#Ai: என் பெயர் Ai!

என் பெயர் Ai!

பல வருடங்களாகவே Ai குறித்த ஆராய்ச்சிகளில் ஈடுபட்டிருந்தாலும், கடந்த ஒரு வருடமாக தீவிர ஆராய்ச்சிப் பணியில் இருந்ததால், எப்போதும் எதைப் பேசினாலும் அதில் Ai குறித்த ஒரு சொல் இடம் பெற்றுவிடும்.

அதுவும் நான் அண்மையில் எழுதி வெளியான ’அசத்தும் Ai’, ‘இனி எல்லாம் மெட்டாவெர்ஸ்’ என்ற நூல்களுக்காக ரெகார்டிங் செய்துகொண்டிருந்த 2023 ஆம் வருடத்தின் பிற்பகுதிகளில் கேட்கவே வேண்டாம்.

நாங்கள் தயாரித்திருக்கும் Ai சாஃப்ட்வேரில் வார்த்தைகளை டைப் செய்து, என் வாய்ஸ் மாடலைத் தேர்ந்தெடுத்தால் உடனே எனக்கான Ai அவதார் என் குரலில் நான் டைப் செய்த வார்த்தைகளை பேச ஆரம்பித்துவிடும். மைக் வைத்து ரெகார்ட் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

இந்த இரண்டு நூல்களிலும் 30 அத்தியாயங்கள். ஒவ்வொரு அத்தியாயத்திலும் எனக்கான ஒரு அவதார் கண்முன் தோன்றி என் குரலில் அந்த அத்தியாய சுருக்கத்தைச் சொல்லும்.

இதற்காக நான் நிறுவனத்தில் இருந்து வீட்டுக்கு வந்தும் ரெகார்டிங் செய்தவற்றை சரி பார்ப்பது, அவதாருக்குக் குரலாகப் பொருத்துவது என பணி செய்தபடியே இருந்ததால், ‘நான் காம்கேர் புவனேஸ்வரியின் Ai’ என்று என் அவதார் பேசுவதை குறைந்தபட்சம் 100 முறையாவது என் பெற்றோர் கேட்டிருப்பார்கள். இத்தனைக்கும் நான் மைக் வைத்து ரெகார்ட் செய்வது கூட இல்லை.

நான் ஏற்கெனவே எனக்கான குரலுக்கு வாய்ஸ் மாடல் உருவாக்கி வைத்துவிட்டதால், வார்த்தைகளை டைப் செய்தாலே போதும் நாம் என்ன டைப் செய்கிறோமோ அப்படியே நமக்கான அவதார் நம் குரலில் பேச ஆரம்பித்துவிடும். இதுதான் நாங்கள் பயன்படுத்தி உள்ள லாஜிக்.

Ai சாஃப்ட்வேர்கள் தயாரித்து வழக்கம்போல் அதற்காக புத்தகமும் எழுதி வெளியிட்ட பின்னரும் அது சார்ந்த பணிகள் நடைபெற்ற வண்ணம் இருக்கின்றன.

காரணம், இனி எல்லாமே Ai தான் எனும்போது, எங்கள் சாஃப்ட்வேர் தயாரிக்கும் பணியும் Ai சார்ந்துதானே இருக்கும்.

என்ன நினைத்துக் கொண்டாரோ, நேற்று என் அம்மா
‘யாராவது இனி உன் பெயர் என்னவென்று கேட்டால், நான் தான் காம்கேர் புவனேஸ்வரியின் Ai அவதார் என்று சொல்லப் போகிறாய்’ என்றார்.

நானும் கொஞ்சம் யோசித்துப் பார்த்தேன். ‘அட ஆமாம், எனக்கும் அதே தொனிதான் வருகிறது பேச ஆரம்பிக்கும்போது…’

உண்மையில் நேற்று ஒரு கிளையிண்ட்டுக்கு போன் செய்து பேச ஆரம்பிக்கும் போது ‘Sir, நான் காம்கேர் புவனேஸ்வரியின் Ai அவதார்’ என்று நுனிநாக்கு வரை வருவதை கட்டுப்படுத்திக்கொண்டு என்னை அறிமுகம் செய்து பேச வேண்டியதாக உள்ளது.

நான் சிந்திப்பதே Ai போல மாறிவிட்டதைப் போன்ற ஒரு பிரமை. நான் படித்து முடித்துவிட்டு காம்கேர் நிறுவனம் தொடங்கிய காலகட்டத்தில் எல்லாம் கனவிலும் எனக்கு லாஜிக்குகள்தான் வரும். அப்போதெல்லாம் கூகுளும் கிடையாது, தொழில்நுட்பம் அறிந்தவர்களும் நிறைய பேர் கிடையாது. எல்லாவற்றையும் பரிசோதனை செய்து செய்துதான் கண்டுபிடிக்க வேண்டும். அந்த காலகட்டத்துக்கு நிகரான காலகட்டம் இப்போது. நாடி நரம்பெல்லாம் Ai குறித்த சிந்தனையே.

மனதை திசை திருப்ப இன்று மோகன்லால் நடித்த ‘நேரு’ திரைப்படம் பார்த்தேன். நேர்மைக்கு வெற்றி கிடைக்கும் போதெல்லாம் அத்தனை மகிழ்ச்சியாக இருக்கிறதே, அது சினிமாவாக இருந்தாலும்.

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
காம்கேர் சாஃப்ட்வேர்
ஜனவரி 26, 2024 | வெள்ளி

(Visited 1,146 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon