இது வழக்கமான காக்கா கதை அல்ல!
மயிலாடுதுறைக்கு அவசரப் பயணம். வழக்கமாக சாப்பிடும் ‘வாசன் பாரம்பர்யம்’ ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது ஒருவர் என்னை நோக்கி வந்து ‘எப்படி இருக்கீங்க மேடம்’ என்ற போது ’அட நீங்களா, ரொம்ப சந்தோஷம். உங்கள் பிசினஸ் எப்படி போகிறது…’ என்று பரஸ்பர குசலம் விசாரிப்பு முடிந்ததும், என் பெற்றோரிடமும் பேசி விட்டு கிளம்பினார்.
மயிலாடுதுறைக்கு சென்றால் மாயூரநாதர் கோயில், பன்னீர் சோடா, எங்கள் அப்பாவின் சொந்த கிராமம், எங்கள் குலதெய்வம் என்ற பட்டியலில் மற்றொரு இடமும் உண்டு. அந்த இடம், ‘மாயூரம் ஸ்ரீ முருகேசன் கைவண்ணக் கலைக்கூடம்’. கொலு பொம்மைகள் தயார் செய்யும் இடம்.
இதன் உரிமையாளர்தான் ஹோட்டலில் எங்களை குசலம் விசாரித்தவர்.
ஹோட்டலில் சாப்பிட்டு முடித்ததும் எங்கள் கிராமத்துக்கு செல்லும் வழியில் உள்ள அவரது கலைக்கூடத்துக்குச் சென்றோம்.
முகம் முழுக்க மகிழ்ச்சியுடன் வரவேற்றார். ஏதேனும் புதிதாக வந்திருக்கிறதா என ஒரு முறை கலைக்கூடத்தை சுற்றி பார்த்தோம். ஏற்கெனவே வாங்கியவை தான் இருந்தன.
காலையில் அவருக்கு முதல் வியாபாரம் என்பதால் வியாபாரம் செய்யாமல் போவதற்கு சங்கடமாக இருந்ததால் என் அம்மா, ஒரு காகம் பானையில் கற்களை போட்டு தண்ணீரை மேலெழும்பச் செய்து தண்ணீர் குடிக்கும் கான்செப்ட்டில் இருக்கும் பொம்மை ஒன்றை எடுத்தார். (இணைத்துள்ள படமும் அதுவே)
கடை உரிமையாளரிடம் அதைக் கொடுத்து ‘என்ன விலை?’ என கேட்டார்.
அதற்கு அவர், ‘நீங்கள் என் கடைக்கு வந்ததே பெரிய விஷயம், ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.. 100 ரூபாய்தான். ஆனால் பணம் கொடுக்க வேண்டாம். இந்த பொம்மையை என் கிஃப்ட்டா வைத்துக் கொள்ளுங்கள்’ என சொல்லிக் கொண்டே ஒரு பேப்பரில் பொம்மை உடையாமல் கட்டிக் கொடுத்தார்.
நாங்கள் காலையில் கடைக்குச் சென்று எதுவுமே வாங்காமல் வருவது அவ்வளவு நன்றாக இருக்காது என கனிவுடன் ஒரு பொருளை எடுக்க, கடை உரிமையாளரோ நாங்கள் அவர் கடைக்கு வந்ததற்கு மகிழ்ந்து, நாங்கள் எடுத்த அந்தப் பொருளையே பரிசாகக் கொடுக்க… ஆஹா, அறம் இப்படித்தான் தன்னைத் தானே வளர்த்தெடுத்துக் கொள்கிறது.
அறம் வளர்ப்போம்!
காம்கேர் கே. புவனேஸ்வரி, நிறுவனர்
Compcare Software
காம்கேர் சாஃப்ட்வேர்
அக்டோபர் 11, 2025 | சனிக்கிழமை