நமது நம்பிக்கை! காம்கேர் ஜெயித்த கதை (NOV 2018)

நவம்பர் 2018 ‘நமது நம்பிக்கை’ – பத்திரிகையில் எனது வித்தியாசமான நேர்காணல்.

இந்த வித்தியாசத்துக்கு முழு காரண கர்த்தா திரு. மரபின் மைந்தன் முத்தைய்யா அவர்கள்.

இவர் தலைமையில் வெளிவரும் பத்திரிகைதான் ‘நமது நம்பிக்கை’.

‘எத்தனையோ ஊடகங்களில் நேர்காணல் கொடுத்திருப்பீர்கள்… அவற்றில் சொல்ல விடுபட்ட தகவல்கள் உங்களுக்குள் இருக்கும்… அல்லது நீங்கள் சொல்ல வந்தது இடப் பற்றாக்குறைக் காரணமாக சுருக்கப்பட்டிருக்கலாம்…

அப்படி எந்த நெருக்கடியும் இல்லாமல் அவற்றை எல்லாம் தொகுத்து விரிவாக உங்கள் நிறுவனம் குறித்தும் உங்களைப் பற்றியும் விரிவாக எங்கள் பத்திரிகை மூலம் சொல்லுங்கள்…

எங்கள் பத்திரிகை பெரும்பாலான கல்வி நிறுவனங்களைச் சென்றடைந்து இளைஞர்களை பண்படுத்துகிறது.

25 ஆண்டுகளாக சாஃப்ட்வேர் துறையில் ஒரு பிசினஸ் பெண்மணியாக நீங்கள் ஜெயித்த கதையை எங்கள் பத்திரிகை மூலம் சொல்வதன் மூலம் கல்வி மற்றும் தொழில் யுக்திகள் இளைஞர்களுக்கு பேருதவியாக இருக்கும்…’

என மிக ஆழமாக செரிவாகப் பேசி என்னைப் பேச விட்டு கேள்விகளை அவர் வகுத்துக்கொண்டார்.

முற்றிலும் வித்தியாசமான நேர்காணலாக அமைந்துள்ளது. லே அவுட்டே வியக்க வைத்தது.

நன்றி

அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி
நவம்பர் 3, 2018

காம்கேர் ஜெயித்த கதை!

ஐ.டி நிறுவன CEO, தொழில்நுட்ப வல்லுநர், கிரியேடிவ் டைரக்டர், தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளர், எழுத்தாளர், பதிப்பாளர், பத்திரிகையாளர், தன்னம்பிக்கைப் பேச்சாளர் என பல்முகம் கொண்ட இவர் M.Sc., Computer Science மற்றும் M.B.A பட்டங்கள் பெற்றவர். Compcare Software Private Limited என்ற சாஃப்ட்வேர் தயாரிப்பு நிறுவனத்தின் CEO & MD ஆக கடந்த 25 ஆண்டுகளாக  செயல்பட்டுவருகிறார்.

100-க்கும் மேற்பட்ட தொழில்நுட்பம் மற்றும் வாழ்வியல் புத்தகங்கள் எழுதியுள்ள இவரது சாஃப்ட்வேர்  மற்றும் அனிமேஷன் தயாரிப்புகளும், தொழில்நுட்பப் புத்தகங்களும் பல பல்கலைக்கழகம் சார்ந்த கல்லூரிகளில் பாடதிட்டமாக உள்ளன. தமிழகத்தின் அத்தனை நூலகங்களிலும் இவரது தொழில்நுட்பப் புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன என்பது சிறப்பு.

பிராஜெக்ட்டுகளுக்காக பலமுறை அமெரிக்கா சென்று வந்தவர். தமிழகத்திலும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு உரை நிகழ்த்தி அவர்களின் உந்துசக்தியாகவும் விளங்குகிறார்.

சென்ற வருடம் தனது காம்கேர் நிறுவனத்தின் வெள்ளிவிழா ஆண்டு விழாவை கொண்டாடி இருக்கும்  ‘காம்கேர் புவனேஸ்வரி’ உற்சாகமாக தன் அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துகொண்டார்.

உங்கள் பெயர்க் காரணம் பற்றி…

1992 – சாஃப்ட்வேர் துறை அவ்வளவாக தமிழகத்திற்கு அறிமுகமில்லாத காலத்தில் அந்தத் துறையில் தொழில் வாய்ப்புகளைத் தேடி, களம் இறங்கினேன்.

அந்த காலகட்டங்களில் பெண்களுக்கு அதிகபட்சம் இரண்டே இரண்டு வாய்ப்புகள்தான். ஒன்று திருமணம். மற்றொன்று ஆசிரியர் பணி. அதில் உச்சமாக ஒருசிலர் பள்ளி / கல்லூரி தலைமையாசிரியர்களாகவும் / பிரின்ஸிபலாகவும் இருப்பார்கள்.

இந்த இரண்டையும் தவிர்த்து எனக்கான பாதையை நான் தேர்ந்தெடுத்தேன். அதற்காக என் படிப்பு, உழைப்பு, திறமை இவற்றை மூலதலமாக்கினேன்.

25 ஆண்டுக்கால கடும் உழைப்பில் படிப்படியான வளர்ச்சியில் ‘காம்கேர்’ என்ற என் நிறுவனத்தின் பெயரே எனக்கு அடையாளமாகி ‘காம்கேர் புவனேஸ்வரி’ என்று ஐகானாகவும் மாறிவிட்டது.

காம்கேர் என்ற பெயரை எப்படி தேர்ந்தெடுத்தீர்கள்? அடிப்படை பணித் தன்மை என்ன?

கம்ப்யூட்டர் கேர் (Computer Care) என்பதன் சுருக்கமே காம்கேர் (Compcare). ஆங்கிலம் மட்டுமே ஆட்சி கொண்டிருந்த கம்ப்யூட்டர் யுகத்தில்  முதன்முதலில் தமிழையும், கம்ப்யூட்டரையும் இணைத்து சாஃப்ட்வேர்களை தயார் செய்த பெருமை காம்கேருக்கு உண்டு.

காம்கேரின் ஆரம்ப கால பணியே தமிழ் எழுத்துருக்களை கம்ப்யூட்டரில் பயன்படுத்தும் முயற்சியே… எங்கள் இண்ட்ராநெட்டுக்குள்ளும், அலுவலக தனி கம்ப்யூட்டருக்குள்ளும் நாங்கள் எங்கள் எழுத்துருவையே பயன்படுத்தினோம்.

அதே காலகட்டத்தில் ஓவியங்களையும், கார்டூன்களையும் C, C++ மொழியில் வரைந்து மிகப்பெரிய நுணுக்கத்தை அறிமுகப்படுத்தினோம்.

கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் படித்த என் தங்கை நல்ல ஓவியர், எம்.சி.ஏ படித்த என் தம்பி கார்ட்டூனிஸ்ட்  என்பதால் அந்த முயற்சியையும் விடவில்லை….டாஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் கூட நாங்கள் C, C++ மொழியில் வரைந்த கார்ட்டூனை ஸ்கிரீன் சேவர் போல செயல்படுத்தியிருக்கிறோம்.

அப்போது கம்ப்யூட்டரையும் தமிழையும் கார்ட்டூனையும் இணைத்த முதல் தொழில்நுட்ப வல்லுநர் என்றெல்லாம் அவார்ட்டு கூட கிடைத்தது.

இப்படியாக நிறைய R & D செய்து சாஃப்ட்வேர் தயாரிப்பில் காம்கேரை பிராண்ட் ஆக்கினோம்.

அதன் பிறகு யுனிகோட் லதா போன்றவை புழக்கத்துக்கு வந்தன. கார்ட்டூன்களும், படங்களும், ஓவியங்களும் வரைய ஃப்ளாஷ், மாயா போன்ற அனிமேஷன் சாஃப்ட்வேர்களும் வந்தன.

உங்கள் பூர்வீகம், பெற்றோர் பற்றி…

நான் பிறந்தது கும்பகோணம். அப்பாவின் பூர்வீகம் மயிலாடுதுறை. அம்மாவின் பூர்வீகம் செஞ்சி.

அப்பா திரு. வி.கிருஷ்ணமூர்த்தி, சப் டிவிஷனல் இன்ஜினியர், அம்மா திருமிகு. கே. பத்மாவதி, சீனியர் டெலிபோன் சூப்பர்வைசர்.

இருவருமே தொலைபேசித் துறையில் பணிபுரிந்து வந்ததால் பணி இட மாற்றல் காரணமாக மயிலாடுதுறை, கும்பகோணம், கடலூர், விருதாச்சலம், சீர்காழி, திருவாரூர், திருச்சி எனப் பல்வேறு ஊர்களில் வசிக்க வேண்டிய நிர்பந்தம்.

எனக்கு ஒரு தங்கை, ஒரு தம்பி. இருவரும் அமெரிக்காவில் சாஃப்ட்வேர் துறையில் பணிபுரிகிறார்கள்.

என்ன படித்தீர்கள்? எங்குப் படித்தீர்கள்?

திருச்சி ஸ்ரீமதி இந்திரா காந்திக் கல்லூரியில் பி.எஸ்.ஸி கம்ப்யூட்டர் சயின்ஸ். 1992 – ஆம் ஆண்டு மயிலாடுதுறை ஏ.வி.சி. கல்லூரியில் எம்.எஸ்.ஸி கம்ப்யூட்டர் சயின்ஸ்.அடுத்து திருநெல்வேலி மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ பட்டம்.

