அழகப்பா பல்கலைக்கழகம் – காரைக்குடி: ஐஸ்கிரீமின் சுவையைக் கூட்டும் அதன் மீது தூவப்படும் டாப்பிங்குகள்! (பிப் 8, 2024)

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக மாணவ மாணவிகள்!

ஐஸ்கிரீமின் சுவையைக் கூட்டும் அதன் மீது தூவப்படும் டாப்பிங்குகள்!

இந்த நிகழ்ச்சியில் நான் பேசியதைத் தொடர்ந்து கேட்கப்பட்ட கேள்விகள்தான் நிகழ்ச்சியின் ஹைலைட். ஐஸ்கிரீமை விட அதன் மீது தூவி சாப்பிடும் டாப்பிங்தான் அந்த ஐஸ்கிரீமின் சுவையைக் கூட்டும். அதுபோல்தான் நான் Ai குறித்து பேசியதன் சாராம்சத்தை இன்னும் தெளிவாக மாணவ மாணவிகளுக்குக் கொண்டு சென்றது கேள்வி பதில் பகுதி.

கேள்வி-1:

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வரும் திருமிகு. கலைவாணி அவர்கள் எழுப்பிய கேள்வி.

‘Ai அப்ளிகேஷன்களில் நாம் நம் நாட்டு ஓவியங்களை வரைந்து தருவதற்கு எப்படித்தான் விரிவாக ஸ்கிரிப்ட் (Prompting) எழுதி கேட்டாலும் அது சரியாக கொடுப்பதில்லை. உதாரணத்துக்கு, சைவம் சம்மந்தப்பட்ட மனிதர்களுக்கு பட்டைப் போட்டும், வைஷ்ணவம் சம்மந்தப்பட்ட மனிதர்களுக்கு நாமமும் போட்டுத் தானே ஓவியங்கள் வெளிப்பட வேண்டும். ஆனால் Ai அப்ளிகேஷன்கள் நெற்றியில் எதுவுமே போடாமல் வரைந்து கொடுக்கிறது அல்லது எல்லாவற்றுக்கும் நாமம் போட்டோ அல்லது பட்டைப் போட்டோ ஓவியங்களை உருவாக்கிக் கொடுக்கிறது. அது ஏன்?’

என் பதில்:  Ai அப்ளிகேஷன்களுக்குள் என்ன மாதிரியான தகவல்கள் உள்ளீடு செய்யப்பட்டிருக்கிறதோ அதன்படிதான் அவை செயல்பட்டு புரிந்துகொண்டு நமக்கான தீர்வை எழுத்தாகவோ, படமாகவோ, ஒலி, ஒளியாகவோ கொடுக்கும். மேலும் அதற்குள் முன்மாதிரிகளும் உள்ளீடு செய்யப்பட்டிருக்க வேண்டும். நாம் சொல்லிக் கொடுப்பதை ஏற்றுக்கொண்டும், தன்னுள் இருக்கும் முன் மாதிரிகளுடன் ஒப்பிட்டும், ஏற்கெனவே செய்திருக்கும் பணியின் அவுட்புட்டின் மூலம் கிடைத்த அனுபவத்தின் அடிப்படையிலும்தான் Ai அப்ளிகேஷன்கள் நமக்கான தீர்வை கொடுக்கும்.

நாம் எதிர்பார்த்த விஷயத்தை Ai கொடுக்க வேண்டும் என்றால் அதனிடம் நமக்கு கேள்வி கேட்கத் தெரிய வேண்டும். அதற்கு Prompting என்று பெயர். அடுத்து அதனுள் நாம் கேட்கும் விஷயத்துக்கான இன்புட்டுகள் ஏற்கெனவே உள்ளீடு செய்யப்பட்டிருக்க வேண்டும். அதாவது ஒரு டாக்டரிடம் மருத்துவம் சம்மந்தமான விஷயங்களை கேட்கலாம், ஏனெனில் அவர் மூளைக்குள் மருத்துவம் குறித்தத் தகவல்களும் அனுபவங்களுமே பெருமளவில் பதிவாகி இருக்கும். அவரிடம் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் துறை குறித்து கேள்விகள் கேட்டால் அவரால் துல்லியமாக பதில் அளிக்க முடியாது. காரணம் அவர் மூளைக்குள் அந்தத் துறை சம்மந்தப்பட்ட தகவல்கள் சேகரிக்கப்பட்டிருக்க வாய்ப்பில்லை அல்லவா? அவர் மெக்கானிக்கல் துறை சார்ந்தும் கற்றறிந்தவர் என்றால் அவரால் பதில் அளிக்க முடியும்.

ஒருவர் ஒருவிஷயத்தைப் பற்றி ஆழமாக பேசுகிறார் அல்லது எழுதுகிறார்  என்றால் அவர் மூளைக்குள் அந்த விஷயம் குறித்த ஆழ்ந்த அறிவு தகவல்களாக சேகரிக்கப்பட்டிருக்க வேண்டும், கற்றறிந்திருக்க வேண்டும், அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இது தான் லாஜிக்.

உதாரணத்துக்கு நான் இன்று 200 மாணவ மாணவிகளுக்கு முன் நின்று Ai குறித்து 2 மணி நேரமாக உரை ஆற்றுகிறேன் என்றால் என் மனதுக்குள் Ai குறித்த தகவல்கள் ஏராளமாக சேகரிக்கப்பட்டிருக்க வேண்டும். நிறைய படித்து, ஏராளமான ஆராய்ச்சிகள் செய்து, சாஃப்ட்வேர்கள் உருவாக்கி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அப்போதுதான் Ai குறித்து உரையாற்ற முடியும். பார்வையாளர்களிடம் இருந்து என்ன கேள்விகள் கேட்டாலும் பதில் சொல்ல முடியும்.

இதே லாஜிக்தான் Ai அப்ளிகேஷன்களிலும். Ai-க்கு தகவல்களை உள்ளீடு செய்து நாம் கற்றுக் கொடுத்திருக்க வேண்டும். அப்போதுதான் அதனால் அலசி ஆராய்ந்து நாம் கேட்பதற்கு ஏற்ப தானாக ஒரு பதிலை உருவாக்கிக் கொடுக்க முடியும்.

அந்த அப்ளிகேஷன்களில் எந்த அளவுக்கு தகவல்கள் உள்ளீடு செய்யப்படுகிறதோ அந்த அளவுக்கு அது திறமையான பதிலை கொடுக்கும். மேலும் அந்த அப்ளிகேஷன்களை நிறைய பேர் பயன்படுத்தப் பயன்படுத்தத்தான் அவை அனுபவம் பெறும். அப்போதுதான் அவை துல்லியமான பதிலைக் கொடுக்கப் பயிற்சி பெறும். காரணம் Ai தனக்குள் இருக்கும் தகவல்களை மட்டும் வைத்துக்கொண்டு செயல்படுவதில்லை. ஏற்கெனவே அதனிடம் கேள்விகள் கேட்டவர்களுக்கு தான் அளித்த பதிலை முன் உதாரணமாக வைத்துக் கொண்டும் செயல்படும். உதாரணத்துக்கு ஒருவர் கிருஷ்ணர் படத்தை வரையச் சொல்லி கேட்டால், ஏற்கெனவே இதுபோல் மற்றொருவருக்கு தான் உருவாக்கிக் கொடுத்த கிருஷ்ணர் படத்தை ஒப்பிட்டு நீல வண்ணம், புல்லாங்குழல், மயிலிறகு போன்றவற்றை மாதிரியாகக் கொண்டு அதன்படி புதிதாக கிருஷ்ணர் படத்தை உருவாக்கிக் கொடுக்கும். அதனால்தான் சொல்கிறேன், Ai –ஐ நிறைய பேர் பயன்படுத்த ஆரம்பிக்கும் போதுதான் அவை அனுபவம் பெறும்.

