பிசினஸும், நேர மேலாண்மையும்!
இப்போதெல்லாம் நிறைய இளைஞர்கள் ஸ்டார்ட் அப் நிறுவனம் தொடங்குவதாகவும் அதற்காக ஆலோசனை கேட்டு எனக்கு போன் செய்கிறார்கள். அவர்கள் பிசினஸ் சார்ந்து சிறிது ஆலோசனை சொல்லிவிட்டு ‘பிசினஸ் என்பது ஒரு கடல். இந்த ஆலோசனைகள் எல்லாம் கடலில் கரைத்த பெருங்காயத்துக்கு சமம். வாழ்த்துகள்’ என சொல்லி உரையாடலுக்கு முற்றுப் புள்ளி வைப்பேன்.
அத்தோடு நின்றால் பரவாயில்லை. சொல்லாமல் கொள்ளாமல் திடுதிப்பென்று ஈரோட்டில் இருந்தும், தஞ்சாவூரில் இருந்தும் கிளம்பி வந்துவிட்டு நான் தொடர் மீட்டிங் மற்றும் ரெகார்டிங்கில் இருந்தால் வருத்தத்துடன் கிளம்பிச் செல்ல வேண்டியது.
என் உதவியாளர்கள் ‘அப்பாயிண்ட்மெண்ட் பெற்று வாருங்கள்’ என சொல்லி அனுப்பினால் அவர்கள் மனதுக்குள் என்ன நினைக்கிறார்கள் என்பது அவர்கள் முகத்தில் பட்டவர்த்தனமாக தெரிகிறது என்கிறார்கள் என் உதவியாளர்கள். ‘பெருசா பிகு செய்கிறார்கள்’ என்பதே அவர்கள் முகத்தில் வெட்ட வெளிச்சமாக வெளிப்படும் வாசகம்.
முன்னே அப்பாயிண்ட்மெண்ட் பெறாமல் நேரடியாக ஒரு நிறுவனத்துக்குச் சென்று அந்த நிறுவனத் தலைவரை அல்லது சி.ஈ.ஓவை சந்திப்பது நாகரிகமாக நடந்து கொள்ளும் செயலைப் போலவும், ஏற்கனெவே அன்றாடப் பணிகளுக்கு நிமிடம் வாரியாக டைம் டேபிள் போட்டு பிசியாக இயங்கும் நிறுவனத் தலைவர் என்னவோ அநாகரிகமாக நடந்துகொள்வதைப் போலவும் அவர்கள் சிந்திப்பதுதான் கொடுமையிலும் கொடுமை.
‘ஸ்டார்ட் அப்’ நிறுவனம் தொடங்கி வெற்றிகரமாக நடத்த மிக முக்கியமான காரணி ஒன்றுண்டு. அது நேர மேலாண்மை. உங்கள் நேரத்தை மட்டுமில்லாமல் அடுத்தவர்கள் நேரத்துக்கும் மதிப்பளிக்க வேண்டும். பிசினஸ் சம்மந்தமாக நீங்கள் சந்திக்க விரும்பும் நபர் யாராக இருந்தாலும் அவர்களின் முன்அனுமதி இன்றி செல்ல வேண்டாம். முறையாக அனுமதி பெற தாமதமானாலும் அதுதான் நீண்டகால தொடர்புக்கு வழிவகுக்கும்.
காம்கேர் கே. புவனேஸ்வரி, நிறுவனர்
காம்கேர் சாஃப்ட்வேர்
டிசம்பர் 11, 2024 | புதன்