அமெரிக்காவில் வேள்பாரி!
காசி அயோத்தியா பயணம் முடித்துக் கொண்டு சென்னை வந்து இரண்டு தினங்கள் கழித்து முக்கியமான சில நிகழ்வுகளுக்காக அமெரிக்கா பயணம். ஏற்கெனவே திட்டமிட்டதுதான்.
இடைப்பட்ட அந்த இரண்டு தினங்களில் அலுவலகத்தில் தற்போது நடந்து கொண்டிருக்கும் ப்ராஜெக்ட்டுகள் குறித்த மீட்டிங், இம்ப்ளிமெண்டேஷன் என முடித்துக் கொண்டு பொறியாளர்களுக்கு முடிக்க வேண்டிய ப்ராஜெக்ட்டுகள் குறித்து ஆலோசனைகள் வழங்கிவிட்டு இரண்டு தினங்களும் எங்கள் காம்கேர் வாசம்தான்.
22 மணி நேர விமானப் பயணத்தில் ஏப்ரல் 6 ஆம் தேதி மதியம் 3 மணிக்கு அமெரிக்கா வந்து சேர்ந்தோம். வீடு வந்து சேரும்போது மணி 5. ஆறு மணிக்கு சு. வெங்கடேசன் எழுதிய வேள்பாரி மேடை நாடகத்துக்கு என் சகோதரன் முன்பதிவு செய்து வைத்திருந்ததால் வீடு வந்து சேர்ந்ததும் குளித்து சாப்பிட்டு புத்துணர்வு செய்து கொண்டு காரில் டிராமா நடக்கும் இடத்துக்கு சென்றோம்.
மேடை நாடகங்கள் அவ்வளவாக பார்த்ததில்லை என்பதால் வேள்பாரியை பார்க்க மிக ஆவலாக இருந்தேன். என் எதிர்பார்ப்பை ஒரு சதவிகிதம் கூட ஏமாற்றாமல் அசத்தலாக இருந்தது நாடக வடிவிலான வேள்பாரி. திரைக்கதை, வசனம், இயக்கம், பின்னணி இசை, இடை இடையே சிறுவர் சிறுமிகளின் நடனம் என அமெரிக்க மண்ணில் காலடி எடுத்து வைத்த முதல் நாளே நம் நாட்டின் சிறப்பை மனம் முழுவதும் நிரப்பி சொல்லணா மகிழ்ச்சியை உண்டாக்கியது.
—
வேள்பாரியை வாசிக்காதவர்களுக்காக கதைச் சுருக்கம்:
மேற்குத் தொடர்ச்சி மலையில் வாழ்ந்துவரும் 14 இனக் குழுக்களுக்கு தலைமையாக வேளிர் குலம். அதன் தலைவன் பாரி. இவனது ராஜ்ஜியம் மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியான பறம்பு மலையில் இருக்கிறது. தன்னலமற்ற கொடை உள்ளத்தாலும், அன்புவழிப்பட்ட வாழ்வியல் மரபாலும் பாரியின் புகழ் எங்கும் பரவியது.
அந்த காலகட்டத்தில் மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டியர்கள் சமவெளியில் ஆட்சி செய்கிறார்கள். அவர்கள் பாரியின் புகழ் கண்டு வெதும்பினர். பறம்பு நாட்டின் நிலவளம் அவர்களின் கண்களை உறுத்தியது.
பாரிக்கு எதிராகத் தனித்தனியே அவர்கள் மேற்கொண்ட போர் முயற்சிகள் கைகூடவில்லை. இறுதியில் மூவேந்தர்களும் ஒன்றிணைந்தனர்.
வேளிர் குலத்தின் வசம் உள்ள தேவவாக்கு விலங்கை மூவேந்தர்களில் ஒருவனான குலசேகர பாண்டியன் அடைய நினைக்கிறான். அதில் அவனது துறைமுகம் தீக்கிரையாகிறது. இதனால், சேர, சோழ மன்னர்களையும் தன்னோடு இணைத்துக்கொண்டு, பறம்பு மலையை முற்றுகையிடுகிறான் பாண்டியன்.
பாரியை மலையைவிட்டு கீழே வரச்செய்ய பாரியின் நண்பனான நீலனையும் பிடித்து வைக்கிறான்.
அவர்களின் கூட்டுப்படை பாரியின் பறம்பு நாட்டை அனைத்துத் திசைகளில் இருந்தும் ஒருசேரத் தாக்கியது. மூவேந்தர்களும் ஒன்றாய் சதிசெய்து, வஞ்சித்து, பாரியின் உயிரைப் பறித்தனர்.
வீரத்தால் சாதிக்க முடியாததை துரோகம் செய்து முடித்தனர். இயற்கைக்கும் மனிதனின் பேராசைக்கும் இடையில் காலந்தோறும் நடந்து வரும் போராட்டம்தான் வேள்பாரியின் கதை.
—
இந்தக் கதையை இரண்டு மணி நேர ஸ்டேஜ் டிராமாவாக கொண்டு வந்திருப்பது பாராட்டத்தக்கது. எத்தனை பயிற்சி எடுத்திருந்தால் ஒரு சிறு துளி குழப்பம் இல்லாமல் அம்சமாக இயக்கி இருக்க முடியும் என நீண்ட நேரம் யோசித்துக் கொண்டிருந்தேன்.
நம் ஊர் போலவே அவரவர்களின் நண்பர்கள் உறவினர்கள் நடிகர்களாக திரையில் தோன்றி நடிக்கும்போது விசில் அடித்தும் கை தட்டியும் உற்சாகப்படுத்தினார்கள் பார்வையாளர்கள்.
ஒவ்வொரு காட்சிக்கும் பின்னணியில் டிஜிட்டல் திரையில் இமேஜை காட்டுகிறார்கள். உதாரணத்துக்கு காடு, எரிகின்ற துறைமுகம், நாட்டின் பசுமையான வளம் இப்படியான காட்சிகளை இமேஜ்களாக காட்டுகிறார்கள். அந்த காட்சியில் நடைபெறும் பேச்சு வார்த்தைகள், சண்டைக் காட்சிகள், காதல் மொழிகள், சதி திட்டம் தீட்டுதல், பழி வாங்குதல், போர் இப்படி எல்லாவற்றையுமே நடிப்பில் நல்ல பயிற்சி பெற்ற நபர்கள் தங்கள் கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்து நடித்திருந்தார்கள்.
நடனப் பள்ளியில் பயிலும் சிறுவர் சிறுமிகள் கதையில் வரும் காட்சிகளுக்கு ஏற்ப நடனமும் ஆடி அசத்தி இருந்தார்கள்.
அமெரிக்காவில் இப்படி நம் ஊர் கதைகளை எல்லாம் ஸ்டேஜ் டிராமாவாக கொண்டு வருவது எத்தனை பெரிய விஷயம்.
இதுபோல பாரதியார் வாழ்க்கையை கூட ஸ்டேஜ் டிராமாவாக கொண்டு வந்திருக்கிறார்கள்.
அமெரிக்க வாழ் தமிழர்களின் இதுபோன்ற முயற்சிகளை நாம் மனதார பாராட்டியே ஆக வேண்டும்.
வாழ்த்துகள்.
காம்கேர் கே. புவனேஸ்வரி, நிறுவனர்
Compcare K Bhuvaneswari
காம்கேர் சாஃப்ட்வேர் (Compcare Software)
ஏப்ரல் 10, 2025 | வியாழன்