கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் என்சைக்ளோபீடியா!
கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் இன்ஜினியராகப் பணி புரிந்து, ஓய்வு பெற்ற பிறகு, செங்கல்பட்டை அடுத்த நெய்குப்பி என்ற கிராமத்தில் வசித்து வரும் அன்பர் ஒருவர், என் அலுவலக மொபைல் எண்ணுக்கு நான் எழுதிய சில புத்தகங்கள் தேவை என சொல்லி வாட்ஸ் அப் அனுப்பி இருந்தார்.
மேலும் தொழில்நுட்பம் குறித்து சில சந்தேகங்களை கேட்டிருந்ததால் என் உதவியாளர் எனக்கு அந்தத் தகவலை அனுப்பி இருந்தார்.
அதனால் நானே அந்த அன்பருக்கு போன் செய்து பேசினேன்.
போனில் நானே பேசுகிறேன் என்றதும் அவருக்குள் சிறு சந்தோஷப் பதட்டம்.
அவர் கல்பாக்கத்தில் பணி புரிந்தபோது என் புத்தகங்களைத்தான் அவர்களின் அலுவலகப் பணிக்கு என்சைக்ளோபீடியா போல பயன்படுத்தி வந்ததாகவும், எல்லோர் டேபிளிலும் நான் எழுதிய புத்தகங்களை Reference புத்தகங்களாக வைத்திருப்பார்கள் எனவும் கூறினார். சொல்லும்போதே அத்தனை மகிழ்ச்சி.
வருடா வருடம் புத்தகக் காட்சிக்கு வந்து புத்தகங்களை வாங்குவதை வழக்கமாக வைத்திருப்பார் எனவும், இந்த வருடம் நேரில் வர முடியாததற்கு ஒரு காரணத்தை கூறினார்.
அவரின் தொழில்நுட்ப சந்தேகங்களுக்கு விளக்கம் சொன்னவுடன், என் எழுத்துக்களைப் போலவே பழகுவதற்கும் எளிமையாக இருப்பதாக வாழ்த்தினார்.
அவருக்கு என்னென்ன புத்தகங்கள் தேவையோ அத்தனையையும் கொரியரில் அனுப்ப ஏற்பாடு செய்வதாகக் கூறி போனை வைத்தேன்.
சர்க்கரை நோயின் தீவிரத்தால் ஒரு காலை எடுத்து விட்டதாகவும், செயற்கை கால் பொருத்தி இருப்பதால் அதிக தூரம் நடப்பதற்கு கஷ்டமாக இருக்கும் என்று வருத்தமுடன் சொன்னது நீண்ட நேரம் மனதில் ஒலித்துக் கொண்டே இருந்தது.
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
காம்கேர் சாஃப்ட்வேர்
ஜனவரி 12, 2024 | வெள்ளி
#ai_avatar, #ai_avatar_tamil_book, #அசத்தும்Ai
#bookfair2024