நம்மை ஆளப்போகும் Ai[5]: ஆட்சிப் பீடத்தில் Ai : லேடீஸ் ஸ்பெஷல் ஆகஸ்ட் 2024

புத்தக வடிவத்தில் வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்!

ஆட்சிப் பீடத்தில் Ai!

நம் நாட்டிலும் பல ஆண்டுகளாக Ai குறித்த ஆராய்ச்சிகள் நடந்தபடியேதான் இருந்திருக்கின்றன. நான் ஏற்கெனவே சொன்னதைப் போல கம்ப்யூட்டரே Ai –ன் தொடக்கம்தான். அதாவது இயந்திரத்திடம் மனிதன் செய்யும் வேலைகளை லாஜிக்குகளாகக் கொடுத்து புரோகிராம் மூலம் இயங்கச் செய்வதே Ai –ன் நுட்பம்தான். ஆனால் அதற்கு செயற்கை நுண்ணறிவு (Artificial iNtelligence) என நாம் பெயர் சூட்டவில்லை.

1992-க்குப் பிறகு கம்ப்யூட்டர்களின் ஆதிக்கமும், 2000-த்துக்குப் பிறகு இன்டர்நெட்டின் ஆதிக்கமும் பரவலாக நம் நாட்டின் மூலை முடுக்கெங்கும் ஆக்கிரமிக்கத் தொடங்கிய காலகட்டத்தில் Ai – ன் ஆதிக்கமும் மெல்ல மெல்ல வளர்ந்து கொண்டேதான் வந்துள்ளது. ஆனால், அந்தத் தொழில்நுட்பத்துக்கு Ai என்ற அதிகாரப்பூர்வமாக பெயர் சூட்டுவிழா 2022-ல் தான் நடந்தேறியது. அதன்பிறகு இப்போது எங்கு திரும்பினாலும் Ai தான். இனியும் அப்படித்தான் இருக்கப் போகிறது.

உதாரணத்துக்கு எங்கள் காம்கேர் நிறுவனத்தையே எடுத்துக்கொண்டு விளக்குகிறேன். நம் நாட்டில் எங்கோ, யாரோ செய்த முயற்சிகளை சொல்வதைவிட இந்த கட்டுரைத் தொடரை எழுதும் என்னை வைத்தே Ai நம் நாட்டில் எப்படி பரவலாகத் தொடங்கியது என்பதை விளக்குகிறேன்.

எங்கள் காம்கேர் சாஃப்ட்வேர் நிறுவனத்தில் பல ஆண்டுகளாக Ai குறித்து ஆராய்ச்சிகள் செய்தபடிதான் இருக்கிறோம். விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம்  எல்லாம் நம் நாட்டில் பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்பே, 1992 – களில் டாஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலேயே சி, சி++ மொழிகளில் புரோகிராம் எழுதி கார்ட்டூன் வரைந்து அனிமேஷன் எல்லாம் உருவாக்கினோம். முதன் முதலில் நாங்கள் புரோகிராம் எழுதி உருவாக்கிய ஸ்கிரீன் சேவர் என்ன தெரியுமா? ஒரு யானை மானிட்டரின் இடப்பக்கத்தில் இருந்து வலப்பக்கம் துதிக்கையை ஆட்டியபடி நடந்து செல்வதுதான். இன்று இதையெல்லாம் உருவாக்க எத்தனையோ ரெடிமேட் சாஃப்ட்வேர்களும் ஆப்களும் உள்ளன. ஆனால் கம்ப்யூட்டர் நம் நாட்டில் அடி எடுத்து வைக்கவே யோசித்த காலகட்டத்தில் புரோகிராம் எழுதி உருவாக்கியதுதான் சிறப்பு. இதுவும் Ai –ன் ஒரு வடிவமே.

அதற்கடுத்து 2000-களில் அனிமேஷன்களுக்கான சாஃப்ட்வேர்கள் வந்த பிறகு கார்ட்டூன்களை உருவாக்கி பின்னணி குரல் கொடுத்து அவற்றை பேச வைத்தோம். அதுவும் பல மொழிகளில்! எந்த மொழியைத் தேர்ந்தெடுக்கிறோமோ, அந்த மொழியில் அந்த அனிமேஷன் இயங்கும். அப்படி உருவானதுதான் அனிமேஷனில் இராமாயணமும், கந்தர் சஷ்டிக் கவசமும், குழந்தைப் பாடல்களும்.  இவற்றை எல்லாம் இன்று  Ai  மூலம் தயாரித்து அவற்றை செயற்கை நுண்ணறிவு என்கிறோம்.

இதற்கெல்லாம் இருபது வருடங்களுக்கு முன்பே அடித்தளம் போட்டவர்கள் நாங்கள்.  படம் / ஓவியம் / கார்ட்டூன் வரைந்து அது என்ன பேச வேண்டும் என்பதை இன்புட்டாகக் கொடுத்து அது எப்படி அசைய வேண்டும் என்பதையும் புரோகிராமாக எழுதி சொல்லிக் கொடுத்து அனிமேஷன் செய்து வந்தோம். இதுவும் ஒருவகையில் Ai-தான்.

இந்த முயற்சிக்குப் பிறகு (2005) அச்சு புத்தகங்களை அவற்றை எழுதிய நூல் ஆசிரியரின் குரலில் பேச வைக்கும் முயற்சியில் இறங்கினோம். அதில் என்ன அதிசயம் என நீங்கள் யோசிக்கலாம். ஒரு புத்தகத்தைப் பார்த்து  பேச வைத்து ரெகார்ட் செய்வதும், அதை ஆடியோ, வீடியோ ஃபைலாக மாற்றுவதும் எல்லோரும் சாதாரணமாக செய்வது. ஒரு நூல் ஆசிரியர் 10 புத்தகங்கள் எழுதி இருக்கிறார் என்றால் அவரே 10 புத்தகங்களையும் பேசி ரெகார்ட் செய்ய வேண்டும். நாங்கள் அதை கொஞ்சம் மாற்றி சிந்தித்தோம். எழுத்தாளர்களின் குரலுக்கான வாட்ஸ் மாடல் / வாய்ஸ் பேட்டன் (Voice Model / Voice Pattern) எடுத்து அவர்களுக்கென ஒரு குரல் மாடலை  உருவாக்கி, அவர்கள் எழுதுகின்ற புத்தகங்களை அவர்களின் குரல் மாடலை வைத்தே பேச வைப்பது. அதாவது அவர்கள் ஒவ்வொரு புத்தகத்தையும் பேசி ரெகார்ட் செய்ய வேண்டாம். அவர்களுக்கென ஒரு வாய்ஸ் மாடல் உருவாக்கி வைத்திருப்போம் அல்லவா? அதனைத் தேர்ந்தெடுத்து அவர்களின் புத்தகங்களை அவர்கள் குரலில் வாசிக்க செய்வது. இந்த முயற்சியையும் 15 வருடங்களுக்கு முன்னரே நாங்கள் முன்னெடுத்தோம். இதைத்தான் இன்று Ai செய்கிறது.

புரோகிராமகள் எழுதி ஓவியம் வரைவது, கார்ட்டூன்கள் வரைந்து அனிமேஷன் உருவாக்குவது, புகைப்படங்களை பேச வைப்பது, அச்சுப் புத்தகங்களை விருப்பமான குரலில் பேச வைப்பது என Ai செய்கின்ற அத்தனையையும் 15 வருடங்களுக்கு முன்பே நாங்கள் செய்ய ஆரம்பித்ததுதான். அதன் மேம்படுத்தப்பட்ட ஆராய்ச்சிகளின் முடிவே இன்று Ai அசத்துகின்ற அத்தனையும் என்றால் அது மிகையில்லை.

ஆக Ai-கான ஆராய்ச்சிகள் என்பது உலகம் முழுவதும் எங்களைப் போன்ற ஆராய்ச்சியாளர்கள் பல வருடங்களுக்கு முன்பே செய்ய ஆரம்பித்ததுதான்.

ஒன்றில் இருந்து இன்னொன்று, அதில் இருந்து மற்றொன்று என கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி Ai இன்று ஆட்சிப் பீடத்தில் அமர்ந்து கொண்டு நம்மை ஆட்டிப் படைக்கக் காத்திருக்கிறது.

அப்படி என்றால் ஓவியம், புத்தகங்கள், கார்ட்டூன் என கலைத் துறைக்கு மட்டும்தான் Ai பயன்படுகிறதா என்ற சந்தேகம் உங்களில் சிலருக்குத் தோன்றலாம். கலைத்துறை மட்டுமல்ல, நம் வாழ்க்கையின் எல்லா இடங்களையும் Ai ஆக்கிரமித்துக் கொண்டே வருகின்றன. எந்தெந்தத் துறைகளில் எப்படி Ai ஆக்கிரமித்து வருகின்றன என்பதை அடுத்த மாதம் சொல்கிறேன்.

 (வரம் தர வரும் Ai)

 

(Visited 9 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon