அருள்மிகு காரணீஸ்வரர் திருக்கோயிலில் 10-08-2010, செவ்வாய் முதல் 22-08-2010 ஞாயிறு வரை பன்னிரு திருமுறை விழாவில் முதல்நாள் நிகழ்ச்சியில் முதல் திருமுறை குறித்து நான் ஆற்றிய உரை…. நிகழ்ச்சி குறித்த செய்திக்கு Click Here…
பன்னிரு திருமுறைகள்
பன்னிரு திருமுறைகள் என்பது 12 நூல்கள் என்று பொருள்படும். அதாவது முறை என்றால் நூல் அல்லது புத்தகம் என்பதாகும். குறிப்பாக முறை என்ற சொல் தெய்வத் தன்மை வாய்ந்த நூல்களைக் குறிக்கும். சிறப்பு மிக்க சைவ நெறி சார்ந்த நூல்கள் பன்னிரு திருமுறைகள் என்றழைக்கப்படுகின்றன.
திருமுறைகள் தோன்றிய வரலாறு
தேவாரத் திருமுறை ஓலைச் சுவடிகளை, சிதம்பரத்தில் நடராஜர் கோயிலில் பூட்டி முத்திரை வைத்து விட்டார்கள். அக்காலத்தில் தஞ்சையில் இருந்து அரசாண்ட சோழ வேந்தனான அபயகுலச் சோழன், ஓதுவார்களும், இசைவாணர்களும் பாடக் கேட்டு தேவாரப் பாடல்கள் மீது அளவுகடந்த ஈடுபாடு கொண்டார். அவற்றைத் தொகுக்க விரும்பினார். அவை கோயிலில் அறையில் பூட்டி வைத்திருப்பது தெரிந்து அவற்றை எப்படி எடுப்பது என்று யோசித்தார். அப்போது அவரது அவைப் புலவர்கள், நம்பியாண்டார் நம்பி மனது வைத்தால் அவற்றைத் தொகுக்கலாம் என்று ஆலோசனைக் கூறினார்கள். அப்படி என்ன சிறப்பு நம்பியாண்டார் நம்பியிடம் என்று மன்னன் வியந்து கேட்டார். அவைப் புலவர்கள் நம்பியாண்டார் நம்பியின் கதையைச் சொன்னார்கள்.
நம்பியாண்டார் நம்பியின் கதை
நம்பியாண்டார் நம்பியின் தந்தை சிதம்பரம் அருகில் உள்ள திருநாரையூரில் பிள்ளையார் கோயில் ஒன்றில் அர்ச்சகராகப் பணியாற்றினார். நம்பி சிறுவனாக இருந்த போது, ஒரு நாள் அவருடைய தந்தை வெளியூர் செல்ல வேண்டி இருந்தது. அதனால் அன்றைய பூஜை செய்யும் பொறுப்பை, சிறுவன் நம்பியிடம் ஒப்படைத்துச் சென்றார். நம்பியின் தாய் பிரசாதத்தைத் தயார் செய்து கோயிலுக்குக் கொடுத்தனுப்பினாள்.
சிறுவன் நம்பியும் அப்பாவின் கட்டளைபடி, பிள்ளையாருக்கு அபிஷேகம், ஆராதனைகள் செய்து, தான் கொண்டு வந்த பிரசாதத்தைப் பிள்ளையாருக்குப் படைத்தார். வெகு நேரம் ஆகியும் பிரசாதம் அப்படியே இருந்தது. பிள்ளையார் உண்மையாகவே பிரசாதத்தைச் சாப்பிடுவார் என்றெண்ணி இருந்த நம்பிக்கு அது ஏமாற்றமாய் போய்விட்டது. தான் செய்த பூஜையில் பிழை இருந்தால் மன்னித்தருளுமாறு வேண்டிக் கொண்டார். அதன் பிறகும், பிரசாதம் அப்படியே இருக்கவே, தனது தலையை கோயில் சுவரில் மோதிக் கொண்டு அழுதார். நம்பியின் கடமையுணர்வையும், பக்தியையும் கண்டு பிள்ளையார் மனம் கசிந்து பிரசாதத்தை மிச்சம் மீதியின்றி அப்படியே சாப்பிட்டு விட்டார். நம்பி மிகுந்த சந்தோஷத்துடன் வீட்டிற்கு சென்றார். வெற்று பாத்திரத்துடன் வந்த நம்பி சொன்னதை யாராலும் நம்ப முடியவில்லை.
அடுத்த நாள் நம்பியின் தந்தை வெளியூரில் இருந்து திரும்பி வந்ததும், அவருடன் நம்பி கோயிலுக்குச் சென்றார். அவரே பூஜையும் செய்தார். அன்றும் பிள்ளையார் பிரசாதத்தைச் சாப்பிட்டார். அதை நேரில் பார்த்தவர்களுக்கு உண்மை புரிந்தது. நம்பியின் மீது நம்பிக்கை ஏற்பட்டது.
தனது பக்தனான நம்பி ஏழ்மையில் கல்வி பயில முடியாத சூழலில் இருந்ததால், பிள்ளையார் தானே தினந்தோறும் கல்வி புகட்ட ஆரம்பித்தார். நம்பியை மாமேதை ஆக்கினார். இறைவனிடம் நேரடியாகக் கல்வி பயின்றதால் நம்பியாண்டார் நம்பியின் புகழ் எங்கும் பரவியது.
நம்பியாண்டார் நம்பி தொகுத்த திருமுறைகள்
இத்தகைய சக்தி வாய்ந்த நம்பியாண்டார் நம்பியைச் சரணடைந்தால் திருமுறைகளைத் தொகுக்கலாம் என்ற அவைப் புலவர்களின் ஆலோசனைப்படி, அவைப் புலவர்கள் மற்றும் மந்திரிகளுடன் திருநாரையூ ருக்குச் சென்று பிள்ளையாரை தரிசித்து விட்டு, நம்பியாண்டார் நம்பியின் திருவடிகளில் விழுந்து வணங்கினர். திருமுறைகளைத் தொகுக்க வேண்டும் என்ற தனது ஆவலைத் தெரிவித்தார் மன்னர்.
நம்பியாண்டார் நம்பி, பிள்ளையாரின் திருவருளால், தேவாரப்பாடல்கள் அனைத்தும் சிதம்பரம் கோயிலில் இருப்பதாகத் தெரிவித்தார். மன்னரும், மந்திரிகளும், அவைப் புலவர்களும் நம்பியாண்டார் நம்பியுடன் சிதம்பரம் கோயிலுக்குச் சென்று நடராஜர் சன்னிதியில் உள்ள தீட்சிதர்களை அணுகி, சுவடிகளைக் கேட்டனர். அவர்கள் தேவார மூவர் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தர மூர்த்தி ஸ்வாமிகள்) வந்து கேட்டால் மட்டுமே முத்திரையிட்ட அறைக் கதவைத் திறக்க இயலும் என்று கூறினர்.
பல காலங்களுக்கு முன் வாழ்ந்து மறைந்த தேவார மூவரை எப்படித் திரும்ப அழைத்து வந்து கேட்க வைப்பது? என்று யோசித்ததோடு மட்டுமல்லாது, மன்னர் புத்திசாலித்தனமாக ஒரு நடவடிக்கை எடுத்தார். தேவார மூவரின் திருஉருவங்களை அலங்கரித்து, கோயிலுக்குள்ளும், வெளியேயும் உலா அழைத்து வந்து நடராஜர் சந்நிதிக்கு முன் எழுந்தருளச் செய்து “இதோ தேவார மூவர் வந்துள்ளனர்” என்று கூறினர்.
தேவார மூவரின் திருஉருவங்களை வெறும் சிலை தானே என்று சொல்லித் தட்டிக் கழிக்க நினைத்த தீட்சிதர்கள், அப்படிச் சொன்னால் கோயிலுக்குள் உள்ள நடராஜரும் சிலைதானே என்ற வாக்குவாதம் வரும் என்ற எண்ணத்தில் அதைத் தவிர்த்து விட்டு, தேவாரச் சுவடிகள் உள்ள அறையைத் திறந்து விட்டனர்.
கரையான் அரித்தது போக மீதமிருந்த சுவடிகளை எடுத்து வந்தார் நம்பியாண்டார் நம்பி. பின்னர் அவற்றை ஒழுங்குபடுத்தி, 27 ஆசிரியர்கள் இயற்றிய பாடல்களை 12 திருமுறைகளாகத் தொகுத்தார். அவை, சோழ நாட்டுச் செப்பேடுகளில் எழுதிப் பாதுகாக்கப்பட்டன.
சங்க இலக்கியங்களுக்கும், சைவ-வைஷ்ணவ திருமுறைகளுக்கும் உள்ள வேறுபாடு
காற்று, புயல், வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றங்களினால் முறையாகப் பாதுகாக்கப்படாத சங்க இலக்கியங்களில் எஞ்சியது 36 நூல்கள் மட்டுமே. அதாவது,
பதினெண்கீழ்க் கணக்கு – 18 [சங்கம் மருவிய நூல்கள்]
எட்டுத் தொகை – 8
பத்துப் பாட்டு – 10
சைவப் பொக்கிஷத் திருமுறைகளான பன்னிரு திருமுறைகளும், வைஷ்ணவ நூலான நாலாயிர திவ்யப் பிரபந்தமும் திருக்கோயில்களில் வைத்து பாதுகாக்கப்பட்டதால்தான் அவை அழிவின்றி நமக்குக் கிடைத்துள்ளன. திருக்கோயில்களில் எழுந்தருளி இருக்கும் இறைவன் அழிவில்லாதவன். அவனிடம் சேர்ந்தவைகளுக்கும் அழிவே இல்லை என்றும் நாம் பொருள் கொள்ளலாம்.
பன்னிரு திருமுறை விழா
ஆவணி மாதம் அவிட்ட நட்சத்திரத்திலே வேதங்களைத் தொடங்குவது வழக்கம். அதனால் தான் ஆவணி அவிட்ட நட்சத்திரத்திலே பூணூல் போட்டுக் கொள்கிறார்கள். அதுபோல் தமிழ் வேதங்களை ஆவணி மாதத்தில் தொடங்குதல் மரபு. வருடா வருடம் ஆவணி மாதம் முதல் ஞாயிறு அன்று முடியுமாறு, 12 நாட்கள் ‘பன்னிரு திருமுறைகள்’ பற்றி உரை நிகழ்த்தி, 13-ம் நாள் ஞாயிறு அன்று ‘திருமுறை காண்டல்’ விழா எடுப்பது வழக்கம்.
சோழ மன்னன் எவ்வாறு தேவார மூவரை அலங்கரித்து, ஆராதனை செய்து, திருவீதி உலா அழைத்து வந்து நடராஜர் முன் நிறுத்தி திருமுறைச் சுவடிகளைக் கேட்டுப் பெற்றாரோ, அதை அப்படியே நடத்திக் காண்பிக்கும் முறைக்கு, ‘திருமுறை காண்டல்’ என்று பெயர். இவ்வாறு செய்வது, இந்தத் தலைமுறைக்கு முற்காலத்தில் நடந்த விஷயங்களையும், சமயச் செய்திகளையும் எடுத்துச் சொல்லவும், புரிய வைக்கவும் உதவுகிறது.
முதல் திருமுறை
சைவம் தழைக்க வந்த நூல்களான பன்னிரு திருமுறைகளில் முதலாவதாக விளங்குவது திருஞானசம்பந்தர் இயற்றிய தேவாரம். இது மூன்று திருமுறைகளாக வகுக்கப்பட்டுள்ளது.
தே + ஆரம் = தேவாரம். இதில் தே’ என்பது தெய்வத்தன்மை வாய்ந்த என்று பொருள்படும். ஆரம் என்றால் மாலை என்று பொருள்படும். அதாவது தேவாரம் என்பது கடவுளுக்காகப் பாடப்பட்ட தெய்வத்தன்மை வாய்ந்த பாடல்கள் என்று பொருள்படும்.
திருமுறை ஆசிரியர் குறிப்பு
சீர்காழியில் சிவபாத இருதயர், பகவதியம்மாள் என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். அவர்களுக்குப் புதல்வராக அவதரித்தார் திருஞானசம்பந்தர். இவருக்குப் பெற்றோர் சூட்டிய பெயர் சம்பந்தர். சிறு வயது பக்தியினால் ஏற்பட்ட ஞானத்தினால் கிடைத்த பட்டப் பெயர் திருஞானசம்பந்தர்.
சம்பந்தரின் தந்தை தினமும் தோணியப்பர் கோயிலுக்குச் செல்வார். அப்போது கூடவே சம்பந்தரையும் அழைத்துச் செல்வார். கோயிலுக்குச் சென்று அங்குள்ள குளத்தில் நீராடும் போது, கரையில் சம்பந்தரை அமர்த்தி விட்டுச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். சம்பந்தரும் அக் கோயிலில் உள்ள கதைச் சிற்பங்களை வேடிக்கை பார்த்தபடி உட்கார்ந்திருப்பார்.
ஒரு நாள் இப்படி குழந்தையை உட்கார வைத்துவிட்டு குளத்தில் குளிக்கச் சென்ற தந்தை கரை திரும்ப நேரமாகி விட்டது. சிவனும், பார்வதியும் தோணியில் பவனி வருவதைப் போல இருக்கும் சிற்பத்தை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த, மூன்றே வயதான சம்பந்தருக்கு பசி வந்து விட்டது. அழ ஆரம்பித்து விட்டார்.
அப்போது பார்வதி தேவி அவர் முன் தோன்றினாள். அவளது கையில் இருந்த பொற் கிண்ணத்தில் பால் நிரம்பி இருந்தது. குழந்தைக்கு பாலை புகட்டி விட்டு மறைந்து விட்டாள்.
பசி தீர்ந்த சம்பந்தர் சிரித்தபடி திரும்பவும் கோயில் குளக்கரையில் உட்கார்ந்து சிரித்தபடி கதைச் சிற்பங்களை வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்தார்.
அதே சமயம், குளித்துவிட்டு கரை திரும்பிய தந்தை, சம்பந்தரைப் பார்த்து அதிர்ந்தார். வாயின் ஓரத்தில் வழிந்து கொண்டிருந்த பாலைப் பார்த்து விட்டு குழந்தையிடம் கோபித்தார். எத்தனை முறை சொல்வது, முன் பின் தெரியாதவர்கள் கொடுக்கும் தின்பண்டங்களை வாங்கி சாப்பிடக் கூடாது என்று… யார் என்ன கொடுத்தார்கள்… வாயெல்லாம் பாலாக இருக்கிறது… தந்தையின் அதட்டலுக்கு பயப்படவில்லை சம்பந்தர். மாறாக சிரித்தபடி கோயில் கதைச் சிற்பத்தில் உள்ள தோணியப்பரையும், அம்பிகையையும் கையால் சுட்டிக் காட்டியபடி தோடுடைய செவியன்… என்று கணீர் குரலில் பாட ஆரம்பித்தார்.
மேலும் நான் பாடிய இந்தப் பதிகத்தைப் பாடுவோர்க்கு முன் வினை பாவங்கள் எல்லாம் போய் விடும். ஒரு பதிகம் என்பது 11 பாடல்களைக் கொண்டது என்று தெளிவான விளக்கத்தையும் கொடுத்தார்.
இதைக் கேட்டு புல்லரித்துப் போய் நின்றார் அவரது தந்தை. இதற்குள் கோயிலில் இருந்த மற்ற பக்தர்களும் சம்பந்தரை சூழ்ந்து கொண்டனர். அதிசயக் குழந்தையை ஆச்சர்யமாகப் பார்த்தனர்.
குழந்தைக்கு பால் புகட்டியது பார்வதி தேவியே என்று உணர்ந்தனர். அதிசயித்தனர். கடவுளிடம் ஞானப்பால் குடித்த சம்பந்தர் இளம் வயதிலேயே ஏராளமான பதிகங்களைப் பாடினார். ஒவ்வொரு பாடலின் முடிவிலும் இந்தப் பாடல் திருஞானசம்பந்தராகிய தன்னால் உருவாக்கப்பட்டது, பாடப்பட்டது என்று பொருள்படும் வரிகளில் முடித்திருப்பார்.
சிறு வயதிலேயே ஏற்பட்ட இந்த பக்தியினால் சம்பந்தராக இருந்தவருக்கு திருஞான சம்பந்தர் என்ற பட்டம் கிடைத்தது.
திருஞானசம்பந்தரின் முதல் பாடல்
தோடுடைய சேவியன் விடையேறி ஓர் தூவெண் மதிசூடி
காடுடைய சுடலைப் பொடி பூசி என் உள்ளம் கவர்கள்வன்
ஏடுடைய மலரான் முனைநாள் பணிந்தேத்த அருள் சேத
பீடுடைய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே
தோடுடைய செவியனாக, ரிஷப வாகனத்தில், பிறைசந்திரனைச் சூடி, சுடலைப் பொடியைப் பூசிக் கொண்டு, பெருமை மிக்க பிரமாபுரம் என்ற பெயருடைய சீர்காழியில் எழுந்தருளியிருக்கும் இறைவன் இவன் தான் எனக்கு ஞானப்பால் கொடுத்தது என்று மிக அண்மையில் தந்தைக்கு சிவபெருமானைச் சுட்டிக் காட்டினார் ஞானசம்பந்தர். ஆனால் மூன்று வயது சிறுவன் சுட்டிக் காட்டிய சிவபெருமானின் தரிசனம் சிவபாதவிருதயருக்குக் கிட்டவில்லை.
தோடுடைய சேவியன்
‘தோடும்’, ‘தோ’ – வும்
‘திருஞானசம்பந்தர் பாடலின் முதல் எழுத்தை ‘தோ’ என்றும், முதல் வார்த்தையை ‘தோடு’ என்று தொடங்குகிறார். அதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன.
தோடு என்பது ஒரு மங்கள வார்த்தை. தோட்டிற்கு மங்களாபரணம் என்றும் பெயருண்டு. சம்பந்தருக்குப் பால் கொடுத்தது பார்வதி. ஆனால், அவளைப் பால் கொடுக்கச் சொன்னது பரமேஸ்வரன். அவன் ஞானசம்பந்தரின் பசிக்கு உடனே சேவி சாத்ததால், அவனுக்கு நன்றி சேலுத்தும் விதமாக அர்ததநாரீஸ்வர னான பரமேஸ்வரனின் செவிக்கு உகந்த மங்களாபரணமான தோட்டை வைத்துப் பாடலைத் தொடங்க வேண்டும் என்ற எண்ணத்தில் தோடு என்று தொடங்கியிருக்கலாம்.
காயத்திரி + பிரணவம்
த் + ஓ = தோ என்று ஓங்காரத்தில் தொடங்க வேண்டும் என்ற எண்ணத்தில் தோ என்ற எழுத்தில் தொடங்கியிருக்கிறார் என்றும் சொல்வதுண்டு.
த் + ஓ என்பதில் ஒரு சிறப்பம்சம் உண்டு. இதனை காயத்திரி + பிரணவம் என்ற தொகுப்பிற்கு ஒப்பிடலாம்.
காயத்திரி மந்திரத்தின் சிறப்பு
‘காயத்திரி மந்திரம் தத்ஸ விதுர் வரேண்யம்’ என்று தொடங்குகிறது. இதன் சிறப்பினை,
தாயை விட சிறந்த தெய்வமில்லை
காயத்திரியை விட சிறந்த தெய்வமில்லை
என்பர். இத்தகையப் பெருமை வாய்ந்த காயத்திரி மந்திரத்தின் முதல் எழுத்து தகரத்தில் தொடங்கியிருப்பதை கவனிக்கவும்.
பிரணவ மந்திரத்தின் சிறப்பு
வேதங்களின் தொடக்கமும், முடிவும் ஓம் என்ற பிரணவ மந்திரத்தை முன் வைத்துத் தொடங்குவது வழக்கம்.
த் + ஓ = தோ என்று தொடங்கியதன் நோக்கம்
காயத்திரியை ஜபிக்க வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கும் ஜபித்த பலன் கிடைக்க வேண்டும் என்கிற உயரிய நோக்கத்தில் தான், இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த காயத்திரி மந்திரத்தின் முதல் எழுத்தான தகரத்தையும், சக்தி வாய்ந்த பிரணவ மந்திரத்தின் ஓம் என்கிற ஓங்கார சப்தத்தையும் வைத்து தனது முதல் பாடலின் முதல் வார்த்தையைத் தொடங்கியிருக்கிறார் திருஞானசம்பந்தர் என்றும் பொருள் கொள்ளலாம்.
விடையேறி
பாதுகாவலனும், வாகனமும்
விடை என்றால் ரிஷபம். காளை மாடு. இதுவே நந்தியாக சிவன் கோயில்களில் பரமேஸ்வரனுக்குக் காவலாக இருக்கிறது. மேலும், பரமேஸ்வரனின் வாகனம் ரிஷப வாகனம். இதற்கு ஒரு அழகான கதை உண்டு.
பிரபஞ்சம் அழிகின்ற நேரம் வந்ததும், உலகில் உள்ள அனைத்து அசையும், அசையா பொருட்களும், உயிரினங்களும் அழிந்து கொண்டே வந்த போது தர்ம தேவதை தர்மம் மட்டும் என்றும் அழியக் கூடாதென்று கருதி ரிஷபமாக வடிவம் எடுத்துக் கொண்டு பறந்து சென்று பரமேஸ்வரனைத் தாங்கிற்று.
ஆக ரிஷபம் பரமேஸ்வரனுக்கு வாகனமாகவும் இருக்கிறது. நந்தி உருவில் பாதுகாவலனாகவும் செயல்படுகிறது.
தியாக குணம்
பொதுவாக, முதலாளிக்கும், தொழிலாளிக்கும் ஒரே குணம் இருக்காது. முதலாளிகள் வருடத்தின் 365 நாட்களும், 24 மணி நேரமும் தங்கள் தொழில் சம்பந்தமாகவே யோசித்துக் கொண்டிருக்க வேண்டியிருக்கும். தொழிலாளி அப்படி இருக்கத் தேவையில்லை. தினமும் 8 மணி நேரத்து உழைப்பு. ஞாயிறு, தீபாவளி, பொங்கல், கிருஸ்துமஸ், பக்ரித் என்று விடுமுறைக் காலங்கள். ஆனால், பரமேஸ்வரனுக்கும், அவனது வாகனமான ரிஷபத்துக்கும் ஒரே குணம். என்ன குணம் தெரியுமா? தியாக குணம். தியாகம் யார் செய்கிறார்களோ அவர்களே இவ்வுலகில் உயர்ந்து நிற்பார்கள்.
உலக ஜீவராசிகள் அனைத்துக்கும் மூல காரணமான பரமேஸ்வரன், உலக மக்களுக்கு வீடு முதலான சுக போகங்களைக் கொடுத்து விட்டு, தான் சுடுகாட்டுக்குச் சென்று உட்கார்ந்து கொள்கிறான். மக்களுக்கு பளபளக்கும் பட்டாடை, ஜொலி ஜொலிக்கும் தங்க நகை என்று ஆடை ஆபரணங்களை வாரி வழங்கி விட்டு, தான் புலித் தோல், யானைத் தோல் போன்றவைகளை ஆடையாகவும், பாம்பினை ஆபரணமாகவும் அணிந்து கொள்கிறான். மக்களுக்கு வாசனை பவுடர், கமகமக்கும் செண்ட் போன்றவைகளை பயன்படுத்த வாய்ப்பு கொடுத்து விட்டு, தான் மட்டும் எரிந்த பிணத்தின் சாம்பலை பூசிக் கொள்கிறான். மனிதன் விரும்பும் அனைத்தையும் அவனுக்கே கொடுத்து விட்டு, அவன் வெறுக்கின்ற அனைத்தையும் தனதாக்கிக் கொள்கிற ஈஸ்வரனின் தியாகம் எவ்வளவு பெரிது? அதனால் தான் பரமேஸ்வரனுக்கு தியாகராஜன் என்று ஒரு பெயர் உண்டு.
ஈஸ்வரனின் தியாகத்தையும் மிஞ்சும் அளவுக்கு அவனது வாகனமான ரிஷபத்தின் தியாகமும் அமைந்திருப்பதால் தான் ஈஸ்வரனுக்கே வாகனமாகும் பாக்கியம் ரிஷபத்துக்குக் கிடைத்துள்ளது. ஆம். அது நாம் சாப்பிட்டு மிச்சம் இருக்கும் கழுநீர், உமி போன்றவைகளை உணவாகக் கொள்கிறது. நாம் சுத்தகரிக்கப்பட்ட தண்ணீர், ஜீஸ் போன்றவைகளைக் குடிக்க, அது கழுநீரை நீராகாரமாகக் கொள்கிறது. அது மட்டுமல்லாமல் தான் சாப்பிட்டதற்கு பிரதிபலனாக கிருமிநாசினியாக தன் கழிவை சாணமாகவும் திரும்பிக் கொடுத்து விடுகிறது. இதல்லவா தியாகம்?
அதனால்தான் ரிஷபத்தின் தியாகத்தைக் கொண்டாடும் விதமாக வருடா வருடம் மாட்டுப் பொங்கல் கொண்டாடுகிறோம். அது மட்டுமல்லாமல் மாதத்தில் 2 நாள் சிவன் கோயில்களில் பிரதோஷம் அன்று நந்திக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, ரிஷப வாகனத்தில் பரமேஸ்வரன் பார்வதியோடு உலா என்று ஏக அமர்களமாக இருக்கும்.
ஓர் தூவெண் மதிசூடி
மூன்றாம் பிறையை தலையில் சூடிப் பாதுகாத்தல்
சிவபெருமான் தன் தலையில் வெண்மையான மூன்றாம் பிறையைச் சூடிக் கொண்டிருக்கிறான். இதற்கும் ஒரு கதை உண்டு.
தட்சனுக்கு 27 பெண் குழந்தைகள். அம்பாளே குழந்தையாக வேண்டும் என்கிற எண்ணத்தில் இறைவனை வேண்டியதால் பிறந்த 28-வது பெண் குழந்தைக்கு சதிதேவி என்று பெயர் சூட்டினான். தட்சனின் பெண்ணானதால் தாட்சாயிணி என்றும் பெயருண்டு அவளுக்கு. பரமேஸ்வரனின் மனைவியான பிறகு பார்வதியானாள்.
தட்சன் தன் 27 பெண்களையும் சந்திரனுக்கு திருமணம் செய்து வைத்தான். திருமணம் செய்த போது 27 பேரையும் ஒன்றாக நடத்துவேன் என்று சத்தியம் செய்த சந்திரன், அதன் பிறகு 2 பேரிடம் மட்டும் அன்பாக இருந்து, மற்றவர்களை உதாசீனம் செய்யத் தொடங்கினான். இதனால் கோபம் கொண்ட தட்சன் உன் கலைகள் ஒவ்வொன்றாகக் குறைந்து கொண்டே வந்து அழிந்து போகக் கடவாயாக!’ என்று சாபமிட்டு விட்டான். தட்சனின் சாபம் பெற்ற சந்திரன் தினமும் பிரம்மா, விஷ்ணு போன்றவர்களிடம் சென்று உதவி கேட்கத் தொடங்கினான். அவர்கள் அனைவரும் தட்சன் மிகவும் சக்தி வாய்ந்தவன் என்று கூ றி உதவி செய்ய மறுத்து விட்டனர். இப்படியே 13 நாட்கள் கழிந்து விட்டன. சந்திரனின் ஒவ்வொரு கலையாக குறைந்து கொண்டே வந்து விட்டது. கடைசியில் பரமேஸ்வரனிடம் சென்று முறையிட, அவர் சந்திரனை எடுத்துத் தலையில் சூடிக் கொள்கிறார். ஆனாலும் மாமனார் முறையான தட்சனின் வாக்கையும் மதிக்க வேண்டும், அதே சமயம் சந்திரனையும் காப்பாற்ற வேண்டும் என்கிற உயரிய எண்ணத்தில், மாதத்தில் 15 நாட்கள் வளர் பிறையாகவும், மீதி 15 நாட்கள் தேய்பிறையாகவும் இருக்குமாறு தட்சன் கொடுத்த சாபத்தினை மாற்றியமைத்தான் பரமேஸ்வரன்.
காடுடைய சுடலைப் பொடி பூசி
அழிந்ததை தன்னுள் ஐக்கியமாக்கிக் கொள்ளல்
சிவபெருமான் சுடுகாட்டில் உட்கார்ந்து இறந்தவர்களின் சாம்பலை உடல் முழுதும் பூசிக் கொள்கிறான். ஏன் அப்படிச் செய்கிறான்? கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களும் கடைசியில் வந்து சேர வேண்டிய இடம் சுடுகாடு தான். எனவே தான் அவர்களுக்கும் தரிசனம் கொடுக்கும் நோக்கத்துடன் ஈசன் அங்கிருக்கிறான் என்று சொல்வதுண்டு. மேலும், தன்னால் படைக்கப்பட்ட உயிர், பிணமாக எரிந்து போன பிறகு கிடைக்கும் சாம்பலை தானே திரும்பவும் பூசிக் கொள்ளும் போது, அவன் படைத்த உயிரின் ஆன்மாவை திரும்பவும் தானே உள்ளடக்கி தன்னுள் ஐக்கியமாக்கிக் கொள்கிறான் என்றும் பொருள் கொள்ளலாம்.
என் உள்ளம் கவர்கள்வன்
நாம் அறியாமலேயே உள்ளத்தைக் கொள்ளைக் கொள்பவன்.
நம்மை அறியாமல் நம் உள்ளத்தைத் திருடிக் கொள்பவன் பரமேஸ்வரன். பொருட்ளைத் திருடுவது சுலபம். உள்ளத்தைத் திருடுவது அத்தனை சுலபம் அன்று. உள்ளத்தைக் கொள்ளைக் கொள்வது என்றால் என்ன என்று இப்போது பார்க்கலாம்.
ஒரு அழகான குழந்தையின் துள்ளல் விளையாட்டில், அழகு சிரிப்பில், மழலை மொழியில் மயங்காதவர்களும் உண்டோ? மனதை மயக்குகிறானே இக்குழந்தை… உள்ளத்தைக் கொள்ளைக் கொள்கிறானே இவன்…என்றெல்லாம் மெய்மறந்து அக்குழந்தையை பாராட்டித் தள்ளுவார்கள் தானே. இதைப் போல தான் ஈடில்லா ஈசனும் நம் உள்ளத்தைக் கொள்ளையடிக்கிறான்.
இதையே கம்பர்,
என்பு எனக்கு உருகுகின்றது
இவர்கின்றது அளவில் காதல்
என்று இராமாயணத்தில் இராமனை முதன் முதலில் பார்த்த ஆஞ்சனேயருக்குத் தோன்றிய பாசத்தை விவரிக்கிறார்.
ஏடுடைய மலரான் முனைநாள் பணிந்தேத்த அருள் செய்த
அருள் செய்தல்
ஏடுடைய மலரான் என்று பொருள் கொண்டால், முற்காலத்தில் தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரம்மாவுக்கு பிரணவ மந்திரத்தின் பொருள் தெரியாததால் முருகன் அவர் தலையில் குட்டி சிறையில் அடைத்ததோடு படைக்கும் தொழிலையும் தானே எடுத்துக் கொள்கிறான். அப்போது சிறையில் இருந்தபடியே பிரம்மா ஈஸ்வரனை வேண்டிக் கொள்கிறார். அவரது வேண்டுதலுக்கு செவி சாய்த்ததோடு அவரை சிறையில் இருந்து மீட்டு அருள் செய்கிறார் பரமேஸ்வரன்.
ஏடுடைய மலரால் என்று பொருள் கொண்டால், பூர்வ ஜென்மத்தில் தாமரை மலரால் பூஜை செய்து வழிபட்ட புண்ணியத்தால், யாருக்கும் கிடைக்காத ஈஸ்வர தரிசனம் சிறிய குழந்தையான ஞானசம்பந்தனுக்கு கிட்டியது என்றும் பொருள் கொள்ளலாம்.
பீடுடைய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே
சீர்காழியின் 12 பெயர்களுள் ஒன்றான பிரமாபுரம் என்ற பெருமைமிக்க திருத்தலத்தில் எழுந்தருளியிருக்கின்ற இறைவன் சிவபெருமான்.
முதல் பாட்டின் சிறப்பு: இறைவனின் ஐந்து தொழில்கள்
திருஞானசம்பந்தர் தான் இயற்றிய தேவாரத்தின் முதல் பதிகத்தின் முதல் பாடலிலேயே இறைவனின்,
1. படைத்தல்
2. காத்தல்
3. அழித்தல்
4. மறைத்தல்
5. அருளல்
என்று ஐந்து தொழில்களையும் குறிப்பிட்டுள்ளார்.
கருத்தும், எழுத்தும் : காம்கேர் கே. புவனேஸ்வரி