‘IT – ல் இனி வேலைவாய்ப்பு இல்லையா? தமிழக என்ஜினியர்ஸ் என்ன செய்ய வேண்டும்?’ (குங்குமம் மார்ச் 8, 2024)

புத்தக வடிவிலேயே வாசிக்க இங்கே க்ளிக் செய்யவும்!

குங்குமம் (08-03-2024) இதழில்,  ‘IT – ல் இனி வேலைவாய்ப்பு இல்லையா? தமிழக என்ஜினியர்ஸ் என்ன செய்ய வேண்டும்?’ என்ற கட்டுரைக்காக நான் அளித்த சிறு பேட்டியும் விளக்கமும்!

கம்ப்யூட்டர் துறையில் குறிப்பாக சாஃப்ட்வேர் துறையில் வேலைவாய்ப்புகள் என்பது ஏறி இறங்கி கொண்டேதான் இருக்கும். எல்லா காலங்களிலும் ஒரே மாதிரி இருப்பதில்லை.

1990-களில் கம்ப்யூட்டர் நம் நாட்டில் பரவலாக அறிமுகமாக ஆரம்பித்த காலங்களில் நம் மக்களின் பயமே, கம்ப்யூட்டர்கள் நம் வேலைவாய்ப்பை குறைத்துவிடும் என்பதுதான். ஆனால் நடந்தது என்ன? கம்ப்யூட்டர்களின் வருகைக்கு முன்னர் ‘வேலையில்லா திண்டாட்டம்’ என்பது சமுதாயத்தின் மிகப் பெரிய அவலமாக இருந்து வந்ததை அந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர்கள் நன்கறிவர்.

கம்ப்யூட்டர்களின் வருகைக்குப் பின்னர் தொழில்நுட்பப் புரட்சி ஏற்பட்டு வேலையில்லா திண்டாட்டம் முற்றிலுமாக குறைந்து கொண்டே வந்தது. உள்நாட்டில் மட்டும் இல்லாமல் இந்திய அளவிலும், உலக அளவிலும் கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் கற்றறிந்தவர்களுக்கு வேலை வாய்ப்புகள் பெருக ஆரம்பித்தன. இன்றும் அப்படியே. கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர் தொழில்நுட்பம் வேறு மாதிரியான வேலை தொழில் வாய்ப்புகளை உண்டாக்கியது.

குறிப்பாக 2000-களில் Y2K பிரச்சனை வந்தபோது, அதாவது தேதியில் 2000 என பூஜ்ஜியம் வருவதால் உலகமெங்கும் கம்ப்யூட்டரில் தகவல்கள் எல்லாம் அழிந்துவிடும் என்ற தவறான நம்பிக்கையினால் மக்கள் பயந்தனர். அந்த நேரத்தில் மெயின்ஃப்ரேம் தொழில்நுட்பத்தில் மூலம் அந்த பிரச்சனையை சாஃப்ட்வேர் துறையினர் மிக எளிதாகக் கடந்தனர். அந்த காலகட்டத்தில்தான் அதே Y2K பிரச்சனையை தீர்க்க வேண்டிய ப்ராஜெக்ட்டுகளுக்காக, சாஃப்ட்வேர் துறை படித்தவர்களுக்கு உலகமெங்கும் இருந்து வேலைவாய்ப்புகள் பெருக ஆரம்பித்தன.

அதன் பிறகு 2010 –ல் சாஃப்ட்வேர் துறையில் ரெசஷன் (Recession) உண்டானது. அதாவது சிறு தொய்வு. உலகமெங்கும் மக்களின் தேவைக்கான சாஃப்ட்வேர்களை தயாரித்த பிறகு, கொஞ்சம் இடைவெளி உண்டாகும் அல்லவா? அந்த காலகட்டம்தான் ரிசஷன். அந்த நேரத்தில் வேலைவாய்ப்புகள் குறையும்.

2010 –க்குப் பிறகு திரும்பவும் இரண்டே வருடங்களில் வேலைவாய்ப்புகள் மெல்ல பெருக ஆரம்பித்தன.

2020 – கொரோனா காலகட்டத்தில் திரும்பவும் ரிசஷன். தொய்வு. பலர் வேலை இழந்தனர். காரணம் நாம் அறிவோம். உலகமே ஸ்தம்பித்துப் போய் இருக்கும் நேரத்தில் சாஃப்ட்வேர் தயாரிக்கும் பணி மட்டும் நடந்து கொண்டே இருக்குமா? குறைவான பொறியாளர்களை வைத்துக்கொண்டு நிறைவான பணிகளை செய்ய ஆரம்பித்தனர்.

இதோ இப்போது மீண்டும் சாஃப்ட்வேர் துறை Ai (Artificial iNtelligence) எனும் புத்தம் புது வரவோடு சேர்ந்து புது அவதாரம் எடுக்க ஆர்ம்பித்து விட்டது.

Ai தொழில்நுட்பத்தை மேலோட்டமாகப் பார்த்தால் வேலை வாய்ப்பை குறைப்பதுபோல் தோன்றும், ஆனால் அது வேறு மாதிரியான புதிய வேலை தொழில்வாய்ப்புகளுக்கு வித்திடும். அதுதான் உண்மை என்பது போகப் போக அனைவருக்கும் புரியும்.

மேலும் Ai என்ற செயற்கை நுண்ணறிவு என்பது சாஃப்ட்வேர் துறையின் ஓர் அங்கமே. Ai துறை கம்ப்யூட்டர் சயின்ஸை பாடமாக எடுத்துப் படித்தவர்களுக்கு மட்டுமில்லாமல் எல்லா துறையினருக்கும் வாய்ப்புகளைப் பெற்று தரும். அது எப்படி என தெரிந்துகொள்ள சாஃப்ட்வேர் துறை பற்றிய புரிதல் வேண்டும் என்பதால் சாஃப்ட்வேர் துறை எப்படி செயல்படுகிறது என விளக்குகிறேன்.

கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர் துறை சார்ந்தவர்கள் மற்ற எல்லா துறைகளுக்கும் தேவையான சாஃப்ட்வேர்களையும், அப்ளிகேஷன்களையும் தயாரிக்க வேண்டும்.

உதாரணத்துக்கு சில துறைகளை சொல்கிறேன். மருத்துவத் துறைக்கு ஒரு சாஃப்ட்வேர் தயாரிக்க வேண்டும் என்றால் மருத்துவம் சார்ந்த விஷயங்களை உள்ளீடு செய்வதுடன், மருத்துவத் துறையுடன் சேர்ந்து கலந்து ஆலோசித்து அவர்கள் செயல்படுத்தும் மருத்துவ முறைகளை எல்லாம் லாஜிக்குகளாக எழுதி புரோகிராம் உருவாக்கி சாஃப்ட்வேர்களை வடிவமைக்க வேண்டும்.

விவசாயத்துக்காக சாஃப்ட்வேர்கள் தயாரிக்க வேண்டும் என்றால் விவசாயம் சார்ந்த அனைத்து விவரங்களையும் புரிந்துகொண்டு அவர்களின் தேவைக்கு ஏற்ப சாஃப்ட்வேர்களை உருவாக்க வேண்டும்.

தமிழ்த் துறைக்கு சாஃப்ட்வேர்கள் தயாரிக்க வேண்டும் என்றால், தமிழ்த் துறையினருடன் கலந்து ஆலோசித்து அவர்களின் முழு ஆதரவுடன், அவர்களின் ஞானத்தை உள்வாங்கிக் கொண்டு அவர்களுக்குத் தேவையானதை சாஃப்ட்வேர்களாக உருவாக்க வேண்டும்.

இதுதான் லாஜிக்.

தமிழைப் பாடமாக எடுத்துப் படிப்பவர்களிடம், தமிழ் சார்ந்த விஷயங்கள் அவர்கள் மூளைக்குள் சேகரிக்கப்பட்டிருக்கும். அதில் அவர்கள்தான் மாஸ்டர். அதுபோல, எலக்ட்ரிகல் துறை மாணவர்கள் மூளைக்குள் எலக்ட்ரிக்கல் துறை சார்ந்த ஞானமும், மெக்கானிக்கல் துறை மாணவர்கள் மூளைக்குள் மெக்கானிக்கல் துறை சார்ந்த ஞானமும், மருத்துவம் படிக்கும் மாணவர்கள் மூளைக்குள் மருத்துவத் துறை சார்ந்த ஞானமும், அக்கவுண்ட்ஸ் படிக்கும் மூளைக்குள் அக்கவுண்ட்டிங் துறை சார்ந்த ஞானமும் பதிவாகி இருக்கும். அவரவர் துறையில் அவரவர் மாஸ்ட்டர்.

கம்ப்யூட்டர் சயின்ஸ் மாணவர்கள் பணிக்கு வரும்போது அவர்கள் எந்தத் துறைக்காக சாஃப்ட்வேர்களை தயாரிக்கிறார்களோ அந்தத் துறையினருடன் கலந்து ஆலோசனை செய்து உங்களின் ஞானத்தை உள்வாங்கிக்கொண்டு சாஃப்ட்வேர்களை உருவாக்க வேண்டும்.

நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள், தொழில்நுட்ப உலகில் யாரும் தனித்தனியாக செயல்பட முடியாது. எல்லா துறைகளும் ஒருங்கிணைந்துதான் தொழில்நுட்பத் துறையை முழுமை ஆக்குகிறது. தொழில்நுட்பத் துறை என்பது ஒரு கருவி. அந்தக் கருவியை பயன்படுத்தி தமிழுக்கான அப்ளிகேஷன்களை உருவாக்கலாம், மருத்துவத்துக்கான அப்ளிகேஷன்களை வடிவமைக்கலாம், இசை, நடனம், இலக்கியம், எல்க்ட்ரிக்கல், மெக்கானிக்கல் இப்படி எந்தத் துறைக்கும் அப்ளிகேஷன்களை உருவாக்க முடியும்.

Ai – துறையும் இப்படித்தான். Ai – ஐ பொருத்தவரை இனி வரும் காலத்தில் இந்த உலகமே Ai – ன் உதவியுடன்தான் இயங்கப் போகிறது. எல்லா துறையிலும் இதன் ஆதிக்கம் இருக்கப் போகிறது.

இன்டர்நெட் வந்தபோது எப்படி எல்லா துறைகளும் இன்டர்நெட்டின் கட்டுக்குள் வந்து அனைத்தும் இணையமயமானதோ அப்படித்தான் இனி அனைத்தும் Ai மயமாகப் போகிறது.

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், நாமே எதிர்பார்க்காத அளவுக்கு Ai துறையில் நேரடியாகவும், மறைமுகமாகவும் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்த மாணவர்கள் மட்டுமல்ல எல்லா துறையினருக்கும் வேலைவாய்ப்புகள் பெருகப் போகிறது.

பொருத்திருந்துப் பாருங்கள்!

அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
காம்கேர் சாஃப்ட்வேர்
மார்ச் 1, 2024 | வெள்ளி

(Visited 5,702 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon