ஸ்ரீபத்மகிருஷ் – எங்கள் பெற்றோர் திருமிகு. பத்மாவதி, திரு. கிருஷ்ணமூர்த்தி பெயரில் 2007 –ல் இருந்து நாங்கள் நடத்திவரும் அறக்கட்டளை.
மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக உதவிவரும் இந்த அமைப்பின் வாயிலாக சூழலுக்கு ஏற்ப பல்வேறுதரப்பு மக்களுக்கும் எங்களால் ஆன உதவிகளை செய்து வருகிறோம்.
ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு தரப்பினருக்கு (பெற்றோர், ஆசிரியர், ஓவியர்கள், எழுத்தாளர்கள்) என்று திறமைசாலிகளைத் தேர்ந்தெடுத்து ‘ஸ்ரீபத்மகிருஷ்’ விருதளித்து கெளரவிக்கிறோம்.
இந்த வருடம் சென்னையில் விவேகானந்தா எஜுகேஷன் சொஸைட்டியின்கீழ் இயங்கிவரும் 20-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் படிக்கின்ற மாணவ மாணவிகளுக்கு ஒரு கட்டுரைப் போட்டி அறிவித்திருந்தோம்.
‘அம்மா, என்னைப் பெற்றெடுக்கும்போது நீ என்ன மாதிரியான உணர்வில் இருந்தாய்?’ – இதுதான் தலைப்பு. 9 –ம் வகுப்புப் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு மட்டுமே இந்தப் போட்டி.
அவர்கள் தாய் மட்டும் அல்லாமல், அவர்கள் பிறந்த 24 மணி நேரத்தில் அவர்கள் தந்தை, அக்கா, அண்ணா, தாத்தா, பாட்டி இவர்கள் என்ன மாதிரியான உணர்வில் இருந்தார்கள். அதை ஒட்டி என்னென்ன நிகழ்ச்சிகள் அவர்கள் குடும்பத்தில் நடைபெற்றன இவை குறித்து புகைப்படங்களுடன் அந்த அசைன்மென்ட்டை சமர்பிக்க வேண்டும். – இவைதான் விதிமுறைகள்.
அம்மாவின் உணர்வுகளைப் புரிந்துகொள்ள வேண்டும், பெண்களைப் பற்றியப் புரிதல் மேம்பட வேண்டும், ஆண், பெண் புரிதல் இன்னும் இணக்கமாக வேண்டும், பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் இணக்கத்தை அதிகப்படுத்த வேண்டும் என்ற நோக்கிலும்…
அம்மா என்பவள் வாய்க்கு ருசியாக சமைத்துப் போடவும், உடைகளை துவைத்து இஸ்திரி செய்யவும், படிப்பு சொல்லித்தரவும், வேலைக்குச் செல்லும் தாயாக இருந்தால் சம்பாதித்துக் கொண்டுவரவும் மட்டுமே இயங்குகின்ற ஒரு ஜீவன் என்ற உணர்வில் இருந்து வெளிவந்து அம்மாவின் உணர்வுகளைப் புரிந்துகொள்ள வேண்டும் என்ற உயரிய நோக்கிலும்…
இதுபோன்ற உணர்வுப்பூர்வமான உண்மைகளை புரிந்துகொள்ளும்விதத்தில் கல்வியும் புரியவைக்கும் விதத்தில் வீடுகளும் அமையப்பெற்றால் குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்ற நோக்கிலும்…
‘அம்மா, என்னைப் பெற்றெடுக்கும்போது நீ என்ன மாதிரியான உணர்வில் இருந்தாய்?’ என்ற இந்த தலைப்பைக் கொடுத்து எழுதச் சொன்னோம்..
11 பள்ளிகளில் இருந்து 300 மாணவ மாணவிகளுக்கு மேல் கலந்துகொண்டார்கள். அதில் ஒவ்வொரு பள்ளியில் இருந்தும் ஒரு மாணவன்/மாணவி என்ற விகிதத்தில் 11 மாணவர்களை ஸ்ரீபத்மகிருஷ் விருதுக்காகத் தேர்ந்தெடுத்தோம்.
இவர்களிடம் இருந்து வந்திருந்த கருத்துக்கள், ஒரு வீட்டில் ஆண் குழந்தை பிறந்தால் என்ன மனநிலை, பெண் குழந்தைப் பிறந்தால் என்ன மனநிலை என்றெடுத்த ஒரு சர்வே போல ஆகிவிட்டது.
பெண் குழந்தைகள் கருவில் இருக்கும்போதும், பிறந்தவுடனேயும், வளரும்போதும், வளர்ந்தபிறகும் சந்திக்கும் பிரச்சனைகளை இனியும் சொல்லித்தான் தெரியவேண்டும் என்பதில்லை. நாமும் அனுபவித்திருப்போம். இன்னும் அதிகமாக அக்கம் பக்கம் பார்த்திருப்போம்… கேள்விப்பட்டிருப்போம். மீடியாக்கள் வாயிலாக பெரிய அளவிலும் பேசக் கேட்டிருப்போம்.
