மாறிவரும் வியாபாரக் கண்ணோட்டம்!

மாறிவரும் வியாபாரக் கண்ணோட்டம்!

முன்பெல்லாம் ஒரு கடை முதலாளியோ அல்லது நிறுவனத் தலைவரோ தான் வாடிக்கையாளர்களை தன்வசப்படுத்த மிகவும் தன்மையாகவும், அறிவார்த்தமாகவும் யோசிப்பார்கள். செயல்படுவார்கள். வாடிக்கையாளர்களுக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் தன் பணியாளர்களில் திறமையானவர்களை கூப்பிட்டு அந்தப் பிரச்சனைக்கு தீர்வு காண சொல்வார்கள்.

ஆனால், இப்போதெல்லாம் நிலைமை அப்படியே உல்டா.

நிர்வாகத் தலைமை வாடிக்கையாளர் பிரச்சனை வந்தால் அதில் இருந்து தப்பிக்கவே யோசிக்கிறார்கள்.

காரணங்கள்: நேரத்தை வீண் செய்ய வேண்டாம் என்ற மனப்போக்கு, சுலபமாக புறந்தள்ள வழி இருக்கும்போது எதற்காக கஷ்டப்பட்டு பிரச்சனையை மனதுக்குள் ஏற்றிக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம், எப்படி இருந்தாலும் நம்மிடம்தான் வருகிறார்கள் பணம் சம்பாதித்தால் போதும் என மனோபாவம்.

ஆனால் மாறாக, அவர்களிடம் பணியாளர்கள் மிக சுலபமாக அதற்கான தீர்வை வைத்திருக்கிறார்கள். அவர்களிடம் கொஞ்சம் தன்மையாக பேசினால் பிரச்சனைகளுக்கு மிக சுலபமாக தீர்வை வைத்திருக்கிறார்கள்.

காரணம்: வேலை செய்துகொண்டே இருப்பதால் கிடைக்கும் சுறுசுறுப்பு, அனுபவம், ஈடுபாடு, தான் பணியாளர் என்ற நிலையில் இருந்து மாறி எதிர்காலத்தில் சொந்தமாக ஏதேனும் செய்ய வேண்டும் என்ற எண்ணம்.

உதாரணத்துக்கு, எங்கள் பகுதியில் உள்ள பல கிளைகள் உள்ள பிரபலமான பிரிண்டிங் கடையில் உள்ளே பணி ஆற்றும் ஆண், பெண் என அனைவருமே இளம் வயதினர்.

அவர்களில் ஓரிருவர் அதிபுத்திசாலிகள். பணி சூட்சுமம் அறிந்தவர்கள். அந்தக் கிளையை எடுத்து நடத்துபவரும் 35+ தான். ஆனால் பிரிண்ட்டிங்கில் ஏதேனும் பிரச்சனை வந்தால் என்ன ஏது என்று பார்க்காமல் ‘அது அப்படித்தான் வரும்’ என சொல்லி தட்டிக் கழிக்கவே பார்ப்பார். அவரும் அனுபவசாலிதான். ஆனால் நோகாமல் பணம் சம்பாதிக்கும் மனோபாவம்.

அதனால் ஏதேனும் பிரச்சனை என்றால் அவர் வரை கொண்டு செல்லாமல் உள்ளே பணிபுரியும் சூட்சுமப் பணியாளர்களிடம் பேசினாலே அந்த பிரச்சனைக்கான தீர்வு கிடைத்துவிடும்.

சமீபத்தில் நாங்கள் வடிவமைத்த ஒரு புத்தகத்தில் பிரிண்ட் எடுக்கும்போது எங்கள் லோகோ மட்டும் வடிவமைப்பில் உள்ளபடி சரியாக வராமல் அஷ்டகோணலாகவே வெளியாகிக் கொண்டிருக்க, அந்தக் கடை நிர்வாகத் தலைமை ‘நீங்கள் லோகோ இல்லாமல் வடிவமைத்து வந்து பிரிண்ட் செய்துகொள்ளுங்கள்’ என சொன்னார். அவர் அப்படித்தான் சொல்வார் என தெரியும்.

அதனால், அந்தக் கடையில் பணிபுரிபவர்களிடம் பேசினேன். அவர்களுக்குள் எனக்கு ஒரு பட்டப்பெயர் வைத்திருக்கிறார்கள். ‘எல்லாம் தெரிஞ்சவங்க வந்திருக்காங்க’ என்பதே அது. இது கிண்டல் அல்ல. எல்லாவற்றையும் நேர்த்தியாக எதிர்பார்ப்பேன். நாங்கள் வடிவமைக்கும் டிஸைன்களை மிக அதிசயமாக பார்ப்பார்கள். அவர்களே போட்டோஷாப்பில், கோரல் டிராவிலும் ஏதேனும் சந்தேகம் என்றால் நான் என்றேனும் பிரிண்ட் எடுக்க செல்லும்போது என்னிடம் கேட்பார்கள். அதனால் அவர்களிடம் தொழில்நுட்ப ரீதியாக சிலவற்றை விளக்கினேன்.

அவர்கள் மிகச் சரியாக என்ன பிரச்சனை ஆகி இருக்கும் என சொல்லிவிட்டார்கள்.

நாங்கள் வடிமைக்கப் பயன்படுத்திய சாஃப்ட்வேரில் உள்ள செட்டிங்கை அவர்கள் பிரிண்டர்கள் ஏற்க மறுக்கிறது என்பதே அந்த பிரச்சனை.

இங்கு நான் சொன்னது ஒரு உதாரணம் மட்டுமே. இதுபோன்ற மனோபாவம் பரவலாக எல்லா சிறு பெரு நிறுவனங்களிலும் அரங்கேறிக் கொண்டே வருகிறது.

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, Founder & CEO
Compcare K Bhuvaneswari
காம்கேர் சாஃப்ட்வேர்
ஜூலை 4, 2024 | வியாழன்

(Visited 2,129 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon