முதல் வங்கிக் கணக்கு!

முதல் வங்கிக் கணக்கு!

இன்று காலை ஒரு அலைபேசி அழைப்பு. என் பெயரை கேட்டு உறுதி செய்து கொண்டார்.

‘என்னை நினைவிருக்கிறதா? உங்கள் காம்கேர் நிறுவனத்துக்காக ஆலந்தூர் கரூர் வைஸ்யா பேங்கில் அக்கவுண்ட் ஓபன் செய்ய வந்தபோது நான் தான் மேனேஜராக இருந்தேன்…’ என்று தன் பெயரை சொல்லி அறிமுகம் செய்துகொண்ட போது எனக்கு மிகவும் ஆச்சர்யமாக இருக்க ‘அப்படியா?’ என்று அதிசயத்தேன்.

‘நீங்களும் உங்கள் சகோதரியும் உங்கள் தந்தையுடன் வருவீர்களே…’ என்ற போது இன்னும் அதிசயமாகி ஒரு பரபரப்பு ஒட்டிக் கொண்டது.

‘எப்படி சார் இத்தனையையும் நினைவில் வைத்திருக்கிறீர்கள்?’

‘1993, 1994 என நினைக்கிறேன், உங்கள் காம்கேருக்காக வங்கியில் அக்கவுண்ட் ஓபன் செய்ய வந்திருந்திருந்தீர்கள்… காம்கேர் என்ற பெயரே மிகவும் அழகான பெயராக அப்போதே மனதுக்குள் ஒட்டிக் கொண்டது. இப்போது ஃபேஸ்புக்கில் உங்கள் பெயரில் ஒரு பதிவு பார்த்தேன். ‘அட இவங்களா?’ என உள்ளே சென்று பார்த்தேன். உடனே உங்களுக்கு போன் செய்தேன்…’

‘நீங்கள் எத்தனையோ பேரை சந்தித்திருப்பீர்கள், காம்கேரை நினைவு வைத்திருப்பது ஆச்சர்யம் தான்…’

‘அப்போ நீங்களும் உங்கள் சகோதரியும் சின்ன பெண்களா இருப்பீங்க… அப்போதெல்லாம் எங்கள் வங்கியில் கம்ப்யூட்டரெல்லாம் கிடையாது… எங்களிடம் மட்டுமல்ல, எங்கேயும் கம்ப்யூட்டர் கிடையாது… அப்படிப்பட்ட காலகட்டத்தில் கம்ப்யூட்டர் சம்மந்தமா ஒரு நிறுவனம் ஆரம்பித்த இரண்டு இளம் பெண்களை பார்ப்பதற்கு எங்கள் வங்கியில் உள்ள அனைவருக்கும் ஆச்சர்யமாக இருக்கும். துறுதுறுன்னு சுறுசுறுப்பா வேகமாக இருப்பீங்க… பேங்குக்கு வந்து செக் டெபாசிட் செய்யறதுக்கு, கேஷ் போடறதுக்குன்னு வரும்போது என்னிடம் பேசிவிட்டு செல்வீர்கள். ரொம்ப பேச மாட்டீர்கள், சுருக்கமா கேட்ட கேள்விக்கு பதில் சொல்வீர்கள், உங்கள் அப்பாவும் வருவார்…’

‘ஆமாம் சார், மிகச் சரியாக நினைவு வைத்திருக்கிறீர்கள்… அதை போனில் அழைத்து சொல்வது மிக மகிழ்ச்சியாக உள்ளது…’

‘இன்னமும் கரூர் வைஸ்யா பேங்கில் அக்கவுண்ட் வைத்திருக்கிறீர்களா?’

‘ஆமாம், அந்த வங்கியில் தான் அக்கவுண்ட் வைத்திருக்கிறோம். எத்தனையோ வங்கிகள் தங்களிடம் அக்கவுண்ட் வைத்துக்கொள்ள கேட்கிறார்கள். ஆனால் சென்டிமென்ட்டாக கேவிபி தான் ராசியான வங்கி, மாற்ற இயலாது என மறுத்து விடுவேன்…’

‘இன்றைய பெரிய தொழிலதிபருக்கு அன்றே எங்கள் வங்கியில் நான் மேனேஜராக இருந்தபோது அக்கவுண்ட் ஓபன் செய்து தந்திருப்பது பெருமை அல்லவா? அதுவும் உங்கள் நிறுவனத்துக்கான முதல் வங்கி அக்கவுண்ட் அது…’

‘தொழிலதிபர் என்றெல்லாம் சொல்லி என்னை மிக உயரத்தில் உட்கார வைக்காதீர்கள் சார், உழைக்கிறேன், உயர்கிறேன், என்னைச் சார்ந்தவர்களையும் உயர்த்துகிறேன். அவ்வளவுதான்…’

‘ஆமாம், இப்போதுதான் உங்கள் பதிவுகளை பார்க்கிறேன். தொழில்நுட்பத்தை சமுதாயத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் எடுத்துச் செல்கிறீர்கள்… வாழ்த்துகள்’ என்று சொல்லி விடைபெற்றார்.

கடைசியில் அவர் அண்மையில் பணி ஓய்வு பெற்ற விவரத்தையும், அவரது குடும்ப விவரங்களையும் பகிர்ந்துகொண்டார். பரஸ்பர நலன் விசாரிப்புடன் உரையாடல் நிறைவு பெற்றது.

ஆனால், அந்த உரையாடல் ஏற்படுத்திய மகிழ்ச்சி அலை ஓயவில்லை. தினமும் இதுபோல என்னை உயிர்ப்புடன் வைத்துக்கொள்ள ஏதேனும் ஒன்றை இயற்கை அனுப்பி வைத்துக்கொண்டே இருக்கிறது.

முதல் வங்கிக் கணக்கு! என் ஆட்டோபயோகிராஃபியில் இந்தத் தலைப்பும் இணைந்து கொண்டுள்ளது.

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
காம்கேர் சாஃப்ட்வேர்
ஏப்ரல் 3, 2024 | புதன்

(Visited 1,909 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon