என்னை நானே மதிக்கக் கற்றுக்கொடுத்த ஆட்டோகிராஃப்கள் (செப் 5, 2018)

மாணவர்கள் ஆசிரியர்களுக்கு கவிதை எழுதுவார்கள்…. ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கவிதை எழுதுவது என்பது அரிதுதானே… அந்த அரிதான ஒரு நிகழ்வு என் வாழ்க்கையில்…

திருமதி.ராஜாத்தி, திருமதி.மைதிலி சேகர் மற்றும் திருமதி.ஜோதிமணி இந்தப் பேராசிரியர்கள் தான் என் இன்ஸ்பிரேஷன்கள்…

இப்போது இவர்கள் எங்கிருந்தாலும் வணங்குகிறேன் இந்த ஆசிரியர் தின நன்னாளில்…

எதற்கெடுத்தாலும் மனதளவில் சோர்ந்து தற்கொலை வரை சென்றுகொண்டிருக்கும் இன்றைய மாணவ மாணவிகளுக்கு சொல்லித்தர வேண்டும்… வெறும் அறிவுரை போல் அல்லாமல் வெற்றிபெற்ற பலரது அனுபவங்களை கண் முன் நிறுத்தி கற்பிக்க வேண்டும்… இதுபோல இறக்கங்களும் ஏற்றங்களும் கொண்டதுதான் வாழ்க்கை என்ற பேருண்மையை…

என்னை நானே மதிக்கக் கற்றுக் கொடுத்த ஆட்டோகிராஃப்(கள்)… சுயபுராணம் அல்ல… ஆசிரியர்களின் உள்ளத்தை உணர்த்தும் உண்மை!

பத்தாம் வகுப்புப் படிக்கும்போது, பள்ளி ஆசிரியர் ஒருவரின் சூழ்ச்சியினால் தமிழ், ஆங்கில மொழிப்பாடங்களைத் தவிர மற்ற 3 சப்ஜெக்ட்டுகளின் விடைத்தாளின் கடைசி மூன்று பக்கங்கள் குறுக்கே அடிக்கப்பட்டு, மாநிலத்தில் முதலாவதாக வர வேண்டும் என்ற என் கனவில் இடி விழுந்ததோடு, பள்ளியில்கூட முதலாவதாக வர இயலாமல் போனது.

அன்று என் பெற்றோர் எடுத்த முடிவுதான் இந்த நிமிடம்வரை என்னை இயக்கும் தன்னம்பிக்கைக்கான வித்து.

இப்போதுபோல மதிப்பெண் மறுமதிப்பீட்டல் எல்லாம் அன்று அத்தனை சுலபமல்ல. ஆனால், எதற்கும் அஞ்சாமல் ரிசல்ட் வந்த அன்றே சென்னை வந்து பள்ளி கல்வித்துறை அலுவலகத்தில் நடந்ததை உறுதி செய்துகொண்டோம். அந்த ஆசிரியர் மீது புகார் கொடுக்க நீதித்துறையை அணுகினோம்.

நீதிபதி மிக நேர்மையாக ‘இந்த கேஸில் பள்ளியின் முழு ஆதரவு இருந்தால் மட்டுமே ஜெயிக்க முடியும். எந்தப் பள்ளியும் தங்கள் பள்ளி ஆசிரியர் குறித்த வழக்கிற்காக உங்களுக்கு ஆதரவு கொடுத்து தேவையான ஆவணங்களைக் கொடுக்க மாட்டார்கள்… இது தற்காலிக பின்னடைவுதான்… வருங்காலத்தில் முன்னேற்றப் பாதையைத் தேடிச் செல்வது தான் புத்திசாலித்தனம்’ என அறிவுரை கூறி எங்களை ஊருக்கு அனுப்பி வைத்தார்.

வழக்கு போடவும் அது தொடர்பாக அலையவும் செலவு செய்யவும் நாங்கள் அப்படி ஒன்றும் பெரும் செல்வந்தர்கள் அல்ல. அப்பா அம்மா இருவரும் வேலைக்குச் சென்று என்னையும் என் தம்பி தங்கைகளையும் படிக்க வைத்து வளர்த்து ஆளாக்கும் நடுத்தர குடும்பப் பின்னணிதான்.

ஆனாலும் என் பெற்றோரின் துணிவுதான் எங்களுக்குள் தன்னம்பிக்கையாக உருமாறி எங்களை வழிநடத்துகிறது.

எந்த ஒரு பிரச்சனைக்கும் நம்மால் முடிந்த அளவு போராட வேண்டும், போராட்டத்தின் முடிவு நமக்கு சாதகமாக இருந்தாலும், பாதகமாக இருந்தாலும் நாம் முயற்சித்தோம் என்ற தன்னிறைவு கிடைக்கும். அதுவே நாம் எடுக்கும் முயற்சிக்கான வெற்றி என்ற ஆழ்ந்த உண்மையை எங்களுக்குள் வித்திட்டார்கள் என் பெற்றோர்.

பள்ளியில் ஏற்பட்ட இந்த அனுபவத்தின் காரணமாக மனதளவில் உடைந்து ஆசிரியர்கள் மேல் எனக்குள்ள நம்பிக்கை குறைந்து கொண்டே வந்தது.

அதன் பிறகு இரண்டாண்டுகள் +1,+2 படிக்கின்ற காலத்தில் ஆசிரியர்களிடம் பேசுவதற்கே மிகவும் பயப்படுவேன்.

1987-ம் வருடம், திருச்சியில் இந்திரா காந்தி கல்லூரியில் பி.எஸ்.ஸி கம்ப்யூட்டர் சயின்ஸ் சேர்ந்தேன். அங்கும் யாருடனும் அதிகம் பேசாமல் நானுண்டு, என் படிப்புண்டு என்றிருந்தேன்.

நான் படித்தது கம்ப்யூட்டர் சயின்ஸ் தான். ஆனாலும் அத்துறை பேராசிரியர்களை விட, தமிழ்த் துறை பேராசிரியர்கள் தான் எனக்கு மானசீகமாக நெருக்கமானார்கள். குறிப்பாக திருமதி.ராஜாத்தி, திருமதி.மைதிலி சேகர் மற்றும் திருமதி.ஜோதிமணி இப்பேராசிரியர்கள் தான் என் இன்ஸ்பிரேஷன்கள்.

இவர்களைப் பார்த்தால் குட்மார்னிங் சொல்லுவதோடு சரி. அவர்களிடமும் நானாக வலிய சென்று பேச மாட்டேன்.

தமிழ் இலக்கியத்தைக் கூட அபிநயத்துடன் அழகு மிளிர அவர்களால் மட்டுமே எடுக்க முடியுமோ என்று நான் ஆச்சர்யப்பட்டதுண்டு. ஏற்கனவே தமிழ் மீது எனக்கிருந்த ஈடுபாடு பெருங்காதலாய் மாறுவதற்கு அவர்களும் ஒரு காரணம்.

இப்படியே அக்கல்லூரியில் மூன்று வருடங்கள் உருண்டோடின. சக மாணவிகள் தங்கள் தோழிகளிடமும், ஆசிரியர்களிடமும் ஆட்டோகிராஃப் வாங்கிக் கொண்டிருந்தார்கள். எனக்கு ஆட்டோகிராஃப் வாங்குவதில் அத்தனை ஈடுபாடு இல்லையென்றாலும், சக மாணவிகள் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்த போது எனக்கும் யாரிடமாவது ஆட்டோகிராஃப் வாங்க வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது. சட்டெனெ என் மனதில் தோன்றியது அந்த மூன்று தமிழ் பேராசிரியர்கள் தான்.

என் கால்கள் தயக்கத்திலும், ஒருவித சங்கோஜத்திலும் பிண்ணிக் கொள்ள, மெல்ல தயங்கியபடி நடந்து சென்றேன். தமிழ் துறை அலுவலகம் சென்று என் டைரியைக் கொடுத்து ஆட்டோகிராஃப் கேட்டேன். அவர்கள் டைரியை வாங்கி வைத்துக் கொண்டு, ‘போட்டுத் தருகிறோம்…போய் வா…’ என்று சொல்லி விட்டார்கள். நான் மிகவும் சுணங்கிப் போய் விட்டேன்.

அடுத்த நாள் கூப்பிட்டனுப்பினார்கள். என் சுபாவப்படி கொஞ்சம் கூச்சத்துடனேயே சென்றேன். நான் கொடுத்த டைரியைக் கொடுத்தார்கள். நன்றி சொல்லி விட்டு வேகவேகமாக என் வகுப்பிற்கு வந்து என் இருப்பிடத்தில் அமர்ந்தேன். சற்றே நடுக்கத்துடன் டைரியை பிரித்துப் பார்த்தேன்.

அந்த நிமிடம் என் வாழ்நாளின் மிக முக்கியமான நிமிடம் என்று உணர்ந்தேன்.

அவர்கள் எழுதிக்கொடுத்த ஆட்டோகிராஃபை(களை) தான் இங்கு உங்கள் பார்வைக்குக் கொடுத்துள்ளேன். (@1990)

என்னை நானே மதிக்கக் கற்றுக் கொடுத்த ஆட்டோகிராஃப்கள் அவை. அவற்றை லாமினேட் செய்து நித்தம் என் பார்வைபடும் இடத்தில் வைத்திருக்கிறேன்.

பள்ளியில் ஒரு ஆசிரியரின் சூழ்ச்சியினால் மனதளவில் சிதைந்து கிடந்த என்னை, கல்லூரியில் சித்திரமாக்கினார்கள் என் பேராசிரியர்கள். சிதைத்ததும், சித்திரமாக்கியதும் அதே ஆசிரிய வர்க்கம் தான்.

மனதளவில் சோர்ந்திருந்த என்னை உற்சாகப்படுத்தி ஊக்கப்படுத்தியதன் விளவு, மயிலாடுதுறை AVC கல்லூரியில் MSc., கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கும்போது மிகவும் தன்னம்பிக்கையுடன் புதிய சூழலை சந்திக்க முடிந்தது. (@1992)

மாணவர்களை மனிதர்களாக மாற்றும் அரிய பணியில் இருக்கும் நல்லாசிரியர்கள் வாழ்க!

அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி
செப்டம்பர் 5, 2018

(Visited 275 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon