Favour அல்ல Privilege!

Favour அல்ல Privilege!

ஒரு முறை என் பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் கோயில் சென்றுவிட்டு அருகிலேயே கைவினைப்பொருட்கள் மற்றும் உடைகள் கண்காட்சி போட்டிருந்ததால் அங்கும் சென்றிருந்தோம்.

ஒரு சுடிதாரை என் அப்பாம்மாவிடம் காண்பிப்பதற்காக ‘அப்பா… அம்மா…’ என சப்தமாக கூப்பிட்டேன்.

உடன் வந்திருந்த உறவினர் ‘பெரிய கம்பெனி நடத்துகிறாய்… ஒரு சுடிதார் வாங்குவதற்கு அப்பா அம்மாவை கூப்பிடுகிறாய்?’ என்றார்.

நான் என் நிறுவனத்தில் மட்டும்தான் சி.ஈ.ஓ. வெளியில் வரும்போது நான் ஒரு மகளாக சின்ன சின்ன விஷயங்களுக்கும் ஆலோசனை கேட்பேன், எனக்கு முடிவெடுக்கும் அத்தனை தகுதியும் ஆற்றலும் இருந்தாலும்.

அப்பா கார் ஓட்ட விரும்புவார். மிக நன்றாக கார் ஓட்டுவார். அதனால் அப்பாவுடன் செல்லும் போது அப்பாவைத்தான் கார் ஓட்டச் சொல்வேன்.

ஏதேனும் தகவல் தேவை என்றால் அப்பாவிடம் போன் செய்து கேட்பேன் அல்லது வாட்ஸ் அப்பில் தகவல் கொடுத்துவிட்டு நான் எங்கள் காம்கேரில் என் பணிகளில் மூழ்கிவிடுவேன். சில நிமிடங்களில் அப்பா கூகுளில் தேடி எடுத்து எனக்கு அனுப்பி விடுவார்.

அப்பாவைப் போலவே, அம்மாவும் தொலைபேசிதுறையில் 45 வருட காலம் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். நிறைய வாசிப்பார். அச்சுப் புத்தகத்தில் இருந்து அவர் டிஜிட்டலுக்கு மாறி பத்து பதினைந்து வருடங்கள் ஆகிவிட்டன. யு-டியூப் வீடியோக்களில் அரசியல், மருத்துவம் போன்ற வீடியோக்களை பார்ப்பது மட்டுமல்ல, அதில் எனக்கு தேவையானதை அவ்வப்பொழுது மெசஞ்சர் மற்றும் வாட்ஸ் அப்பில் ஷேர் செய்யவும் செய்வார். ஃபேஸ்புக், டிவிட்டர், இவ்வளவு ஏன் தற்போதைய மெட்டா ஏஐ வரை அப்டேட் செய்துகொண்டுள்ளார்.

தினமும் அதிகாலையில் அம்மாவுடன் வாக்கிங் செல்வேன். நிறைய அரசியல் பேசுவோம். பேசுவோம் என்பதைவிட அம்மா பேசிக்கொண்டே வர நான் கேட்டபடி நடப்பேன்.

நான் தொழில்நுட்பத் துறை என்பதை மறந்து சில சமயம் எனக்கே தொழில்நுட்ப ஆலோசனை சொல்வார். நான் சிரித்துக்கொண்டே கேட்டுக் கொள்வேன்.

சில தினங்களுக்கு முன்னர் ‘என் பதிவுகள் திடீரென அதிகமாக ரீச் ஆவதில்லை’ என்பது குறித்து பேசியபடி நடந்து கொண்டிருந்தேன். அம்மா அடுத்த நொடி ‘உன் பதிவை அப்லோட் செய்ய மாட்டேன் என ஃபேஸ்புக் சொல்லவில்லையே. அது போதுமே’ என்றாரே பார்க்கலாம். ஃபேஸ்புக்கும் சில தகவல்களை அப்லோட் செய்ய மறுக்கும் என்ற தொழில்நுட்பம் அவருக்குத் தெரியாது. ஆனாலும் வெகு இயல்பாய் அவர் சொன்னது அத்தனை ஆறுதலாக இருந்தது.

பெற்றோருடன் இருக்கும்போது அவர்களை பேசவிடுவது நல்லது. அவர்கள் பேசும் எந்த வார்த்தைகளுக்கு இடுக்குகளில் நமக்கான ஆறுதலும், பரிவும் இருக்கும் என தெரியாது.

பெரிய பெரிய விஷயங்களுக்கெல்லாம் என் பெற்றோருடன் பேசும்போது (குறிப்பாக அவர்களை அவர்கள் போக்கில் பேச விடும்போது) தீர்வு கிடைக்கும்.

இதெல்லாம் நான் ஏதோ அவர்களுக்கு அனுகூலம் செய்வதாக நினைத்து செய்வதில்லை. இவை, என் பெற்றோருக்கு நான் கொடுக்கும் Privilege. இதில் நாம் ஒன்றும் குறைந்து போய்விடப் போவதில்லை.

அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, Founder & CEO
Compcare K Bhuvaneswari
காம்கேர் சாஃப்ட்வேர்
ஜூலை 8, 2024 | திங்கள்

(Visited 1,245 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon