செருப்பு கடையும் ஜொலி ஜொலிக்குமே!

Prompted by CKB, Created by Ai

செருப்பு கடையும் ஜொலி ஜொலிக்குமே!

நேற்று ஆதம்பாக்கம் வரை ஒரு வேலை. அப்பாவும் நானும் வேலை முடிந்து காரை நிறுத்திய இடத்துக்கு நடந்து சென்று கொண்டிருந்தோம்.

வழியில் ஒரு செருப்பு கடை. சிறிய கடைதான். ஆனால் மிக மிக நேர்த்தியாக இருந்தது. செருப்புக் கடையில் என்ன நேர்த்தி அமைந்துவிடப் போகிறது என நினைக்காதீர்கள். தூசி படியாமல் இருக்க, ஒவ்வொரு செருப்பையும் ஒரு பிளாஸ்டிக் கவரில் போட்டு தொங்க விட்டிருந்தார்கள். கடைக்கு வெளியே இருக்கும் ஷெல்பில் மட்டுமில்லாமல் கடைக்கு உள்ளேயும் வாடிக்கையாளர்கள் பார்வைக்குத் தொங்கவிட்டிருக்கும் அத்தனை செருப்பையும் அப்படியே தான் தொங்க விட்டிருந்தார்கள்.

கடையின் உள்ளே எரிந்து கொண்டிருக்கும் டியூப் லைட் வெளிச்சத்தில் செருப்புகள் மின்னின. அந்த நேர்த்திக்காகவே உள்ளே சென்று பார்க்கும் ஆசை வந்தது.

மேலும், அப்பாவின் செருப்பு சனிக்கிழமை அன்று கோயிலில் காணாமல் போய்விட்டது. வேண்டுமென்றே போட்டுச் சென்றார்களோ அல்லது அவர்கள் செருப்பின் மாடலும் அதுபோலவே இருந்ததால் போட்டுச் சென்றார்களோ தெரியவில்லை. அதனால் அப்பா நல்ல செருப்பு வாங்கும் வரை சாதாரண செருப்பைத்தான் போட்டுக் கொண்டிருக்கிறார். அவருக்கும் ஒரு செருப்பு வாங்க வேண்டும் என்பதால் உள்ளே நுழைந்தோம்.

எந்த மாடல் செருப்பு, யாருக்கு என்பதை எல்லாம் சொல்வதற்கு முன் ‘உங்கள் கடை மிக அழகாக உள்ளது. நான் வேறெங்கும் இதுபோல ஒவ்வொரு செருப்பையும் தூசி வராமல் பார்வைக்கு வைத்துப் பார்த்ததில்லை’ என்று பாராட்டினேன்.

விற்பனை பிரிவில் இருந்தவர் சிரித்துக் கொண்டார். ‘ஆமாங்க, இல்லைன்னா தூசி படிந்து கஷ்டமாயிடுதுங்க…’ என்றார்.

அப்பா தனக்கு விருப்பமான செருப்பை பார்த்துக் கொண்டிருந்தார். விற்பனையாளர் ஒன்றிரண்டை எடுத்து போட்டுப் பார்க்கவும் சொன்னார். எதுவும் மனதுக்கு பிடிக்கவில்லை. மென்மையாக இருந்தால் மாடல் நன்றாக இல்லை. மாடல் நன்றாக இருந்தால் மென்மையாக இல்லாமல் முரட்டுத்தனமாக இருந்தது.

அவர் சில நொடிகளில் எங்கள் மனதைப் படித்து ஸ்டூல் போட்டு ஏறி, மேலே இருந்து சில செருப்புகளை எடுத்து காண்பித்தார்.

அதில் ஒன்று அப்பாவுக்கு பிடித்துப் போக அதை வாங்கலாம் என முடிவு செய்தோம்.

‘கால் கட்டைவிரல் நெருடலாக இல்லாமல் இருக்கிறதா?’,
‘நடக்கும் போது கஷ்டமாக இல்லையே’ என நான் வழக்கம்போல் சில கேள்விகளை கேட்டபடி செருப்பை கைகளால் எடுத்து அழுத்திப் பார்த்தேன்.

கடைசியில் அதை வாங்கலாம் என முடிவு செய்த போது ‘இருப்பா, ஹார்டா இருக்கா சாஃப்டா இருக்கான்னு நான் அதை போட்டுப் பார்க்கிறேன்’ என சொல்லி அப்பாவின் செருப்பை நான் போட்டுப் பார்த்து சில அடிகள் நடந்தும் பார்த்தேன்.

பில் பெற்றுக் கொண்டு பணம் கொடுத்து விட்டு செருப்பை வாங்கிக் கொண்டு வெளியே வரும் சமயம் விற்பனையாளர், ‘உங்கள் அப்பாவை நீங்கள் நன்றாக பார்த்துக் கொள்கிறீர்கள்…’ என சிரித்துக் கொண்டே சொன்னார்.

எனக்கு சந்தோஷமாக இருந்தாலும், கொஞ்சம் நெருடலாக இருந்தது. ‘செருப்பு வாங்க அப்பாவுடன் வந்திருக்கிறேன், இதில் நான் என்ன பார்த்துக் கொள்ள இருக்கிறது… எல்லோரும் செய்வதுதானே?’ என்றேன்.

‘இல்லம்மா, பொதுவா பெரியவங்களுக்கு செருப்பு வாங்க வரவங்க அவர் காலுக்குப் பொருந்தும் ஒரு செருப்பை போட்டுப் பார்க்கச் சொல்லி வாங்கிச் செல்வார்கள். நீங்கள் உங்கள் அப்பாவிடம் எத்தனை கேள்விகள் கேட்டீர்கள். அதுவும் கடைசியாக அப்பாவின் செருப்பு மெத்தென இருக்கிறதா என பார்க்க நீங்கள் போட்டுக் கொண்டு நடந்து பார்த்தீர்கள் பாருங்கள்… அங்குதான் நீங்கள் வித்தியாசப்படுகிறீர்கள்…’ என நீளமாக பேசினார். ‘சே சே…’ சும்மாவா பேசினார். பாராட்டினார்.

‘நன்றாக கவனித்துள்ளீர்கள். இப்போதெல்லாம் இப்படி கூர்ந்து கவனிப்பதற்கு யாருக்கு நேரம் இருக்கிறது… மிக்க நன்றி சார்’ என்று சொல்லியபடி பையில் எப்போதுமே வைத்திருக்கும் சேனிடைசர் போட்டு கைகளை சுத்தம் செய்தபடி கடையை விட்டு வெளியே வந்தோம்.

கடை முன்பைவிட மிக மிக அழகாக பிரகாசமாக ஜொலிஜொலித்தது.

அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, Founder & CEO
Compcare K Bhuvaneswari
காம்கேர் சாஃப்ட்வேர்
ஆகஸ்ட் 16, 2024 | வெள்ளி

(Visited 994 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon