Reading Ride: ஐந்து வயது சிறுமியின் வாசிப்பு!

தேஜஸ்வினி

Wow – What a co-incident?

ஒரு போன் அழைப்பு. பல வருடங்களுக்குப் பிறகு மீடியா நண்பர் ஒருவர் பேசினார்.

நலன் விசாரிப்புகளுக்குப் பிறகு போன் செய்ததற்கான காரணத்தைச் சொன்னார்.

கொரோனாவிற்குப் பிறகு அவர் சென்னையில் இருந்து அவரது சொந்த ஊருக்குச் சென்று Work From Home செய்து வருகிறார். 2016 ஆம் வருடம் எங்கள் நிறுவன கிளையிண்ட்டுகளுக்கெல்லாம் எங்கள் காம்கேரில் வெளியிட்டிருந்த ஒரு புத்தகம் பரிசளித்திருந்தேன்.

புத்தகத்தின் தலைப்பு : ‘திறமையைப் பட்டைத் தீட்டுங்கள்’

அந்தப் புத்தகத்தை அவருக்கும் கொடுத்திருக்கிறேன்.
அதை ஐந்தாம் வகுப்புப் படிக்கும் அவர் மகள் எடுத்து அவ்வப்பொழுது படிப்பதாகவும், அப்போது என் நினைவு வந்ததால் போன் செய்ததாகவும் கூறினார்.

எனக்கோ ஆச்சர்யம். ஒரு சிறுமி தமிழில் எழுதப்பட்ட ஒரு புத்தகத்தை அவ்வப்பொழுது எடுத்து படிக்கிறார் என்றால் வியப்பாக இருக்காதா?

‘ஏன் அடிக்கடி எடுத்துப் படிக்கிறார்? அவ்வளவு நன்றாக இருக்கிறதாமா?’ என்றேன்.

அவரது குழந்தைகள் மைக் வாங்கித்தரச் சொல்லி கேட்பார்களாம். அவர்களுக்கு மைக் வாங்கிக் கொடுத்திருக்கிறார். அந்த மைக்கில் தினமும் ஏதேனும் படித்தபடி பேசியபடி வளைய வருகிறார்களாம். அப்படி பேசுவதற்காக என் புத்தகத்தை எடுத்து வாசிக்கிறார்களாம் மைக்கில்.

அப்படியா என்ன மைக்? என்ன விலை? எங்கு வாங்கினீர்கள்? என்றெல்லாம் கேட்டு தெரிந்துகொண்டேன்.

குழந்தைகள் கேட்கிறார்கள் என்றவுடன் ‘இதெல்லாம் இப்போ எதற்கு?’ என்று சொல்லாமல் வாங்கிக் கொடுத்தவரை பாராட்டினேன்.

அவர் போனில் பேசிக் கொண்டிருக்கும்போதே, அவர் மகள் என்னிடம் பேச ஆசைப்பட்டார் என சொல்லி போனை அவரிடம் கொடுத்தார்.

‘ஹலோ’ என்றவரிடம் ‘ஹாய்… உன் பேரென்ன?’, ’என்ன படிக்கிறாய்?’, ‘எங்கு படிக்கிறாய்?’ என்ற கேள்விகளுக்கு கம்பீரமாய் பதில் சொன்னார். குரல் ‘கணீர் கணீர்’ என காதுகளில் ஒலித்தது. பேசிய தொனியில் கம்பீரமும், தன்னம்பிக்கையும். மழலையும் மாறவில்லை. எல்லாம் கலந்த கலவையாக இருந்தது.

‘என்ன புத்தகம் படிக்கிறாய்?’ என்றதற்கு புத்தகத்தின் பெயரை சொன்னார். பேச்சை வளர்ப்பதற்காகவே, ‘யார் எழுதிய புத்தகம்?’ என்று கேட்டேன். ‘நீங்க எழுதிய புத்தகம்தான்’ என்றார். ‘பிடித்திருக்கிறதா, புரிகிறதா?’ என்றேன். ‘ம். புரியாத இடத்தில் அப்பாவிடம் கேட்டு தெரிந்து கொள்வேன்’ என்றார்.

‘அடடா’ என்ற வியப்பு என் மனதில் இருந்து மாறுவதற்கு வெகு நேரம் ஆனது.

பேசிய சிறுமியை வாழ்த்திவிட்டு போனை வைத்த பிறகு மீண்டும் போனில் அழைத்தேன். ‘உங்கள் மகள் பின்னாளில் தன்னம்பிக்கையான பெண்ணாக வருவாள். குரலில், தொனியும், மொழியும் அசத்தலாக உள்ளது. அவளுக்கு திறமையை பட்டைத் தீட்டுங்கள் புத்தகத்தில் எது பிடித்திருக்கிறது என்பதை வீடியோவில் பேசி ரெகார்ட் செய்து தர முடியுமா?’ என்று கேட்டேன். (

அடுத்த அரை மணி நேரத்தில் வீடியோவை அனுப்பினார். அதன் பிறகு அவர் சொன்ன விஷயம் இன்னும் ஆச்சர்யமானது. (https://youtube.com/shorts/WCa-aDXhAOU)

நான் வீடியோ ரெகார்ட் செய்துதரச் சொன்னபோதுதான் புத்தகத்தின் முதல் பக்கத்தைப் பார்த்திருக்கிறார்.

மிகச் சரியாக 07-01-2016 அன்று தான் அந்தப் புத்தகத்தை நான் பரிசளித்திருக்கிறேன். நேற்று 07-01-2024. கிட்டத்தட்ட 8 வருடங்களுக்குப் பிறகும் அதே தேதியில் அந்த நூல் உயிர்ப்புடன் இருக்கிறது.

எத்தனையோ மழை, புயல், வீடு மாற்றல் இவை அத்தனையையும் தாண்டி அந்தப் புத்தகம் 10 வயது சிறுமியின் கைகளில் வாசிப்புக்காக அமர்ந்திருப்பதை என்னவென்று சொல்வது?

‘Wow, What a Co-incident’ என்று ஆங்கிலத்தில் ஆச்சர்யப்பட்டேன்.

‘ஒவ்வொரு பெண் குழந்தையும் உங்கள் குழந்தையைப் போல தன்னம்பிக்கையுடன் கம்பீரமாக பேசினாலே போதும். எதிராளி ஒருதுளியும் தவறாக நினைக்கவோ செயல்படவோ முடியாது. உங்கள் குழந்தையை நினைத்தால் மிகப் பெருமையாக உள்ளது. வாழ்த்துகள்!’ என்று வாழ்த்தினேன்.

புத்தக வாசிப்பிற்கு மைக்கும் ஒரு காரணம் என்பதை அறிந்தபோது ஒரு சிறு விதையானது பாறை இடுக்கில் விழுந்தால்கூட அந்தப் பாறையைப் பிளந்துகொண்டு முளைத்து வெளிவருவதைப் போல வாசிக்கும் ஆர்வத்துக்கு எது காரணம் ஆகிறது என்பதை எல்லாம் நம்மால் கணிக்கவே முடியாது என்பது புரிந்தது.

ஞாயிறு பொழுது இப்படியாக இனிமையானது!

குறிப்பு: சிறுமியின் தந்தையின் அனுமதி பெற்று வீடியோவை பகிர்ந்துள்ளேன்.

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
காம்கேர் சாஃப்ட்வேர்
ஜனவரி 8, 2024 | திங்கள்

#ai_avatar, #ai_avatar_tamil_book
#bookfair2024

(Visited 1,906 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon