1990 – ம் ஆண்டு நவம்பர் மாத சாவி பத்திரிகையில், நான் எழுதிய சிறுகதை ‘நியதிகள் மாறலாம்’, சிறுகதைப் போட்டியில்’ பரிசு பெற்றது. (சிறுகதையைப் படிக்க இங்கு கிளிக் செய்யவும்)
அந்த சிறுகதைக்கு மீண்டும் ஒரு மகுடம் 2024 ஆம் ஆண்டு கிடைத்துள்ளது. ஆம். கிட்டத்தட்ட 33 வருடங்களுக்குப் பிறகு, Ph.D ஆய்வுக்காக ‘நியதிகள் மாறலாம்’ சிறுகதை தேர்வாகி பெருமை அடைந்துள்ளது.
சென்னையில் இயங்கி வரும் ‘தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில்’ முழுநேர முனைவர் பட்ட ஆய்வாளராக இருக்கும் திருமிகு இரா. குமரகுருபரன் அவர்கள், ‘காலந்தோறும் பெண் எழுத்தாளர்களின் (1930 – 2020) சிறுகதைகள் : எழுத்தும், போக்கும்’ என்ற தலைப்பில் ஆய்வு செய்து வருகிறார். அவர் செய்து வரும் ஆய்வில் ஒரு பகுதியாக 1990 ஆம் ஆண்டு நான் எழுதி சாவி பத்திரிகையில் வெளியாகி பரிசு பெற்ற ‘நியதிகள் மாறலாம்’ என்ற சிறுகதையை எடுத்துக் கொண்டுள்ளார். அதற்கு என் அனுமதி கேட்டு தன் கைப்பட கடிதம் எழுதியுள்ள இரா. குமரகுருபரன் அவர்களுக்கு மிக்க நன்றி.
இவர் ஆய்வுக்காக எடுத்துக் கொண்டுள்ள தலைப்பு அருமை. அத்துடன், இவர் தன் கைப்பட எழுதிய கடிதத்தில் இவரது கையெழுத்தும் இவரது ஓவியத்தைப் போலவே அருமையிலும் அருமை. முக்கியமான ஒரு விஷயத்தை இங்கு குறிப்பிட வேண்டும். இந்த ஆய்வு மாணவரின் வயது 70+. ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா? கல்வி கற்பதற்கும், அது சார்ந்த உழைப்புக்கும் வயது ஒரு பொருட்டல்லவே!
காம்கேர் கே. புவனேஸ்வரி, Founder & CEO
காம்கேர் சாஃப்ட்வேர்
ஜனவரி 26, 2024