‘அடிக்ட்’ (Addict) என்ற வார்த்தை ஏற்படுத்திய தாக்கம்!
திருச்சியில் இருந்து அசத்தும் Ai – Part1, Part2 நூல்களை தன் நண்பரின் பேரனுக்கு பரிசளிப்பதற்கும் பொருட்டு வாங்குவதற்காக வாட்ஸ் அப் மெசேஜ் கொடுத்துவிட்டு நான் எழுதிய நூல்கள் தன் வாழ்க்கைக்கு எப்படி உதவியது என விரிவாக அன்புடன் தகவல் கொடுத்த திரு. பாலசுப்ரமணியன் அவர்களுக்கு பேரன்புகள்.
இப்படி என் புத்தகங்களை சிலாகித்து எழுதுபவர்களின் மெசேஜ்களை என் உதவியாளர் என் கவனத்துக்குக் கொண்டு வருவார். அவர்களுக்கு நன்றி என்று ஒரு வார்த்தை பதிலாக அனுப்பினால் கூட போதும்தான். ஆனால் நான் அவர்களை போனில் அழைத்துப் பேசுவேன். அவர்களுக்கும் அந்த செய்கை மகிழ்ச்சியாக இருப்பதுடன் அவர்களின் மகிழ்ச்சி என்னையும் தொற்றிக்கொண்டு கூடுதலான உற்சாகத்துடன் பணி செய்ய முடிவது கூடுதல் பலன். பொதுநலத்திலும் கொஞ்சம் சுயநலம். இருசாராருக்கும் இரட்டிப்புப் பலன்.
அசத்தும் Ai – இரண்டு நூல்களையும் அவருக்கு அனுப்ப ஏற்பாடு செய்துவிட்டு, அவருக்கு போன் செய்து பேசினேன். அத்தனை மரியாதையுடனும் அன்புடனும் பேசினார்.
கடைசியில் அவர் சொன்ன ஒரு வார்த்தைதான் இந்தப் பதிவை எழுத வைத்தது. அத்தனை பாசிட்டிவ் வைப்ரேஷன்.
‘உங்கள் முதல் புத்தகத்தை இருபது வருடங்களுக்கு முன் வாங்கி பயன்படுத்திய பிறகு உங்கள் புத்தகங்களை எங்கு பார்த்தாலும் அது எனக்கு நேரடியாக பயன்பட்டாலும், பயன்படாவிட்டாலும் வாங்கி வீட்டில் அடுக்கி விடுவேன். அப்படித்தான் புரோகிராமிங்கிறாக நீங்கள் எழுதிய சி, சி++, டாட் நெட் என எல்லா நூல்களையும் வாங்கி பாதுகாத்தேன். அவை என் பிள்ளைகளுக்கு பயன்பட்டது. இப்போது நான் அசத்தும் Ai நூல்கள் என் பேரப் பிள்ளைக்கு (அவரது நண்பரின் பேரப் பிள்ளைகளை சொல்கிறார்) பரிசளிக்க வாங்குகிறேன்….’ என்று அவர் சொல்லிக் கொண்டே போக, நான் பொறுமையாக மனம் முழுக்க நெகிழ்ச்சியுடன் கேட்டுக்கொண்டிருந்தேன்.
‘உங்கள் எளிமையான எழுத்துக்கு நான் அடிக்ட் ஆகிவிட்டேன்… அதனால்தான் உங்கள் புத்தகங்கள் என் கண்களில்பட்டால் உடனே வாங்கிவிடுகிறேன்…’
கடைசியில் எளிமையான எழுத்துக்கு ‘அடிக்ட்’ அவர் சொன்னதுதான் ஹைலைட்.
கதையோ, கவிதையோ, சினிமாவோ, சீரியலோ அல்லாத ஒரு படைப்பின் காரணகர்த்தாவின் படைப்புத் திறனுக்கு ‘அடிக்ட்’ ஆகி விட்டதாக சொல்வதெல்லாம் நாம் வாழும் யுகத்தில் சாத்தியம்தானா? என்று ஆச்சர்யத்துக்கு மேல் ஆச்சர்யம்.
சாத்தியம் என நிரூபித்த திரு. பாலசுப்ரமணியன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.
(அனுமதி பெற்று பகிர்ந்துள்ளேன்)
நன்றி
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, Founder & CEO
காம்கேர் சாஃப்ட்வேர்
மே 29, 2024 | புதன்