Ai என்பது அனிமேஷனா?
நங்கநல்லூரில் பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் கடை ஒன்று. காம்கேரில் நாங்கள் அனிமேஷன் சிடிக்கள் விற்பனை செய்து வந்த சமயம் அவர்களிடமும் விற்பனைக்குக் கொடுப்போம். சிடிக்கள் காலம் முடிந்த பிறகு பெரிய அளவில் தொடர்பில் இல்லை.
எங்கள் குடும்ப நிகழ்ச்சிக்காக சில பொருட்கள் வாங்க வேண்டி இருந்தது. அப்பாதான் மாடல் அனுப்பி ஆர்டர் கொடுத்து அந்தக் கடை நிர்வாகியுடன் வாட்ஸ் அப்பில் தொடர்பில் இருந்தார். தன் பெயரை சொல்லி, ‘நாங்கள் முன்பு உங்கள் கடைக்கு நிறைய வந்திருக்கிறோம்’ என்று அறிமுகமும் செய்து கொண்டிருந்தார்.
இன்று நானும் அப்பாவும் ஆஞ்சநேயர் கோயில் தரிசனம் முடித்துக்கொண்டு அந்தக் கடைக்குச் சென்றோம்.
அந்தக் கடைக்குச் சென்று, பல வருடங்கள் ஆகிவிட்டன. என்னைப் பார்த்ததும் அந்த கடை நிர்வாகி (அவர்தான் கடையின் ஓனரும்கூட) ‘காம்கேர் புவனேஸ்வரி என்று ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாமே சார். சட்டெனெ புரிந்திருக்குமே’ என்றாரே பார்க்கலாம். எனக்கு ஆச்சர்யம். அப்பாவுக்கு முகமெல்லாம் சந்தோஷம்.
‘அட, என்னை நினைவு வைத்திருக்கிறீர்களே, இத்தனை வருடங்கள் ஆகியும்…’ என்றேன்.
‘அதெப்படிக்கா மறக்க முடியும்?’ என்றார் அவர். 40 வயதிருக்கும் அவருக்கு. நேயத்துடன் அக்கா என்று அழைத்தது மனதுக்குள் அரும்பி இருந்த ஆச்சர்யத்தை இன்னும் அழகாக்கியது.
‘நீங்கள் ஃபேஸ்புக்கில் இருக்கீங்களா?’ என கேட்டு இன்று புதியதலைமுறை டிவியில் வெளியான Ai குறித்த என் உரையின் சிறுதுளியை மொபைலில் காண்பித்தேன்.
‘Ai என்பது அனிமேஷனா?’ என வியப்புடன் கேட்டார். அவர் கேட்டதில் ஒரு காரணமும் உள்ளது. என்னை அவருக்கு அனிமேஷன் தயாரிப்பாளராகவே தெரியும். அனிமேஷனில் கந்தர் சஷ்டி கவசம், அனிமேஷனில் இராமாயணம், அனிமேஷனில் தினம் ஒரு பழம் என பல சிடிக்களை அவர் கடையில் விற்பனைக்கு வைத்திருக்கிறோம். அதனால் Ai குறித்து நான் பேசியது அவர் மனதுக்குள் அனிமேஷனாகவே தோன்றி இருக்கிறது.
‘ரொம்ப நன்றி சார்…’ என்று சொல்லி விட்டு நானும் அப்பாவும் கைகளில் பூஜை பொருட்களுடனும், மனதில் அந்த கடை ஏற்படுத்திய சந்தோஷ அலையுடனும் பேசியபடி காரை நோக்கி நடந்தோம்.
லேடீஸ் ஸ்பெஷலில் நான் எழுதி வரும் ‘நம்மை ஆளப் போகும் Ai’ தொடரின் அடுத்த அத்தியாயத்துக்கான தலைப்பும் கான்செப்ட்டும் கிடைத்த மன நிறைவு எனக்கு.
Ai என்பது அனிமேஷனா?
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
காம்கேர் சாஃப்ட்வேர்
மே 15, 2024 | புதன்