மேலும் நம் நாட்டில் Ai அப்ளிகேஷன்களுக்குள் நம் நாட்டு இலக்கியம், கலை, மொழி குறித்த தகவல்களை உள்ளீடு செய்யப்பட வேண்டும். அவற்றை நம் மக்கள் பயன்படுத்தப் பயன்படுத்தத்தான் எப்படியெல்லாம் கேள்விகள் வரும், எப்படி எல்லாம் அதற்கு பதில் கொடுக்க வேண்டும் என அவை பயிற்சி பெறும். அதற்குள் சேகரித்து வைக்கப்பட்டிருக்கும் உள்ளீடுகள், நாம் கொடுக்கும் பயிற்சி முறைகள் இவற்றுடன் தனக்குக் கிடைத்த முந்தைய அனுபவங்களையும் சேர்த்து தானாகவும் கற்று சிந்தித்து செயல்படும் ஆற்றல் கொண்ட Ai அப்ளிகேஷன்களை உருவாக்கி விட்டு அப்படியே போட்டு வைத்திருந்தாலும் அவை பயனற்று போகும். திறம்பட செயலாற்றாது.

படித்து பட்டம் பெற்று ஒரு பணிக்குச் சென்றால்தானே அவை நம் அன்றாட வாழ்க்கைக்குப் பயனுள்ளதாக இருக்கும். அப்படி செய்யாமல் படித்தப் படிப்புக்கு வேலை கொடுக்காமல்  வீட்டு வேலைகளை மட்டும் செய்துகொண்டிருந்தால் நம்மால் பணி சார்ந்த விஷயங்களில் நம் கல்வி அறிவை எப்படி பயன்படுத்த முடியும்?

இதே லாஜிக்தான் Ai அப்ளிகேஷன்களிலும்.

Ai அப்ளிகேஷன்களுக்கு நிறைய கற்றுக்கொடுக்க வேண்டும், அவற்றை நிறைய பயன்படுத்த வேண்டும், நிறைய சிந்திக்க வைக்க வேண்டும். அப்போதுதான் அவை ஸ்மார்ட்டாக வேலை செய்யும் திறன் பெறும். நம் நாட்டு ஆராய்ச்சியாளர்கள் Ai அப்ளிகேஷன்களை உருவாக்குவதில் அதிக கவனம் செலுத்த ஆரம்பிக்கும்போதுதான் அதனுள் நம் நாட்டு விஷயங்கள் தகவல்களாக உள் செல்லும்.

கேள்வி-2:

தமிழ்த் துறை மாணவி எழுப்பிய கேள்வி.

‘கம்ப்யூட்டர் சயின்ஸ் மாணவ மாணவிகள் மட்டும்தான் Ai கிரியேட்டர்களாக இருக்க முடியுமா, தமிழ்த்துறை மாணவிகளாகிய நாங்கள் கிரியேட்டராக உருவாக முடியாதா?’

என் பதில்: இவரது கேள்வி நான் உரையாற்றும்போது சொன்ன ஒரு விஷயத்தால் உருவானது. என் எதிரே தொழில்நுட்பம் சார்ந்த மாணவ மாணவிகளும், தமிழ்த்துறை மாணவ மாணவிகளும் இருந்ததால் கம்ப்யூட்டர் சயின்ஸை பாடமாக எடுத்து படிப்பவர்கள் Ai துறையில் சாஃப்ட்வேர்களை உருவாக்குபவர்கள், தமிழ்த்துறை மாணவ மாணவிகள் Ai அப்ளிகேஷன்களை பயன்படுத்துபவர்கள் என்று கூறினேன். அதனால் உருவான இவரது கேள்விக்கு நுணுக்கமாக பதில் அளிக்க வேண்டி இருந்தது.

நீங்கள் தமிழை பாடமாக எடுத்துப் படிக்கிறீர்கள். உங்களுக்கு தமிழ் சார்ந்த விஷயங்கள் உங்கள் மூளைக்குள் சேகரிக்கப்பட்டிருக்கும். அதில் நீங்கள்தான் மாஸ்டர். அதுபோல, எலக்ட்ரிகல் துறை மாணவர்கள் மூளைக்குள் எலக்ட்ரிக்கல் துறை சார்ந்த ஞானமும், மெக்கானிக்கல் துறை மாணவர்கள் மூளைக்குள் மெக்கானிக்கல் துறை சார்ந்த ஞானமும், மருத்துவம் படிக்கும் மாணவர்கள் மூளைக்குள் மருத்துவத் துறை சார்ந்த ஞானமும், அக்கவுண்ட்ஸ் படிக்கும் மூளைக்குள் அக்கவுண்ட்டிங் துறை சார்ந்த ஞானமும் பதிவாகி இருக்கும். அவரவர் துறையில் அவரவர் மாஸ்ட்டர்.