அவை அத்தனையின் மொத்தவடிவமாக இந்த மாணவ, மாணவிகளின் கட்டுரைகளில் காண முடிந்தது.
ஒரு மாணவியின் கட்டுரைக் கருத்து உள்ளத்தை நெகிழ வைத்தது.
‘இரண்டாவதும் பெண்ணாகப் பிறந்துவிட்டதே என என் அப்பாவுக்கு மிகவும் வருத்தம். அம்மாவுடன் கோபித்துக்கொண்டு மருத்துவமனையில் இருந்து வீட்டிற்குச் சென்றுவிட்டாராம் என்னைப் பார்க்காமலேயே. ஒரு மாதம்வரை அம்மாவுடன் பேசவே இல்லையாம்… இப்போதும் என் அக்காவைத்தான் அப்பாவுக்குப் பிடிக்கும். என்னைப் பிடிக்காது…’
ஒரு மாணவனின் கட்டுரைக் கருத்து நெஞ்சை உருக வைத்தது.
‘நான் பிறந்த சில ஆண்டுகளில் என் அப்பா இறந்துவிட்டார். அம்மாவும் தாத்தா பாட்டியும்தான் என்னை வளர்த்து வருகிறார்கள். என் அம்மா என் மீது மிகுந்த பாசம் வைத்துள்ளார். எனக்கு கபடி விளையாட்டுப் பிடிக்கும். ஒருமுறை நான் விளையாடும்போது அடிபட்டு ரத்தம் வந்துவிட்டது. என் அம்மா அழுதுகொண்டே இருந்தார். எனக்கு அவ்வளவாக வலி இல்லை. நான் அழவே இல்லை ஆனாலும் என் அம்மா அழுதுகொண்டே இருந்தார். அதில் இருந்து நான் கபடி விளையாடுவதையேவிட்டு விட்டேன். என் அம்மாவுக்காக நான் இந்த விஷயத்தைச் செய்தேன்…..’
நவம்பர் 5, 2016 சனிக்கிழமை பெரம்பூர் விவேகானந்தா பள்ளியில் ஸ்ரீபத்மகிருஷ் விருதளிக்கும் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.
முதல் நிகழ்ச்சியாக மாணவ மாணவிகளின் இறைவணக்க பஜன். அடுத்தடுத்து பள்ளி முதல்வர் உரை, தன்னம்பிக்கையுடனும் பாதுகாப்புடனும் வாழ்வது எப்படி என்ற கான்செப்ட்டில் காம்கேர் சாஃப்ட்வேர் நிறுவன சி.இ.ஓ காம்கேர் புவனேஸ்வரியின் மல்டிமீடியா பிரசன்டேஷனுடன் உரை, விருது வழங்கும் நிகழ்வு, ‘சிரிப்பு யோகா’ புகழ் சிரிப்பானந்தாவின் சிரிப்பு யோகா பயிற்சி என விழா அம்சமாக நடந்தேறியது.
விழாவின் தொடக்கத்தில் காட்சிப்படுத்திய காம்கேர் தயாரிப்பில் வெளியான கந்தர் சஷ்டிக் கவசம் அனிமேஷன் சிடி, ‘ஹாபியே வேலையானால்…’ என்ற கான்செப்ட்டுக்காக காம்கேர் தயாரிப்பில் வெளியான 30 பழங்கள் நடித்த அனிமேஷன் சினிமா, வயிறு குலுங்க சிரிக்க வைத்த சிரிப்பு யோகா இவை மூன்றும் மாணவ மாணவிகளை மட்டும் அல்லாமல் ஆசிரியர்களையும் ரசிக்க வைத்தன.
நாங்கள் எடுத்துக்கொண்ட இந்த சிறிய முயற்சியில் பங்கேற்ற அத்தனை மாணவ மாணவிகளுக்கும் அன்பு கலந்த வாழ்த்துக்கள். விவேகானந்தா எஜுகேஷனல் சொசைட்டி பள்ளி நிர்வாகத்துக்கும் மனமார்ந்த நன்றி.
மாற்றத்தை ஏற்படுத்த
மற்றவர்களை எதிர்பார்க்காமல்
மாறுவதற்கும், மாற்றத்துக்கும்
முயற்சித்ததில் மகிழ்ச்சி!
மீடியா செய்திகள்
இந்த நிகழ்ச்சி குறித்து ‘லேடீஸ் ஸ்பெஷல்’ மாத இதழில் ‘பெண்களைப் புரிந்துகொள்ளுங்கள்’ என்ற கட்டுரை தொடரில் வெளியானது. பின்னர் அது ‘பெண் – *Conditions Apply’ என்ற இ-புக்கில் வெளியானது. இந்தப் புத்தகம் அமேசான்.காம் சைட்டில் விற்பனைக்கு உள்ளது.