிறகு மெயின்கார்ட் கேட்டில் உள்ள மிக பிரமாண்டமான கடையில் பூஜை சாமான்களுக்கென்றே பிரத்யோகமாக உள்ள ஒரு தளத்துக்குச் சென்றோம்.
அங்கு 19-21 வயதுக்குட்பட்ட ஒரு இளம் விற்பனைப் பெண் பணியாளர் பாவனையில்லா உளமார்ந்த சிரித்த முகத்துடன் எங்களுக்குத் தேவையான சாமான்களை எடுத்துக் காட்டிக் கொண்டிருந்தார். அதில் கொஞ்சம் பழுதிருந்ததால் புதிதாக எடுத்துக் கொடுக்கிறேன் என்று சொன்னார்.
அவரது சுறுசுறுப்பு, அழகான தமிழில் அன்பொழுக பேசும் பேச்சு இவற்றால் ஈர்க்கப்பட்டோம். நாங்கள் கேட்ட சாமானை மற்றொரு பணியாளர் குடவுனில் இருந்து சென்று எடுத்து வர சென்றிருந்த போது, வழக்கம்போல் பேச்சு கொடுத்தோம்.
முதலில் என்ன படித்திருக்கிறார் என்றபோது ‘+2’ என்றார்.
‘ஏன் தொடர்ந்து படிக்கலை?’ என்று கேட்டதற்கு கொஞ்சம் மெளனமாக யோசித்தார்.
அதற்குள் நான் ‘படிப்பு வரலையா? படிக்க வசதி இல்லையா?’ என இரண்டு சாய்ஸ்களைக் கொடுத்தேன்.
வீட்டுச் சூழல் என்று சொல்லிவிட்டு தன் கதையை ரத்தினச் சுருக்கமாகத் தொடர்ந்தார்.
அம்மா சிறுவயதில் இறந்துவிட, அப்பா மறுமணம் செய்துகொண்டு தனியாகச் சென்றுவிட, இவர் தன் பாட்டியுடன் வசித்து வருகிறார். கடைக்கு தினமும் 9 மணிக்கு வர வேண்டும். இரவு ஒன்பது வரை வேலை. காலை டிபன் பாட்டி செய்து கொடுத்துவிடுவாராம். மதியமும், இரவும் வேலை செய்யும் கடையிலேயே தயாரிக்கும் சாப்பாடு, டீ, டிபன் எல்லாம். சுடச் சுட சுவையாக இருக்குமாம்.
தினமும் காலையில் 1-1/2 மணி நேரம், மாலையில் 1-1/2 மணி நேர பிரயாணம். இரவு 11 மணிக்கு வீட்டுக்குச் சென்று காலை 5 மணிக்கு எழுந்து பாட்டிக்கும் உதவி விட்டு வேலைக்கு வரும் வைபவத்தை அவர் சொன்ன போது பிரமிப்பாக இருந்தது.
இந்தக் கதையை எல்லாம் அவர் சொன்ன போது அவர் முகத்தில் கிஞ்சித்தும் சுயபச்சாதாபம் இல்லை. மாறாக வெட்கப் புன்னகை.
இதற்குள் மற்றொரு இளம் விற்பனை பணியாளர் (ஆண்) வந்து ‘அக்கா, சம்பளம் குறித்து கேட்டதற்கு அவங்க…’ என்று ஏதோ அவர்களுக்குள் பேச அவர் அனுசரணையாக ‘ஏண்டா இப்படி இருக்க, வாயைத் திறந்து ஒழுங்கா கேட்டியா… அப்படி இல்லைன்னா பெரியவர்கிட்ட போய் பேச வேண்டியதுதானே?’ என்று அக்கறையாக கடிந்து கொள்ள அந்த இளைஞர் தலையைக் குனிந்துகொண்டு வருத்தத்துடன் நடந்து சென்றார்.
‘யார் இவர்?’ என்று கேட்டேன்.
‘என் தம்பி’ என்றபோது ‘உங்கள் சொந்த தம்பியா?’ என்றேன்.
‘இல்லை, இங்க வந்து வேலைக்கு சேர்ந்த பிறகு தம்பியானார்’ என்றார்.
இதற்கிடையில் மற்றொரு இளம் விற்பனைப் பணியாளர் (ஆண்) ‘அக்கா, எனக்கும் இன்னும் சம்பளம் இன்கிரிமெண்ட் போடலை. நான் போய் கேட்கப் போறேன்’ என்று சொன்னதற்கு ‘அவனையும் கூட்டிட்டுப் போடா, அவன் வாய்க்கு உள்ளேயே பேசி இருக்கான்… அவங்க இவன் போனஸ் கேட்கிறான் என நினைத்து பதில் சொல்லி அனுப்பி இருக்கிறார்கள்’ என்று சொன்னார் அந்த இளம் பெண். குரலில் அத்தனை வாஞ்சையும், அன்பும்.
‘அவனுக்கு வேணும்னா அவன் போகட்டும், நான் இப்போ போய் கேட்கப் போறேன்…’ என்று சொன்ன அந்த இளைஞரை ‘ஏண்டா இப்படி சுயநலமா இருக்கே… அவனும் பாவம்தானே, அவனையும் கூட்டிட்டுப் போடா…’ என்று உரிமையுடன் கடிந்து கொண்டார்.
இதற்குள் எங்களுக்கு வேண்டிய சாமான் வர, அதை சரி பார்த்து கொடுத்தார்.
‘தீபாவளிக்கு டிரஸ் எடுத்தாச்சா?’ என்றேன்.
‘ஓ, போனஸ் போட்டப்பவே எடுத்துட்டேன்… இங்க என் கூட வேலை பார்க்கும் ஐந்து பேரும் சேர்ந்து ஒரே பேட்டன்ல சுடிதார் எடுத்தோம்’ என்றார். சொல்லும் போதே அழகு சிரிப்பு.
‘எங்கே எடுத்தீங்க…’
‘சாரதாஸ்…’ என்று சொல்லும்போதே சாரதாஸ் என்ற பெயரே மிக அழகானதைப் போல தோன்றியது.
‘நீங்கக்கா… தீபாவளிக்கு துணி எடுத்தீட்டீங்களா’ என்றார்.
‘சென்னையிலேயே எடுத்துட்டோம்…’ என்றேன்.
‘அப்போ நீங்க சென்னையில் இருந்தா வந்திருக்கீங்க..’ என்று கண்களை விரித்து ஆச்சர்யத்துக்கே அழகு கூட்டினார்.
சம்பளம் எவ்வளவு கொடுக்கிறார்கள் என கேட்டபோது அவர் சொன்ன சம்பளம் மனதுக்கு நிறைவாக இருந்தது. வேலையில் சரியாக இருந்தால் ரொம்ப சந்தோஷமாக வேலை செய்யலாம் இந்தக் கடையில். எந்த பிரச்சனையும் கிடையாது எங்களுக்கு என வெகு இயல்பாக பேசினார்.
‘போகப் போக இன்கிரிமெண்ட் எல்லாம் போடுவார்கள்’ என்றார்.
எங்களுடன் மட்டுமில்லாமல் அவர்களுக்குள்ளும் சிரித்தபடி மன மகிழ்ச்சியுடன் வேலை செய்தார்கள்.
பேசியபடி பில்லிங் செக்ஷனுக்கு சாமானை அனுப்பிய பிறகு அவர் பெயரை கேட்டேன்.
‘பேச்சாயி’ என்று சொல்லிவிட்டு யோசிக்கவோ ஆச்சர்யப்படவோ விடாமல், கூடுதல் தகவலாக ‘கடவுள் பெயர்’ என்றார்.
அங்கு பணிபுரியும் அனைத்து இளம் பெண்களின் முகமுமே ஒரே அச்சில் வார்த்ததைப் போல் இருந்தது. முகம் மட்டுமல்ல, படிப்பு, வயது, வீட்டுச் சூழல் இப்படி எல்லாமே. எல்லோர் முகத்திலும் மகிழ்ச்சி, சிரிப்பு, நிம்மதி. நிர்வாகத்தின் வெற்றி இதுதான்.
இந்தப் பேச்சாயிகள் அனைவருக்கும் ஒரு கனவு இருக்கும். கற்பனை வாழ்க்கை இருக்கும். அவை எல்லாமே நிறைவேறாவிட்டாலும், பிரச்சனை இல்லாத நிம்மதியான வாழ்க்கை அமைய அந்த பேச்சாயி அம்மான் தான் அருள் புரிய வேண்டும்.
புகைப்படம் எடுக்கவில்லை. எடுத்துக்கொள்ளலாமா எனவும் கேட்கவில்லை. ஒரு ஆசையில் அவர்களும் ஓகே சொல்லிவிட்டால், அது நிர்வாகத்தின் காதுகளுக்குச் சென்று அவர்களின் வேலைக்கு பாதகம் வந்துவிட்டால் என்ன செய்வது என்ற அக்கறையில் புகைப்படம் எடுக்க கை துறுதுறுத்தாலும், மனதுக்குள் மட்டும் அவர்களைப் புகைப்படமாக்கிக் கொண்டு அவர்களுக்கு தீபாவளி நல்வாழ்த்து சொல்லிவிட்டு விடைபெற்றோம்.
எல்லா வசதிகளும் தளும்பத் தளும்ப இருந்தும் ஏதேதோ சோகத்தை சுமந்து கொண்டு வாழும் மனிதர்கள் இவர்களைப் பார்த்து பாடம் கற்றுக் கொள்ளலாம்.
பேச்சாயிகளின் சந்திப்புக்குப் பிறகு நான் இன்னும் கூடுதல் உற்சாகமானேன்.
படம்: மைக்ரோசாஃப்ட் Ai மூலம் வடிவமைக்கப்பட்ட என் பேச்சாயி!
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
காம்கேர் சாஃப்ட்வேர்
நவம்பர் 11, 2023 | சனிக்கிழமை