நான் அவருடைய ரசிகையானேன்!
இது போன்ற செய்திகள் (எது போன்ற செய்திகள் என தெரிந்துகொள்ள முழுமையாக பதிவை படியுங்கள்) நிறைய பரவும்போது தான் கொஞ்சமாவது தவறு செய்ய பயம் உண்டாகும். பயம் என்று சொல்வதைவிட அவமானத்துக்கு வெட்கப்பட்டாவது தவறுகள் குறைய வாய்ப்புண்டு.
நான் சிறுவயதாக இருக்கும்போது பஸ் பிரயாணங்களில் நான் கவனித்த விஷயம் இந்த நிகழ்வோடு ஒத்துப் போகிறது.
பஸ்ஸில் பயணம் செய்யும்போது மேலே வேண்டும் என்றே இடிக்கும் இடிராஜாக்களை எதிர்த்து கேள்வி கேட்பது, மழைக்குக் கூட பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்காத கூடை வியாபாரம் செய்யும் பெண்கள்தான். கூடை வியாபாரம் செய்பவர்களை படிக்காதவர்கள் என்று சொல்வதற்கு யாரும் கொடிபிடிக்க வேண்டாம். நான் அறிந்து அவர்களுக்கு அவர்களின் பெயரைக்கூட தமிழில் எழுதத்தெரியாது என்பதால் அந்த வார்த்தைப் பிரயோகத்தை பயன்படுத்துகிறேன். எதையும் எழுதவும் தெரியாது. படிக்கவும் தெரியாது. ஆனால் அநீதி நடந்தால் குரலை உயர்த்தத் தெரியும்.
அந்த தைரியத்தை படிப்பு அல்லவா கொடுக்க வேண்டும் என்று நான் வியந்ததுண்டு.
பொது இடங்களில் சிறுமிகளுக்கும், இளம் பெண்களுக்கும் யாரேனும் இதுபோல சில்மிஷம் செய்தால் அவர்களுக்காக குரல் கொடுப்பது படிக்காத பெண்கள்தான்.
‘இந்தாப்பா கொஞ்சம் நகர்ந்து நில்லேம்ப்பா…’, ‘இந்தா தம்பி கொஞ்சம் நவுறு. எனக்கு வழிவுடு நான் நிக்கணும்…’, ‘ஏம்பா தம்பிகளா இப்படி பண்றீங்களே… நல்லா இருப்பீங்களா’ இப்படி நேரடியாகவும் மறைமுகமாகவும் குரல் கொடுப்பது ‘அசாத்ய தைரியம்’ மிக்க படிக்காத கூடைக்கார பெண்கள்தான்.
இடி ராஜாக்களிடம் இடி வாங்கும் படித்த பெண்கள் பொதுஇடத்தில் குரல் எழுப்ப கூச்சப்பட்டுக் கொண்டு எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு நின்றிருப்பார்கள் அல்லது நகர்ந்து நகர்ந்து வேறிடம் செல்வார்கள்.
இன்று கால மாற்றத்தில் மாற்றங்கள் வந்திருக்கலாம். அதுவேறு விஷயம்.
இத்தனைக்கும் நான் தனியாக பஸ்ஸில் அதிகம் பயணித்தது கிடையாது. குடும்பத்துடன் வெளியூர் செல்ல நேர்கையில் பார்த்த விஷயங்கள், என் உடன் படிப்பவர்கள் சொல்லும் அனுபவங்கள் இவற்றின் மூலம், முகமறியா கூடைக்கார பெண்களின் ரசிகையாகவே மாறிவிட்டேன் என்று தான் செல்ல வேண்டும்.
நேற்று பெண் தூய்மைப் பணியாளர் ஒருவரிடம் அத்துமீறிய பைக் இளைஞர் அவரிடம் துடைப்ப அடி வாங்கிய செய்தியில் போட்டிருந்த புகைப்படம் தெளிவாக இல்லை என்றாலும் என் மனக்கண்களில் அந்தத் தூய்மைப் பணியாளர் முகம் மிக அழகாக ஜொலிஜொலித்தது.
நேற்று முதல் நான் அவரின் ரசிகையானேன்!
காம்கேர் கே. புவனேஸ்வரி, நிறுவனர்
Compcare K Bhuvaneswari
காம்கேர் சாஃப்ட்வேர்
நவம்பர் 11, 2025 | செவ்வாய்








