இன்று காலை நாமக்கல் அருகே உள்ள சிறு கிராமத்தில் தற்சமயம் விவசாயம் பார்த்து வரும் வாசகர் ஒருவர் ‘அசத்தும் Ai’ நூல்களை வாங்கி இருப்பதாகவும், தான் தபால் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற சீனியர் போஸ்ட் மேன் எனவும் அறிமுகம் செய்துகொண்டதுடன், தான் வாங்கி இருக்கும் Ai நூல்கள் தன் பேத்திகளுக்கு மிக பயனுள்ளதாக இருக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாக முடித்திருந்தார்.
பேத்திகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புவதாக கூறியிருந்ததால், அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை தெரிந்துகொள்ள, அவரை நானே தொடர்புகொண்டு பேசினேன். அவருக்கு அத்தனை மகிழ்ச்சி.
தினமணியில் நூல் அரங்கத்தில் வந்திருந்த நூல் விமர்சனம் படித்து அதிலுள்ள தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு நூல்களை வாங்கியதாகக் கூறினார்.
தொலைபேசி துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற என் பெற்றோருக்கு Ai நூல்களை சமர்ப்பணம் செய்துள்ளதைப் பார்த்துவிட்டு ஒரே தாய்வீடு (முன்பு தபால் துறையும் தொலைபேசி துறையும் ஒன்றாக இருந்ததால்) என்ற பாசத்தில் வாட்ஸ் அப் செய்திருந்ததாகக் கூறி மகிழ்ந்தார்.
அவர் மகன், மருமகள், 3 பேத்திகளுடன் கிராமத்தில் விவசாயம் பார்த்துக் கொண்டு அங்கேயே வசித்து வருவதாகக் கூறினார்.
மனதுக்குள் அவர் பேத்திகள் கல்லூரி படிப்பார்கள் என்றெண்ணியபடி, என்ன படிக்கிறார்கள் என கேட்டேன்.
அவர் சொன்ன பதிலில் வாயடைத்துப் போனேன்.
அவர் பேத்திகள் மூன்றாம் வகுப்பு, ஐந்தாம் வகுப்பு, ஏழாம் வகுப்பு படிக்கிறார்கள் என்றும், தினமும் அவர்கள் கிராமத்தில் இருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ஒரு பள்ளிக்கு பஸ்ஸில் சென்று வருவதாகவும், ஆங்கில மீடியம் படிப்பதாகவும், ஆங்கில மீடியம் என்றாலும் தமிழும் நன்றாக படிப்பார்கள் என்று கூடுதல் தகவலுடன் தன்னைப் பற்றி அறிமுகம் செய்துகொண்டார்.
3,5,7 வகுப்புப் படிக்கும் உங்கள் பேத்திகளுக்கு அசத்தும் Ai ன் நூல்கள் பயனுள்ளதாக இருக்கும் என நம்புவதாக நீங்கள் வாட்ஸ் அப்பில் பகிர்ந்திருந்த தகவல் தான் அந்த இரண்டு நூல்களின் வெற்றி என நன்றி கூறினேன்.
ஆம். அதுதானே உண்மை. வயது வித்தியாசமின்றி, மொழி பேதமின்றி, கல்வித் தகுதி அவசியமின்றி தமிழ் படிக்கத் தெரிந்த அனைவருக்கும் நான் எழுதிய அசத்தும் Ai – நூல்கள் பயனுள்ளதாக இருப்பதும், அந்த இரண்டு நூல்களும் நம் நாட்டில் ஒரு கிராமத்தில் வசிக்கும் மூன்று பெண் குழந்தைகளால் படித்துப் புரிந்துகொள்ள முடிகிறது என்பதே மகளிர் தினமான இன்று எனக்குக் கிடைத்த ஆகச் சிறந்த பரிசாக நினைத்தேன்.
அசத்தும் ai- Part1, Part2 இரண்டு நூல்களையும் வாங்குவதற்கு வாட்ஸ் அப்: 9444949921
அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துகள்!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
காம்கேர் சாஃப்ட்வேர்
மார்ச் 8, 2024 | வெள்ளிக்கிழமை