நம்மை ஆளப்போகும் Ai [3] : ரோபோவுக்கும் அவதாருக்கும் என்ன வித்தியாசம்? லேடீஸ் ஸ்பெஷல் ஜூன் 2024

புத்தக வடிவிலேயே வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்!

ரோபோவுக்கும் அவதாருக்கும் என்ன வித்தியாசம்?

ரோபோ (Robot) என்பது Ai சாஃப்ட்வேர் தொழில்நுட்பத்தின் மூலம் இயங்கும் சாதனம். ரோபோக்கள் அதனுள் பொருத்தப்பட்டிருக்கும் சாஃப்ட்வேர்கள் மூலம் தானாகவும் இயங்கும் அல்லது வெளியில் இருந்து ரிமோட், ஜாய்ஸ்டிக் அல்லது மவுஸ் போன்ற சாதனங்கள் மூலமும் இயங்கச் செய்யலாம்.

ரோபோக்களை மனித உருவத்திலும் வடிவமைக்கலாம் அல்லது எந்த ஒரு சாதனத்தின் வடிவமைப்பிலும் உருவாக்கலாம். சுருங்கச் சொன்னால், வெளிப்படையாக ஏதேனும் ஒரு தோற்றத்தில் வெளிப்படுவதே ரோபோ. அதை நாம் நேரடியாகத் தொட்டுப் பார்த்து உணர முடியும். நிஜ உலகில் நம்முடன் இணைந்து பயணித்து நமக்கு உதவுவதற்கு ரோபோக்கள் பயன்படுகின்றன.

நம் வீட்டு வேலைகளை செய்வதற்கு, அன்றாடப் பணிகளில் உதவுவதற்கு, விவசாயம் செய்வதற்கு, ஓட்டல்களில் சர்வர்களாக பணி செய்வதற்கு, சுமை தூக்குவதற்கு, கழிவுகளை அள்ளுவதற்கு, சர்க்கர நாற்காலிகளில் இருக்கும் மாற்றுத்திறனாளிகள் படிகளில் ஏற உதவுவதற்கு என மனித உருவத்தில் ரோபோக்கள் உருவாக்கப்பட்டு நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளன.

அதுபோல தரை சுத்தம் செய்ய சிறிய தட்டு வடிவிலான ரோபோ, மனித உடல்களில் ஏற்படும் காயங்களை குணப்படுத்த உதவும் மனித தலைமுடி அளவில் இருக்கும் ரோபோ என பல்வேறு வடிவங்களில் ரோபோக்கள் பயன்பாட்டில் உள்ளன. இன்னும் விதவிதமான வடிவங்களில் பல்வேறு பணிகளுக்காக ரோபோக்கள் தயாரிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.

ரோபோ (Robot) என்பது சாதனம் என்றால், அவதார் (Avatar) என்பது டிஜிட்டல் வடிவம். ரோபோவோ அல்லது அவதாரோ எதுவாக இருந்தாலும் அது Ai சாஃப்ட்வேர்கள் மூலம் தான் செயல்படுத்தப்படும்.

அவதார்கள் புகைப்படமாகவோ, ஓவியமாகவோ, கார்ட்டூனாகவோ ஏதேனும் ஒரு டிஜிட்டல் வடிவத்தில் இருக்கும். வெர்ச்சுவல் உலகில் பயணிக்க டிஜிட்டல் அவதார்கள் உதவும்.

புகைப்படங்களை பேச வைக்கும்போது புகைப்படங்களுக்கு அவதாரை வரைந்து உருவாக்கிய பிறகு அந்த அவதார்களை பேச வைத்தால் சிறப்பாக இருக்கும்.

போலவே, தொலைக்காட்சியில் டிஜிட்டல் செய்தியாளர்களை செய்தி வாசிக்க வைக்க விதவிதமான அவதார்களை வேவ்வேறு உடைகளில், சிகை அலங்காரங்களில் 3D வடிவில் வரைந்து உருவாக்கி வைத்துக் கொண்டால், தினமும் ஒரு அவதாரை செய்தி வாசிக்க செய்ய முடியும்.

ஆன்லைனில் வீடியோக்களில் ஆசிரியர்கள் வகுப்பெடுக்கும்போது, ஆசிரியர்கள் நேரடியாக தோன்றி வகுப்பெடுக்காமல் ஆசிரியர்களுக்கு அவதார்களை உருவாக்கி வைத்து வெளிப்படுத்தினால், மாணவர்களுக்கு எந்த ஆசிரியரைப் பிடிக்கிறதோ அவரை தேர்ந்தெடுத்துக் கொண்டு வகுப்பை கவனிக்கலாம். மேலைநாடுகளில் எல்லாம் பள்ளி, கல்லூரிகளில் நேரடியாக வகுப்பெடுக்கும் நிஜ ஆசிரியர்களையே ‘எனக்கு இந்த ஆசிரியர்தான் வகுப்பெடுக்க வேண்டும்’, ‘இந்த ஆசிரியர் என மன ஓட்டத்துக்கு ஒத்துவரவில்லை’ என்றெல்லாம் கருத்துச் சொல்லி விருப்பமான ஆசிரியரை தேர்ந்தெடுத்துக் கேட்டுப் பெறும் உரிமை உண்டு. ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா?

இந்த நடைமுறை நம் நாட்டில் ஆன்லைன் வகுப்புகளில் அவதார்களை தேர்ந்தெடுத்துக் கொள்ளும் அளவில் சாத்தியமாகி வருகிறது.

இப்படி பல்வேறு துறைகளில் அவதார்களின் வருகை செய்கின்ற பணியை சுலபமாக்குவதுடன், வண்ண மயமான சூழலை ஏற்படுத்திக் கொடுக்கிறது.

இன்னும் சொல்லப் போனால், Ai –ன் நீட்சியாக வந்துகொண்டே இருக்கும் புதிய தொழில்நுட்பமான ‘மெட்டாவெர்ஸ்’ உலகத்துக்குள் நம்முடைய பிரதிநிதியாக உள்ளே செல்ல இருப்பது நம் அவதார்களே. இப்போது ‘டிஜிட்டல் உலகில்’ ஆன்லைனில் வெப்சைட்டுகளில் நாம் யூசர் நேம், பாஸ்வேர்ட் கொடுத்து உள்ளே செல்கிறோம் அல்லவா,  ‘மெட்டாவெர்ஸ் உலகில்’ நாம் நம்முடைய அவதாரைத்தான் அந்த உலகத்துக்குள் அனுப்ப இருக்கிறோம். எனவே வரும் காலத்தில் நம் ஒவ்வொருவருக்கும் நம் உருவத்தை ஒத்த அவதார் உருவாகிவிடும்.

ரோபோவோ, அவதாரோ எதுவாக இருந்தாலும் அவை Ai சாஃப்ட்வேர்கள் மூலம் இயங்கும் வசதிகள். இவற்றின் வெளிப்புறத் தோற்றம் உடல் என்றால், உயிர் Ai சாஃட்வேர்கள். உயிர் இருந்தால்தானே உடல் இயங்கும். உடலும் உயிரும் இணைந்து இயங்கவும் அவற்றுக்கு சக்தி கொடுக்கவும்  இன்புட்டுகள் தேவை. இன்புட்டுகளை தரவுகளாக உள்ளே கொடுத்தால் அவை சாஃப்ட்வேர்கள் மூலம் இயங்கி ரோபோவை / அவதாரை செயல்பட வைக்கும்.

அண்மையில் அமெரிக்காவில் டெஸ்லா நிறுவனத் தலைவர்  ‘எலான் மாஸ்க்’ தன் நியூராலிங்க் நிறுவனத்தின் மூலம் மனித மூளையில் சிப் வைத்து மூளையின் செயல்பாட்டை தூண்டிவிடும் தொழில்நுட்பத்தை உருவாக்கி உள்ளார்.

இதன்மூலம் ஆட்டிசம் பாதிக்கப்பட்டவர்கள், மனச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்களும் கூட பலனடையலாம் எனத் தெரிவித்துள்ளார். மூளையில் சிப் பொருத்தப்பட்டுள்ளவர்கள் தங்கள் மனதால் என்ன நினைக்கிறார்களோ, அவை கம்ப்யூட்டர் அல்லது மொபைல் திரையில் எழுத்துக்களாகவும் /  குரல் வடிவிலும் வெளிப்படும் நுட்பம் கண் பார்வையற்றவர்களுக்கு பேருதவியாக இருக்கும். அதுபோல செயற்கை உடல் உறுப்புக்களை பொருத்திக் கொண்டவர்களுக்கு அவர்கள் மூளையில் பொருத்தியுள்ள சிப்பிற்கும் அவர்களின் செயற்கை உடல் உறுப்புகளுக்கும் ப்ளூடூத் மூலம் தொடர்பு கொடுக்கப்பட்டு, அவர்கள் மனதால் நினைத்தாலே அந்த உடல் உறுப்புகள் செயல்படத் தொடங்கும் என்றும் சொல்கிறார்கள்.

இப்படியான அதிரடி கண்டுபிடிப்புகள் விஞ்ஞான முன்னேற்றத்தின் உச்சத்தில் இருக்கும் இன்றைய சூழலில் சாத்தியப்படுவது வியப்பே இல்லை. ஹிட்லர் தலைமையில் இரண்டாம் உலகப்போர் நடந்துகொண்டிருந்த காலத்திலேயே Ai தொழில்நுட்பம் செயல்பாட்டில் இருந்தது என்று சொன்னால் நம்ப முடிகிறதா? உண்மை என்றால் நம்பித்தானே ஆக வேண்டும். உண்மைக் கதையை படிக்க அடுத்த மாதம் வரை காத்திருங்கள்!

(வரம் தர வரும் Ai)

(Visited 1,474 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon