காசியும் அயோத்தியும்!
புகைப்படங்களுடன் படிக்க இங்கே கிளிக் செய்யவும்!
நாள் – 1: பிரயாகையில் திருவேணி சங்கமத்தில் நீராடல்
நாள் – 2: ருத்ர பூஜையும் கங்கா ஆரத்தியும்
நாள் – 3: அயோத்தி ஸ்ரீராமர் தரிசனம்
நாள் – 4: காசி விஸ்வநாதர் ஆலயம், தொந்திப் பிள்ளையார், காசி விசாலாட்சி, வராகி, அன்னப்பூரணி, கால பைரவர் தரிசனம்
நாள் – 5: பத்திரமாக கூடடைதல், காசிக்கு ‘பை பை’
மார்ச் 30, 2025 | ஞாயிறு | பிரயாகையில் திருவேணி சங்கமத்தில் நீராடல்
அயோத்தி ராமர் கோயில் செல்வது நீண்ட நாள் திட்டம். ஆசையும், கனவும் இருந்தால் திட்டம் தானாகவே உருவாகிவிடும். இந்த பிரபஞ்ச நியதிப்படி அது நிறைவேறக் கூடிய சூழல் மார்ச் 30, 2025 அன்று உண்டானது.
காசி அயோத்தியா இரண்டுக்கும் செல்ல ஆயத்தமானோம். காசிக்கு ரயில் வழிப் பயணமாக 2006 –ல் சென்றிருக்கிறோம். அயோத்திக்கு செல்வது இதுவே முதல் முறை.
இந்த முறை விமான வழி பயணம். மார்ச் 30 அன்று காலை சென்னை விமான நிலையத்தில் 7.30 மணிக்கு கிளம்பிய இண்டிகோ விமானம் வாரனாசிக்கு 10.45 மணிக்கு கொண்டு சேர்த்தது.
அங்கிருந்து ஏற்கெனவே ஏற்பாடு செய்திருந்த தனியார் கார் விமான நிலையத்துக்கு வெளியே காத்திருந்தது. அங்கிருந்து ஐந்து மணி நேர பிரயாணத்தில் பிரயாக்ராஜ் (முந்தைய பெயர் அலகாபாத்) சென்றடைந்தோம்.
இடையில் 1924 – ல் இருந்து இயங்கி வரும் ஒரு ஓட்டலில் சாப்பிட்டோம். எங்கள் கோரிக்கைக்கு இணங்க சாப்பிடும் தட்டில் அலிமினியம் ஃபாயில் பேப்பர் போட்டு (வாழை இலை இல்லாததால்) மர ஸ்பூனும் கொடுத்து பரிமாரினார்கள். சிரித்த முகத்துடன் பரபரப்பாக இயங்கினார்கள்.
சாப்பிட்டு முடித்து அங்கிருந்து 1 மணி நேர பிரயாணத்தில் பிரயாகை நதிக்குச் சென்றோம். அங்கு படகு ஒன்றை ஏற்பாடு செய்துகொண்டு பிரயாகை நதியில் கங்கை, யமுனை, சரஸ்வதி இம்மூன்றும் ஒன்றாகக் கலக்கும் திருவேணி சங்கமத்தில் நீராடினோம்.
வெளியே வந்து காரை சென்றடைவதற்குள் யாசகம் கேட்பவர்கள் சூழ்ந்து கொண்டார்கள். அவர்களிடம் இருந்து மீண்டு காரை சென்றடைவதற்குள் ஒட்டக சவாரி செய்யும் பயணிகளை காண முடிந்தது. எங்களுக்கு சவாரி செய்ய ஆவல் இல்லை. தூர இருந்து ரசித்தோம். புகைப்படமும் வீடியோவும் எடுத்துக் கொண்டோம்.
அங்கிருந்து சிறிது தூரம் சென்றதும் ஒரு ஓட்டலில் சுடச் சுட டீ அருந்தினோம். பிறகு காசியை நோக்கியப் பயணம். அப்போது மாலை 4 மணி.