ஆனால் கம்ப்யூட்டர் துறை சார்ந்தவர்கள் மற்ற எல்லா துறைகளுக்கும் தேவையான சாஃப்ட்வேர்களையும், அப்ளிகேஷன்களையும் தயாரிக்க வேண்டும். மருத்துவத் துறைக்கு ஒரு சாஃப்ட்வேர் தயாரிக்க வேண்டும் என்றால் அதனுள் மருத்துவம் சார்ந்த விஷயங்களை உள்ளீடு செய்வதுடன், மருத்துவத் துறையுடன் சேர்ந்து கலந்து ஆலோசித்து அவர்கள் செயல்படுத்தும் மருத்துவ முறைகளை எல்லாம் லாஜிக்குகளாக எழுதி புரோகிராம் உருவாக்கி சாஃப்ட்வேர்களை வடிவமைக்க வேண்டும். இங்கு நான் உதாரணத்துக்காக சொன்னது மருத்துவத் துறை. அவர்கள் தமிழ்த் துறைக்கு சாஃப்ட்வேர்கள் தயாரிக்க வேண்டும் என்றால், தமிழ்த் துறையினருடன் கலந்து ஆலோசித்து அவர்களின் முழு ஆதரவுடன், அவர்களின் ஞானத்தை உள்வாங்கிக் கொண்டு அவர்களுக்குத் தேவையானதை சாஃப்ட்வேர்களாக உருவாக்க வேண்டும். இதுதான் லாஜிக்.

அதனால்தான் நான் உரையாற்றும்போது, ‘தமிழ்த்துறை மாணவர்கள் Ai அப்ளிகேஷன்களை பயன்படுத்தும் பயனாளர்கள், கம்ப்யூட்டர்சயின்ஸ் மாணவர்கள் Ai அப்ளிகேஷன்களை உருவாக்கும் கிரியேட்டர்கள்’ என்று கூறினேன்.

சரி நீங்கள் கேட்ட கேள்விக்கு வருகிறேன். ஏன் தமிழ்த்துறை மாணவர்களால் கிரியேட்டர்களாக வர முடியாதா?

ஏன் வர முடியாது. வரலாம். எப்படி கம்ப்யூட்டர் சயின்ஸ் மாணவர்கள் பணிக்கு வரும்போது உங்கள் தமிழ்த்துறைக்காக Ai சாஃப்ட்வேர்களை உருவாக்குவதற்கு, உங்கள் தமிழ்த் துறை சார்ந்தவர்களுடன் கலந்து ஆலோசனை செய்து உங்களின் ஞானத்தை உள்வாங்கிக்கொண்டு சாஃப்ட்வேர்களை உருவாக்குகிறார்களோ, அதுபோல தமிழ்த்துறை சார்ந்தவர்கள் Ai சாஃப்ட்வேர்களையும் அப்ளிகேஷன்களையும் உருவாக்க வேண்டும் என்றால் தொழில்நுட்பத் துறை ஞானத்தைப் பெற வேண்டும். அவ்வளவுதான்.

தொழில்நுட்பத் துறை ஞானத்தைப் பெற கம்ப்யூட்டர் மொழிகள் C, C++, Java, Phython, Sql போன்ற மொழிகளை கற்றறிந்து புரோகிராம் எழுதப் பழக வேண்டும். அப்போது நீங்களும் கிரியேட்டர்களாக முடியும்.

உதாரணத்துக்கு உங்களுக்கு ஓட்டலில் செய்வதைப் போல லேயர் லேயராக பரோட்டா செய்யத் தெரியாவிட்டால் ஓட்டலில் வாங்கி சாப்பிடுவதாக கற்பனை செய்து கொள்ளுங்கள். அந்த இடத்தில் ஓட்டல் சமையல்காரர்தான் கிரியேட்டர். நீங்கள் பயனாளர்.

