இன்று மயிலாடுதுறையில் பானை வியாபாரம் செய்துவருபவரிடம் இருந்து போன் அழைப்பு.
ஏழெட்டு வருடங்களுக்கு முன்பு மயிலாடுதுறை ஏவிசி கல்லூரியில் ஒரு நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த சமயம் மயிலாடுதுறை புகழ் லாக்கடத்துக்கு அருகில் அவரது கடை வழியாக நடந்து சென்றபோது அவர் பானைகளை அழகாக அடுக்கிக் கொண்டிருந்ததை ரசித்து பார்த்தபடி கடந்து செல்ல மனமில்லாமல் நின்று பார்த்துக் கொண்டிருந்தேன். உடன் அப்பா அம்மாவும்.
சிரித்த முகத்துடன் ‘என்னம்மா வேணும்’ என்று பேச்சை ஆரம்பித்தபோது என் பெயரை சொல்ல வேண்டிய சூழலில் பெயரைச் சொன்னதும் அவர் கண்களில் ஆச்சர்யம்.
‘என்னம்மா சொல்றீங்க… நீங்களா…. உள்ளே வாங்க… உங்க புஸ்தகங்களைத்தான் நான் வாங்கி அடுக்கி வச்சிருக்கேன்’ என்று சொல்லியபடி அவரது ஓட்டு வீட்டுக்குள் அழைத்துச் சென்று ஒரு இரும்பு ஷெல்பை காட்டினார். அதில் ஒரு அடுக்கு முழுவதும் நான் எழுதிய புத்தகங்கள். ஒவ்வொன்றாக ஆர்வமுடன் எடுத்துக் காண்பித்தார். அவரது மனைவி மகன் மற்றும் மகளை அறிமுகம் செய்து வைத்தார். அப்போது அவர் மகனும், மகளும் பள்ளிப் படிப்பில் இருந்தனர்.
இப்படி அறிமுகமானவர் அவ்வப்பொழுது அவரது பிள்ளைகளின் படிப்பு சம்மந்தமாக போன் செய்து ஆலோசனை கேட்பார்.
இப்போது அவர் மகள் ‘ஏரோனேடிகல் இன்ஜினியரிங்’ முடித்து விட்டார், மகன் எம்.பி.பி.எஸ் படித்துக் கொண்டிருக்கிறார். எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக இவரது மனைவி சட்டம் (Law) படித்துக் கொண்டிருக்கிறார்.
கடுமையான உழைப்பில் தான் பெற்ற பிள்ளைகளை படிக்க வைப்பது பொதுவாக பெற்றோர்கள் செய்வதுதான், ஆனால் இவர் தன் மனைவியின் ஆசைக்காக அவர் விரும்பிய படிப்பை படிக்க வைத்து அழகு பார்க்கிறார். அவர் படிப்புக்காக வெளியூரில் தங்கி இருக்கும் நாட்களில் இவர் கடையையும் பார்த்துக்கொண்டு, சமையல் மற்றும் வீட்டு வேலைகளையும் பார்த்துக்கொண்டு மற்றவர்களுக்கு உதாரணமாக வாழ்ந்து வருகிறார்.
இன்று இவர் போன் செய்தது வேறொரு விஷயத்துக்காக…
மருத்துவம் படிக்கும் அவரது மகனின் பிறந்த நாளுக்கு பரிசு கொடுப்பதற்காக, நான் எழுதிய ‘அசத்தும் Ai’ பார்ட்-1 & பார்ட்-2 நூல்களை வாங்குவதற்காக அழைத்திருந்தார். பேச்சை ஆரம்பிக்கும்போதே ‘அண்மையில் நீங்கள் எழுதி பிரபலமாகிக் கொண்டிருக்கும் ஏஐ நூல்கள்…’ என்று குறிப்பிட்டது மகிழ்ச்சியாக இருந்தது.
இந்த இரண்டு நூல்களும் வெளியான ஜனவரி 2024 முதல் இன்று வரை தினமும் ஆர்டர்கள் வந்துகொண்டே இருக்கின்றன.
ஆனால், ’பிறந்த நாளுக்கு பரிசளிக்க!’ என்று கேட்டு வாங்குவது இதுவே முதன் முறை. அந்த வகையில் மட்டற்ற சந்தோஷம்! இந்த ஞாயிறு இப்படியாக!
குறிப்பு: Ai நூல்களை வாங்க விரும்புவோர் வாட்ஸ் அப்: 9444949921
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
காம்கேர் சாஃப்ட்வேர்
மார்ச் 17, 2024 | ஞாயிறு