தவிர நித்தம் மாறிவரும் தொழில்நுட்பத்தில் அன்றாடம் கற்றுக்கொண்டிருக்கிறேன்.

உங்கள் இளமைக் காலம் பற்றிச் சொல்லுங்களேன்…

என் அம்மா நிறைய படிப்பார். அது இது என்றில்லாமல் எது கிடைத்தாலும் படிப்பார். மளிகை சாமான் கட்டி வரும் செய்தித்தாளைக்கூட விடமாட்டார், படித்துவிடுவார். சாப்பிடும்போதும் கையில் ஏதேனும் ஒரு புத்தகம் இருக்கும்.

இத்தனைக்கும் என் அம்மாவும் அப்பாவும் அந்த காலத்திலேயே இரவு பகல் என 24 மணிநேர சுழற்சி வேலையில் தொலைபேசித் துறையில் பணிபுரிந்து வந்தனர்.

மழை, பனி, புயல், வெள்ளம் எதுவாக இருந்தாலும் அலுவலகம் செல்ல வேண்டிய பொறுப்பான பதவியில் இருவருமே இருந்ததால் எந்தக் காரணத்தைச் சொல்லியும் விடுப்பு எடுத்து வீட்டில் தங்க முடியாது.

அப்பாவுக்கு பகல் ஷிஃப்ட் பணி என்றால்,  அம்மாவுக்கு இரவு நேர ஷிஃப்ட் பணி. அதுப்போல அம்மாவுக்கு பகல் ஷிஃப்ட் என்றால் அப்பா இரவு ஷிஃப்ட் பணி. இப்படி இருவரும் மாறிமாறி வேலைக்குச் சென்று உழைத்ததைப் பார்த்து வளர்ந்ததால் எங்களுக்கு உழைப்பு என்பது வாழ்க்கையோடு விரும்பி இணைந்த ஒரு விஷயமாகவே மாறிப்போனது.

இவ்வளவு நெருக்கடிகள் இருந்தாலும் என் அம்மா படிப்பதை மட்டும் என்றுமே விட்டதில்லை. தேடித்தேடிப் படிப்பதில் அவரை மிஞ்ச முடியாது. தான் படித்ததில் பிடித்ததை கட் செய்து வைப்பார்.

விடுமுறை தினங்களில் அப்பாவுடன் அமர்ந்து அவற்றை எங்கள் கைகளால் பைண்டிங் செய்வதே அந்த நாளில் எங்கள் ‘சம்மர் கோர்ஸ்’. அம்மாவின் படிக்கும் ஆர்வத்துக்கு அப்பா என்றுமே தடையாக இருந்ததில்லை.

என் அம்மாவின் புத்தகங்களை சேகரிப்பதற்காக, சுவர் உயர மர பீரோ ஒன்றை செய்து சர்ப்ரைஸாக பரிசளித்தார். அதுபோன்ற அலமாரிகளை பொதுவாக நூலகங்களில் மட்டுமே பார்க்கமுடியும்.

கோகுலம், ரத்னபாலா, அம்புலிமாமா, பாலமித்ரா போன்றவை எங்களை வளர்த்த புத்தகங்கள். இன்றும் அம்மா சேகரித்து எங்கள் கைகளால் பைண்டிங் செய்த சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன், அலை ஓசை போன்றவை எங்கள் வீட்டு லைப்ரரியில் உள்ளன.

புத்தகங்களுடனேயே வளர்ந்ததால் எங்களுக்குள் இருந்த கிரியேடிவிடியும் வளர்ந்தது. வாசிப்பு கற்பனையின் உச்சத்தை எங்களுக்கு காட்டியது. எழுத்து, கார்ட்டூன், ஓவியம் என ஆளுக்கொரு துறையில் சிறப்புடன் இருக்கிறோம்.

‘விளையும் பயிர் முளையிலேயே தெரியும்’ என்பதற்கு ஏற்ப ‘என் திறமை எழுத்து’ என்பதை 12 வயதில் வெளியான கதை நிரூபித்தது. அதன் பின்னர் அந்தத் திறமையை கெட்டியாகப் பிடித்துக்கொண்ட நான் அதையே என் மூச்சாகக் கொண்டு என் படிப்புடன் இணைத்து என் திறமையையும் வளர்க்கத் தொடங்கினேன்.

அப்போது என் பெயரில் ரப்பர் ஸ்டாம்ப் செய்துகொடுத்து நான் பத்திரிகைகளுக்கு அனுப்பும் படைப்புகளில் ரப்பர் ஸ்டாம்ப்பினால் பெயரை அச்சடித்து அனுப்பும் வழக்கத்தை உண்டாகினார். அதுபோலவே என் தம்பி, தங்கைகளுக்கும் செய்துகொடுத்தார். எங்கள் படைப்புகள் பல முன்னணி பத்திரிகைகளில் வெளிவரத் தொடங்கின.

