‘இனி எல்லாம் மெட்டாவெர்ஸ்’ நூலில் எழுதப்பட்டுள்ளவை!

To Purchase WhatsApp: 9444949921

இனி எல்லாம் மெட்டாவெர்ஸ்!

மெட்டாவெர்ஸ் – நம் கண்களை நம்ப வைத்து அதன் மூலம் மூளையை இயங்கச் செய்கிறது. கூடவே காதுகள் மூலம் சப்தங்களையும், மூக்கின் மூலம் நறுமணங்களையும் உணரச் செய்து மனிதனை மாயாஜால உலகத்தை அறிமுகம் செய்கிறது.

நிஜத்தில் என்னவெல்லாம் செய்கிறோமோ அவற்றை எல்லாம் அங்கு செய்து மகிழலாம். இன்னும் சொல்லப் போனால் நிஜத்தில் சாத்தியமில்லாதவற்றைக் கூட அங்கு அரங்கேற்றிக் கொள்ளலாம். உதாரணத்துக்கு இறந்துபோன நம் உறவினர்களை காண வேண்டும் என நினைத்தால் அதற்கும் அங்கு சாத்தியக் கூறுகள் உண்டு.

நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் நிஜ உலகம் போலவே இன்டர்நெட்டில் இயங்கும் உலகத்துக்கு மெட்டாவெர்ஸ் (MetaVerse) என்று பெயர். ஏற்கெனவே இன்டர்நெட் உலகத்தை வெர்ச்சுவல் / டிஜிட்டல் உலகம் என்றுதானே அழைக்கிறோம். அதில் இருந்து மெட்டாவெர்ஸ் எப்படி வேறுபடுகிறது என பார்க்கலாம்.  மெட்டாவெர்ஸ் உலகமும் கிட்டத்தட்ட வெர்ச்சுவல் உலகமே. ஆனால் மெட்டாவெர்ஸ் இன்னும் கொஞ்சம் மனிதனுக்கு நெருக்கமாகி உள்ளது.

இப்போது இயங்கிக் கொண்டிருக்கும் டிஜிட்டல் உலகில் வங்கிகள், கல்வி நிறுவனங்கள், ஓட்டல்கள், கடைகள், மருத்துவமனைகள் என்று அனைத்துக்கும் வெப்சைட்டுகள் உள்ளன. மொபைல், ஐபேட், டேப்லெட், லேப்டாப், டெஸ்க்டாப் போன்ற டிஜிட்டல் சாதனங்களுக்கு வெளியே இருந்து கொண்டு, அந்தந்த வெப்சைட்டுகளில் நமக்கான யூசர் நேம், பாஸ்வேர்ட் மூலம் உள்ளே சென்று ஆன்லைனில் அதனதன் பயன்களை அனுபவிக்கின்றோம்.

ஆனால், மெட்டாவெர்ஸ் உலகில் நுழைய நமக்கு ஒரு டிஜிட்டல் டோக்கனும் (NFT), நமக்கான அவதாரமும் (Avatar) தேவை. அந்த டிஜிட்டல் டோக்கன்தான் மெட்டா உலகில் நமக்கான பாஸ்வேர்ட்.

நம்மைப் போலவே 3D வடிவில் வடிவமைக்கப்படும் உருவமே நம் அவதாரம். மெட்டாவெர்ஸ் உலகுக்கான சிறப்பு கண்ணாடிகளும், ஹெட் செட்டுகளையும் அணிந்துகொண்டு மெட்டாவெர்ஸ் உலகிற்கு நாமே நேரடியாகச் சென்று அதனதன் பயன்களை அனுபவிக்க இருக்கிறோம். நமக்கு பதிலாக நம் அவதாரம் (Avatar) மெட்டா உலகிற்குள் சென்று காரியத்தை சாதித்துக்கொண்டு வரும். ஆம், நிஜ உலகில் நாம் என்ன செய்கிறோமோ, என்ன சொல்கிறோமோ, என்ன நினைக்கிறோமோ  அதை நம் அவதாரம் உள்வாங்கிக்கொண்டு அதன்படி செயலாற்றும் வல்லமை பெற்ற கற்பனைக்கும் மிஞ்சிய உலகம்தான் மெட்டாவெர்ஸ் உலகம்.

இப்போதுள்ள சாதாரணமான வெர்ச்சுவல் உலகில் டிஜிட்டல் சாதனங்களுக்கு வெளியே நின்று கொண்டு வெப்சைட்டுகள் மூலம் டிஜிட்டல் உலகில் பயணிக்கிறோம்.

வர இருக்கும் / வந்துகொண்டே இருக்கும் மெட்டாவெர்ஸ் உலகில் டிஜிட்டல் சாதனங்களுக்கு வெளியே நாம் நிற்கப் போவதில்லை. நாமே நம் அவதாரம் மூலம் டிஜிட்டல் உலகுக்குள் நேரடியாகச் செல்ல இருக்கிறோம்.

இதுதான் இரண்டுக்குமான மிக முக்கியமான வித்தியாசம்.

1990-களில் பிரபலமான ‘We are Computerised Firm’ என்ற பெருமைமிகு வாசகங்களுக்கு நிகராக ‘We are MetaVerse Enabled Firm’ என்று பெருமையாக சொல்லிக் கொள்ளும் காலம் வந்துகொண்டே இருக்கிறது.

நாமும் அந்த உலகில் இணைந்து செயலாற்றத் தயாராக இந்த நூல் உதவும் என்பதில் சந்தேகமில்லை. அனைவரும் படித்துப் பயன்பெறுக! வாழ்த்துகள்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
காம்கேர் சாஃப்ட்வேர்
இமெயில்: compcare@hotmail.com
வாட்ஸ் அப்: 9444949921

(Visited 19,889 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon