பலருக்கு தீபாவளி இப்படித்தான்!
இரண்டு நாட்கள் முன்பு அவசர அலுவலக வேலைக்காக வெளியில் சென்றுவிட்டு இரவு வரும் வழியில் வழக்கமாக நாங்கள் சாப்பிடும் ஓட்டலுக்கு சென்றோம்.
கிளம்பும் சமயத்தில் எங்கள் டேபிள் சப்ளையரிடம் (அவருக்கு தமிழ் தெரியாது) ஆங்கிலத்தில் தீபாவளி வாழ்த்துகள் சொன்னபோது அவர் கொஞ்சம் சோகமாக ஆங்கிலத்தில் நன்றி சொன்னார்.
தொடர்ந்து நாங்கள் ஆங்கிலத்தில் உரையாடியதை தமிழில் பகிர்கிறேன்.
கொஞ்சம் சிறு வயது என்பதால் முகத்தில் சோகம் அப்பட்டமாக தெரிய ‘ஏன் சோகமாக இருக்கிறீர்கள், எந்த ஊர் உங்களுக்கு?’ என்றேன்.
‘பீகார் மேடம்…’ என்றவுடன் ‘குடும்பம் எல்லாம் எங்கே இருக்கிறார்கள்?’ என்றேன்.
‘எல்லோரும் ஊரில்தான் இருக்கிறார்கள்…’ என்று சொன்ன அடுத்த நொடி கண்களில் கண்ணீர் கொட்டிவிட தயாராக இருக்க ‘I miss my family’ என்றார்.
சட்டென எனக்குள்ளும் அந்த சோகம் இறங்கி நான் சுதாரித்துக் கொள்வதற்குள் ‘Money is more important madam’ என்றார்.
டிப்ஸுக்காக அவர் அப்படி பேசவில்லை. ஏனெனில் ஏற்கெனவே டிப்ஸ் வைத்துவிட்டோம் நாங்கள். மனதில் இருந்து பேசிய அவரது பேச்சும், முகமும் மனதில் பதிந்தது. கூடுதலாக கொஞ்சம் பணம் கொடுத்தபோது வாங்க மறுத்ததுடன் ‘தீபாவளிக்கு நான் ஊருக்கு செல்ல வாய்ப்பிருந்தால் நன்றாக இருந்திருக்கும்’ என சொன்னார். வற்புறுத்தி பணத்தை அவருக்குக் கொடுத்துவிட்டு கிளம்பினோம்.
இப்படியாகத்தான் பலரின் தீபாவளி நாட்கள் கடந்து செல்கிறது.
அனைவருக்கும் இனிய தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்!
காம்கேர் கே. புவனேஸ்வரி, நிறுவனர்
Compcare K Bhuvaneswari
காம்கேர் சாஃப்ட்வேர்
அக்டோபர் 20, 2025 | திங்கள் கிழமை