பாக்யாவில் ‘மயக்கம்’!
கல்லூரி காலத்தில் பல்வேறு பத்திரிகைகளில் நான் எழுதிய 100-க்கும் மேற்பட்ட கதை கவிதை கட்டுரைகளில் தேர்ந்தெடுத்த சிலவற்றைத் தொகுத்து புத்தகமாக்கும் முயற்சியில் நேற்று லே அவுட் ஆன கதை ‘மயக்கம்’.
இந்தக் கதை 1990-ஆம் ஆண்டு பாக்யா பத்திரிகையில் வெளியானது.
அப்போது பி.எஸ்.ஸி கம்ப்யூட்டர் சயின்ஸ் மூன்றாம் ஆண்டு திருச்சியில் ஸ்ரீமதி இந்திரா காந்திக் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தேன்.
எல்லா படைப்புகளும் அந்தந்த காலகட்டதின் கண்ணாடியாக இருக்கின்றன என்பதை அந்த கதையை படித்தபோது உணர முடிந்தது.
1990-ம் ஆண்டு என் படைப்பை அங்கீகரித்து பிரசுரம் செய்த பாக்யா பத்திரிகைக்கு நன்றி.
ஆனால் அன்று தெரியாது, பாக்யா இதழின் ஆசிரியர் திரு. பாக்யராஜ் அவர்களை 2000-ம் ஆண்டு சந்திப்போம் என்று.
2000-த்தில் நாங்கள் அனிமேஷன் துறையில் முழுவீச்சில் ஈடுபட்டிருந்தோம். எங்கள் முதல் கார்ட்டூன் அனிமேஷன் சிடி ‘தாத்தா பாட்டி கதைகள்’.
இந்த சிடியை 99 ரூபாய்க்கு (அந்த காலகட்டத்தில் அது மிகமிகக் குறைந்த விலை) கொடுத்தோம். அந்த வருட புத்தகக் கண்காட்சியில் அது விற்பனையில் சாதனையைப் படைத்தது.
அதைத் தொடர்ந்து அதே விலைக்கே எங்கள் அனிமேஷன் சிடிக்களை விற்பனை செய்ய ஆரம்பித்தோம்.
அப்போதெல்லாம் மற்ற நிறுவனங்கள் இதுபோன்ற அனிமேஷன் சிடிக்கள் 300 ரூபாய்க்கும் 400 ரூபாய்க்கும் விற்றுக்கொண்டிருந்தார்கள்.
எனவே எங்கள் விலைகுறைப்பும், வித்தியாசமான தயாரிப்பும் ஒட்டு மொத்த அனிமேஷன் துறையையும் எங்கள் பக்கம் திருப்பியது.
அந்த நேரத்தில்தான் திரு. பாக்கியராஜ் அவர்கள், அவருடைய மகன், மகள் இருவருக்குமான உயர்கல்விக்கான ஆலோசனைக்காக என்னை தொடர்பு கொண்டார். நேரிலும் சந்தித்தோம். உயர் கல்வியில் விஷூவல் கம்யூனிகேஷன் பிரிவை தேர்ந்தெடுத்தால் நல்லதா, எந்த கல்லூரியில் படிக்க வைக்கலாம், எந்த அனிமேஷன் பயிற்சி மையத்தில் சிறப்பு பயிற்சி எடுத்துக்கொள்ளலாம் என்பதுபோன்ற விஷயங்களை கேட்டுத் தெரிந்துகொண்டார்.
சினிமாத் துறை சார்ந்தவர் என்ற ஆடம்பரம் துளியும் இல்லாமல் அவர் காட்டிய எளிமை அருமை.
2014-ம் ஆண்டு சாஃப்ட்வேர்துறையில் சிறப்பாகப் பணியாற்றி வருவதற்காக எனக்கு Vocational Excellence Award என்ற விருதை Rotary Club of Madras Chenna Patna வழங்கியபோது அந்த விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு திரு. பாக்கியராஜ் அவர்கள்தான் தலைமை தாங்கினார்.
அந்த நிகழ்ச்சியில் பேசும்போதுகூட அவர் மகன் மகளின் கல்வி ஆலோசனைக்காக 2000-த்தில் என்னை சந்தித்த நிகழ்வை பகிர்ந்துகொண்டார்.
என்னிடம் ஆலோசனைப் பெற்றதை பொதுவெளியில் பகிர்ந்துகொண்ட எளிமை அற்புதம்.
இப்படியாக 1990-ல் பாக்யாவில் என் கதை வெளியானதைத் தொடர்ந்து அடுத்தடுத்த 10 வருடங்களில் இரண்டு முக்கிய நிகழ்வுகளில் அவரை நேரடியாக சந்தித்தபோது அவர் காட்டிய பண்பு அவர் மீதான மரியாதையை உயர்த்தியது.
இதோ இப்போது சினிமா துறையில் ஒரு எழுத்தாளரின் கதைக்கான அங்கீகாரத்தைப் போராடி பெற்றுத்தந்த நிகழ்வில் நேர்மையான அவருடைய செயல்பாட்டினால் அவர்மீதான மரியாதை இன்னும் அதிகரித்தது.
பாக்யா என்றதும் அதன் எடிட்டர் திரு. பாக்கியராஜ் குறித்து யோசிக்காமல் இருக்க முடியவில்லை. அதனால் இந்த சின்ன ஃப்ளாஷ் பேக்.
பாக்யாவில் வெளியான அந்த படைப்பு உங்கள் பார்வைக்கு. நேரம் இருப்பவர்கள் படித்துப் பார்க்கலாம்.
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி
நவம்பர் 3, 2018
டிசம்பர் 1990 -ல் பாக்யா இதழில் ‘மயக்கம்’ என்ற தலைப்பில் வெளியான கதை