கணித்தமிழ் வல்லுநர் விருது – By தமிழ்த்துறை, மாநிலக் கல்லூரி, சென்னை (March 4, 2013)

கணித்தமிழ் வல்லுநர் விருது – By தமிழ்த்துறை மாநிலக் கல்லூரி, சென்னை

சென்னை மாநிலக் கல்லூரி தமிழ்த்துறை ஏற்பாடு செய்திருந்த ‘பார்வையற்றோருக்கான தமிழ்க் கணினி மேம்பாட்டுத் திட்டம்’ 04-03-2013 அன்று சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்றது. அதில் காம்கேர் கே. புவனேஸ்வரிக்கு கணித்தமிழ் வல்லுநர் விருது வழங்கப்பட்டது.

சென்னை மாநிலக் கல்லூரி தமிழ்த்துறை  பேராசிரியர் டாக்டர்  ஆர். ஜெயசந்திரன் அவர்கள் ஏற்பாடு செய்திருந்த பார்வையற்றோருக்கான தமிழ்க் கணினி மேம்பாட்டுத் திட்டம் 04-03-2013 அன்று சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்றது.

அதில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்காக  ‘கனவுகளும் மெய்ப்படும்…காட்சிகளும் மெய்ப்படும்…’ என்ற தலைப்பில் தன்னம்பிக்கை உரையையும், தமிழ் பேசும் மென்பொருளில் குரல் சீரமைப்பு என்ற தலைப்பில் E-Speak  மற்றும் NVDA சாஃப்ட்வேர்கள் வாயிலாக  திரையில் வெளிப்படும் எழுத்துக்களை படிக்கும் முறையை செய்முறை விளக்கத்துடன் செய்து காண்பித்தேன்.

நிகழ்ச்சியில் என்னுரை

மாற்றுத் திறனாளிகள்!

இந்த சொல் தன்னம்பிக்கையை நிறைய தன்னுள் அடக்கிய ஒரு சொல்லாகும். பொதுவாக மாற்றுத்திறனாளிகள் என்று உடல் குறைபாடு உடையவர்களை அல்லது ஐம்பொறிகளில் குறைபாடு உள்ளவர்களை அழைக்கின்றனர். மாற்றுத்திறனாளிகளும் மனிதர்கள் தான். இன்னும் சொல்லப் போனால் பெருமதிப்புமிக்க மனிதர்கள்.

ஆனால் ஊனம் இல்லாத மனிதர்களிடமும் குறைபாடுகள் இருக்கின்றன. அவை பொறாமை, கோபம், காமம், குரோதம் போன்று மனம் மற்றும் குணம் சார்ந்தவைகளாகும். அதுபோன்று தான் இவர்களிடமும் குறைபாடுகள் இருக்கின்றன. ஆனால் இவை உடல் சார்ந்த குறைபாடுகளாகும். அது தான் வித்தியாசம். உடலில் உள்ள குறைபாடுகள், அதை மீறி வெளிவர வேண்டும் என்கின்ற உத்வேகததையும், தன்னம்பிக்கையையும் கொடுக்கும். மாறாக, மனதில் உள்ள குறைபாடுகள் தன்னம்பிக்கையை அழிக்கும்.

உடல் உறுப்புகள் செயலற்று இருப்பது குறை ஆகாது. அறிய வேண்டியதை அறிந்து முயற்சி செய்யாது இருப்பதே குறை என்று பொருள்படும் வகையில் திருவள்ளுவரின் குறள் ஒன்று உள்ளது.

பொறியிண்மை யார்க்கும் பழியன்று, அறிவறிந்த
ஆல்வினை இன்மை தரும்.

மாற்றுத் திறனாளிகளிடம் இருக்கின்ற திறமைகளைக் கண்டறிந்து வளர்ப்பதற்கு குடும்பமோ, சமுதாயமோ அல்லது அரசாங்கமோ முயற்சிக்காமல் இருந்தால் அது தான் மிகப்பெரிய குறை.

ஹெலன் கெல்லர் என்பவருக்கு காது கேட்காது. கண் பார்வை கிடையாது. அதனால் பேசுவதும் சிரமம். இப்படி கண், காது, வாய் போன்ற ஒன்றுக்கும் மேற்பட்ட குறைபாடுகள் இருந்தாலும், மன் உறுதியாலும், விடா முயற்சியாலும் வாழ்க்கையில் முன்னேறி, உலகம் போற்றுகின்ற சமூக சேவகியாக திகழ்ந்து, மாற்றுத்திறனாளிகளுக்கெல்லாம் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்ந்தார் அவர்.

மாற்றுத்திறனாளிகளுக்கெல்லாம் முன்னோடி!

ஹெலன் கெல்லர் பிறவியில் எந்த குறைபாடுகளும் இல்லாமல் தான் பிறந்தார். ஆனால் பிறந்த 19-ம் மாதத்தில் ஏற்பட்ட கடுமையான காய்ச்சல் கண் பார்வையைப் பறித்தது. காதையும் செவிடாக்கியது. அப்போது ஏழே வயதேயான ஹெலன் கெல்லருக்கு, அவரது பெற்றோர் ஒரு ஆசிரியரை நியமித்தனர். அவர் பெயர் அன்னி மான்ஸ் ஃபீல்டு ஸ்ல்வன். அவர் ஹெலன் கெல்லருக்கு விரல்களின் உதவியால் சைகை மொழியைக் கற்றுக் கொடுத்தார். அதற்கு அவர் ஆள்காட்டி விரலையே பேனாவாகப் பயன்படுத்தினார். கற்றுக் கொடுப்பவர் தன் ஆள்காட்டி விரலை மட்டுக் நீட்டி வைத்துக் கொண்டு, மற்ற விரல்களை மடக்கி வைத்துக் கொள்ள வேண்டும். கற்றுக் கொள்பவரின் இடது கையில் உள்ள விரல்களைத் தொட வேண்டும். அ என்ற ஆங்கில எழுத்துக்கு கட்டை விரலின் நுனியும், உ என்ற எழுத்துக்கு ஆள்காட்டி விரலின் நுனியும், ஐ என்ற எழுத்துக்கு நடுவிரலின் நுனியும், ஞ என்ற எழுத்துக்கு மோதிர விரலின் நுனியும், ம என்ற எழுத்துக்கு சுண்டு விரலின் நுனியும் உதவுகிறது. தமிழைப் போல ஆங்கில எழுத்துக்களுக்கும் விரல்களே பயன்படுகின்றன.

ஹெலன் கெல்லரின் ஆசிரியர் அவருக்கு, கை விரல்களைத் தொடுவதன் மூலம் ஆங்கில எழுத்துக்களையும், வார்த்தைகளையும் கற்றுக் கொடுத்ததோடு, அவற்றோடு தொடர்புடைய பொருட்களையும் தொட்டுப் பார்த்து உணரச் செய்தார். மேலும் பேசும் பொழுது உதடுகளில் கை வைத்து அதிர்வுகள் மூலம் புரிந்து கொள்கின்ற கலையையும் கற்றுக் கொடுத்தார். மேலும் உள்ளங்கைகளி எழுதி, எழுத்துக்களைப் புரிந்து கொள்ளவும் பழக்கினார். ஹெலன் கெல்லர் கண் பார்வையற்றவர்களுக்கான பிரெயில் முறையில் ஆங்கிலம், ப்ரெஞ்ச், ஜெர்மன், லத்தீன், கிரேக்கம் போன்ற மொழிகளை கற்று பட்டமும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், 12 புத்தகங்களையும், ஏராளமான கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவரது வாழ்க்கை மாற்றுத்திறனாளிகளுக்கெல்லாம் முன்னுதாரணமாய் இருக்கிறது. இவரது திறமைகளை கண்டுபிடித்து, அவற்ரை வெளிக் கொண்டு வந்ததில் மிகப்பெரிய பங்கு இவரது ஆசிரியர் அன்னி மான்ஸ் ஃபீல்டு ஸ்ல்வனுக்கு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அன்று தொடு உணர்வின் மூலம் மூளையை இயங்கச் செய்ய முடியும் என்பதை நிரூபித்தார் ஹெலன் கெல்லர். இன்று இதே தத்துவத்தின் அடிப்படையில் தான் கம்ப்யூட்டரிலும், மொபைலிலும் ‘டச் ஸ்கிரீன்’ தொழில்நுட்பம் செயல்படுகிறது.

அவரவர் குரலில் திரையை படிக்கின்ற சாஃப்ட்வேர்…

இன்று ஜாஸ், இஸ்பீக், என்.வி.டி.ஏ போன்று ஏராளமான Screen Recognition Software – கள் கண்பார்வையில்லாத மாற்றுத் திறனாளிகளுக்கு உதவுகின்றன. கம்ப்யூட்டரின் திரையில் வெளிப்படுகின்ற விவரங்களை படித்துக் காண்பிக்கும் இந்த சாஃப்ட்வேர்களில், ஆண் குரல், பெண்குரல் என்று இரண்டு வகையில் ஏராளமான குரல்கள் பதிவு செய்யப்பட்டிருக்கும். அதுபோல இந்த சாஃப்ட்வேர்கள் உலக மொழிகளில் பெரும்பாலானவைகளை சப்போர்ட் செய்கிறது. தமிழ், ஆங்கிலம், லத்தீன், கிரேக்கம் என்று பல்வேறு மொழிகளை புரிந்து கொண்டு படிக்கின்ற ஆற்றலுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. இவை டைப் செய்கின்ற தகவல்கள், திரையில் வெளிப்படுகின்ற ஐகான்கள், மெனுக்கள், மெனுவிவரங்கள், விண்டோக்கள் போன்று அனைத்தையும் படித்துக் காண்பித்துக் கொண்டே வரும். இதனால் பார்வையில்லாதவர்கள் அனைவரும் கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட்டை பார்வையுள்ளவர்கள் பயன்படுத்துவதைப் போலவே பயன்படுத்தலாம். ஏராளமானோர் பயன்படுத்தி வருகிறார்கள்.

இதில் பதிவு செய்யப்பட்டிருக்கும் குரல்கள் அனைத்தும் மெஷின்கள் பேசுவதைப் போன்று கொஞ்சம் ஹார்டாக இருக்கும். குறிப்பாக இதில் தமிழ் யுனிகோட் எழுத்துக்களைப் படிக்கின்ற குரலில் மென்மையைச் சேர்த்து, நம் குரலிலேயே பேசுவதைப் போல மாற்றங்கள் கொண்டு வந்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நான் கலந்து கொள்கின்ற கருத்தரங்குகளில் சந்திக்கின்ற மாற்றுத்திறனாளிகள்(டாக்டரேட் செய்த பேராசிரியர்கள்) பலரும் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் என் நிறுவனத்தில் இதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்த முயற்சி வெற்றி பெற்றால், அதாவது டைப் செய்கின்ற தகவல்களை அவரவர் குரலிலேயே படிக்கச் செய்து கேட்கின்ற தொழில்நுட்ப வசதி இருந்தால் மாற்றுத் திறனாளிகளுக்கு பேருதவியாக இருக்கும்.

மேலும் இபுத்தகங்களில் எழுத்துக்களோடு சேர்த்து, அப்புத்தகத்தை எழுதிய எழுத்தாளர்களது குரலிலேயே அவற்றை ரெகார்ட் செய்து, படிக்கச் செய்கின்ற வசதியை கொண்டு வந்தால் இன்னும் சிறப்பானதாக இருக்கும். ஒரு கல்லில் இரண்டு மாங்காய் எனது போல, சாதாரண மக்களுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் பொதுவாக இபுத்தகங்களை கொண்டு வந்துவிடலாம். அதற்கான முயற்சிகளும் டாக்டர் ஜெயசந்திரன் அவர்களின் ஆலோசனையுடன் எங்கள் நிறுவனத்தில் நடைபெற்று வருகிறது. இவரும் பார்வையற்ற மாற்றுத்திறனாளி என்பது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட 2000-ம் ஆண்டில் இருந்து இவருடன் இணைத்து பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்காக நிகழ்ச்சிகள் செய்து வருகின்றேன்.

