#USA: கல்வி எனும் மகத்தான செல்வம்! (மே 1, 2025)

கல்வி எனும் மகத்தான செல்வம்!

#USAtrip2025_CK-2

நம் நாட்டில் சூப்பர் மார்க்கெட்டுகளில், மளிகை கடைகளில்,  துணிக்கடைகளில், ஸ்டார் ஓட்டல்கள் அல்லாத சாதாரண ஓட்டல்களில் வேலை செய்வோர்கள் பெரும்பாலும் படிக்காத அல்லது  படிக்க வசதி இல்லாத அல்லது பள்ளிப்படிப்பைத் தாண்டாத இளைஞர்களாகவே (ஆண், பெண்) இருப்பார்கள். வயதில் முதிர்ந்த பெரியோர்களை அவ்வளவாக அந்த வேலைகளில் பார்ப்பது அரிது.

ஆனால் அமெரிக்காவில் நன்றாகப் படித்துக் கொண்டிருக்கும் அல்லது படிப்பை முடித்த இளைஞர்கள் கடைகளில் வேலை செய்து கொண்டிருப்பார்கள். கை நடுங்கும் பாட்டி தாத்தாக்கள் கூட மால்களில், காஃபி ஷாப்புகளில், துணிக் கடைகளில் பில்லிங் செக்‌ஷனில் வேலை செய்துகொண்டிருப்பார்கள்.

நம் நட்டில் வசதி இல்லாததால், அமெரிக்காவில் வசதி இருந்தாலும் சுயமாக நிற்க வேண்டிய கட்டாயத்தினால். இந்த இரண்டுக்குமான வித்தியாசத்தில்தான் அந்தந்த நாட்டின் பொருளாதாரமும், சூழலும், பண்பாடும் இதர விஷயங்களும் அடங்கியுள்ளன.

சில மாதங்களுக்கு முன் கும்பகோணம் சென்றபோது நாங்கள் வழக்கமாக சாப்பிடும் வெங்கட்ரமணாவில் சாப்பிடச் சென்றோம். அப்போது ஒரு நடுத்தர வயது பெண்மணி காலையில் நாங்கள் டிபன் காபி சாப்பிடப்  போனபோதும் பார்த்தோம், இரவு டிபன் சாப்பிடப் போனபோதும் பார்த்தோம். காலையில் பார்த்த அதே சுறுசுறுப்பு. சிரித்த முகம். எங்களைப் பார்த்ததும் இந்த நேரத்தில் இது நன்றாக இருக்கும் இதை சாப்பிடுங்கள் என எங்கள் ஒவ்வொருவருக்கும் விளக்கிக் கொண்டிருந்தார். பாந்தமாக பணி செய்து கொண்டிருந்தார். பரிமாறிய பாணியும் அபாரம். சாப்பாட்டில் சுவை இல்லாவிட்டாலும் அவர் பரிமாறும் விதத்தினால் சாப்பாடு இரட்டை சுவையாகிவிடும் அளவுக்கு உபச்சாரம் செய்தார்.

வழக்கம்போல் நான் ‘மதியம் ஓய்வெடுக்க நேரம் கிடைக்குமா?’ என்று மெல்ல பேச்சு கொடுத்தேன்.

அவர் சிரித்துக் கொண்டே,’சாப்பிட ஒரு மணி நேரம் கொடுப்பார்கள்…’ என்று சொல்லிவிட்டு நகர்ந்தார்.

திரும்பவும் சாப்பார் சட்னி விட வரும்போது, ‘வேலை நேரம்?’ என்றேன்.

‘காலையில் பத்து மணிக்கு வருவேன்… இரவு 8.30, 9.00 மணி ஆகும் கிளம்ப…’ என்றார்.

நான் வியந்து, ‘குடும்ப சூழல் காரணமா வரீங்களா… கணவர் குழந்தைகள் என்ன செய்கிறார்கள்…’ என்றபோது கணவர் கட்டிட மேஸ்திரி என்றும், குழந்தைகள் பாலிடெக்னிக்கும், பள்ளி இறுதியும் படிப்பதாகக் கூறினார். கணவருக்கு குடிப்பழக்கம் இருப்பதாகவும், தான் சம்பாதிப்பதால்தான் பிள்ளைகளைப் படிக்க வைக்க முடிவதாகவும் கூறினார்.

நான் அவரை வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்ததை பார்த்து அவரே தொடர்ந்தார்.  ‘இந்த வேலை பிடித்திருக்கிறதா, கஷ்டமாக இல்லையா?’ என நான் நினைப்பதை அவர் படித்துவிட்டார் என நினைக்கிறேன்.

‘எனக்கு பரிமாறுவது ரொம்ப பிடிக்கும். சமைப்பதைவிட நான் சமைத்ததை வீட்டில் உள்ளோருக்குப் பரிமாறும்போது அவர்கள் ரசனையோடு சாப்பிடுவது இவற்றை பார்த்துக் கொண்டே சாப்பாடு போடுவது ரொம்ப இஷ்டம். அதனால்தான் இந்த வேலைக்கு வந்தேன்….’

நான் வியந்தே போனேன்.  நான் எதிர்பார்க்கவே இல்லை இப்படிப்பட்ட சுவையான பதிலை.

‘வாழ்த்துகள். உங்கள் குழந்தைகள் வாழ்க்கையில் நல்லபடியாக முன்னேறுவார்கள்’  என வாழ்த்திவிட்டு வந்தோம்.

அவர் முகத்தில் தண்ணீரால் கழுவிய  வாழை இலையின் மலர்ச்சி.

முக்கியமான ஒரு விஷயம். அமெரிக்காவில் உள்ள நம் இந்தியர்கள் நடத்தும் அல்லது இந்திய உணவகங்களில் நம் ஊர் பணியாளர்கள் ஒருவரையும் காண முடிவதில்லை. அவ்வூர் மக்கள் அல்லது அங்கு வாழ்ந்துவரும் அந்நிய மக்கள்தான் பணிபுரிகிறார்கள், சப்ளையர்கள் முதல் டேபிளை சுத்தம் செய்வது வரை. பார்ப்பதற்கு அத்தனை நேர்த்தியாக அழகாக உடை அணிந்து மனதுக்கு நெருக்கமாக தோற்றமளிப்பார்கள்.

அவர்களின் மேலாளர்கள் நம் ஊர் மக்கள் என்பதுதான் குறிப்பிடத்தக்கது.

போலவே, சாப்பிட வரும் மக்கள் பெரும்பாலானோர்  (99%) இந்தியர்கள். நம் ஊர் காரசாரமான உணவை வேறெவரால் ரசித்து ருசித்து சாப்பிட முடியும்?

அப்படியே இந்திய நண்பர்களின் உபசரிப்பினால் அவர்கள் சட்னி, சாம்பார், மிளகாய்பொடியுடன் இட்லி சாப்பிட்டாலும் காரத்தினால் கண்களிலும் மூக்கிலும் தண்ணீர் வர, நாக்கை விசிறிக் கொண்டு சாப்பிடும் அந்நாட்டினர்கள் சிலரையும் நான் பார்த்திருக்கிறேன்.

சமையலுக்கு நிச்சயமாக நம் ஊர் பணியாளர்கள் இருப்பார்கள் என நினைக்கிறேன். இல்லாவிட்டால் எப்படி அமெரிக்காவில் நம் ஊர் திருவல்லிக்கேணி ரத்னாபவன் சாம்பார் இட்லி மணமணக்கும்? ஆம். நம் சென்னை திருவல்லிக்கேணி புகழ் சின்ன வெங்காயம் அரைத்துட்ட சாம்பார் இட்லி அமெரிக்காவிலும்  அதே சுவையுடன் மணமணக்கிறது.

அமெரிக்காவில்கூட நம் மக்களால் ராஜா ராணி போல்  எப்படி உட்கார்ந்து சாப்பிட முடிகிறது என்று யோசித்துப் பார்த்தால் கிடைக்கும் விடை ஒன்றே ஒன்று தான். நம்மவர்களின் படிப்பும், அதனால் கிடைக்கும் புத்திசாலித்தனமும், வேலைவாய்ப்பும்.

உழைக்கும் அனைவருக்கும் மே தின / உழைப்பாளர் தின வாழ்த்துகள்!

காம்கேர் கே. புவனேஸ்வரி, நிறுவனர்
Compcare K Bhuvaneswari
காம்கேர் சாஃப்ட்வேர்
Compcare Software 
மே 1, 2025 | வியாழன்

(Visited 2,881 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon