ஒன்று புரொஃபஷனலா இருங்கள் அல்லது பர்சனலாக பேசுங்கள்!
ஒன்று புரொஃபஷனலா இருங்கள் அல்லது பர்சனலாக பேசுங்கள். புரொஃபஷனலா பேசும்போது பர்சனலாக பேசி சூழலை இரண்டும் கெட்டான் ஆக்கிவிடக் கூடாது.
நேற்று ஒரு நிறுவனத்தில் இருந்து அடுத்த மாத மகளிர் தின கொண்டாட்டத்துக்கு சிறப்பு விருந்தினராக அழைக்க ஒருவர் பேசினார்.
அவர் நிறுவன மேலதிகாரி சொன்னதன் பேரில் அவரது உதவியாளர்தான் தொடர்பு கொண்டார்.
என்னைப் பற்றி ஒரு நிறுவன CEO என்ற அளவில் மட்டுமே தெரிந்து வைத்திருந்ததால், என்னைப் பற்றி நானே சுருக்கமாக கூற வேண்டி இருந்தது.
பெண்கள் நினைத்ததை படிப்பதும், பிடித்த வேலைக்குச் செல்வதும், விரும்பிய வாழ்க்கையைத் தேர்ந்தெடுப்பதும் பெரும் சவாலாக இருந்த காலகட்டத்தில் 33 வருடங்களுக்கு முன்னரே நான் ஒரு நிறுவனத்தைத் தொடங்கினேன் என்று கூறி நான் தொடர்வதற்குள் அவர் வாயைத் திறந்தார். பிறகு 5 நிமிடத்துக்கு பேச்சை நிறுத்தவே இல்லை.
எனக்கு கொஞ்சம் (நிறையவே தான்) எரிச்சல் ஆகி கடுப்பை மறைத்துக் கொண்டு கேட்டுக் கோண்டிருந்தேன். முடிவில் ‘ரொம்ப நன்றி சார்… எனக்கு அன்று வேறொரு அப்பாயின்மெண்ட் இருக்கிறது’ என்று சொல்லி போனை வைத்தேன்.
அப்படி என்னதான் அவர் பேசினார்?
‘என்னுடைய மனைவி அந்த காலத்திலேயே, அதாங்க நீங்கள் சொல்லும் அந்த காலத்திலேயே பெரிய நிறுவனத்தில மேனேஜருக்கு செகரட்டரியா இருந்தா, அவளுக்கு கல்யாணம் ஆகிறப்ப பி.எஸ்.ஸிதான். நான் தான் அவளை பி.எச்.டி செய்ய வைத்தேன்…’ அப்படி இப்படி என மனைவியை ஒருமையில் பேசி ஒரே சுய புராணம்தான்.
நான் மனதுக்குள் நினைத்துக்கொண்டேன் ‘அவரையே சிறப்பு விருந்தினராக அழைக்க வேண்டியதுதானே?’
அவர் மனைவி பெருஞ்சிறப்பு பெற்றவராகவே இருக்கட்டும். அலுவலக ரீதியாக ஒருவரை ஒரு நிகழ்ச்சிக்கு அழைக்கும்போது தன் மனைவி, மச்சினி என வீட்டு உறுப்பினர்களின் பெருமையை பேசுவது நாகரிகம் அல்ல.
காம்கேர் கே. புவனேஸ்வரி, நிறுவனர்
Compcare K Bhuvaneswari
காம்கேர் சாஃப்ட்வேர்
Compcare Software
பிப்ரவரி 12, 2025 | புதன்