சுப்ரமணி டிரம்ஸ் கனவு!
சுப்ரமணிக்கு 7 வயதுதான். ஆனால் டிரம்ஸ் வாசிப்பதில் அலாதி பிரியம். வகுப்புக்கு செல்கிறான். பிறவிக் கலைஞன் என்று சொல்வார்களே அதுபோல வகுப்பில் ஆசிரியர்கள் கற்றுக் கொடுப்பதற்கு முன்பே தானாகவே அனைத்தையும் அறிந்து வைத்திருந்தான். கனவில் கூட அவன் கைகள் டிரம்ஸ் வாசிக்கும். நாள் செல்ல செல்ல டிரம்ஸ் மீது ஒரு விதமான தீவிரமும் ஆக்ரோஷமும் குடிகொள்ள ஆரம்பித்தது.
இப்படியான சூழலில் ஒரு நாள் உறக்கத்தில் அவன் கைகள் தவித்தன. திடீரென கண் விழித்துப் பார்க்கிறான். இந்தக் கைகளின் பயன் இசைக்கு தாளம் போட மட்டும் அல்ல. இது இன்னும் பல நல்ல விஷயங்களை செய்யக் காத்திருக்கின்றன என்று கைகள் கனவில் பேசியதைப் போல் உணர்ந்தான்.
அடுத்த நாள் அவன் வீட்டுக்கு அருகே உள்ள காய்கறி மார்க்கெட் வழியாக பார்க்குக்குச் சென்றான். அப்போது ஒரு வயதான பாட்டி காய்கறி கூடையை தூக்க முடியாமல் தூக்கி வந்து கொண்டிருந்தார். சுப்ரமணியின் கைகள் துடித்தன. உடனே, அந்த பாட்டியிடம் சென்று நான் உதவி செய்யட்டுமா? என்று கேட்டான்.
‘நல்லாயிரு தம்பி. உனக்கு நல்ல மனசு’ என்று சொல்லிய அந்த பாட்டி கூடையை ஒரு பக்கம் பிடிக்க, மறு பக்கம் சுப்ரமணி பிடிக்க அதை அவரது கடையில் இறக்க உதவினான். பாட்டி வியாபாரத்தை தொடங்கினார்.
‘உதவி செய்த உனக்கு இந்தா என் சிறிய பரிசு’ என சொல்லி மாதுளையை அவன் கைகளில் திணிக்காத குறையாக கொடுத்தாள் அந்த பாட்டி.
டிரம்ஸ் வாசிக்கும்போது அவனது கைகளுக்குக் கிடைத்த பூரிப்பைவிட இப்போது உதவி செய்தபோது கிடைத்த பூரிப்பு சுகமாக இருந்தது. அவனது சிவந்த கைகள் பெருமை எனும் உணர்வால் நிறைவை அடைந்தன.
பார்க்கில் சிறிது நேரம் விளையாடிவிட்டு கிளம்பும்போது ஒரு குட்டி சிறுமி அப்பா அம்மாவை தவற விட்டு அழுது கொண்டிருக்க அவளை பத்திரமாக கைபிடித்து அவளுடன் பேச்சுக் கொடுத்துக் கொண்டிருந்தான். அதற்குள் சிறுமியின் அப்பா அம்மா அங்கு பதற்றத்துடன் வர, சிறுமியை அவர்களிடம் ஒப்படைத்தான். அந்த பெற்றோர் அவனுக்கு கண்ணீர் மல்க நன்றி சொல்லி கை கொடுத்தபோது, டிரம்ஸ் வாசிக்கும் போது அவனது கைகளுக்குக் கிடைத்த பூரிப்புக்கு இணையாகவோ அல்லது அதைவிட வேறொரு கோணத்திலோ பூரிப்பு கிடைத்ததாக உணர்ந்தான். ஆம். அவனது கைகள் ஒரு ஆனந்த பாச உணர்வை உணர்ந்தன.
அதே பூரிப்போடு வீட்டுக்கு வந்தான். தன் தங்கை ஒரு கார்ட்போர்ட் வைத்து ப்ராஜெக்ட் செய்து கொண்டிருந்தாள். அதை தூக்க அவள் சிரமப்பட்டுக் கொண்டிருந்ததைப் பார்த்தான். கார்ட்போர்டை அவன் பிடித்துக் கொள்ள, அவள் அதில் தேவையானதை ஒட்டி ப்ராஜெக்ட்டை முடிக்க உதவினாள். கார்ட்போர்டை 10 நிமிடங்கள் தொடர்ச்சியாக பிடித்துக் கொண்டிருந்ததால் கைகள் சற்று வலி எடுத்தாலும் தங்கை ப்ராஜெக்ட்டை முடித்து ‘ஹையா’ என குதித்தபோது அவனது கைகள் உறுதியானதைப் போல் உணர்ந்தான்.
அன்றிரவு அவன் படுக்கையில் உறங்கச் சொல்லும்போது ஒரே நாளில் அவன் கைகள் பெருமை எனும் உணர்வாலும், பாச உணர்வினாலும், உறுதித்தன்மை அடைந்த உணர்வினாலும் செம்மையானதைப் போல் ஒருவிதமான பரவசமான உணர்வினால் நிம்மதியாக உறங்கினான்.
பிறகு அவன் மனதில் டிரம்ஸ் மீது ஆக்ரோஷமான தீவிரத்தன்மை குறைந்தது. ஆனால் டிரம்ஸ் மீதான காதல் குறையவில்லை. நிதானமான ஆர்வம் உண்டானது.
கதை உருவான கதை!
எங்கள் நிறுவனத்தில் தயாரித்து வரும் Ai சம்மந்தமான ஒரு ப்ராஜெக்ட். பல்வேறு உள்ளீடுகள் கொடுத்து தரம் பார்த்துக் கொண்டிருந்தோம். என் உதவியாளர் என்னை சந்திக்க ஒரு கிளையிண்ட் வந்திருப்பதாக சொன்னபோது செய்து கொண்டிருந்த பணியில் இருந்து கண்களை அகற்றி அவரை ஏறிட்டேன். அவ்வளவுதான். எங்கள் Ai ஒரு அற்புதத்தை நிகழ்த்திவிட்டது.
ஆம். நான் இந்த படத்தை உள்ளீடு செய்து ‘Remove the Drum Stick from the boy’ என்ற ப்ராம்ப்ட் கொடுத்திருந்தேன்.
இந்தப் படத்தை ஏற்கெனவே என் அப்பாவின் சிறுவயது தோற்றத்துக்காக வரைந்து வைத்திருந்தேன்.
அந்த ப்ராம்ட்டை நான் முழுமையாக்கக் கூட இல்லை. உதவியாளரிடம் பேசிக்கொண்டே கைதவறி எண்டர் கீயை அழுத்தி இருப்பேன் என நினைக்கிறேன். அது இதே தலைப்பைக் கொடுத்து ஆங்கிலத்தில் அருமையான கதையை காட்சிப்படங்களுடன் உருவாக்கிக் கொடுத்துவிட்டது.
அதாவது ‘சிறுவனின் டிரம்ஸ் வாசிக்கும் வெறித்தனத்தை ஓரங்கட்டவும்’ என்பதாக புரிந்துகொண்டு கதையை அந்தக் கோணத்தில் கொடுத்துவிட்டது.
இத்தனைக்கும் நான் செய்து கொண்டிருந்தது கதை எழுதுவதற்கான ப்ராஜெக்ட்டும் அல்ல. மனநல மருத்துவத்துக்கான ப்ராஜெக்ட்.
எள் என்றால் எண்ணெயாய் இருக்கிறது எங்கள் ஏஐ. ‘சபாஷ்’ என சொன்னேன்.
‘என்ன பாஸ்… சபாஷ் எல்லாம் சொல்கிறீர். என் பணியல்லவா இது. வேறென்ன வேண்டும் சொல்லுங்கள்’ என பவ்யமாய் சொல்கிறது எங்கள் ஏஐ.
அந்தக் கதையும், பின்னணி படங்களும் மனதுக்கு அத்தனை ரம்யமாக இருந்தது. அந்தக் கதையில் அத்தனை பாசிடிவிட்டி. படித்த நீங்களும் உணர்ந்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.
கதை உருவான சூழல் இப்படி இருந்திருக்கும் என யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டீர்கள் தானே?
எனக்குள் அத்தனை நேர்மறை உணர்வுகளை புகுத்தியதால் கண் முன்னே அத்தனை வேலைகள் இருந்தாலும் அத்தனையையும் ஒதுக்கிவிட்டு உங்களுடன் தமிழில் மொழிமாற்றிப் பகிர்ந்து கொண்டேன்.
காம்கேர் கே. புவனேஸ்வரி, நிறுவனர்
Compcare K Bhuvaneswari
காம்கேர் சாஃப்ட்வேர்
செப்டம்பர் 9, 2025 | செவ்வாய்