தினமும் அதிகாலை 3 மணிக்கு எழுந்து 5 மணிவரை எழுதுவேன். அதன்பின்னர் 1 மணிநேரம் தூங்கி எழுந்து படிப்புக்கு நேரம் ஒதுக்கி… இதுதான் நான் கல்லூரி முடிக்கும்வரை என் தினசரி வேலையாக இருந்தது.

அன்றாடம் பள்ளி / கல்லூரியில் கிடைக்கும் அனுபவங்களை கற்பனை கலந்து சுவையாக எழுதுவேன். இறுதியில் அது கதையாகவோ, கட்டுரையாகவோ அல்லது கவிதையாகவோ ஏதேனும் ஒரு வடிவில் வந்துநிற்கும். பின்னர் அதை சுயமுகவரியிட்ட கவருடன் பத்திரிகை அலுவலகங்களுக்கு அனுப்பி வைப்பேன். பெரும்பாலும் திரும்பி வரும். திரும்பி வருகின்ற படைப்புகளை மேம்படுத்தி சளைக்காமல் மறுபடியும் அனுப்புவேன். இதுவே என் சுவாரஸ்யமான ரொட்டீனாக இருந்தது.

தினமும் பள்ளி / கல்லூரியில் இருந்து திரும்பும்போது போஸ்ட் பாக்ஸில் ஏதேனும் வந்திருக்கிறதா என பார்ப்பது ஒரு சுகமான அனுபவமாக அமைந்தது. ஒன்று படைப்புகள் திரும்ப வந்திருக்கும் அல்லது படைப்புகள் பத்திரிகையில் அச்சில் வந்திருக்கும். இரண்டில் ஒன்று நிச்சயம். அதுவே என் சுவாரஸ்யம். பொழுதுபோக்கு. அன்றாடப் பணிகளுள் ஒன்று.

இப்படி பேனா பிடித்து எழுதத் தொடங்கிய என் எழுத்துப் பயணம் கம்ப்யூட்டரில், ஆன்லைனில், சமூகவலைதளங்களில் என வளர்ந்து மொபைல் ஆப்பில் வந்து நிற்கிறது.

எப்படி பிசினஸுக்கு வந்தீர்கள்?

என் கற்பனைத் திறனும், படைப்பாற்றலுமே என்னை பிசினஸ் செய்ய வேண்டும் என்று தூண்டியது என்று சொன்னால் அது ஆச்சர்யமான விஷயம் தான்.

நல்ல தாய் தந்தை என்பதையும் மீறி, நல்லத் தோழமையோடு பழகியதால், சிறிய வயதில் இருந்தே எனக்கு என் பெற்றோரைத் தவிர என் வயதை ஒத்த நண்பர்கள் குறைவு. அவர்களிடம் பகிர்ந்து கொள்ளும் விஷயங்கள் மற்றும் வெளி உலகில் என்னை பாதிக்கும் விவரங்களை காகிதத்தில் எழுத ஆரம்பித்தேன்.

பள்ளிப் பாடப் புத்தகங்களைப் படிக்கும் போது  ஐசக் நியூட்டன், சர்.சி..வி ராமன், கணித மேதை ராமானுஜம் போன்றவர்களின் கண்டுபிடிப்புகளும், அப்ரகாம்லிங்கன்,  இந்திரா காந்தி போன்றவர்களின் சாதனைகளும் அவர்களது புகைப்படங்களும் எனக்குள்  இருந்த சாதனைத்  ‘தீ’-க்கு எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதைப் போல அமைந்தது.

இவர்களைப் போல நாமும் ஏதேனும் சாதிக்க வேண்டும். எனது பெயரில் கண்டுபிடிப்புகள் உருவாக வேண்டும் என்றெல்லாம் கற்பனை செய்ய ஆரம்பித்தேன்.

என் பெயரில் கண்டுபிடிப்புகள் வர வேண்டும் என்றெல்லாம் கனவு கொண்டிருந்த நான் 1992-ம் ஆண்டு M.Sc., முடித்த பின்னர், ‘அடுத்து என்ன செய்யலாம்?’ என்று சிந்தித்துக் கொண்டிருந்த நேரத்தில், ‘நாமே ஏன் சாஃப்ட்வேர் தயாரிக்கும் நிறுவனம் தொடங்கக் கூடாது?’ என்று என் பெற்றோர் கொடுத்த ஒரு சிறு பொறியில் அவர்கள் முழு ஆதரவோடு 1992 ஆம் ஆண்டு ‘காம்கேர் சாஃப்ட்வேர்’ என்ற பெயரில் என் நிறுவனம் பிறந்தது.

என் பெயரை  ‘காம்கேர் புவனேஸ்வரி’ என்று மாற்றியமைத்தேன். நான் வேறு என் நிறுவனம் வேறு என்ற பாகுபாடு இல்லாமல் இரவு பகல் பார்க்காமல்   முழு மூச்சுடன் உழைக்கத் தொடங்கினேன்.  ஸ்மார்ட் ஃபீல்டில் நிலைத்திருக்க  ஹார்ட் ஒர்க் செய்யத் தொடங்கினேன்.

இன்று எங்கள் காம்கேரின் சாஃப்ட்வேர், அனிமேஷன், ஆவணப்படங்கள், புத்தகங்கள் என அனைத்து படைப்புகளும் என் பெயரிலும், என் நிறுவனம் பெயரிலும் தான் வருகின்றன.

என் கனவு பலித்தது. என் பெயரே என் நிறுவனத்துக்கு விளம்பரம் ஆனது. என் பெயர் ஒரு பிராண்ட் ஆக உருவெடுத்துள்ளது.

காரணம் வாசிப்பும், எழுத்தும், கற்பனையும்தான்!

என்னென்ன சாஃப்ட்வேர் தயாரிக்கிறீர்கள்?

ஆரம்பத்தில் வங்கிகள், பள்ளிகள், மளிகைக்கடை, மெடிகல்ஷாப் என நம்மைச் சுற்றியுள்ள நிறுவனங்களுக்காக சாஃப்ட்வேர் தயாரிப்பதை அடிப்படை நோக்கமாகக் கொண்டு செயல்பட ஆரம்பித்தேன். தேவைப்படுபவர்களுக்கு தமிழிலும் அவை இயங்குமாறு வடிவமைத்துக்கொடுக்க ஆரம்பித்தோம்.

ஆங்கிலத்தில் மட்டுமே கோலோச்சிக்கொண்டிருந்த கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தைத்  தமிழிலும் கொண்டுவந்தபோது அமோக வரவேற்பு கிட்டியது.

இடையே என் நிறுவன தயாரிப்புகளுக்கு நாங்கள் பயன்படுத்தும்  சாஃப்ட்வேர்கள் குறித்து மங்கையர் மலர், தினமலர், தமிழ் கம்ப்யூட்டர் போன்ற முன்னணிப் பத்திரிகைகளில் எழுத ஆரம்பித்தேன். இதன் மூலம் தொழில்நுட்பம் மிக எளிதாக சாமானியர்களையும் சென்றடைந்தது.

‘தகவல் தொழில்நுட்பம் ஓர் அறிமுகம்’ – இது தமிழில் வெளியான என் முதல் தொழில்நுட்பப் புத்தகம். ‘An Easy Way to Learn C Language’ – என் முதல் ஆங்கிலத் தொழில்நுட்பப் புத்தகம். அப்போது என் வயது 25.

இப்படியாக என் பணியோடு சேர்ந்து எழுத்தும் பயணப்பட ஆரம்பித்தது.

உங்கள் நிறுவனத்தில் என்னென்ன செய்கிறீர்கள்?

இன்று, என் நிறுவனத்தில்  சாஃப்ட்வேர் / மொபைல் ஆப் தயாரிப்பு, அனிமேஷன் கார்ட்டூன் சிடிக்கள் வடிவமைத்தல், ஆவணப் படங்கள் வெளியிடுதல், புத்தக வடிவமைப்பு என நான்கு துறைகள் இயங்கி வருகின்றன.

ஒவ்வொரு துறை மூலமும் நான் பெறுகின்ற தொழில்நுட்ப அனுபவங்களை, புத்தகமாக எழுதி வெளியிட்டு வருகிறேன்.

சாஃப்ட்வேர் தயாரிப்பை முதன்மைப் பணியாகக் கொண்டிருந்த எங்கள் காம்கேர் சாஃப்ட்வேர் நிறுவனம் 2000-ம் வருடம் அனிமேஷன் துறையில் காலடி எடுத்து வைத்திருந்த நேரம். எங்கள் முதல் கார்ட்டூன் அனிமேஷன் படைப்பு ‘தாத்தா பாட்டி கதைகள்’.

சிடிக்கள் குறைந்தபட்சம் 300 ரூபாய் விற்றுக்கொண்டிருந்த அந்த காலத்தில் நாங்கள் 99 ரூபாய்க்கு அறிமுகப்படுத்தியதாலும் நம் நாட்டு கலாச்சாரப் பண்பாட்டை வலியுறுத்தும் நல்ல தரமான தயாரிப்பாக இருந்ததாலும் அந்த வருடப் புத்தகக் கண்காட்சியில் எங்கள் சிடி, விற்பனையில் சாதனை படைத்தது.

