பெண்ண்ண்ண்!
முன்பெல்லாம் நான்கு ஆண்கள் இருக்கும் கூட்டத்தில் ஒருவனாவது நல்லவனாக இருப்பான் என்பார்கள். அதனால்தான், இரவில் எலக்ட்ரிக் ட்ரெயினில் பயணிக்கும்போது கூட கூட்டமில்லா பெண்கள் கம்பார்ட்மெண்ட்டைத் தவிர்த்து கூட்டமாக இருக்கும் பொது கம்பார்ட்மென்ட்டை தேர்ந்தெடுப்பார்கள்.
என் அம்மா தொலைபேசித் துறையில் இரவு, பகல் என 24 மணி நேர ஷிஃப்ட்டில் வேலை பார்த்தவர். இரவு ஷிஃப்ட்டுக்கு செல்லும் போது பெண்கள் கம்பார்ட்மென்ட்டில் கூட்டம் இருக்காது என்பதால் பொது கம்பார்ட்மென்ட்டை தேர்ந்தெடுத்துச் செல்வார்.
ஆனால், இப்போது நடக்கின்ற கொடூரங்களை எல்லாம் பார்க்கின்ற போது எப்படி வாழ்ந்தாலும் பாதுக்காப்புக்கு உத்திரவாதமில்லை என்ற வேதனையே மிஞ்சுகிறது.
இப்படி எதிர்மறையாக எழுதுவதற்குக் கூட கஷ்டமாக உள்ளது. வரும் சந்ததியினருக்கு நம்மால் பெரிய அளவில் எதையும் சேர்த்து வைக்க முடியாவிட்டாலும், குறைந்தபட்சம் நேர்மறையான சிந்தனைகளையாவது பரவ விட வேண்டும் என்பது என் கருத்து.
முன்பெல்லாம் கூட்டத்தில், வரிசையில், கோயிலில் இப்படி எங்கு சிறு குழந்தைகளை பார்த்தாலும் கண் சிமிட்டி சிரித்து விளையாட்டு காட்டுவேன். ஆனால் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக அதையும் செய்வதில்லை. நான் விளையாட்டு காண்பிப்பதைப் போலவே தீய எண்ணம் கொண்டவனும் விளையாட்டு காண்பிக்கலாம். குழந்தைகளைப் பொருத்த வரை நானும் ஒன்றுதான், கயவனும் ஒன்றுதான். குழந்தைகளின் மனதை குழப்பக் கூடாது என்று சிந்தித்து நானே எடுத்த முடிவு அது. எப்படி எல்லாம் இயல்பான வாழ்க்கையை நாமே சீரமைத்துக் கொள்ள வேண்டி உள்ளது என்பதை நினைக்கும்போது வேதனைதான் மிஞ்சுகிறது.
இப்போது கூட வழியில் தென்படும் குழந்தைகளின் முகத்தைப் பார்த்தால் கொஞ்சத்தான் தோன்றுகிறது. ஆனால் செய்வதில்லை. முகத்தை சீரியஸாக வைத்துக் கொள்கிறேன். இதை எல்லாம் சொன்னால் நான் ஏதோ அதிகப்படியாக யோசிப்பதாக சொல்வார்கள்.
கல்கத்தாவில் உடன் பணிபுரியும் மருத்துவர்களாலேயே ஒரு பெண் பயிற்சி மருத்துவர், கூட்டு *வ*ன்*கொ*டுமை செய்யப்பட்டு கொ*லை* செய்யப்பட்டிருக்கும் செய்தியை கேள்விப்படும்போது இப்படி சிந்திக்காமல் வேறெப்படி சிந்திக்க முடியும்? உடன் பணிபுரிபவர்களாலேயே இப்படிப்பட்ட கொடுமை என்றால், தெரியாதவர்களிடத்தில் எப்படி மனிதாபிமானத்தை எதிர்பார்க்க முடியும்?
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, Founder & CEO
Compcare K Bhuvaneswari
காம்கேர் சாஃப்ட்வேர்
ஆகஸ்ட் 17, 2024