இந்தியாவில் உட்கார்ந்து கொண்டு அமெரிக்காவில் உள்ள கம்ப்யூட்டரை இயக்க…

நித்தம் புத்தம்புது பொலிவுடன் வளர்ந்து வருகின்ற கம்ப்யூட்டர் இன்டர்நெட் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையாகும். பெரும்பாலும் கம்ப்யூட்டரையும், இன்டர்நெட்டையும் நாம் இமெயில் அனுப்பவும், டைப் செய்யவும், பிரவுஸ் செய்யவும் மட்டுமே பயன்படுத்துகின்றோம். இவற்றையெல்லாம் தாண்டி எராளமான வசதிகள் இதில் உள்ளன. தொலைக்காட்சி போன்ற மீடியாக்கள் கொடுக்கின்ற செய்திகளை/நிகழ்ச்சிகளை அவர்கள் ஒலி/ஒளிபரப்புகின்ற நேரத்தில் மட்டுமே நாம் தெரிந்து கொள்ள முடிகிறது. இன்டர்நெட்டில் நமக்குத் தேவையான நேரத்தில், தேவையான செய்திகளை தெரிந்து கொண்டு வெளியே வந்து நம் மற்ற வேலைகளைப் பார்க்கலாம். இதன் மூலம் நாம் மீடியாவை டாமினேட் செய்யமுடியும்.

இன்டர்நெட் மூலம் உலகளாவிய அளவில் உள்ள கம்ப்யூட்டர்கள் ஒன்றோடென்று பிணைக்கப்பட்டுள்ளன என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். இதன் மூலம் தகவல்களை பகிர்ந்து கொள்ளலாம், தேவையானதை தேடி எடுக்கலாம் என்பதும் நாம் அறிந்ததே. ஆனால் மற்றவர்கள் கம்ப்யூட்டரினுள் செல்ல முடியாது. அதை இயக்க முடியாது. இன்டர்நெட்டில் சர்வர்கள் என்றழைக்கப்படுகின்ற மிகப்பெரிய திறனுள்ள கம்ப்யூட்டரில் தகவல்கள் எழுத்துக்களாகவும், புகைப்படங்களாகவும், வீடியோக்களாகவும் பதிவு செய்யப்பட்டிருக்கும். அதனோடு உலகில் உள்ள மற்ற கம்ப்யூட்டர்கள் இணைக்கப்பட்டிருக்கும். இவ்வாறு இன்டர்நெட்டில் இணைந்துள்ள கம்ப்யூட்டர்களில் தகவல்களை எடுத்துப் பயன்படுத்த முடியும். இது தான் இன்டர்நெட்டின் அடிப்படை தத்துவம். இந்த அளவுக்கு தான் இன்டர்நெட்டைப் பற்றிய செய்தி பெரும்பாலானோருக்குத் தெரிந்திருக்கும்.

ஆனால் இன்டர்நெட்டைப் பயன்படுத்தி, நம் நம் கம்ப்யூட்டரில் இருந்து, தொலைவில் உள்ள கம்ப்யூட்டர்களை நம்மால் இயக்க முடியும். அதற்குள் சென்று அதை இயங்கச் செய்ய முடியும் என்ற செய்தி புதிதாக இருக்கலாம். அதற்கு ‘ரிமோட் பிசி அக்சஸிங்’ என்று பெயர். இவற்றைப் பயன்படுத்தி நம் மடியில் உள்ள மடிக்கணினியில், அடுத்த அறையில்/வீட்டில்/நாட்டில் உள்ளவர்களின் கம்ப்யூட்டரை அவர்கள் அனுமதியுடன் கொண்டு வந்து செயல்படுத்த முடியும். என்ன ஆச்சர்யமாக இருக்கிறதா? உண்மை தான். அயல்நாட்டில் உள்ள ஒருவர், இந்தியாவில் உள்ள வயதான பெற்றோர்களுக்கு வீடியோ ஃபைலை அல்லது புகைப்படத் தொகுப்பை அனுப்ப வேண்டுமென்றாலோ அல்லது அவர்கள் கம்ப்யூட்டரில் ஏதேனும் ரிப்பேர் செய்ய வேண்டும் என்றாலோ இந்த ‘ரிமோட் பிசி’ தொழில்நுட்பம் மூலம் எளிதாக செய்து விட முடியும். அமெரிக்காவில் உள்ளவர் இந்தியாவில் உள்ள தங்கள் பெற்றோர்களின் கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க்கை வெர்ச்சுவலாக தங்கள் கம்ப்யூட்டருக்குக் கொண்டு வந்து அதை இயக்க முடியும். என்னவொரு அற்புதமான வசதி.

இதன் மூலம் பார்வையில்லாத மாற்றுத் திறனாளிகள் ஹார்ட்வேர் சர்வீஸ் இன்ஜினியராகவும் வாய்ப்புள்ளது. மற்றவர்கள் கம்ப்யூட்டரை சர்வீஸ் செய்வதற்கு ‘ரிமோட் பிசி’ தொழில்நுட்பத்தையே பயன்படுத்தலாம். சாஃப்ட்வேர் பிரச்சனை என்றால் உடனடியாக செய்து விடலாம். ஹார்ட்வேர் சாதனம் மாற்ற வேண்டுமென்றால் மட்டும் தான் நேரடியாகச் செல்ல வேண்டியிருக்கும். கம்ப்யூட்டர் வைத்திருக்கும் நபர்களின் பெரும்பாலான பிரச்சனை என்னவாயிருக்கிறதென்றால், ஓ.எஸ் எனப்படும் ஆபரேட்டிங் சிஸ்டம் சாஃப்ட்வேர் தாறுமாறாக வேலை செய்வது தான். இப்பிரச்சனைக்கு ஹார்ட்டிஸ்கை ஃபார்மேட் செய்து விட்டு, ஆபரேட்டிங் சிஸ்டம் சாஃப்ட்வேரை இன்ஸ்டால் செய்ய வேண்டியது தான் ஒரே தீர்வு. இதற்கு சர்வீஸ் இன்ஜினியர்கள் ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்கு செல்ல வேண்டியதில்லை. உட்கார்ந்த இடத்தில் இருந்தே செய்து விட முடியும். எங்கள் நிறுவனத்தில் பயன்படுத்துகின்ற பிரின்டர்களை சர்வீஸ் செய்கின்ற சர்வீஸ் சென்டரில் ஒரு பார்வையற்ற மாற்றுத் திறனாளி தான் சர்வீஸ் செய்கிறார். கண்பார்வையில்லாத அந்த தன்னம்பிக்கை இளைஞரைப் பார்ப்பதற்கே கண்கொள்ளா காட்சியாக இருக்கிறது.

மேலும் இன்று கம்ப்யூட்டரும், இன்டர்நெட்டும் இரண்டறக் கலந்து ஒன்றில்லாமல் மற்றொன்றில்லாமல் என்னும் அளவிற்கு வெப்பிசி கம்ப்யூட்டர்கள் வேகமாக வளர்ந்து வருகிறது.

கம்ப்யூட்டரை இயக்கும் மனித மூளை…

மனதால் நினைப்பதை ஒலிவடிவமாக வெளிப்படுத்த உதவுகின்ற தொழில்நுட்பங்கள் எல்லாம் ஆராய்ச்சி செய்யப்பட்டு வருகின்றன. மனித குரல்வளையில் உள்ள வோகல்கார்ட் எனப்படும் குரல் நாணில் உள்ள நரம்பு செல்களில் உருவாக்கப்படும் சிக்னல்களைப் பிடித்து அதை அப்படியே கம்ப்யூட்டரில் பேச்சாக ஒலிக்கச் செய்கின்ற முயற்சிகள் ஆராய்ச்சி நிலையில் உள்ளன. அதாவது மூளை தருகின்ற சிக்னல்கள், மனித குரல் வளையில் உள்ள குரல் நாண்களை என்ன பேச வேண்டுமோ அதை பேச இயக்குகின்றன. அந்த சிக்னல்களை கம்ப்யூட்டர் புரிந்து கொள்ளும். பேசும். இதுதான் தொழில்நுட்பம். பேசமுடியாதவர்களுக்கும், அதிக இரைச்சலில் பணி செய்கின்ற இடத்தில் பேச நினைப்பவர்களுக்கும் இத்தொழில்நுட்பம் பேருதவி புரியும். அவர்கள் பேச நினைப்பதை, கம்ப்யூட்டர் ஸ்பீக்கர் மூலம் வெளிப்படுத்தி விடும்.

நாம் ஒருவரிடம் சொல்ல விரும்புகின்ற விஷயத்தை வாயால் பேசாமலேயே, நினைவலைகள் மூலம் சொல்ல முடியும். இதற்கு Computer Brain Interface என்று பெயர். இந்த தொழில்நுட்பத்தின் மூலம் நாம் மனதில் நினைப்பதை கம்ப்யூட்டருக்கு அனுப்பி, அதை கம்ப்யூட்டர் புரிந்து கொண்டு யாருக்கு அனுப்ப வேண்டுமோ அவர்கள் கம்ப்யூட்டருக்கு அனுப்பி வைக்கும். அவர்கள் கம்ப்யூட்டர் அந்த தகவலை மனித மூளை புரிந்து கொள்கின்ற செய்தியாக மாற்றி அவர்கள் மூளைக்கு அனுப்பி வைக்கும். இந்த தொழில்நுட்ப ஆராய்ச்சி சாத்தியமானால் அது ஒரு பெரும்புரட்சியையே உண்டாக்கும் என்பதில் சந்தேகமில்லை. இதுவும் வாய்பேச முடியாத மாற்றுத் திறனாளிகளுக்கு பேருதவியாக இருக்கும்.

ஜெர்மனியைச் சேர்ந்த மனித மூளையின் கட்டுப்பட்டில் இயங்குகின்ற ஒரு கருவியை கண்டுபிடித்துள்ளனர். இக்கருவி மூலம் மனித மூளையின் கட்டளைப்படி வாகனங்களை இயக்கலாம். வாகன ஓட்டிகள் சென்சார் கேப் ஒன்றை அணிந்து கொள்வதன் மூலம் மூளையின் எலக்ட்ரோ மேக்னடிக் மின் காந்த அலைகளை வைத்து தங்கள் மூளையின் செயல்பாட்டை கம்ப்யூட்டர் அறிந்து கொள்ள முடியும். மூளையின் செயல்பாடுகளை அதன் கட்டுப்பாடோடு இணைந்து கம்ப்யூட்டரின் சாஃப்ட்வேர் செயல்படும். இது தவிர காரின் வேகத்தைக் கட்டுப்படுத்தவும் முயற்சிகள் செய்து வருகிறார்கள். வாகன ஓட்டிகள் இந்த சென்சார் கேப்பை தலையில் பொருத்திக் கொண்டவுடன் வாகனத்திற்கு உத்தரவிடத் தொடங்கும்.அந்த வாகனம் 360 டிகிரி கோணத்தில் தன்னைச் சுற்றியுள்ளவற்றை அறியும் விதமாக வீடியோ காமிராக்கள், ராடார்கள், லேசர் சென்சார்களைக் கொண்டிருக்கும். இதன் மூலம் வாகன ஓட்டிகளின் மூளையின் கட்டளைப்படி இடப்பக்கமாகவோ, வலப்பக்கமாகவோ செல்லும்.

கண் அசைவில் இயங்கும் கம்ப்யூட்டர்…

கண்விழிகளை நகர்த்தினாலே கம்ப்யூட்டர் மவுஸ் கர்சர் தானாகவே நகரும் புதிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கம்ப்யூட்டரின் மானிட்டரைப் பார்க்கும் போது, விழித்திரையின் மேல் கம்ப்யூட்டரிலிருந்து வரும் அகச்சிவப்பு ஒளிக்கதிர் விழும். நம் பார்வை திரையின் மேல் எங்கெல்லாம் படிகிறதோ அங்கெல்லாம் நம் மவுசின் பாயின்டரும் நகரும். இக்கருவியை தோஷிபா நிறுவனம் உருவாக்கி, ஐட்ராக்கர் என்று பெயர் சூட்டியுள்ளது.

மேலும் இதே தொழில்நுட்பத்தின் அடிப்படையில் கண்ணசைவின் மூலம் கம்ப்யூட்டரையே இயக்கக் கூடிய புத்தம் புதிய சாதனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. TOBII REX  எனப்படும் புதிய எலக்ட்ரானிக் சாதனம் யு.எஸ்.பி இணைப்பு மூலம் செயல்படக் கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மைக்ரோசாஃப்ட்டின் விண்டோஸ்-8 ஆபரேட்டிங் சிஸ்டத்தில் செயல்படக்கூடியதாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.இதிலுள்ள ஸ்கேனர் கண்ணின் கருவிழியின் அசைவுகளை வைத்து கம்ப்யூட்டருக்கு கட்டளைகளை அனுப்புகிறது. அதன்படி கம்ப்யூட்டர் இயங்கும். 2013-ன் தொடக்கத்தில் அறிமுகமாகியுள்ள இச்சாதனத்தின் விலை சுமார் 995 அமெரிக்க டாலர்கள் என்று சொல்லப்படுகிறது.

ஹார்ட் டிஸ்க்கின் திறனை அதிகரிக்க சாப்பாட்டு உப்பு…

உணவுக்கு சுவைக் கூட்ட பயன்படுத்தப்ப்டும் சோடியம் குளோரைடு உப்பைக் கொண்டு கம்ப்யூட்டர் ஹார்ட்டிஸ்க்கின் கொள்ளளவை அதிகரிக்க முடியும் என்று கண்டுபிடித்துள்ளார்கள். ரூம் சஸில் உள்ள மெகா ஹார்ட் டிஸ்க்குகள், கையடக்க டிஸ்க்குகளாக மாறி இன்று சட்டைப் பாக்கெட்டில் போட்டு எடுத்துச் செல்கின்ற சைஸில் மாறியுள்ளதை நாம் அனைவரும் அறிவோம். இதன் சைஸை மேலும் குறைத்து, அதன் கொள்ளவை அதிகரிப்பது குறித்து தொடர்ந்து முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றது. அதாவது கம்ப்யூட்டரின் ஹார்ட்டிஸ்க்கை தயாரிக்கும் போது சோடியம் குளோரைடு எனப்படும் சாதாரண உப்பையும் சேர்த்து பயன்படுத்தும் போது, ஹார்ட் டிஸ்க்கின் பதிவுத்திறன் ஒரு சதுர இன்ச்சுக்கு 3.4 டெராபைட் அதிகரிக்கிறதாம். அதாவது மொத்தத்தில் ஹார்ட் டிஸ்க்கின் கொள்ளளவு 6 மடங்கு அதிகரிக்கிறது. இது எப்படி இருக்கு?

நானோ கார் போல நானோ டிஸ்க்…

தகவல்களை சேமிக்க பயன்படுகின்ற சாதனங்களான CD, DVD, BLU-RAY, Pen Drive, Mini SD, Micro SD வரிசையில் கண்ணாடித் தட்டினால் ஆன மிகச் சிறிய சிடி(நானோ டிஸ்க்) ஒன்று அறிமுகமாகியுள்ளது. இதில் தகவல்களை அழித்து சேமிக்கலாம். அதாவது  Rewritable  வகையைச் சேர்ந்ததாகும்.

கனவையும் நனவில் காண…

கனவு மெய்ப்பட வேண்டும் என்றார் பாரதி. அது இன்று நிஜாமாகி வருகிறது. நாம் கனவில் காண்கின்ற காட்சிகளை இ-ஸ்கேன் செய்து தெளிவாக அறிந்து கொள்ள முடியும் என்றும், அதற்கான முயற்சிகள் ஆராய்ச்சி நிலையில் உள்ளன என்றும் கூறுகிறார்கள் கம்ப்யூட்டர் தொழில்நுட்ப வல்லுநர்கள்.

கனவுகளும், காட்சிகளும் மெய்படும் நாள் வெகு தொலைவில் இல்லை. இதோ கைக்கெட்டும் தொலைவில் தான் உள்ளன.

தமிழ் பேசும் மென்பொருளில் குரல் சீரமைப்பு!

E-Speak  சாஃப்ட்வேரில் நம் குரலுக்கான புரோகிராமை எழுதி இணைக்கின்ற டெமான்ஸ்ட்ரேஷனும்,  எங்கள் காம்கேர் நிறுவன தயாரிப்பு சிடியான ‘தினம் ஒரு பழம்’  மூலமும்   டெமான்ஸ்ட்ரேஷன் செய்து காண்பிக்கப்பட்டன.

கருத்தும், எழுத்தும் : காம்கேர் கே. புவனேஸ்வரி

மீடியா செய்திகள்

(Visited 179 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon