விருதுகளும், தேர்வாளர்களும்!
தொழில்நுட்பப் புத்தகங்களை விருதுக்குத் தேர்ந்தெடுக்கும் குழுவில் உள்ளவர்கள் அந்தத் துறையில் ஒரு துளியும் அப்டேட் ஆகாதவர்களாக இருப்பதும், அவர்கள் அந்த நூலாசிரியரை மதிப்பிடும் முறையை நினைத்தும் பலமுறை சினம் கொண்டதுண்டு. (மனதுக்குள்தான்)
சில வருடங்களுக்கு முன்னர் நான் எழுதிய ‘போட்டோஷாப்’ புத்தகம் ஒரு சேவை நிறுவனத்தில் விருதுக்குத் தேர்வாகியது. அந்தக் குழுவில் இருந்தவர்தான் விருது வழங்கிய நிகழ்வில் முதன்மை பேச்சாளர்.
நான் எழுதுகின்ற நூல்கள் அனைத்துமே செயல்முறை விளக்கத்துடன் இருக்கும். எங்கள் காம்கேரில் நாங்கள் தயாரிக்கும் சாஃப்ட்வேர்களின் மூலம் எனக்குக் கிடைக்கும் அனுபவத்தை குழைத்து இழைத்து எழுதுவதே என் எழுத்தின் சிறப்பு. எந்தப் புகைப்படத்தையும் இண்டர்நெட்டில் இருந்து எடுத்துப் பயன்படுத்தியதே இல்லை.
ஆசிரியர் யாருமே இல்லாமல் தொழில்நுட்பம் பழக ஏதுவாக இருக்கும் நான் எழுதிய நூல்கள். அதனாலேயே என் எழுத்தும், படைப்புகளும் இந்தத் துறையில் நிலைத்து நிற்கின்றன. நான் எழுதிய 250-க்கும் மேற்பட்ட நூல்களில் 200 நூல்கள் தொழில்நுட்பம் சார்ந்தவை. அவற்றில் பெரும்பாலான நூல்கள் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களில் பாடத்திட்டமாகவும் உள்ளன.
சரி விஷயத்துக்கு வருகிறேன். விருது வழங்கிய நிகழ்ச்சியில் பேசிய இலக்கியப் பெருந்தகை (ஆம், அவரை இலக்கியவாதி என்றே சொல்லிக் கொள்வார்) ‘காம்கேர் புவனேஸ்வரி இணையத்தில் இருந்து நிறைய படங்களை எடுத்துப் பயன்படுத்திமிக நன்றாக எழுதியுள்ளார். இணையம்தான் அவர் எழுத்துக்கு வலு சேர்த்துள்ளது’ என்று புரியாமல் பேசிக் கொண்டே சென்றார்.
என்னுடைய படைப்பாற்றல் என்பது நானே (காம்கேரும்) ஒவ்வொன்றையும் தனித்துவமாக உருவாக்குவதுதான். அது சாஃப்ட்வேர் ஆனாலும் சரி, புத்தகமானாலும் சரி, அனிமேஷனானாலும் சரி, மேடைப் பேச்சுக்கு உரை தயாரிப்பதானாலும் சரி, தொலைக்காட்சி யூடியூப் நிகழ்ச்சிகளுக்கு தயாராவதானாலும் சரி.
ஆனால் விருது வழங்கிய விழாவில் என் எழுத்தை சிறுமைப்படுத்தி இன்டர்நெட்டில் இருந்து படங்களை எடுத்து புத்தகம் முழுவதும் பயன்படுத்தி இருப்பதாக பேசியதால், நான் அந்த விழாவில் என்ன பேச வேண்டும் என நினைத்திருந்தேனோ அதை அப்படியே ஓரங்கட்டி விட்டு, மேடை ஏறி நான் புத்தகம் எழுதும் விதம், எங்கள் காம்கேரில் நாங்கள் தயாரிக்கும் தனித்துவமான சாஃப்ட்வேர் தயாரிப்புகள், இதுவரை எழுதிய நூல்கள் பற்றிய சிறப்பு என விரிவாகவே பேசினேன்.
அப்போதாவது அந்த இலக்கியப் பெருந்தகை புரிந்து கொண்டிருப்பாரா என தெரியவில்லை. நிகழ்ச்சி முடிந்த பிறகு, தனக்கு கம்ப்யூட்டரில் அ-னா, ஆவன்னாவே தெரியாது என்று வேறு பெருமையாக என்னிடம் சொன்னார்.
என்னவென்று சொல்வது இதுபோன்ற ஆளுமைகளை?
இப்போது எதற்கு இந்த பதிவு என நினைக்கிறீர்களா? அதே அமைப்பில் இருந்து சமீபத்தில் நான் எழுதி வெளியான ‘அசத்தும் Ai’ நூல்களை கேட்டிருந்தார்கள்.
‘விருதுக்கு நூல்களைத் தேர்ந்தெடுக்கும் குழுவில் யார் யார் இருக்கிறார்கள்?’ என்று அவர்களிடம் கேட்டேன்.
அதற்கு அவர்கள் பதில் சொன்னதுடன் சேர்த்து, ‘இதுவரை இப்படி ஒரு கேள்வியை யாரும் கேட்டதில்லை. நீங்கள் எதற்காக கேட்டீர்கள் என தெரிந்து கொள்ளலாமா?’ என்று கேட்டார்கள்.
‘தெரிந்துகொள்ளத்தான்’ என மென்மையாக பதில் சொல்லி போன் அழைப்பை துண்டித்தேன். விருதுக்கு அனுப்ப புத்தகங்களை தயார் செய்யச் சொன்னேன் என் உதவியாளரிடம்.
இப்போது புரிந்திருக்கும் உங்களுக்கு, அந்த குழுவில் இப்போது அந்த இலக்கியப் பெருந்தகை இல்லை என்பதை.
எப்படி எல்லாம் யோசிக்க வேண்டி உள்ளது பாருங்கள்!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, Founder & CEO
காம்கேர் சாஃப்ட்வேர்
மே 22, 2024 | புதன்