நீங்கள் ஓட்டல் சமையல்காரரிடம் ‘எப்படி சுவையான லேயர் லேயராக வருகின்ற பரோட்டாவை செய்வது’ என கேட்டறிந்து வந்து வீட்டில் செய்துப் பழகினால் நீங்களும் ஒரு கிரியேட்டர். அதை யார் சாப்பிடுகிறார்களோ அவர்கள் பயனாளர்கள். அவ்வளவுதான்.

நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள், தொழில்நுட்ப உலகில் யாரும் தனித்தனியாக செயல்பட முடியாது. எல்லா துறைகளும் ஒருங்கிணைந்துதான் தொழில்நுட்பத் துறையை முழுமை ஆக்குகிறது. தொழில்நுட்பத் துறை என்பது ஒரு கருவி. அந்தக் கருவியை பயன்படுத்தி தமிழுக்கான அப்ளிகேஷன்களை உருவாக்கலாம், மருத்துவத்துக்கான அப்ளிகேஷன்களை வடிவமைக்கலாம், இசை, நடனம், இலக்கியம், எல்க்ட்ரிக்கல், மெக்கானிக்கல் இப்படி எந்தத் துறைக்கும் அப்ளிகேஷன்களை உருவாக்க முடியும்.

நீங்கள் Ai-க்கான சாஃப்ட்வேர்களையும் அப்ளிகேஷன்களையும் உருவாக்கி கிரியேட்டராக வேண்டுமானால் கம்ப்யூட்டர் மொழிகளைக் கற்றறிந்து புரோகிராம் எழுதப் பழக வேண்டும். கம்ப்யூட்டர் துறையினர் தமிழுக்காக சாஃப்ட்வேர்களையும் அப்ளிகேஷன்களையும் உருவாக்க விரும்பினால், அவர்கள் தமிழ்த் துறை சார்ந்தவர்களுடன் சேர்ந்து அவர்களிடம் கேட்டறிந்து அவர்கள் ஞானத்தைப் பெற வேண்டும்.

இதில் யார் உயர்ந்தவர், யார் தாழ்ந்தவர் சொல்லுங்கள்.

மற்றொரு விஷயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு பயனாளராக இருந்துகொண்டும் கிரியேட்டராக முடியும். ஆம். கிரியேட்டர்களால் உருவாக்கப்பட்ட ஒரு சாஃப்ட்வேரை பயன்படுத்தியோ அல்லது அப்ளிகேஷன்களை பயன்படுத்தியோ மற்றொரு உருவாக்கத்தை வடிவமைக்க முடியும்.  உதாரணத்துக்கு, கிரியேட்டர்களால் உருவாக்கப்பட்ட Ai-க்கான  அப்ளிகேஷன்கள் மூலம்  தமிழ் இலக்கியங்களை அவதார்கள் மூலம் எளிமையாக புரிந்துகொள்ளும் வகையில் வடிவமைக்க முடியும். அப்படி செய்தால் நீங்களும் ஒரு கிரியேட்டரே.

நான் தொழில்நுட்பம் படிப்பவர்களை சாஃப்ட்வேர்  கிரியேட்டர்கள் என்று குறிப்பிட்டேன். மற்றபடி அவர்கள் மட்டுமே கிரியேட்டர்கள் என சொல்ல வரவில்லை.

கிரியேட்டர்கள், பயனாளர்கள் இரண்டையும் புரிந்துகொள்ள, மீண்டும் இந்த பதிலை படித்துப் பாருங்கள்.

கேள்வி-3:

அனைவராலும் எழுப்பப்பட்ட மற்றொரு கேள்வி!

Ai வருகையால் வேலைவாய்ப்புகள் பெருமளவில் குறைந்துவிடுமா?

நிச்சயமாக குறையாது. கம்ப்யூட்டர் நம் நாட்டில் அறிமுகமாக ஆரம்பித்த காலங்களில் நம் மக்களின் பயமே, கம்ப்யூட்டர்கள் நம் வேலைவாய்ப்பை குறைத்துவிடும் என்பதுதான். ஆனால் நடந்தது என்ன? கம்ப்யூட்டர்களின் வருகைக்கு முன்னர்  ‘வேலையில்லா திண்டாட்டம்’ என்பது பசி, பட்டினி, வறுமை போல சமுதாயத்தின் மிகப் பெரிய அவலமாக இருந்து வந்ததை அந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர்கள் நன்கறிவர்.

கம்ப்யூட்டர்களுன் வருகைக்குப் பின்னர் தொழில்நுட்பப் புரட்சி ஏற்பட்டு வேலையில்லா திண்டாட்டம் முற்றிலுமாக குறைந்து கொண்டே வந்தது. உள்நாட்டில் மட்டும் இல்லாமல் இந்திய அளவிலும், உலக அளவிலும் கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் கற்றறிந்தவர்களுக்கு வேலை வாய்ப்புகள் பெருக ஆரம்பித்தன. இன்றும் அப்படியே.

கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் வேறு மாதிரியான வேலை தொழில் வாய்ப்புகளை உண்டாக்கி உள்ளது. அதுபோல்தான் Ai தொழில்நுட்பத்தை மேலோட்டமாகப் பார்த்தால் வேலை வாய்ப்பை குறைப்பதுபோல் தோன்றும், ஆனால் அது வேறு மாதிரியான புதிய வேலை தொழில்வாய்ப்புகளுக்கு வித்திடும். அதுதான் உண்மை என்பது போகப் போக அனைவருக்கும் புரியும்.

கேள்வி-4:

பொதுவான கேள்வி!

கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர் தொழில்நுட்பத்துக்கும், Ai தொழில்நுட்பத்துக்கும் உள்ள வேறுபாடு என்ன?

கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தில், நாம் ஒரு ஓவியராக இருந்தால் சாஃப்ட்வேரில் ஓவியம் வரைய முடியும், நாம் ஒரு எழுத்தாளராக இருந்தால் சாஃப்ட்வேரில் கதை, கவிதை, கட்டுரைகளை டைப் செய்யலாம். நமக்கு அக்கவுண்டிங் தெரிந்திருந்தால் கம்ப்யூட்டரில் அக்கவுண்ட்டிங் சாஃப்ட்வேரில் கணக்கு வழக்கை பராமரிக்கலாம். நமக்கு வீடியோ எடிட்டிங் தெரிந்திருந்தால் அதற்கான சாஃப்ட்வேரில் வீடியோ எடிட்டிங் செய்யலாம்.

ஆனால் Ai தொழில்நுட்பத்தில், நமக்கு ஓவியம் தெரிந்திருக்காவிட்டாலும் Ai அப்ளிகேஷன்கள் மூலம் ஓவியத்தை உருவாக்க முடியும், கதை கவிதை எழுதத் தெரியாவிட்டாலும் Ai நமக்காக நாம் என்ன விரும்புகிறோமோ அதை எழுத்து வடிவத்தில் உருவாக்கிக் கொடுக்கும். அக்கவுண்ட்டிங் தெரியாவிட்டாலும் Ai நமக்காக கணக்கு வழக்கு பார்க்கும். இப்படி நமக்கு துறை சார்ந்த அனுபவங்கள் இல்லாவிட்டாலும் Ai நம் சார்பில் நமக்கான தேவையை பூர்த்தி செய்யும்.

Ai  இன்னும் முழுமையான பயன்பாட்டுக்கு வரவில்லை. எனவே இதன் மூலம் கிடைக்கும் அவுட்புட்டை மனிதர்களாகிய நாம்தான் ஒருமுறைக்கு இருமுறையாக சரி பார்த்துக்கொள்ள வேண்டும். எழுத்தோ, ஓவியமோ, வீடியோவோ, கணக்கு வழக்கோ எதுவானாலும் அவற்றை சரிபார்த்து எடிட் செய்துகொள்ள வேண்டும்.

இந்த நிலை மாறி Ai முழுமையாக துல்லியமாக செயல்பட இருக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை.

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
காம்கேர் சாஃப்ட்வேர்
பிப்ரவரி 8, 2024

(Visited 1,989 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon