கண் திருஷ்டி!

கண் திருஷ்டி!

ஒரு டாக்‌ஷோவில் தன் மகன் 20 தோசைகள் சாப்பிடுவான், அதுவும் எப்படி தெரியுமா? என்று பெருமையுடன் பேசிய ஒரு அம்மாவின் மகன் அண்மையில் ரயில் விபத்தில் இறந்துவிட்டதாக செய்தி வந்தபோது வாட்ஸ் அப், ஃபேஸ்புக் அனுதாபிகளின் கருத்து என்ன தெரியுமா? ‘திருஷ்டி பட்டுவிட்டது’.

உண்மைதான்.

இதில் உங்களுக்கெல்லாம் நம்பிக்கை இருக்கிறதோ, இல்லையோ நிச்சயமாக ‘பார்வைக்கு பலன்’ உண்டு. மருத்துவத்தால் சரியே ஆகாத உடல் / மன நலன் கொண்டவர்களைக் கூட கோயில், குளம், அவரவர் ஆன்மிக ஸ்தலங்கள் என அழைத்துச் செல்வதும், அவரவர்கள் ஆன்மிக குருக்களை சந்திக்க அழைத்துச் செல்வதையும் பார்க்கிறோம்தானே. நம் குடும்பங்களில் கூட அப்படிப்பட்டவர்கள் இருக்கலாம். காரணம், நல்ல வைப்ரேஷன்கள், ஆன்மிக குருக்களின் பார்வைகள் கொடுக்கும் நேர்மறை அதிர்வலைகள் இவை எப்பேற்பட்ட நல்ல விஷயங்களை மனதுக்குள்ளும் உடலுக்குள்ளும் கடத்தும் என்பதை அனுபவிப்பவர்களுக்கு மட்டும்தான் தெரியும்.

எப்படி நல்ல நேர்மறை எண்ணங்கள் நல்லவற்றை பரப்புகிறதோ, எதிர்மறை எண்ணங்கள் தீயவற்றுக்கும் அடிகோலும்.

நான்கு பேர் கண் படும்போது திருஷ்டி உண்டாகும். இங்கு பொதுவெளியில் எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்கப்பெறுவதில்லை. எல்லாமும் கிடைப்பதற்கு உழைப்பையும், திறமையையும், வாய்ப்பையும் ஒரு காரணமாக சொன்னாலும், இந்த மூன்றும் இருப்பவர்களில் பலரும் எதுவுமே கிடைக்காமல் முடங்கியும் இருக்கிறார்கள். இது இயற்கையின் விளையாட்டு. இயற்கைக்கு காரணங்கள் எதையும் சொல்ல முடியாது.

கிடைக்காதவர்கள் பொறாமைப்படுவார்கள் என்று சொல்லவில்லை. அவர்களின் மனதின் ஏக்கம் அவர்களிடம் இருந்து அவர்களையும் அறியாமல் எதிர்மறை சக்தியை வெளிப்படுத்தும். இவற்றை எல்லாம் அனுபவித்தவர்களுக்கு மட்டுமே நான் சொல்வதெல்லாம் புரியும்.

கடவுள் நம்பிக்கை, பார்வைகள், திருஷ்டி இவற்றில் எல்லாம் நம்பிக்கை இல்லாதவர்கள் கூட அவர்கள் இணைந்து பணிபுரியும் இடங்களில் கட்டாயத்துக்காக கூட அவற்றை நம்ப வேண்டிய சூழல் உண்டாகும். அந்த வகையில் சில உதாரணங்கள்… எந்த ஒரு திரைப்படமாவது பூஜை போடாமல் ஆரம்பிக்கிறார்களா? பிறந்த குழந்தைக்கு திருஷ்டிப் பொட்டு வைக்காதவர்களை பார்த்ததுண்டா?

இவ்வளவு ஏன், என்னையே ஒரு உதாரணமாக சொல்கிறேனே.

எங்கள் குடும்ப நிகழ்ச்சிகள் எதையும் என் பெற்றோர் விட்டுக் கொடுக்க மாட்டார்கள். யாராக இருந்தாலும் அழைப்பிதழ் கொடுத்தால் அந்த நிகழ்ச்சிக்கு சென்று வாழ்த்திவிட்டு வருவார்கள். பெரும்பாலும் (99.9%) எங்களையும் அழைத்துச் செல்வார்கள். குடும்ப நிகழ்ச்சிகளில் சிறுவயதில் எல்லாம் எங்கள் குடும்பத்தில் இருந்து ஐந்து பேரையும் பார்க்கலாம்.

இப்போது அவர்களின் வயது மற்றும் அனுபவத்தின் காரணமாக கூடுதலாகவே மரியாதையும் உண்டு என்பதால் அவர்களிடம் ஆசி பெற்று நிகழ்ச்சியை ஆரம்பிப்பது வழக்கமாகி உள்ளது.

சிறு வயதில் ஏற்பட்ட பழக்கம் அல்லவா? வழக்கம்போல் குடும்பத்தில் எந்த ஒரு நிகழ்ச்சி என்றாலும் அப்பா, அம்மா நான் செல்வது வழக்கம்.

ஒவ்வொரு முறை நிகழ்ச்சி முடிந்து வீட்டிற்கு வந்ததும் அப்பா அல்லது அம்மாவுக்கு ஏதேனும் சிறு உடல் நல பிரச்சனை உண்டாகி இரண்டு நாட்களுக்கு முடக்கிப் போடும்.

நான் அவர்களிடம் ‘என்னப்பா நீ இளமையாக இருப்பதை பார்த்து யாரேனும் கண் போட்டிருப்பார்களா?’ ‘என்னம்மா, உன் கம்பீரத்தை பார்த்து யாரேனும் திருஷ்டி போட்டிருப்பார்களா?’ என கேட்பது வாடிக்கை.

இப்போதெல்லாம் அவர்களை விட என்னை அதிகம் பாதிக்கிறது. ‘ஏன் என்ன ஏது?’ என்று நாங்கள் பேசிக் கொண்டிருக்கும்போது என் பெற்றோரு சொன்ன விஷயத்தில் நியாயம் இருப்பதாக தோன்றியதால் பொதுவெளியில் பகிர்கிறேன். இது சுயதம்பட்டம் அடித்துக்கொள்ளும் விஷயம் அல்ல. திருஷ்டிக்கு நான் சொல்வதும் ஒரு கோணம். அவ்வளவே.

நாங்கள் செல்லுகின்ற நிகழ்ச்சிகளுக்கு வருகை தரும் வயதானவர்களின் பிள்ளைகள் வேலை விஷயமாகவோ அல்லது தனிப்பட்ட குடும்பப் பிரச்சனை காரணமாகவோ அவர்களை விட்டு தனியாக இருக்கிறார்கள், வயதானவர்களில் சிலர் முரட்டுப் பிடிவாதத்தினால் தன் இஷ்டப்படித்தான் இருப்போம் என கொஞ்சமும் அனுசரணையாக இல்லாமல் அவர்களே வேண்டி விரும்பி தனியாக இருக்கிறார்கள். அப்படியே சேர்ந்து இருந்தாலும், குடும்ப நிகழ்ச்சிகளுக்கு ஒற்றுமையாக வருவதில்லை. இப்படி சின்ன சின்ன குடும்பப் பிரச்சனைகள், உளவியல் சிக்கல்கள் காரணமாக ஒரு ஏக்கம் அவர்களுக்குள் இருந்துகொண்டே இருக்கும் / இருக்கலாம். ஏக்கம் எதிர்மறை சிந்தனைகளுக்கு வழிவகுக்கும்.

நான் எப்போதுமே என் பெற்றோருடன் எல்லா நிகழ்ச்சிகளிலும் ஆஜர் ஆகி விடுவதும், எந்த நிகழ்ச்சி ஆனாலும் என் கிரியேட்டிவிட்டியினால் நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோ கலைஞர்கள் அவர்களுக்கு புகைப்படங்களை அனுப்புவதற்கு முன் நிகழ்ச்சியை வித்தியாசமான கோணத்தில் புகைப்படம் எடுத்து அவர்களுக்கு அனுப்பிவிடும் என் செயல்பாட்டாலும் அனைவரின் பார்வையும் என் மீதும் என் பெற்றோர் மீதும் அதிகம் இருக்கும்.

குறிப்பாக அப்பா அம்மாவை விட்டுப் பிரியாமலும், எந்த இடத்திலும் விட்டுக்கொடுக்காமலும், காம்கேர் நிறுவனப் பணிகளில் பிசியாக இருந்தாலும் குடும்ப நிகழ்ச்சிகளையும் விட்டுக் கொடுக்கமால் கலந்து கொள்வதாலும் பலரின் பார்வையும்படும்.

இதன் காரணமாகவே, எந்த ஒரு நிகழ்ச்சிக்கு சென்று வந்தாலும் காரணமே இல்லாமல் ஏதேனும் அசெளகர்யங்கள் உண்டாகிறது என்பதை புரிந்து கொண்டோம்.

இவ்வளவு பெரிய வியாக்கியானப் பதிவு ஏன் என்றால், கண் பார்வைக்கு சக்தி உண்டு என்பதை நான் நம்புவதே.

இதனால்தான் பெரியவர்களை பார்த்ததும் நமஸ்கரிப்பது கூட நம்மை அறியாமல் அவர்கள் மனதை நாம் பாதித்திருந்தாலும் அவர்கள் காலில் விழிந்து வணங்கும்போது அவர்கள் மனம் குளிர்ந்து ஆசிர்வதிப்பார்கள்.

இப்படி நிறைய இருக்கிறது நம் பண்பாட்டிலும், பாரம்பர்யத்திலும்.

அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
காம்கேர் சாஃப்ட்வேர்
ஏப்ரல் 11, 2024 | வியாழன்

(Visited 8,984 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon