முன் அனுமானமும், அச்சு பிச்சு பேச்சுகளும்!

 

முன் அனுமானமும், அச்சு பிச்சு பேச்சுகளும்!

ஞாயிறு அன்று காலையில் எழுந்து பாலை எடுப்பதற்காக ஃப்ரிட்ஜ் கதவைத் திறந்தால், உள்ளே பல்ப் எரியவில்லை. அப்பா, ஸ்டபிலைசர் ஸ்விட்சை ஆன் ஆஃப் செய்து பார்த்தார். ஸ்டபிலைசரில் இருந்து இணைப்பை நீக்கி மெயினில் கொடுத்துப் பார்த்தார். ஃப்ரிட்ஜை ஐந்து நிமிடம் அணைத்து வைத்தும் பார்த்தார். ‘ம்… எதற்கும் அசையவில்லை’.

கம்ப்ரஸர் இருக்கும் பக்கம் லேசாக ஒரு தட்டு தட்டிப் பார்த்தார். அப்போதும் ஃப்ரிட்ஜ் உள்ளே இருக்கும் பல்ப் எரியவில்லை. கம்ப்ரஸர் ஓடும் சப்தமும் கேட்கவில்லை. கடை திறந்தவுடன் விளக்கை வாங்கி வந்து பொருத்திப் பார்த்தார். பல்ப் எரிந்தது. கம்ப்ரஸர் ஓடும் சப்தம் கேட்கவில்லை.

இதற்குள் அம்மா பால் பாக்கெட்டுகள் வீணாகமல் இருக்கட்டும் என ஃப்ரீசரில் எடுத்து வைத்திருந்தார்.

சில நிமிடங்கள் கழித்து, என் பங்கிற்கு ஃப்ரீஸர் கதவை திறந்துப் பார்த்தேன். பால் பாக்கெட் ஐஸாக உறைந்திருந்தது. ஃப்ரிட்ஜ் முழுமையாக மூச்சை விடவில்லை. கொஞ்சம் கொஞ்சம் வேலை செய்கிறது என புரிந்தது.

ஃப்ரிட்ஜ் வாங்கி 10 வருடம் ஆவதால் புதிதாக மாற்றிவிடலாம் என முடிவெடுத்தோம்.

இதெல்லாம் பெரிய விஷயமில்லை. இனி தான் இருக்கிறது விஷயமே.

11 மணி அளவில் நானும் அப்பாவும் சில டீலர்களிடம் நேரடியாக சென்று மாடல்களை பார்த்தோம். புதுப்புது வசதிகளுடன் ஃப்ரிட்ஜ்கள் கொட்டிக் கிடந்தன.

ஷோ ரூமிலும் சென்று பார்த்தோம். அங்கு வாங்கலாம் என முடிவு செய்து இறுதியாக கொடுக்கும் விலையை கேட்டு ஒரு கொடேஷன் போல எழுதிக் கொண்டு வந்தோம்.

‘ஏன் சார், இப்போதே புக் செய்தால் மாலையே உங்களுக்கு டெலிவரி செய்து விடுவோம்…’ என சேல்ஸ் மேனேஜர் எங்களை அப்போதே பணம் செலுத்த வைக்கப் பிரயத்தனப்பட்டார்.

‘இல்லை, வீட்டிற்குச் சென்று டிஸ்கஸ் செய்து மாலை வருகிறோம்’ என சொன்னோம்.

‘பாவம், இப்போ ஆட்டோவில் வந்திருப்பீங்க… திரும்பவும் ஆட்டோவில் போய், மாலை திரும்பவும் ஆட்டோ பிடிச்சு வந்து…’ என பேசிக் கொண்டே போக எனக்கு கொஞ்சம் எரிச்சல் ஆரம்பமாகி ‘இல்லை சார், நாங்கள் காரில்தான் வந்தோம்… மாலை வருகிறோம்’ என சொல்லிப் புறப்பட்டோம்.

ஆளை வைத்து இவர்கள் ஆட்டோவில் வரக் கூடிய ஆள், காரில் வரக் கூடிய ஆள் என எப்படி முடிவெடுக்கிறார்கள் என தெரியவில்லை. சரியாக முடிவெடுத்தால் பரவாயில்லை. தப்பும் தவறுமாக ‘ப்ரீ டிடர்மினேஷன்’. அதுவே என் எரிச்சல்.

சேல்ஸ் மேனேஜரிடம் பேசும்போதே சாதாரணமாக ‘நீங்கள் என்ன படித்திருக்கிறீர்கள்?’ என கேட்டு பி.ஈ படித்திருப்பதை அறிந்து வைத்திருந்தேன். வயது 35+ இருக்கும்.

நாங்கள் சொன்னபடி மாலை 6 மணிக்கு மேல் ஷோ ரூம் சென்றோம். ஃப்ரிட்ஜுக்கு பணம் செலுத்தினோம்.

அங்கு டிவிக்களும் விற்பனைக்கு இருந்ததால் அவற்றில் Ai தொழில்நுட்பம் இணைந்தது என போட்டிருந்ததால் அது குறித்தும் விசாரித்துக் கொண்டிருந்தேன்.

நாங்கள் ஐரோப்பா சென்றிருந்தபோது அங்குள்ள தொழில்நுட்பம் என்னை வெகுவாக கவர்ந்தது. டிவி பார்க்கும் போது வெளியில் டிஸ்ப்ளே வரும். டிவியை அணைத்து விட்டால் டிஸ்ப்ளே உள்ளே சென்றுவிடும். இடத்தை அடைக்காத ‘Foldable TV’. இந்தத் தொழில்நுட்பம் உள்ள டிவி இருக்கிறதா என கேட்டேன்.

அந்த சேல்ஸ் மேனேஜர் சிரித்துக் கொண்டே ‘இருக்கிறதே… 14 லட்சம்’ என்றார். அதோடு நிறுத்தி இருந்தால் பரவாயில்லை.

நகைச் சுவையாக பேசுவதாக நினைத்துக் கொண்டு சிரிப்பை இன்னும் கொஞ்சம் மெறுகேற்றிக் கொண்டு என் அப்பாவைப் பார்த்து ‘சார், மேடம் கேட்கிறாங்களே… வாங்கிக் கொடுத்துடுங்க சார்…’ என்று சொல்ல எனக்கு எரிச்சல் இன்னும் அதிகமானது. நகைச்சுவையும், சிரிப்பும் ஒரு சிறுதுளி அதிகமானால் கூட நக்கலாகிவிடும் அல்லவா? அந்த நக்கலில் நாங்கள் எல்லாம் 14 லட்சம் கொடுத்து டிவி வாங்க மாட்டோம் என்ற நினைப்பின் எகத்தாளம் தொக்கி நின்றது.

எல்லைக்குள் இருந்தால்தான் எல்லாமே அழகு. இல்லை என்றால் விரசம்தான்.

சேல்ஸ் மேனேஜர் காலையிலேயே நாங்கள் ஆட்டோவில் தான் வந்திருப்போம் என தவறாக ‘ப்ரீ ஜட்ஸ்மெண்ட்’ செய்தவர் என்பதால் நிச்சயம் அவர் சரியான கோணத்தில் புரிந்திருக்கவில்லை என்பது பட்டவர்த்தனம்.

பெரும்பாலும் கணவன் மனைவியாகவே கடைக்கு வந்து டிவி ஃப்ரிட்ஜ் போன்றவற்றை வாங்குவதால், எங்களை அவர் அப்பா, மகள் என நினைப்பதற்கான வாய்ப்புகள் குறைவு. கணவன் மனைவி என நினைத்து திரைப்படங்களில் வரும் ஜோக் போல பேசிய தொனிக்கு பதிலடிக் கொடுக்க நினைத்தேன்.

‘சார் நான் விசாரித்தது தொழில்நுட்பம் குறித்து… மேலும் மேலை நாடுகளில் உள்ள அந்த தொழில்நுட்பத்தில் டிவிக்கள் இங்கே விற்பனைக்கு பார்வைக்காகக் கூட வைப்பதில்லையே என்ற கோணத்தில் கேட்டேன். மற்றபடி என் அப்பாவுக்குத் தேவையானதை நானும், எனக்குத் தேவையானதை என் அப்பாவும் வாங்கிக் கொடுத்துக் கொள்வோம்…’. இந்த இடத்தில் நான் சொல்ல முயற்சித்தது அப்பா, மகள் என்பதை.

அவர் சிரிப்பில் கொஞ்சமும் மாற்றமில்லை. அதனால் நான் தொடர்ந்து ’தேவையும் அவசியமும் இருந்தால், நாங்கள் குடும்பமாக உட்கார்ந்து டிஸ்கஸ் செய்து 14 லட்சம் கொடுத்துக் கூட டிவி வாங்குவோம்’ என்றேன். இந்த இடத்தில் நான் சொல்ல முயற்சித்தது அவசியத் தேவை என்றால் எந்தப் பொருளையும் வாங்கிப் பயன்படுத்துவோம் என்ற நிதர்சனத்தை.

நான் சொன்னதில் உள்ள அர்த்தத்தையும், ஆழத்தையும் அவர் புரிந்துகொண்டாரா இல்லையா என தெரியவில்லை. காரணம், கடைசிவரை சிரித்தபடியேதான் நின்றிருந்தார். முகம் மாறவில்லை.

ஃப்ரிட்ஜ் எப்போது டெலிவரி என கேட்டுக் கொண்டு நன்றி சொல்லி ‘டேடி கிளம்பலாமா?’ என்றேன் சற்றே உயர்ந்த குரலில். அக்கம் பக்கம் நின்று கொண்டிருக்கும் மேலும் சில விற்பனைப் பிரதிநிதிகளுக்கும் காதில் விழும்படி. வேண்டும் என்றே குரலை உயர்த்தவில்லை. ஆனாலும் உள்ளுக்குள் இருந்த வேகம் உயர்த்த வைத்துவிட்டது.

கடைக்கு வந்தால் ஆண்கள் என்னவோ எதையுமே வாங்காதவர்கள் போலவும், பெண்கள்தான் பார்த்ததை எல்லாம் வாங்குவதைப் போலவும் உலவும் நகைச்சுவை கண்றாவிகளை ரசிக்கும் மனநிலை எல்லாம் இங்கு எனக்கு மட்டுமில்லை, எந்த பெண்ணுக்கும் கிடையாது.

ஒரு கடைக்குச் துணிமணிகள் வாங்கச் சென்றால் பெண்களாக இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கும், குழந்தைகளுக்கும், வீட்டுப் பெரியவர்களுக்கும், வீட்டில் வேலை செய்யும் பணிப் பெண்களுக்கும் சேர்த்து உடைகள் வாங்க நேரம் சற்று அதிகம் எடுக்கும் தான்.

பெரும்பாலான வீடுகளில் அம்மாக்கள்தான் இந்த வேலையை செய்ய வேண்டி இருக்கிறது. ஆண்களாக இருந்தால் அவர்களுக்கு மட்டும் தேர்ந்தெடுத்தால் போதும். அதற்கு நேரம் குறைவாகத்தான் எடுக்கும். தீபாவளி வருகிறதல்லவா, இனி இதுபோல மட்டமான ஜோக்குகளை எல்லாம் கேட்க வேண்டி இருக்கும்.

அத்துடன் ஆண்தான் பொருட்களை வாங்கித்தர வேண்டும், பெண் என்பவள் ஆணிடம் கேட்டுப் பெற வேண்டும் என்ற பழமையான மனநிலையிலேயே 35+ வயது ஆண்கள் அதுவும் இன்ஜினியரிங் படித்த ஆண்கள் இன்னமும் இருக்கிறார்களே என வியப்பாகவே இருந்தது. படிப்பிற்கும், குணத்துக்கும் சம்மந்தமில்லை என்பது நம் எல்லோருக்கும் தெரிந்ததுதான் என்றாலும் வியப்பைத் தவிர்க்க முடிவதில்லை.

இருப்பதிலேயே கொடுமை, தப்பும் தவறுமான ‘Pre Determination’. எரிச்சல் மட்டுமல்ல. குமட்டல் ரகம். கடைகண்ணிகளில் தான் இந்த கூத்து என்றில்லை, பொது நிகழ்ச்சிகளில், விழாக்களில், நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்கும் நிகழ்வுகளில் என எங்கும் இதுபோன்ற Pre Determination கள் அருவருப்பே.

மாறுவோமே!

அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, Founder & CEO
Compcare K Bhuvaneswari
காம்கேர் சாஃப்ட்வேர்
செப்டம்பர் 3, 2024 | செவ்வாய்

(Visited 1,888 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon