சேவையும், சேவை மனப்பான்மையும்!
மார்ச் மாத இறுதியில் திருவண்ணாமலையில் ஒரு பள்ளியில் இருந்து அழைப்பு.
அவர்கள் பள்ளி மாணவர்களின் பட்டமளிப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்து பட்டமளித்து மாணவச் செல்வங்களை வாழ்த்த வேண்டும் என வேண்டுகோள் வைத்தார்கள்.
வழக்கம்போல் என்னிடம் பேசுபவர்கள் சொல்லும் அதே வசனத்தையும் முன் வைத்தார்கள். ‘எங்கள் பள்ளி வசதி குறைவானவர்கள் படிக்கும் பள்ளி…. எனவே…’
அதாவது நான் சென்னையில் இருந்து சொந்த செலவில் கார் வைத்துக்கொண்டு வந்து, 5 மணிக்கு தொடங்கும் அவர்கள் பள்ளி விழாவில் கலந்து கொண்டு, மாணவர்கள் கவனிக்கும் அளவுக்கு சுவாரஸ்யமாக பேசி, கவனிக்காமல் நம்மை கிண்டல் செய்யும் நோக்குடன் அலட்சியமாக நடந்து கொள்ளும் மாணவர்களின் சேட்டைகளை பொறுத்துக்கொண்டு தலைவலியை ஏற்றிக் கொண்டு, அவர்கள் கொடுக்கும் சால்வையை வாங்கிக் கொண்டு இரவு பயணம் செய்து நள்ளிரவைத் தொடும் நேரத்தில் சென்னைக்குத் திரும்ப வேண்டும்.
நான் அவர்கள் பள்ளிக்கு வந்து செல்வதற்கோ, பேசுவதற்கோ ஆகும் செலவை அவர்களிடம் கேட்கக் கூடாது என்பதற்காக அவர்கள் சொல்லும் காரணம் ‘எங்கள் பள்ளி வசதி குறைவானவர்கள் படிக்கும் பள்ளி…. எனவே…’.
இது எனக்கு முதன் முறை அல்ல. கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி என எந்த ஊராக இருந்தாலும், எந்த பள்ளி அல்லது கல்லூரியில் இருந்து அழைத்தாலும் ‘ஏழை பள்ளி / கல்லூரி’ என்ற அதே வசனம்.
நான் அவர்களிடம் கேட்க நினைக்கும் ஒரே கேள்வி. ‘அப்போ உங்கள் மாணவர்களிடம் கட்டணமே வசூலிக்காமல் இலவசமாகவா சேர்த்துக் கொள்கிறீர்கள்?’. ஆனால் கேட்க மாட்டேன். ஒன்றும் பேசாமல் இருந்தாலே ‘அந்தம்மா கொஞ்சம் ரூடு…’ அப்படி இப்படி என கதை கட்டி விடுவார்கள். அவர்களின் குறையை சுட்டிக் காட்டிவிட்டால்… நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கும். உடனே யாரும் நான் பயந்தாங்கொள்ளி என நினைத்து அறிவுரை சொல்லி உங்கள் நேரத்தை வீண்டிக்க வேண்டாம்.
சொல்ல வேண்டியதை சொல்ல வேண்டிய இடத்தில் சொல்லாமல் இருப்பதில்லை. அதுபோல சொல்லியும் பிரயோஜனம் இல்லை என தெரிந்தால் வீணாக பேசி என் சக்தியை வீணடித்துக் கொள்வதும் இல்லை.
திருவண்ணாமலை பள்ளி அழைப்புக்கு என்ன பதில் சொல்வது என யோசிக்கும் இடைவெளியில் மீண்டும் ஒரு குண்டை தூக்கிப் போட்டார்கள்.
‘எங்கள் பள்ளி பட்டமளிப்பு விழாவுக்கு ஸ்பான்ஸர் செய்ய முடியுமா…’ என கேட்டு பேனர்களுக்கு இவ்வளவு, சாப்பாட்டுக்கு இவ்வளவு, விழா மேடைக்கு இவ்வளவு என ஒரு லிஸ்ட்டை படித்தார்கள்.
நான் அறிந்த வரை அவர்கள் பள்ளி ஒன்றும் ஏழைகளுக்கான பள்ளி அல்ல. அப்படியே இருந்தாலும் சிறப்பு விருந்தினராக அழைத்துவிட்டு அவர்களிடமே ஸ்பான்ஸர் கட்டணம் கேட்பதெல்லாம் எந்த வகை நாகரிகம். புரியவில்லை.
நாங்களும் தான் எங்கள் நிறுவனத்தில் ஏஐ ஆராய்ச்சிப் பணிகளை பல வருடங்களாக செய்து வருகிறோம். ஆராய்ச்சிப் பணிகளுக்கே உரிய செலவீனங்கள் ஒரு பக்கம் விரையம் ஆகிக் கொண்டே இருக்கும். இவற்றைத்தாண்டி கிடைக்கும் லாபத்தில் தான் பொறியாளர்களுக்கு சம்பளம் மற்றும் இதர பணிகளுக்கான கட்டணம் இவற்றை கவனிக்க வேண்டும். அதற்காக, நாங்கள் யாரிடமும் சென்று நன்கொடை எல்லாம் கேட்டதில்லை.
இத்தனைக்கும் என் பெற்றோர் பெயரில் ‘ஸ்ரீபத்மகிருஷ்’ என்ற அறக்கட்டளையையும் நடத்தி வருகிறேன். மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில்நுட்பம் / கல்வி / வேலைவாய்ப்பு சார்ந்து சேவைகள் செய்து வருகிறேன். ஆக, எனக்குக் கிடைத்தவற்றை இந்த சமுதாயத்துக்குத் திரும்பச் செலுத்தும் கடமையில் இருந்தும் தவறுவதில்லை.
நானும் / நாங்களும் உயர்ந்து அதன் மூலம் கிடைக்கும் பயனை இந்த சமுதாயத்துக்கும் கொடுத்து ‘யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்ற திருமூலரின் வாக்கிற்கேற்ப 33 ஆண்டுகளுக்கும் மேலாக எங்கள் காம்கேர் சாஃப்ட்வேர் நிறுவனம் மூலம் தொழில்நுட்பப் பணி செய்து வருகிறோம்.
பணம் கொடுத்து விருது வாங்குவதில்லை, பணம் கொடுத்து சிறப்பு விருந்தினராக செல்வதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறேன்.
ஆகவே, என்னை ஏதேனும் நிகழ்ச்சிக்கு அழைப்பவர்களிடம் நேரடியாக ‘ என்ன எதிர்பார்க்கிறீர்கள்?’ என்று கேட்பதில்லையே தவிர அவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை உள்ளுணர்வினால் புரிந்து கொண்டு அதற்கேற்ப அந்த அழைப்பை ஏற்கிறேன் அல்லது நிராகரிக்கிறேன்.
நம் உழைப்பு, நம் அறிவு, நம் நேரம், நம் திறமை இவற்றை நாம் நம் கைகாசை கொடுத்துத்தான் நிரூபிக்க வேண்டும் என்கின்ற அவசியம் இல்லைதானே?
இதில் மற்றொரு கூத்தும் நடக்கிறது. ‘மேடம் பணம் காசெல்லாம் எதிர்பார்க்க மாட்டார்கள். இலவசமாகவே செய்வார்கள்…’ என்று நம்மை பரிந்துரை செய்பவர்களும் எடுத்து விடுவார்கள் பாருங்கள். அதுதான் கொடுமை.
ஒரு முறை கும்பகோணமோ, திருச்சியோ அல்லது தஞ்சையோ காரில் சென்று அன்றே திரும்ப வேண்டும் என்றால் (Same day return) கூட குறைந்தபட்சம் பத்தாயிரம் ரூபாய் செலவாகும். அதை என் கைகாசை போட்டு செலவு செய்து வெளியூர் கல்லூரிகளுக்கு சென்று வருவேன் என்று எப்படி இஷ்டத்துக்கு கதைகட்டி விடுகிறார்கள் என்று தான் புரியவில்லை.
சேவை செய்வதும், சேவை மனப்பான்மையுடன் செயல்படுவதும் வெவ்வேறு.
எங்கள் ஸ்ரீபத்மகிருஷ் மூலம் ஏதேனும் தொழில்நுட்ப உதவிகள் செய்தால் அது சேவையில் வரும். அதற்கான செலவை நான் ஏற்பேன்.
நான் செய்கின்ற செயல்கள் அத்தனையையும் நேர்மையாக செய்வது என்பது சேவை மனப்பான்மையுடன் செயல்படுவது என்ற பிரிவில் வரும். அதற்கு நான் செலவேற்க முடியாது. என் செயல்பாடுகளுக்கு உரிய பொருளாதார அங்கீகாரம் கொடுக்கப்பட வேண்டும்.
ஒரு அரசு அலுவலகத்தில் ஒரு அதிகாரி மிக நேர்மையாக கண்ணியத்துடன் மனிதாபிமானத்துடன் செயலாற்றினால் அவர் சேவை மனப்பான்மையுடன் செயலாற்றுவதாக பொருள். அவர் சம்பளத்துக்குத்தான் வேலை செய்கிறார். ஆனால் சேவை மனப்பான்மையுடன் அக்கறையாக பணியாற்றுகிறார் என்று பொருள்.
அதுவே, ஒரு நிகழ்ச்சிக்கு பத்தாயிரம் இருபதாயிரம் நன்கொடை வழங்கினாலோ அல்லது பொது நிகழ்ச்சியில் வெயிலிலும் மழையிலும் நின்று கொண்டு பொதுப்பணி செய்தாலோ அல்லது வெள்ளம் புயல் காலத்தில் களத்தில் இறங்கி பணியாற்றினாலோ அது சேவை என்ற பிரிவில் வரும்.
ஆகவே மக்களே, சேவையையும், சேவை மனப்பான்மையையும் குழப்பிக் கொள்ளாதீர்!
நான் முடிந்த நேரத்தில் முடிந்த சேவையும் செய்கிறேன். எல்லா நேரங்களிலும் (Note this point) சேவை மனப்பான்மையுடனும் செயல்படுகிறேன்.
புரிந்துகொள்ளுங்கள்!
காம்கேர் கே. புவனேஸ்வரி, நிறுவனர்
Compcare K Bhuvaneswari
காம்கேர் சாஃப்ட்வேர்
Compcare Software
ஜூலை 9, 2025