தொலைபேசி துறையில் பணியாற்றிய என் பெற்றோர் பணியிட மாற்றல் காரணமாக ஏராளமான ஊர்களில் வசித்திருக்கிறார்கள். கூடவே ஐந்தாறு வயதில் இருந்த மூன்று குழந்தைகளையும் சலிப்பின்றி சுமந்துகொண்டு. இது போன்று பல ஊர்களில் வசிப்பதில் பல அசெளகர்யங்கள் இருந்தாலும் எங்களுக்கு அது வரப்பிரசாதமாகவே அமைந்தது. பலதரப்பட்ட ஊர்கள், மனிதர்கள், சூழல்கள் என எங்கள் கற்பனை வளம் அதிகரிக்க அதுவும் காரணம் என்று சொல்வதைவிட அதுவே பிரதானக் காரணி எனலாம்.
1975 – 1976 ல் திருவாரூரில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது தொலைபேசித்துறை அலுவலகத்துக்கு எதிரே இருந்த ‘வாசன் கஃபே’ மிகப் பிரபலம். அந்த அலுவலகத்தில் இருந்த பணியாளர்கள் அனைவருமே அந்த ஹோட்டலில் காஃபிக்கு அடிமை. ஒரு முறை அங்கு காஃபி சாப்பிட்டால் வேறொரு இடத்தில் காஃபி சாப்பிடவே தோன்றாத அளவுக்கு சுவை அமிர்தமாய் இனிக்குமாம்.
தொலைபேசித் துறையில் இருந்து அங்கு வந்து சாப்பிடுபவர்களுக்கு ராஜமரியாதைதான். எல்லோரையுமே அவர் மரியாதையுடன்தான் நடத்துவார் என்றாலும், அப்போதெல்லாம் டிரங்கால் பேசுவதற்கு தொலைபேசித் துறை வாயிலாகத் தானே இணைப்பு கொடுத்து பேச வேண்டும். அந்த வகையில் தொலைபேசித் துறை மீது கொஞ்சம் பாசம் அதிகம் இருக்கத்தானே செய்யும். அதைத்தான் நான் கொஞ்சம் தேன்தொட்ட வார்த்தைகளால் ராஜமரியாதை என்கிறேன்.
காலையில் நெற்றியில் விபூதி குங்குமம் பளிச்சிட அந்த ஓட்டல் உரிமையாளர் திரு. வாசன் அவர்கள், சுடச் சுட தயாரித்த முதல் செட் இட்லி சாம்பார் சட்னி இவற்றை ருசி பார்த்த பின்னர் ஓட்டல் வாசலில் இதற்காகவே காத்திருக்கும் யாசகர்களுக்கு அளிப்பது வழக்கம்.
அது சரி இப்போது எதற்கு இந்த வியாக்கியானம்?
விஷயம் இருக்கிறது. தொடர்ந்து படியுங்கள்.
மயிலாடுதுறை என்றாலே காளியாகுடி என்றிருந்த காலம் மலையேறி சிலபல வருடங்கள் ஆகிவிட்டதால் அங்கு சென்று காபிகூட அருந்துவதில்லை. அடுத்து மயூரா. அங்கு சுவை நன்றாக இருந்தாலும் பராமரிப்பு குறைவு. உட்கார்ந்து சாப்பிடும் டேபிள்களும், சாப்பிடும் அறையுமே எங்களுக்கு நெருடலாக இருப்பதால் அங்கு சென்று சாப்பிடுவதையும் தவிர்த்து சில வருடங்கள் ஆகிறது.
மயிலாடுதுறை சென்றால், சமீபமாக அன்னமித்ரா என்ற உணவகத்தில்தான் சாப்பிடுகிறோம்.
இந்த முறை ஒரு வேலையாக மயிலாடுதுறை சென்றபோது எங்கள் அபிமான திருவாரூர் புகழ் ‘வாசன் கஃபே’-யை கண்டோம். பட்டமங்களம் தெருவில் ‘வாசன் பாரம்பர்யம்’ என்ற பெயரில் மிக அழகாக புத்தம் புதிய தோற்றத்தில் திருவாரூர் தேர்ச் சங்கரங்கள் மற்றும் குதிரை போன்ற பாரம்பர்ய ஓவியங்கள் முகப்பில் பேனர்களாக எங்களை வரவேற்க உள்ளே சென்றோம்.
வாசன் அவர்களின் பெருமைகளைச் சொல்லும் வகையில் தங்கள் தாத்தா, எங்கள் பெரிய முதலாளி என்றெல்லாம் பாசத்துடனும் நேசத்துடன் தவத்திரு M.S. வாசன் அவர்களைக் குறிப்பிட்டு வள்ளலாரின் கொள்கைகளைப் பின்பற்றி ஜீவகாருண்ய வழியில் நின்று வடலூரில் அன்ன பாலிப்பு செய்தவர் என்றெல்லாம் அவரது அருமை பெருமைகளை தாங்கிய பலகைகள் அலங்கரிக்க பிரமிப்பு அடங்காமல் உள்ளே நுழைந்தோம்.
அட, 1952-ல் திருவாரூரில் வாசன் கஃபே ஆரம்பித்தபோது அச்சிட்ட அழைப்பிதழ், அந்த காலத்தில் பயன்படுத்திய பித்தளைப் பாத்திரங்களுக்கு நடுவே மிக கம்பீரமாய் வீற்றிருக்க அதுவே அந்த ஓட்டல் வரவேற்பறையின் பின்னணியாக அமைத்திருந்தார்கள்.
என் அப்பா அம்மாவுக்கு மகிழ்ச்சி பெருக்கெடுக்க வரவேற்பில் அமர்ந்திருந்த பெண்ணிடம் ஓட்டல் பற்றியும் எம்.எஸ்.வாசன் அவர்கள் குறித்தும் விசாரித்தார்கள். என் அப்பாவுடன் வாசன் அவர்கள் நேசத்துடன் பழகுவார், ‘பர்சனல் டச்’ என்பார்களே அப்படி வாசன் அவர்களுடன் பழக்கம். இத்தனைக்கும் அப்போதே அவர் என் அப்பாவைவிட வயதில் மூத்தவர். வாடிக்கையாளர் என்பதையும் தாண்டி, வயது வித்தியாசத்தையும் தாண்டி ஒரு சிநேகமான நட்பு.
இவரது இளைய தலைமுறை இவ்வளவு சிறப்பாக நடத்தும் வாசன் கஃபேயின் மயிலாடுதுறை கிளை ஓட்டலை பார்த்ததும் என் பெற்றோரின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
இதற்கிடையில் நானும் அந்த ஓட்டலின் சுத்தம், அமைப்பு, நேர்த்தி, பணியாளர்களின் மரியாதை கொடுக்கும் பண்பு இவற்றை கவனித்தபடி சுற்றி சுற்றி பார்வையாலேயே படம் எடுத்துக் கொண்டிருந்தேன். என் கண்களுக்கு ஒரு சிறிய மரப் பெட்டியும் அதற்கு பூ வைத்து மாலை போட்டு அருகில் விளக்கு ஏற்றியிருந்தது கண்களில் பட என்ன என்று விசாரித்தேன். எம்.எஸ். வாசன் அவர்கள் பயன்படுத்திய அங்கவஸ்த்திரத்தை அந்த பெட்டிக்குள் பத்திரப்படுத்தி மரியாதை செலுத்தி இருந்தார்கள்.
ஒரு கோயிலுக்குள் சென்றால் கிடைக்கும் அமைதி அந்த ஓட்டலுக்குள். மூத்தோர்களை மதிக்கும் எந்த ஒரு இடத்துக்கு சென்றாலும் அந்த உணர்வு உண்டாகும் தானே.
அந்த பிரம்மிப்பில் இருந்து விடுபடுவதற்குள் சற்று திரும்பிப் பார்த்தபோது என் கண்களில் பட்டது வரவேற்பு அறையில் இருந்த திண்டு. அதற்கு மேல் பங்கா என்றழைக்கப்படும் விசிறி.
முன்பெல்லாம் அரசு அலுவலகங்களில் எல்லாம் பங்காவை இயக்கி விசிறிவிடுவதற்கென்றே பணியாளர்கள் இருப்பார்கள். அது ஒரு வேலைவாய்ப்பு. காலம் மாற மாற அது மின்சக்தியால் இயங்கத் தொடங்கியது.
எனக்குள் அடங்கிக் கிடந்த கிரியேட்டிவிடி அந்த திண்டையும், பங்காவையும் பார்த்ததும் துள்ளிக் குதித்து வெளியே எட்டிப் பார்க்க, என் அப்பா அம்மாவை அமரச் செய்தேன். அதற்குள் வரவேற்பறைக்கு ஓடி வந்த ஓட்டல் பணியாளர் ஒருவர் பங்கா என்ற விசிறிக்கான சுவிட்சை போட அது அழகாக விசிறி விட ஆரம்பிக்க புகைப்படம் மட்டுமே எடுக்க நினைத்திருந்த என்னை வீடியோ எடுக்க வைத்தது அந்த அழகான காட்சி.
இந்தப் பதிவில் நீங்கள் காணும் காட்சியும் அதுவே!
இதெல்லாம் சரி, ‘டிபன் சாப்பாடு காஃபி டீ எப்படி இருந்தது அதைச் சொல்லுங்கள்’ என்ற உங்கள் மைண்ட் வாய்ஸ் கேட்கிறது.
அருமை. அருமையோ அருமை என்று சொல்வதைவிட வேறென்ன சொல்லப் போகிறேன். வாழை இலை போட்டு பரிமாறும் பாங்கே ஒரு பாரம்பர்யம்தான்.
தரம், சுவை சூப்பரோ சூப்பர். விலையைக் கேட்டால் மயக்கம் வரும். அவ்வளவு அதிகமா என அவசரகுடுக்கையாக நினைக்க வேண்டாம்.
திக்கான பாலில் மணக்கும் டிகாஷனுடன் சுடச் சுட காபியின் விலையே 30 ரூபாய்தான். மணமணக்கும் டீ 20 ரூபாய். இதுவே இப்படி என்றால் டிபன், சாப்பாடு எல்லாமே விலை குறைவு.
மண் மணக்கும் மயிலாடுதுறையை விட்டு கிளம்புவதற்கு மனமே இல்லை. காரணம், சொல்ல வேண்டுமா என்ன?
காம்கேர் கே. புவனேஸ்வரி, நிறுவனர்
காம்கேர் சாஃப்ட்வேர்
மார்ச் 9, 2025 | ஞாயிறு