புத்தக வடிவிலேயே வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்!
Artificial iNtelligence என்பதன் சுருக்கம் Ai. இதன் அடிப்படையே சிந்திக்கும் திறன். இந்த சிந்திக்கும் திறன் தான் மனிதனை மற்ற ஜீவராசிகளிடம் இருந்து வித்தியாசப்படுத்தி உயர்த்துகிறது. இதனால்தான் தான் சொகுசாக வாழ்வதற்கு மனிதன் சதா சிந்தித்துக் கொண்டே இருக்கிறான். புதிதுபுதிதாக கண்டுபிடிப்புகளை உருவாக்கிக் கொண்டே இருக்கிறான். ‘போதாது, போதாது இன்னும் வேணும்’ எனும் அடம் பிடிக்கும் குழந்தையாய் தொழில்நுட்பத்திடம் வேண்டி வேண்டி உருகுகிறான். அதுவும் அக்ஷயப்பாத்திரமாய் வாரி வாரி வழங்கியபடி இருக்கிறது.
இதற்குப் பின்னால், நித்தம் மாபெரும் தொழில்நுட்ப ஆராய்ச்சிகள் நடைபெற்றபடி இருக்கின்றன. பல்லாயிரக் கணக்கான தொழில்நுட்ப வல்லுநர்கள் தங்கள் மூளையை இந்த ஆராய்ச்சிகளுக்கு தாரை வார்த்துக் கொடுத்து ஆராய்ச்சிகள் செய்தபடியே இருக்கிறார்கள். நாங்கள் உட்பட.
‘அரிது அரிது மானிடர் ஆதல் அரிது’ என்றாள் ஒளவைப் பாட்டி. ஆனால் மனிதனோ தன்னைப் போலவே மற்றொன்றை உருவாக்கும் முயற்சியில் இறங்கி அது தன்னை மிஞ்சும் திறன் உள்ள ஒன்றாக உருவெடுத்து வருவதைக் கண்டு களித்து ஆனந்தக் கூத்தாடி வருகிறான். இதில் சாதக பாதகங்கள் இருந்தாலும் இனி வரும் உலகை நம்மை ஆளப் போவது Ai தான்.
சிந்திக்கும் திறன் இருந்தால் கண்டுபிடிப்புகள் வந்து கொண்டுதான் இருக்கும். ஐந்தறிவுகள் இருப்பதை வைத்துக்கொண்டு வாழப் பழக்கும். ஆறாவது அறிவு மட்டுமே இருப்பதை இன்னும் மேம்படுத்திப் பயன்படுத்தவும், சொகுசாக வாழவும் வழியை யோசிக்கக் கற்றுக் கொடுக்கும். ஆம். ஆறாம் அறிவைப் பெற்ற மனிதன், இப்போது ஏழாம் அறிவை கண்டுபிடித்து அதற்கு செயற்கை நுண்ணறிவு (Artificial iNtelligence) என்று பெயர்சூட்டியுள்ளான்.
இறைவனும் இயற்கையும் நமக்கு அளித்தது இயற்கை நுண்ணறிவு. மனிதன் தன் சிந்திக்கும் ஆற்றலினால் கண்டுபிடித்தது என்பதால் அதற்கு செயற்கை நுண்ணறிவு என பெயரிட்டுள்ளான்.
செயற்கை நுண்ணறிவு குறித்த சிறிய கருத்தரங்கு. அதில் கலந்துகொண்ட நடுத்தர வயதான ஒருவர் என்னை தன் அறிவால் மடக்குவதாக நினைத்துக்கொண்டு கேள்விகளை அடுக்கினார்.
He: இவ்வளவு சொல்றீங்களே, Ai இயற்கையா பாட்டுப் பாடுமா?
Me: பாடாது!
He: ஆங்…
He: இயற்கையா ஒரு காவியத்தைப் படைக்குமா Ai?
Me: படைக்காது!
He: ஆங்…
He: இயற்கையா விவசாயம் செய்யுமா Ai?
Me: செய்யாது!
He: ஆங்… மனிதன் தாங்க உசத்தி… அவனால தான் இயற்கையா எல்லாத்தையும் உற்பத்தி செய்ய முடியும்.
இப்போதுதான் நான் வாய் திறந்தேன்.
‘ஆமாங்க… Ai என்பதே செயற்கை தானே…பின்னர் அதனிடம் எப்படி இயற்கையா எல்லாத்தையும் எதிர்பார்க்க முடியும்? Ai என்பது நமக்கு உதவுவதற்காக நாம் உருவாக்கியுள்ள ஒரு வசதி. அதை நமக்கு உதவ வைப்போம், நம்மைப் போலவே செயல்பட வைப்போம், நம்மையே மிஞ்சும் அளவுக்கு இயங்க வைக்க முயற்சிப்போம். அதன் லகானே நம் கையில்தான். பின்னர் ஏன் செயற்கையை இயற்கையுடன் ஒப்பிடணும்?’
இவ்வளவுதான் செயற்கை நுண்ணறிவு. இதன் பின்னணியில் தான் அது தொழில்நுட்ப ரீதியாக வடிவமைக்கப்படுகிறது.
ஆம். செயற்கையிடம் இயற்கையை எதிர்பார்த்து அதனை மேலும் மேலும் செதுக்கி வருகிறான். இயற்கையிடம் செயற்கையை எதிர்பார்ப்பதும், செயற்கையிடம் இயற்கையை எதிர்பார்ப்பதும் தானே மனிதர்களின் ஆகப் பெரிய பலவீனம். ஆனால், அதையே பலமாகக் கொண்டுதான் செயற்கை நுண்ணறிவை உருவாக்கி வருகிறான் மனிதன். பெயரென்னவோ செயற்கை நுண்ணறிவு. ஆனால் அதை இம்மியும் செயற்கைப் போலில்லாமல் இயற்கையாக உருவாவதைப் போல செய்வதே அவனுடைய தீரா தாகமாக உள்ளது. நம்மை நினைத்தால் நமக்கே விசித்திராமாக இருக்கிறதல்லவா?
நம் வாழ்க்கையில் நடைபெறும் நிகழ்வுகளை நாம் ‘எல்லாம் இறைவனின் திருவிளையாடல்’ என சொல்லிக் கொண்டிருக்கிறோம். Ai உலகில் Ai சாதனங்கள் நித்தம் தங்கள் உருவத்திலும், செயல்பாட்டிலும் நடைபெறும் விறுவிறுப்பான மாற்றங்கள் குறித்து அவை ‘எல்லாம் மனிதனின் திருவிளையாடல்’ என பேசிக் கொண்டிருக்கின்றன.
சரி விஷயத்துக்கு வருவோம்.
Ai என்பது ஒரு ரோபோவா என்பது ஒருசிலரின் கேள்வி. Ai என்பது ஒரு ரோபோவாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. Ai தொழில்நுட்பம் கம்ப்யூட்டரில், காமிராவில், மொபைலில், காரில், பைக்கில், வாஷிங் மெஷினில், வேக்யூம் கிளீனரில் என எந்த சாதனத்தில் வேண்டுமானாலும் பொருத்தப்பட்டிருக்கலாம். அதைப்போல ரோபோவிலும் பொருத்தி செயல்பட வைக்க முடியும். அவ்வளவுதான். அதனால்தான் சொல்கிறேன், ரோபோ என்பதே Ai என்றோ, Ai என்பதே ரோபோ என்றோ அர்த்தம் கிடையாது. குழப்பமாக இருக்கிறதா? இன்னும் தெளிவாக அடுத்த மாதம் சொல்கிறேன்.
(வரம் தர வரும் Ai)