அசத்தும் Ai – நூலில் எழுதப்பட்டுள்ளவை!

To Purchase WhatsApp: 9444949921

அசத்தும் Ai – Part1

தவழ்ந்து கொண்டிருக்கும் ஒரு குழந்தைக்கு முதல் அடியை எடுத்து வைக்க உதவுவதுதான் பெற்றோரின் பெரும் சவால். பிறகு அந்தக் குழந்தையை கைகளில் பிடிக்க முடிகிறதா? அதுபோல்தான் 1990-களில் கம்ப்யூட்டரின் வரவையே தங்களுக்குப் போட்டியாகக் களம் இறங்கிய ஒரு சாதனமாகக் கருதிய நம் மக்களுக்கு, கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் நமக்கு உதவுவதற்காக வந்துள்ள ஒரு சாதனம்தான் என்று புரிய வைப்பதுதான் சவாலாக இருந்தது. புரிந்துகொள்ள ஆரம்பித்த பிறகு நம் மக்கள் தொழில்நுட்பத்தை என்ன பாடுபடுத்துகிறார்கள் என்பதை நாம் அனைவரும் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம்.

ஆனால் இந்தக் கஷ்டம் Ai எனும் செயற்கை நுண்ணறிவை அறிமுகப்படுத்துவதில் இல்லை. மக்கள் தாங்களாகவே Ai உடன் நட்பாகி விட்டார்கள். அது செய்யும் சேட்டைகளை கவனித்துக் கொண்டும், செய்ய இருக்கும் அதிசயங்களை வியப்பாக எதிர்பார்த்துக் கொண்டும் காத்திருக்கிறார்கள்.

Ai என்பது ஒரு ரோபோவா என்பது ஒருசிலரின் கேள்வி. Ai என்பது ஒரு ரோபோவாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. Ai தொழில்நுட்பம் கம்ப்யூட்டரில், காமிராவில், மொபைலில், காரில், பைக்கில், வாஷிங் மெஷினில், வேக்யூம் கிளீனரில் என எந்த சாதனத்தில் வேண்டுமானாலும் பொருத்தப்பட்டிருக்கலாம். அதைப்போல ரோபோவிலும் பொருத்தி செயல்பட வைக்க முடியும். அவ்வளவுதான். அதனால்தான் சொல்கிறேன், ரோபோ என்பதே Ai என்றோ, Ai என்பதே ரோபோ என்றோ அர்த்தம் கிடையாது.

மேலும் ஒரு முக்கியமான விஷயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். சாதனங்களில் மட்டுமில்லாமல் சாஃப்ட்வேர்கள் மற்றும் மொபைல் ஆப்களிலும் Ai தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. போலவே, மற்ற சாதனங்களில் பயன்படுத்தப்படும் Ai தொழில்நுட்பம், சாஃப்ட்வேர்களாகவும் அதற்குத் தேவையான தகவல்கள் டேட்டாவாகவும் சேகரிக்கப்பட்டிருக்கும்.

எந்த ஒரு விஷயமும், அது தயாரிப்பு, தொழில்நுட்பம், பொருள், கண்டுபிடிப்பு இப்படி எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம், அது மக்களிடம் விரைவாகச் சென்றடைய மக்கள் மனதின் ஓரத்தில் இருக்கும் ஏதேனும் ஒரு சிறு ஏக்கத்தை அது நிவர்த்தி செய்வதாக இருக்க வேண்டும்.

ஆம். அந்த விஷயத்தைத்தான் Ai கையில் எடுத்துள்ளது. பொதுவாகவே நம் எல்லோருக்குமே பார்ப்பதற்கு அழகாக, பொலிவாக பளிச்சென நம்மை வெளிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்கின்ற ஆவல் இருக்கும். அது தவறான விஷயம் இல்லை. நாம் பளிச்சென வெளிப்படுவது நம் கம்பீரத்தை ஆளுமையை அதிகரிக்கும். உள்ளுக்குள் ஏதேனும் தாழ்வு மனப்பான்மை இருந்தால் அதையும் அழித்துவிடும். இது ஓர் உளவியல். இந்த உளவியலை கையில் எடுத்துக் கொண்டுள்ளது Ai.

நம்முடைய ஒரு புகைப்படத்தைக் கொடுத்தால், Ai நம்முடைய பல அவதாரங்களை நாமே வியக்கும் அளவுக்கு கூகுள் செய்யும் வேகத்தைவிட குறைவான நேரத்தில் நம் கண்முன்னே கொட்டி Ai மீது ஒரு தீராக் காதலை உண்டு செய்துள்ளது.

புகைப்படங்களை பேச வைப்பது, டைப் செய்யும் வார்த்தைகளுக்கு ஏற்ப ஓவியங்களை வரையச் செய்வது, வரைந்த ஓவியங்களுக்கு ஸ்கிரிப்ட் கொடுத்து பேச வைப்பது என எழுத்து, ஓவியம், ஒலி, ஒளி என ஒவ்வொரு விஷயத்திலும் Ai புகுந்து விளையாடத் தொடங்கி விட்டது.

சாப்பிடுவதற்கு முன் பசியை தூண்டுவதற்காக அல்லது சமன் செய்வதற்காக நாம் சாப்பிடும் பதார்த்தங்களுக்கு அப்பிடைசர் என்று பெயர். பெரும்பாலும் ஓட்டல்களில் சாப்பிடுவதற்கு முன்னர் நாம் சாப்பிடும் சூப், வற்றல், பகோடா போன்றவை அப்பிடைசர் பிரிவின் கீழ் வரும்.

இதுபோல நம் மக்கள் Ai சென்னும் செயற்கை தொழில்நுட்பத்துடன் இணைந்து ஓடுவதற்கான அப்பிடைசர் தான் Ai புகைப்படங்கள். இனி நம் மக்களை கைகளில் பிடிக்க முடியாது.

இதே Ai புகைப்பட லாஜிக், சந்திரயான் – 3 வெற்றிகரமாக நிலாவில் தரை இறங்கிய நிகழ்விலும் பயன்பட்டுள்ளது. உலக அளவில் நம் பாரத நாட்டை தலை நிமிரச் செய்துள்ள இந்த வெற்றியில் Ai எப்படி எல்லாம் செயலாற்றி உள்ளது என்பதை இந்த நூலில்  ‘சந்திரயான் – 3 வெற்றியில் Ai’ என்ற அத்தியாயத்தில் விளக்கி இருக்கிறேன்.

மருத்துவத்துறையில் பயன்படுத்தப்படும் Ai என்பது ஒரு மருத்துவரது அனுபவம் அல்ல, ஆயிரம் ஆயிரம் மருத்துவர்களின் அனுபவக் கிடங்கு. உலகிலுள்ள அத்தனை மருத்துவர்களின் அனுபவங்களையும் தகவல்களாக Ai – க்கு பாடமாக உள்ளே புகுத்தி இருப்பார்கள். இந்தத் தகவல்கள் மூலமும், புரோகிராம் மற்றும் சாஃப்ட்வேர்கள் மூலம் நாம் கொடுக்கும் பயிற்சிகளாலும், Ai-ன் தானாகவே பயிற்சி எடுத்துக் கொள்ளும் திறன்களாலும் அவை பல வருட அனுபவம் பெற்ற ஒரு மருத்துவரை விடவும் பல மடங்கு திறன் வாய்ந்ததாக இருக்கும். எனவேதான், அதனால் மிகக் குறுகிய நேரத்திலேயே நல்ல தீர்வுகளைக் கொடுக்க முடிகிறது.

மருத்துவத்துறையில் மட்டுமல்ல, Ai தொழில்நுட்பத்தில் செயல்படும் அத்தனை துறைகளிலும் இதே லாஜிக்கில்தான் செயல்படுத்தப்படுகிறது. விவசாயத்துக்குப் பயன்படும் Ai என்றால் அதற்குள் விவசாயம் சம்மந்தப்பட்ட தகவல்கள், கல்வித்துறைக்கான Ai என்றால் அதற்குள் கல்வி சம்மந்தப்பட்ட தகவல்கள் என உள்ளீடு செய்வார்கள். அதாவது அந்தந்தத் துறைக்கான தகவல்களைத் திரட்டி உள்ளீடு செய்து Ai-க்குப் பயிற்சி கொடுப்பார்கள். Ai என்பது ஒரு தனி மனிதனின் அனுபவத்தை மட்டும் பெற்றிருப்பதில்லை, உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நிபுணர்களின் அனுபவங்களை உள்வாங்கி அவற்றின் மூலம் பயிற்சி எடுத்திருப்பதால்தான் நம் கற்பனைக்கும் எட்டாத பல விஷயங்களை செய்து நம்மை மிரள வைக்கிறது.

கல்வி, மருத்துவம், விவசாயம், இராணுவம், விண்வெளி என மிக முக்கியமானத் துறைகளை எல்லாம் Ai ஆக்கிரமித்து வருகின்றன என்பது மிக ஆரோக்கியமான விஷயம்.

Ai – டன் இணைந்து செயல்படும் ஏராளமான தொழில்நுட்பங்கள் உள்ளன. அவை: Block Chain, CryptoCurrencey, Augmented Reality (AR), Virtual Reality (VR), MetaVerse, iNternet of Things (iOT), 3D Reconstruction, Edge Computing. இவற்றைத் தொகுத்து  ‘மெட்டாவெர்ஸ்’ என்ற நூலை தனியாக வெளியிட உள்ளோம். அதையும் சேர்த்துப் படித்துப் புரிந்துகொண்டால், புதுமைகள் படைக்க இருக்கும் தொழில்நுட்ப பிரமாண்டத்துக்குள் நீங்கள் அனைவரும் சுலபமாகப் புகுந்துப் புறப்பட்டு வர ஏதுவாக இருக்கும்.

மனிதனின் நுண்ணறிவைப் போலவே செயற்கையாக நுண்ணறிவை உருவாக்குவதில் தொடங்கிய ஆராய்ச்சிகள் மனிதனுக்கு உதவுவதற்காக ஆரம்பிக்கப்பட்டு, மனிதனைப் போலவே செயல்பட ஆரம்பித்து ஒரு கட்டத்தில் மனிதனை மிஞ்சி சென்றுவிடும் அபாயமும் இருப்பதாக கருதுகிறார்கள் இந்தத் துறையில் ஆராய்ச்சியில் ஈடுபடும் விஞ்ஞானிகள். இதற்காக என்ன மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்பதை எல்லாம் இந்த நூலின் கடைசி அத்தியாயத்தில் எழுதி உள்ளேன்.

நம் நாட்டில் கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் அடி எடுத்து வைப்பதற்கு முன்பே கம்ப்யூட்டர் சயின்ஸில் இரட்டைப் பட்டம் (எம்.எஸ்.ஸி கம்ப்யூட்டர் சயின்ஸ்) பெற்று, 1992 ஆம் ஆண்டு சென்னையில் ‘காம்கேர் சாஃப்ட்வேர்’ (ComPcare Software) என்ற ஐடி நிறுவனத்தையும் ஆரம்பித்து ‘இந்தியாவில் முதன் முதலில் ஐடி நிறுவனம் தொடங்கிய பெண் தொழில்நுட்ப வல்லுநர்’ என்ற அங்கீகாரத்தையும் பெற்று 32 காலம் ஓடி விட்டன. இந்த 32 ஆண்டு காலத்தில் எங்கள் காம்கேர் சாஃப்ட்வேர் நிறுவனத்தில் செய்த ஆராய்ச்சிகள் மூலம் நாங்கள் தயாரித்த சாஃப்ட்வேர்கள், அனிமேஷன்கள், ஆப்கள் ஏராளம்.

அந்த அனுபவங்களை எல்லாம் அந்தந்தக் காலகட்டத்திலேயே புத்தகங்களாக எழுதி பதிவு செய்து வந்துள்ளதால் இதுவரை 250-க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப நூல்களை தமிழில் எழுதி உள்ளேன்.

அவற்றில் பல, இந்தியாவில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் பாடத்திட்டமாகவும், உலகில் உள்ள பல நாடுகளின் நூலகங்களிலும் இடம்பெற்றுள்ளன. இதன் நீட்சியாக இப்போது எங்கள் நிறுவனத்தில் Ai சாஃப்ட்வேர்களைத் தயாரிக்கும் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.

இவற்றின் மூலம் எனக்குக் கிடைத்து வரும் நேரடி அனுபவங்களைத் தான் இந்த நூலில் உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொண்டுள்ளேன்.

அனைவரும் படித்துப் பயன்பெறுக! வாழ்த்துகள்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
காம்கேர் சாஃப்ட்வேர்
இமெயில்: compcare@hotmail.com
வாட்ஸ் அப்: 9444949921

 

(Visited 21,016 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon