தலைவாழை விருந்தும், பஃபே சிஸ்டமும்!
அண்மையில் ஒரு குடும்ப நிகழ்ச்சி. உயர்தர ஓட்டலில் அருமையான ருசியான விருந்து. பஃபே சிஸ்டம். தலைவாழை இலை போட்டு வடை பாயசத்துடன் விருந்து உபசரிப்பு ஒரு ரகம் என்றால் தேவையானதை, விருப்பமானதை கேட்டு வாங்கி சாப்பிடும் பஃபே என்பது வேறொரு ரகம். இரண்டுமே எந்த விதத்திலும் சளைத்தது இல்லை.
பஃபேயில் எனக்கு பிடிக்காத ஒரு விஷயம் எது தெரியுமா? சாப்பிட்டுவிட்டு அதே தட்டில் மீண்டும் நமக்குத் தேவையான மற்றொரு டிஷ்ஷை வாங்கச் செல்வதுதான்.
சாப்பிட்ட தட்டை டிஷ்கள் வைத்திருக்கும் பாத்திரத்துக்கு ஒரு அடி தள்ளி நீட்டியபடி வாங்கிக்கொள்ளாமல் டிஷ்கள் வைத்திருக்கும் பாத்திரத்துக்கு மேலேயே தட்டை நீட்டியபடி தேவையானதை வாங்குபவர்களை பார்த்த பிறகும் அந்த டிஷ்ஷை வாங்கி போட்டு சாப்பிட எப்படி மனது வரும்?
அவர்கள் கைகளில் ஒட்டி இருக்கும் அவர்கள் சாப்பிட்ட உணவு துகள்களும், சொட்டும் பதார்த்தங்களும் அந்த டிஷ்ஷில் விழாது என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லைதானே?
கொரோனா காலகட்டத்தில் வங்கியில் கவுண்ட்டருக்கும் வாடிக்கையாளர்களுக்கும் இடையே ஒரு தடுப்பு கம்பி வைத்திருப்பார்கள் அல்லவா? அந்த கம்பிக்கு வெளியே நின்றுதான் வாடிக்கையாளர்கள் வங்கிப் பணியாளர்களுடன் பேசுவார்கள். அதுபோல பஃபே சிஸ்டத்திலும் வைத்தால் நன்றாக இருக்கும் என தோன்றியது.
வடையை திங்கச் சொன்னால், அதில் எத்தனை ஓட்டை என எண்ணுவதாக உங்களில் பலருக்குத் தோன்றலாம். ஆனால், கொஞ்சம் சுகாதாரமாக யோசித்தால் நியாயம் புரியும்!
எங்கள் நிறுவனத்தில் நடத்துகின்ற நிகழ்ச்சிகளில் பஃபே சிஸ்டம் வைத்தால் நான் சொல்லி இருப்பதைப் போல ஒரு அரேஞ்மெண்ட் செய்துதான் ஏற்பாடு செய்கிறோம். அதனால் தைரியமாக இந்தப் பதிவை எழுதியுள்ளேன்.
– காம்கேர் கே. புவனேஸ்வரி, நிறுவனர்
காம்கேர் சாஃப்ட்வேர்
ஜூலை 4, 2024 | வியாழன்