இந்த அனிமேஷன் படைப்புக்குக் கிடைத்த வரவேற்பின் உற்சாகத்தில் ‘பேரன் பேத்திப் பாடல்கள்’ என்ற அனிமேஷன் படைப்பை குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா பாடல்களை வைத்து தயாரித்தோம். அதற்கும் பெருத்த வரவேற்பைப் பெற்றது.

அடுத்தடுத்து  இராமாயணக் கதைகள், முல்லா கதைகள், ஈசாப் கதைகள், தெனாலிராமன், தினம் ஒரு பழம், தமிழ் கற்க, மழலை முத்துக்கள், மழலை மெட்டுக்கள், மழலைச் சந்தம் என எங்கள் அனிமேஷன் படைப்புகள் தொடர்ச்சியாக வெளிவர ஆரம்பித்தன.

அனிமேஷனில் கந்தர் சஷ்டிக்கவசம் பாடலை அனிமேஷன் மற்றும் அதன் விளக்கத்துடன் தயாரித்தபோது அது எங்கள் ஆகச்சிறந்தப் படைப்பானது.

பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளும் பயன்படுத்தும்விதத்தில் நாங்கள் உருவாக்கியிருந்த மல்டிமீடியா படைப்புகளான திருவாசகம், திருக்குறள் போன்றவை எங்கள் காம்கேர் நிறுவனத்தின் அடையாளமாகிப் போனது.

மகாத்மா காந்தி வாழ்க்கை வரலாற்றில் தொடங்கிய கல்வித்துறைப் படைப்புகளுக்கான எங்கள் அனிமேஷன் பயணம் பள்ளி மற்றும் கல்லூரி பாடதிட்டங்களுக்காக இன்றுவரை பயணப்பட்டு வருகிறது.

இதை அடுத்து ஆவணப்படங்கள் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டோம். எங்கள் அப்பா அம்மாவின் பயோகிராஃபி தான் முதல் ஆவணப்படம். அதை அடுத்து கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், தேவைப்பட்டால் தனிநபர்களுக்கும், எங்கள் அனிமேஷன் தயாரிப்புகளுக்காகவும் ஆவணப்படங்கள் தயாரிக்கத் தொடங்கினோம்.

அச்சுப் புத்தகங்களைத் தொடர்ந்து இ-புத்தகங்களையும் வெளியிட்டு வருகிறோம்.

வானொலி மூலம் ‘தினம் ஒரு திருக்குறள்’ என்ற தலைப்பில் தினந்தோறும் ஒரு குறள் படித்து, பாட்டாக பாடி, பொருள் சொல்லி, கதை மற்றும் அன்றாட நிகழ்வுகளுடன் விளக்கம் கூறி 1330 குறள்களையும் பாண்டிசேரி FM -காக தயாரித்தளித்தோம். அதுபோல ‘தினம் ஒரு கதை’ என்ற தலைப்பில் குழந்தைகளுக்கான கதைகளையும் தயாரித்தளித்தோம். இதுபோன்ற வானொலி நிகழ்ச்சிகளையும் அவ்வப்பொழுது தேவைக்கு ஏற்ப தயாரிக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகிறோம்.

தொலைக்காட்சி வாயிலாகவும் கம்ப்யூட்டர் சார்ந்த  கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சுயதொழில்முனைவோருக்கான நிகழ்ச்சிகள் தயாரித்து வழங்கி வருகிறோம். ஜெயா டிவி, மக்கள் டிவி போன்ற சேனல்களில் நான் தயாரித்து வழங்கிய நிகழ்ச்சிகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. வெளிநாட்டு வாழ் தமிழர்களுக்காக  TTN தொலைக்காட்சி மூலம் கம்ப்யூட்டர் கல்வி / பிசினஸ் வாய்ப்புகள் குறித்து நாங்கள் தயாரித்து வழங்கிய நிகழ்ச்சிகள் எங்களுக்கு அடையாளமாயின.

குழந்தையாக இருந்தபோது அப்பா அம்மாவிடம் கதை கேட்டு வளர்ந்த நான், சிறுமியாக இருந்தபோதே கதை, கவிதை, கட்டுரை எழுத ஆரம்பித்து பள்ளி கல்லூரி காலங்களில் என் வயதுக்கேற்ப எழுதி கல்விக் காலகட்டம் முடிவடைவதற்குள்ளேயே 100-க்கும் மேற்பட்ட படைப்புகள் மூலம் சிறந்த இலக்கியப் படைப்பாளியாக இலக்கிய உலகில் அறிமுகப்படுத்தப்பட்டேன்.

காம்கேர் சாஃப்ட்வேர் நிறுவத்தைத் தொடங்கி ஒரு நிர்வாகியாக என் தொழில்நுட்பப் பயணத்தைத் தொடங்கிய பின்னர், காம்கேர் புவனேஸ்வரியாக என் படைப்புத் திறனையும் கற்பனைத் திறனையும் தொழில்நுட்பத்துடன் இணைத்து அச்சுப் புத்தகங்கள், இ-புக்ஸ், அனிமேஷன் சிடிக்கள், கார்ட்டூன் படைப்புகள் என வெளியிடத் தொடங்கி இன்று குழந்தைகளின் கைகளில்கூட கட்டாயமாக வீற்றிருக்கும் மொபைலில் கதைசொல்லி ஆப்ஸ்களை வெளியிடும் முயற்சியில் இருக்கிறோம். விரைவில் அந்த முயற்சியும் வெற்றியடையும்.

உங்கள் எழுதிய தொழில்நுட்பப் புத்தகங்கள் பற்றி…

உங்கள் முன் உள்ள ஒரு கம்ப்யூட்டருடன், நான் எழுதிய புத்தகத்தை வைத்துக்கொண்டால்போதும். புத்தகத்தில் படங்களுடன் நான் வழிகாட்டியபடி கம்ப்யூட்டரில் செய்துபார்த்துக்கொண்டே வரலாம். ஆசிரியர் இல்லாமலேயே எந்த ஒரு சப்ஜெக்ட்டிலும் மாஸ்ட்டராகிவிடலாம். ஏராளமான விளக்கப்படங்களுடன், செயல்முறை வழிகாட்டுதல்களோடு மல்டிமீடியா புத்தகம் போல எழுதுவதே என் எழுத்தின் அடையாளம்.

மனதை Format செய்யுங்கள், குழந்தைகள் உலகில் நுழைய பெற்றோருக்கான பாஸ்வேர்ட், திறமையை பட்டைத் தீட்டுங்கள், இப்படிக்கு அன்புடன் மனசு, படித்த வேலையா பிடித்த வேலையா,  என மனித மனங்களை ஆராய்ந்து வாழ்வியல் குறித்து பல்வேறு நூல்களை எழுதி உள்ளேன்.

இப்படியாக 100-க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதி உள்ளேன்.

உங்கள் நிறுவன சாதனைகளாக எதைக் கருதுகிறீர்கள்?

எங்கள் காம்கேர் நிறுவனத்தின் சில்வர் ஜூப்லி ஆண்டில் இருக்கிறோம். இந்த 25 வருடங்களில் எங்கள் நிறுவனத்தின் சாஃப்ட்வேர் அனிமேஷன் தயாரிப்புகள் மூலம் எனக்குக் கிடைத்த அனுபவங்களை ஆவணப்படுத்தும் விதமாக அவற்றை அந்தந்த காலகட்டத்திலேயே புத்தகங்களாக எழுதி பதிவு செய்து வந்தேன். இன்று வரை அதை விடாமல் தொடர்கிறேன். இதுவே என் மிகப்பெரிய சாதனை.

பார்வையற்றோர் மற்றவர்கள் உதவியின்றி தாங்களாகவே ஸ்கிரீன் ரீடிங் தொழில்நுட்பம் மூலம் தேர்வு எழுத உதவும் ‘ஸ்க்ரைப் சாஃப்ட்வேர்’ உருவாக்கியுள்ளோம்.

என் நிறுவன சாஃப்ட்வேர், அனிமேஷன் தயாரிப்புகளும், ஆவணப்படங்களும், நான் எழுதிய புத்தகங்களும் பல்வேறு பல்கலைக்கழகங்களில் பாடத்திட்டமாக உள்ளன.

தமிழகமெங்கும் உள்ள அனைத்து நூலகங்களிலும் நான் எழுதிய புத்தகங்கள் உள்ளன.

இந்தியாவில் மட்டும் அல்லாமல் இலங்கை, சவுதி, அமெரிக்கா எனப் பல்வேறு நாடுகளில் இருந்து என் புத்தகங்களைப் படித்து பயன்பெற்ற வாசகர்கள் என்னைத் தொடர்புகொண்டு தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவிக்கும்போது அவை எனக்கு உற்சாக டானிக்காக அமைகின்றன.

மேலும், என் புத்தகங்களை படித்து சாஃப்ட்வேர் துறையில் பணி புரிபவர்களும், தனியாக பிசினஸ் தொடங்கியவர்களும் என்னை தொடர்பு கொள்ளும்போது அளவிலா மகிழ்ச்சி அடைவேன்.

சமுதாயத்துக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்ற நோக்கில் அறக்கட்டளை!  

என் அப்பா ‘கிருஷ்ணமூர்த்தி’, அம்மா ‘பத்மாவதி’ இருவரின் பெயரில்  ‘ஸ்ரீபத்மகிருஷ்’ என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்றை நடத்தி வருகிறேன்.

என் திறமைக்கும் அறிவுக்கும் மதிப்பளிக்கும் இந்த சமுதாயத்துக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்ற நோக்கில் இந்த அறக்கட்டளையை ஆரம்பித்தேன்.

இதன் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி, வேலைவாய்ப்பு என ஏதேனும் ஒரு விதத்தில் உதவுவது என்பதை நோக்கமாகக் கொண்டோம்.

வருடந்தோறும் ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்குவோருக்கு ‘ஸ்ரீபத்மகிருஷ்’ விருதளித்து வருகிறோம்.

சவால்கள்…வெற்றி தோல்விகள்… போட்டிகள்…

தோல்விகளையும், சவால்களையும் நான் தனியாகப் பிரித்துப் பார்ப்பதில்லை. அவற்றையும் என் தொழில் பயணத்தின் ஓர் அங்கமாக கருதுகிறேன்.

நான் பிசினஸ் தொடங்கிய போது,  நம்நாட்டில் தொழில்நுட்பத்தின் அறிமுகக் காலம். மக்களும் அதைப் பயன்படுத்த தயங்கிக் கொண்டிருந்த காலம். ஆக தொழில்நுட்பமும் என் கட்டுப்பாட்டில் இருந்தது. மக்களுக்கு நான் எடுத்துச்சொல்லி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய சூழலில் இருந்ததால் மக்களும் என் கட்டுப்பாட்டில் இருந்தார்கள்.

முதல் தலைமுறை பிசினஸ் பெண் என்பதால், பத்திரிகை தொலைக்காட்சி என அனைத்து ஊடகங்களும் போட்டிப் போட்டுக்கொண்டு என் திறமையை வெளி உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காண்பித்தன.

செய்யும் வேலையில் நேர்மை, ஒழுக்கம், நேரம் தவறாமை இதுபோன்ற காரணங்களினால் தொழில்நுட்பத் தேவை என்றாலே காம்கேருக்குச் செல்லலாம் என்ற எண்ணம் மக்கள் மனதில் ஆழமாக விழுந்தது. வாய்மொழி விளம்பரங்கள் மூலமே ஆரம்பகாலங்களில் என் நிறுவனம் செழிப்பாக வளர்ந்தது.

என் நிறுவனத்தில் பணி புரிபவர்களின் குடும்பத்தை என் குடும்பமாகப் பாவிக்கிறேன். அவர்கள் ஒவ்வொருவரையும் அன்போடும், தேவைப்படும் போது கண்டிப்போடும் நடத்திச் செல்கிறேன்.

கயிற்றின் மேல் நடக்கும் சிறுமி கீழே விழுந்து விடாமல் இருக்க எத்தனைப் பிரயத்தனம் செய்ய வேண்டியுள்ளது. அவள் கவனம் முழுவதும் கயிற்றின் மீதும், பாதையின் மீதும் தான் இருக்க வேண்டும். அதை விட்டு விட்டி அந்தச் சிறுமி அக்கம் பக்கம் வேடிக்கைப் பார்க்கும் கூட்டத்தை ஒரு செகண்ட் பார்த்து விட்டாலோ அல்லது அவர்களது கை தட்டலுக்கு ஒரு நிமிடம் காது கொடுத்து கேட்டு பூரிப்படைந்து விட்டாலோ என்ன ஆகும் அவள் கதி?

அது போல தான் நான் என் பாதையில் சென்று கொண்டே இருக்கிறேன். போட்டி போட நான் என்றுமே விரும்பியதில்லை. என்னுடன் ஓடுபவர்களைப் பற்றி நான் கவலைப்படுவதில்லை. நான் எந்த அளவுக்கு ஓடுகிறேன் என்பதில் மட்டுமே கவனம் செலுத்துகிறேன். இது தான் என் வெற்றியின் இரகசியம்.

இளம்தலைமுறையினருக்கு சொல்ல விரும்பும் கருத்து?

பெண்கள் அவர்கள் திறமையால் மதிக்கப்பட வேண்டும். அப்படி மதிக்கப்படுவதை கர்வமாக நினைக்க வேண்டும். திறமையுள்ள பெண்கள் தான் வெகுஜன ஊடகங்களில் வெற்றி பெறுகிறார்கள் என்பதை இளம் தலைமுறைப் பெண்கள் உணர வேண்டும்.

ஆண்கள், பெண்கள் யாராக இருந்தாலும் எந்த பிசினஸ் செய்தாலும் தங்களுக்கென ஒரு கொள்கையை வரையறை செய்துகொள்ள வேண்டும். எந்தக் காரணம்கொண்டும் அதை யாருக்காகவும் விட்டுக்கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. சுயத்தை இழக்காமல் வாழ்க்கையிலும் பிசினஸிலும் ஜெயிக்க முடியும்.

Click Here…

நமது நம்பிகையில் நவம்பர் 2018 இதழில் வெளியான என் நேர்காணலை பத்திரிகை வடிவில் படிக்க…

(Visited 535 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon