அரியக்குடி வெள்ளி பித்தளை விளக்கு!
எங்கள் வீட்டு கார்த்திகை தீபத்தில் ஒளிர்ந்து கொண்டிருக்கும் இந்த குத்துவிளக்கு என் மனதுக்கு மிகவும் நெருக்கம். அதற்கு மிக முக்கியக் காரணம் என்னவென்றால், பிப்ரவரி 8, 2024 அன்று காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு தொழில்நுட்பக் கருத்தரங்கில், Ai தொழில்நுட்பம் குறித்து உரையாற்றுவதற்காக சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தேன். அந்த நிகழ்ச்சியில் எனக்குக் கொடுக்கப்பட்ட அன்பளிப்புதான் இந்த குத்துவிளக்கு.
இந்த விளக்கு பார்ப்பதற்கு வெள்ளி போலவே இருக்கும். நல்ல கனமாக, பார்வையாக இருக்கும். ஆனால் வெள்ளி அல்ல.
இது வெள்ளி பித்தளை விளக்கு!
சிவகங்கை மாவட்டம் காரைக்குடிக்கு அருகில் உள்ள அரியக்குடியில் தயாராகும் இந்த விளக்கு அதன் கெட்டித்தன்மையாலும், வெள்ளி போலவே பளபளப்பாக தோற்றமளிக்கும் தன்மையாலும் மிகப் பிரபலம்.
காப்பர் மற்றும் ஜிங்க் சேர்ந்த கலவையால் உருவாவது பித்தளை. இதனுடன் நிக்கலும், சிறிது வெள்ளியும் சேர்த்து வெள்ளி பித்தளை தயாரிக்கப்படுகிறது. வெள்ளி பித்தளைக்கான மூலப் பொருட்களை 1100 டிகிரியில் உருக்கி, ஆற்று மணல் நிரப்பப்பட்ட பிரத்யோகமான மோல்ட் பெட்டியில் நிரப்புகின்றனர். பின்பு பெட்டியில் இருந்து எடுக்கப்பட்ட உருவத்தில் தேவையற்ற பொருட்களை வெட்டி எடுத்துவிட்டு, பாலிஷ் போடப்படுகிறது. 5 இன்ச் முதல் 6 அடி வரை விளக்குகள் தயாராகிறது.
மனதுக்குப் பிடித்த பரிசுப் பொருட்களின் வரிசையில் இந்த வருடம் இணைந்தது ‘வெள்ளிப் பித்தளை விளக்கு’, இந்த வருட கார்த்திகையை ரம்மியமாக்கியது.
அனைவருக்கும் இனிய கார்த்திகைத் திருநாள் வாழ்த்துகள்!
காம்கேர் கே. புவனேஸ்வரி, நிறுவனர்
காம்கேர் சாஃப்ட்வேர்
டிசம்பர் 13, 2024 | வெள்ளிக்கிழமை