நாங்கள் முன்பதிவு செய்திருந்த லாட்ஜ் அறைக்கு இரவு 7 மணிக்கு சென்றடைந்தோம். புத்துணர்வு செய்து கொண்டு காசி மாநகரின் வீதியில் நடந்து சென்று அருகில் இருந்த ஓட்டலுக்கு சென்றோம். நாங்கள் ஆர்டர் செய்த சாதாரண இட்லி, தோசையை கொண்டு வருவதற்கே முக்கால் மணி நேரம் ஆக்கினார்கள். சுவையும் தரமும் சுமார். விலையோ மிக அதிகம்.
காசி மாநகரின் இரவு நேர சாலை பரபரப்பாக இருந்தது. நான்கு பேர் அமர்ந்து செல்லும் மோட்டரில் ஓடும் ரிக்ஷாக்கள், மனிதர்கள் மிதித்துச் செல்லும் ரிக்ஷாக்கள் என வாகனங்கள் பரபரப்பாய் அதி வேகமாய் எதிர் எதிர் திசையில் ஒன்றன் மீது ஒன்று மோதிவிடாமல் வளைந்து நெளிந்து சென்று கொண்டிருந்தன. கொஞ்சம் மெதுவாக நடந்தால் மனிதர்கள் ஆண் பெண் வித்தியாசமில்லாமல் மேலே இடித்துத் தள்ளிக் கொண்டு சென்றார்கள். இடையில் கொம்பில்லா மாடு ஒன்று அப்பாவின் மீது பின்னால் இருந்து மோதிக் கொண்டு முன்னேறியது. அந்த பதட்டத்தில் இருந்து மீளவே சில நொடிகள் ஆனது. குறுக்கும் நெடுக்குமாக நாய்களும் உலவிக் கொண்டிருந்தன. ஒரு சில இடங்களில் குரங்குகளையும் காண முடிந்தது.
காசி மாநகரின் தெருக்களில் பத்தடிக்கு ஒரு டீக்கடையும், லஸ்ஸி, தயிர், ரபடி (பால்கோவா போன்றது) கடைகளும் வரிசை கட்டி இருந்தன. விலையும் குறைவு. டீ, லஸ்ஸி, தயிர், ரபடி எதுவானாலும் மண் சட்டி, மர ஸ்பூனுடன்தான் சாப்பிடக் கொடுக்கிறார்கள். காசி முழுக்க பால், தயிருக்கு பஞ்சமில்லை.
நாங்கள் அப்போதுதான் சாப்பிட்டோம் என்பதால் மறுநாள் சுவைக்கலாம் என்றெண்ணி லாட்ஜ் அறைக்குத் திரும்பினோம். மனதுக்குள் சுத்தம் எந்த அளவுக்கு இருக்கும் என்ற பயமும் இருந்தது. அந்தக் கவலையை மறுநாளுக்கு ஒத்திப் போட்டுக் கொண்டு, பயணக் களைப்பு நீங்க இரவு நன்றாக உறங்கி ஓய்வெடுத்தோம்.
நாள் -1 சுபம்
மார்ச் 31, 2025 | திங்கள் | ருத்ர பூஜை மற்றும் கங்கா ஆரத்தி

கங்கா ஆரத்தி
காலையில் காசி சிந்தாமணி பிள்ளையார் கோயிலில் எங்கள் நெருங்கிய உறவின் இளைஞர் ஒருவர் செய்த ருத்ர ஜபம், ருத்ராபிஷேகம், மற்றும் ஹோமத்தில் கலந்து கொள்ளும் பெரும் பேறு பெற்றோம். சுமார் 4 மணி நேரம் ருத்ரத்தில் லயித்தோம்.
சிந்தாமணி பிள்ளையார் கோயில் பற்றி சொல்லியே ஆக வேண்டும். மதியம் 12 மணி வரை கோயில் திறந்திருக்கிறது. பிறகு மாலை 4-9 மணிவரை. பள்ளி, கல்லூரி சிறுவர்கள், சிறுமிகள் முதற்கொண்டு ஆண் பெண் பேதமின்றி, வயது வித்தியாசமின்றி பக்தர்கள் வருவதும் போவதுமாக இருக்கிறார்கள். அங்குள்ள தூண்களில் தலையை முட்டிக் கொண்டும், தோப்புக் கரணம் போட்டு மண்டியிட்டும் நமஸ்கரிக்கிறார்கள். அந்த பிள்ளையார் நம்மூர் பிள்ளையார் போல் இல்லாமல் வலது பக்கம் தலையை சாய்த்து பார்ப்பதைப் போல் இருக்கிறது. ஆரஞ்சு வண்ணத் திலகத்தால் (செந்தூரத்தால்) அலங்கரிக்கிறார்கள்.
ருத்ர பூஜை முடிந்து அவர்களே ஏற்பாடு செய்திருந்த மதிய உணவை எடுத்துக் கொண்டோம். வீட்டுச் சுவையில் அற்புதமாக இருந்தது.
இரவு கங்கா ஆரத்தி பார்க்கச் செல்லலாம் என்பதால் அறைக்குத் திரும்பி ஓய்வெடுத்தோம்.
திட்டமிட்டபடி படகு ஒன்றில் கங்கா ஆரத்தி பார்க்கக் கிளம்பினோம். சற்று தொலைவில் இருந்துதான் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த இடத்தில் கங்கையே ஜகஜோதியாக பொன்போல் தகதகத்தது.
கங்கை ஆற்றில் எரிகின்ற பிணத்தை தூக்கி எறியும் காட்சியையும் காண முடிந்தது.
அன்றிரவு ஆந்திர பிராமண டிபன் காபி என்று விளம்பரப்படுத்தி இருந்த VSR Cafe – Complete Family Restaurant சென்றோம். சுடச் சுட பூப்போல இட்லி, தோசை தேங்காய் சட்னி, சாம்பார் என வீட்டு சாப்பாட்டு சுவையில் அருமையாக இருந்தது. விலையும் குறைவுதான். காசியில் இருந்து கிளம்பும் வரை இதுதாம் நம்ம ஓட்டல் என சிரித்து சொல்லிக் கொண்டே சாப்பிட்டோம்.
வீதி முழுவதும் கொட்டிக் கிடந்த லஸ்ஸி – ரபடி – பால் – தயிர் கடைகளை பார்த்தபடி மனதுக்குள் சுவைத்தபடி மோட்டரில் இயங்கும் இ-ரிக்ஷா பிடித்து லாட்ஜ் சென்றடைந்தோம். நன்றாக உறங்கி ஓய்வெடுத்தோம்.
நாள் -2 சுபம்
ஏப்ரல் 1, 2025 | செவ்வாய் | அயோத்தி ஸ்ரீராமர் கோயில்

அயோத்தி ஸ்ரீராமர் ஆலயம்
ஏப்ரல் 1 – ம் தேதி காரில் காலை 3.30 மணிக்கு அயோத்தி நோக்கியப் பயணம். 4 மணி நேரம் ஆனது. இடையில் காரில் கேஸ் போடுவதற்கும், டீ குடிப்பதற்கும் அரை மணி நேரம் ஆனது. சரியாக 8.30 மணிக்கு அயோத்தி மாநகரில் காலடி எடுத்து வைத்தோம். காரை சுமார் 1 கிலோ மீட்டருக்கு முன்பே நிறுத்தி விடுகிறார்கள். அங்கிருந்து அயோத்தி ராமர் கோயிலுக்கு நடந்தும் செல்லலாம். இ-ரிக்ஷாக்களும் உள்ளன. சாலை ஓர இருபுறங்களிலும் உள்ள சுவர்களில் ராமாயண கதாபாத்திரங்களை சித்திரமாக வரைந்திருந்தார்கள். காசியை விட அயோத்தி சுத்தமாக காட்சி அளித்தது.
நாங்கள் நடந்தே சென்றோம். வழி நெடுக ஸ்ரீராமர் திலகத்தை நெற்றியில் இடுவதற்கு வியாபாரிகள் நிற்கிறார்கள். ஸ்ரீராம் பெயர் பொறிக்கப்பட்ட துப்பட்டா போன்ற ஷால்களையும் விற்பனை செய்கிறார்கள். பெரும்பாலான வட மாநிலத்தவர்கள் நெற்றியில் ஸ்ரீராம் திலகம் இட்டுக்கொண்டு ஷாலையும் கழுத்தில் போட்டபடி ராம் ராம் என உரக்க சொல்லியபடி நடந்து செல்கிறார்கள்.
ஸ்ரீராமர் ஆலயத்துக்குள் சென்றதும் காலணி, செல்போன், கைப்பை உட்பட அனைத்தையும் வாங்கிக் கொள்கிறார்கள். காலணியை தனித்தனி துணிப்பைகளில் போட்டு அதற்கான ஷெல்ஃபில் வைத்துவிட்டு மற்றவற்றை லாக்கரில் பத்திரப்படுத்தி டோக்கன் கொடுத்து விடுகிறார்கள். வீல் சேர் தேவைப்படுவோர் அதையும் பயன்படுத்திக் கொள்ளலாம். ஏனெனில் கோயில் உள்ளே அரை கிலோமீட்டர் நடக்க வேண்டும்.
எங்கள் உறவினரும் அங்கு தலைமை அர்ச்சகராக இருப்பவரும் நண்பர்கள் என்பதால் விவிஐபி அனுமதி பெற்று அதற்கான வரிசையில் சென்றோம்.
மற்ற பொது வரிசைகளில் உள்ள கூட்டமும் வேகமாக நகர்ந்து கொண்டுதான் இருந்தது.
உள்ளே சென்றதும் ஸ்ரீராமரை கண் குளிர மனம் குளிர தரிசனம் செய்தோம். வெளியே வந்ததும்தான் உண்டியலில் காசு போட மறந்துவிட்டதை உணர்ந்தோம். நான் மட்டும் அனுமதி பெற்று திரும்பவும் உள்ளே சென்று ஸ்ரீராமரை இரண்டாம் முறை தரிசனம் செய்து உண்டியலில் பணம் செலுத்திவிட்டு வெளியே வந்தேன்.
திருப்பதி போலவே உணர்ந்தோம். ஒரு நபருக்கு ஒரு இனிப்பு கற்கண்டு உருண்டை பொட்டலத்தை பிரசாதமாக வழங்குகிறார்கள்.
பிரசாதம் பெற்றுக் கொண்டு, கைப் பை மற்றும் காலணியை பெற்றுக் கொண்டு புகைப்படம் எடுத்துக் கொண்டு ஸ்ரீராமரிடம் இருந்து விடை பெற்றோம்.
அயோத்தியில் வழிநெடுக கடைகள். ஷாப்பிங் பிரியர்கள் ஷாப்பிங் செய்யலாம். எல்லாமே மலிவு விலையில் கிடைக்கின்றன. ஆண்களின் குர்த்தாக்கள், பெண்களின் கைப்பைகள், சுடிதார், கழுத்து மணி, கை வளையல் என குவித்து வைத்திருக்கிறார்கள். நமக்குத்தான் பொறுமை வேண்டும் அத்தனையையும் பார்த்து நமக்குத் தேவையானதை வாங்குவதற்கு.
ஸ்ரீராமர் கோயிலுக்கு எதிரிலேயே உடுப்பி ஓட்டல். மிகத் தரமான சுவையான சாப்பாடு, டிபன் கிடைக்கிறது. சாப்பாடு மட்டுமல்ல, இடமும், சூழலும், சேவையும் எல்லாமே சுத்தமாக இருந்தன. சாப்பிட்டு விட்டு கிளம்பி காசி மாநகரை நோக்கிப் பயணப்பட்டோம்.
காசி சென்றடைந்த போது மாலை 7 மணி ஆனது. லாட்ஜ் சென்று புத்துணர்வு செய்து கொண்டு முதல் நாள் இரவு சாப்பிட்ட ஆந்திர பிராமண டிபன் சாப்பாட்டு ஓட்டல் சென்று எங்கள் பிரதான உணவான இட்லி, தோசை சாப்பிட்டு லாட்ஜ் சென்று நன்றாக உறங்கி ஓய்வெடுத்தோம்.
நாள் -3 சுபம்
ஏப்ரல் 2, 2025 | புதன் | காசி விஸ்வநாதர் ஆலயம்

காசி விஸ்வநாதர் ஆலயம்
நம் பாரதப் பிரதமர் மோடிஜி அவர்களின் முன்னெடுப்பில் உருவான அழகிய காசி விஸ்வநாதர் ஆலயத்துக்கு ஏப்ரல் 2, 2025 அன்று, அதிகாலை 3.30 மணிக்கு சென்றோம். கைப்பை, செல்போன் உட்பட அனைத்தையும் கோயிலுக்கு வெளியே லாக்கரில் வைத்து விட்டு டோக்கன் பெற்றுக் கொண்டு வரிசையில் நின்றோம். நாங்கள் சென்றது காலை 3.30. அதற்கு முன்னரே நீண்ட நெடும் வரிசையில் பக்தர்கள்.
கோயில் வாசல் திறந்ததும் மற்ற கோயில்களைப் போலவே தள்ளு முள்ளுடன் கூட்டம் முன்னேற காசி விஸ்வநாதரை தரிசனம் செய்தோம். பூக்களாலும் பாலாலும் சிவலிங்கத்தை பக்தர்கள் தங்கள் கைகளால் தாங்களே அபிஷேகம் செய்ய அனுமதித்தார்கள். எல்லாவற்றுக்கும் நொடி நேரம்தான் அனுமதி. பூக்களுடன் பாலையும் அபிஷேகம் செய்துவிட்டு லிங்கத்தை தொட்டு கண்களில் ஒற்றிக் கொண்டு வெளியே வந்துவிட வேண்டும். இங்கும் பக்தர்கள் தேங்கி நிற்பதால் பிடித்து வெளியே தள்ளாத குறையாக காவலர்கள் செயல்படுகிறார்கள். வெளிப்பிரகாரத்தை சுற்றிவிட்டு நமஸ்கரித்து வெளியேறினோம். அப்போது மணி 7.00. சாலையோர கடையில் சுத்தமான மண் குவளையில் சூடான டீ அருந்தினோம்.
பிறகு அங்கிருந்து தொந்தி பிள்ளையார், காசி விசாலாட்சி, வராகி, அன்னப்பூரணி, கால பைரவர் என வரிசையாக சுவாமி தரிசனம் செய்தோம். இவை அனைத்துமே ஒற்றைஅடி பாதையில் வளைந்து நெளிந்து செல்லும் வழியாகவே இருந்தது.
சொல்லக் கூடாது ஆனாலும் சொல்லித் தானே ஆக வேண்டும். காசி விஸ்வநாதர் ஆலயம் உள்ள இடத்தைத் தவிர எல்லா இடங்களும் குப்பையும், சகதியும், கழிவுகளும், நாற்றமும்… அப்பப்பா இரண்டு மாஸ்க் போட்டுச் சென்ற எங்களுக்கே தாங்க முடியவில்லையே. மிக மிக நிதானமாக தலை குனிந்து கீழே தரையை பார்த்து பார்த்துத்தான் நடந்தே ஆக வேண்டும். ‘நிமிர்ந்த நன்னடை’ அங்கு எடுபடாது. அனைத்துக் கோயில்களுமே குடியிருப்புகளுக்கு நடுவில்தான் என்பதால் ராயல் என்ஃபீல்டில் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்லும் அப்பாகளையும், ஸ்கூட்டியில் பிள்ளைகளுடன் செல்லும் அம்மாக்களையும் காண முடிகிறது.
அங்குள்ளவர்கள் எப்படித்தான் இதே சூழலில் வசிக்கிறார்களோ தெரியவில்லை. அவர்களுக்குப் பழகி இருக்கும். எங்களைத் தவிர வேறு யாருமே மாஸ்க் அணியவில்லை.
அப்படியே கடைகளை பார்த்துக் கொண்டே நடந்தோம். இல்லை இல்லை, மக்கள் எங்களை நகர்த்தினார்கள் என்றே சொல்ல வேண்டும்.
1926 ஆம் ஆண்டில் முதல் முதலாக காசியில் தொடங்கப்பட்ட தென்னிந்திய உணவகம் ‘அய்யர்’ஸ் கஃபே’ கண்களில்பட அதற்குள் நுழைந்தோம். தாத்தா, அப்பா, 4 மகன்கள் என பரம்பரை பரம்பரையாக குடும்பத் தொழிலாக நடந்தி வருபவர்கள் அவர்கள். 4 மகன்களும் அந்த ஓட்டலின் வெவ்வேறு டிபார்ட்மெண்ட்டுகளை கவனித்துக் கொள்கிறார்கள். கூட்டுக் குடும்பமாக காசியிலேயே வசிக்கிறார்கள். அவர்களை ஒரு பேட்டி கண்டு வீடியோ எடுத்து வைத்துள்ளேன்.
அங்கு புளியம் சாதம், எலுமிச்சை சாதம், தயிர் சாதம் வாங்கி சாப்பிட்டுவிட்டு வயிறும் மனமும் குளிர்ந்த மகிழ்வில் லாட்ஜ் திரும்பி ஓய்வெடுத்தோம். அப்போது மாலை மணி 4.
ஆறு மணி அளவில் காசி புகழ் பனாரஸ் பட்டு புடவை கடைகளுக்கு சென்று பார்வையிட்டோம். உறவினர்களுக்கு புடவைகள் வாங்கிக் கொண்டோம்.
மீண்டும் ஆந்திர பிராமண டிபன் காபி ஓட்டல் சென்று இட்லி தோசை சாப்பிட்டோம். வரும் வழியில் லஸ்ஸி, ரபடி, பால் இவற்றை கண்ணாடி மூடி போட்டு வைத்துக் கொண்டு தயிர் கடைந்து கொண்டிருந்த விற்பனையாளர் கடை எங்களைக் கவரவே அங்கு அவரவர்களுக்கு என்ன தேவையோ அவற்றை வாங்கி சாப்பிட்டு ருசித்தோம். சுவை அருமையிலும் அருமை.
காசியில் இருந்த 4 நாட்கள் இவற்றை சுத்தம் கருதி மிஸ் செய்து விட்டோமே என கொஞ்சம் வருத்தமே. இப்போது இந்த சாலையோரக் கடையில் கூட பதார்த்தங்களை மூடி வைத்திருந்ததால்தான் சாப்பிட்டோம். அவரை ஒரு பேட்டி கண்டு வீடியோ எடுத்து வைத்துள்ளேன். பிறகு லாட்ஜ் திரும்பி நன்கு உறங்கி ஓய்வெடுத்தோம்.
நாள் – 4 சுபம்
ஏப்ரல் 3, 2025 | வியாழன் | பத்திரமாக கூடடைதல், காசிக்கு ‘பை பை’!

சென்னை விமான நிலையம்
ஏப்ரல் 3 – ஆம் தேதி காலை வாரனாசி விமான நிலையத்தில் காலை 10.45 – க்கு கிளம்பிய இண்டிகோ விமானம் சென்னை விமான நிலையம் வந்து சேர மதியம் 1.30 ஆனது. அருமையான ஆன்மிகப் பயணமாக அமைந்தது.
காசி செல்பவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை:
1. இந்தி தவிர எந்த மொழியையும் அவர்கள் பேசுவதில்லை. புரிந்து கொள்வதும் இல்லை.
2. கொஞ்சம் அசந்து நின்றுவிட்டால் யாசகம் கேட்பவர்கள் இடுப்பில் குழந்தையுடனும் கையில் பால் பாட்டிலுடனும் சூழ்ந்து கொள்வார்கள்.
3. ஓட்டல்களில் டீ காபி பால் அருந்துவதை விட சாலையோர கடைகளில் அருந்தலாம். நல்ல சுவையாக உள்ளது.
4. லஸ்ஸி, ரபடி, மோர், பால் இவற்றை பருக மறக்காதீர்கள்.
5. மாஸ்க் அணிந்து செல்வது நம் சுகாதாரத்துக்கு நல்லது.
நாள் – 5 சுபம் | பயணம் முற்றும்