வெற்றி என்றால் என்ன?
வெற்றி என்பது பணம் சம்பாதிப்பதா, புகழ் பெறுவதா, சொத்து சேர்ப்பதா, உயர் பதவி அடைவதா அல்லது அடுத்தவர்களைத் தோற்கடிப்பதா…
வெற்றி என்ற ஒரு வார்த்தையை தனியாக எடுத்து வைத்துக்கொண்டு விடை தேடினால் இப்படிப்பட்ட குழப்பங்கள்தான் பதிலாகக் கிடைக்கும்.
நாம் நினைக்கின்ற எல்லாம் நல்லபடியாக நடந்து முடிந்தால் அது நமக்கு சந்தோஷத்தைக் கொடுக்கிறது. அதுவே வெற்றி என நினைக்கிறோம். நாம் நினைப்பது நடக்காவிட்டால் வருத்தமடைகிறோம். அதுவே தோல்வி என நம்புகிறோம்.
உண்மையில் வெற்றி என்பது ஒரு தொடர் பயணம். நமக்கான திறமை என்ன என கண்டறிந்து நம் முழு ஆற்றலையும் ஒருங்கிணைத்து வாழ்க்கையில் நாம் எப்படி இருக்க வேண்டும் என முடிவு செய்து, அதற்கானப் பாதையில் நேர்மையாகவும் ஒழுக்கமாகவும் செயல்பட்டு நாமும் மகிழ்ந்து மற்றவர்களுக்கும் அதன் தாக்கத்தை பூத்தூவலாக தூவியபடி அமைதியான மனநிலையில் பேரானந்தத்துடன் பயணம் செய்வதே வெற்றியை நோக்கிச் செல்வதன் சூட்சுமம்.
ஒழுக்கமும் நேர்மையும் திறமையுடன் இணையும்போது உண்டாகும் அழகே உலக அழகு. அதுவே வெற்றியின் OTP.
ஒரு செயலில் குறிக்கோளோடு ஈடுபடும்போது அதன் பலன் நமக்கு சாதகமாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. எதிர்மறையாகவும் அமையலாம். சாதக பாதகத்தால் வெற்றி தோல்வியை நிர்ணயம் செய்யக் கூடாது.
மற்றவர்களை விட ஒரு அடியாவது முன்னால் இருப்பதுதான் வெற்றி என்று நம்மில் பெரும்பாலானோர் நினைக்கிறார்கள். அதுவும் சரியான கண்ணோட்டம் அல்ல. அப்படி நினைத்து செயல்பட்டால் மன உளைச்சலும், பதட்டமும் மட்டுமே பலனாகக் கிடைக்கும்.
ஒரு பத்திரிகை பேட்டியில் வளரும் தொழிலதிபர் ஒருவரிடம் ‘ஆண்களுக்கான பிசினஸ் உலகில் பெண்ணாக நீங்கள் எதிர்கொண்ட சவால்கள், போட்டிகள் இவற்றை எப்படி சமாளித்து வெற்றி பெற்றீர்கள் எனச் சொல்லுங்களேன்…’ என்ற கேள்வியைக் கேட்டபோது அவர், ‘கயிற்றின் மேல் நடக்கும் சிறுமி கீழே விழுந்து விடாமல் இருக்க எத்தனைப் பிரயத்தனம் செய்ய வேண்டியுள்ளது. அவள் கவனம் முழுவதும் கயிற்றின் மீதும், பாதையின் மீதும்தான் இருக்க வேண்டும். அதை விட்டு, அந்தச் சிறுமி அக்கம் பக்கம் வேடிக்கைப் பார்க்கும் கூட்டத்தை ஒரு நொடி பார்த்து விட்டாலோ அல்லது அவர்களது கை தட்டலை காது கொடுத்து கேட்டுப் பூரிப்படைந்து விட்டாலோ என்ன ஆகும் அவள் கதி? அது போல தான் நான் என் பாதையில் சென்று கொண்டே இருக்கிறேன். போட்டி போட என்றுமே விரும்பியதில்லை. என்னுடன் ஓடுபவர்களைப் பற்றிக் கவலைப்படுவதும் இல்லை. நான் எந்த அளவுக்கு ஓடுகிறேன் என்பதில் மட்டுமே கவனம் செலுத்துகிறேன். இது தான் என் வெற்றியின் இரகசியம்.’ என பதில் கூறினார். இந்த பதில்தான் அவரது வெற்றிக்கான OTP.
சிற்பி ஒருவர் ஒரு கோயிலுக்காக அம்மன் சிலை வடித்துக்கொண்டிருந்தார். அவர் அருகே அதுபோலவே மற்றொரு அம்மன் சிலை பூர்த்தியடைந்த நிலையில் அம்சமாய்.
அதைப் பார்த்துக்கொண்டிருந்த அந்த ஊர் பெரியவர், ‘ஏன் மற்றொரு சிலை வடிக்கிறாய், கோயிலில் ஒருசிலை தானே வைக்கப்போகிறார்கள்…’ என கேட்டார். அதற்கு அந்தச் சிற்பி, ‘ஐயா இந்தச் சிலையின் மூக்குப் பகுதி தரையில் பட்டு சிறிது பிளவுபட்டுவிட்டது அதனால்தான்…’ என்று பதில் சொன்னார்.
உடனே அந்தப் பெரியவர் பூர்த்தியடைந்த அந்தச் சிலையை முழுமையாக உற்றுப் பார்த்துவிட்டு, ‘எங்கு பிளவுபட்டிருக்கிறது… என் கண்களுக்குத் தெரியவில்லையே…’ என கேட்டார். அதற்கு சிற்பி, ‘ஐயா, இதோ பாருங்கள் மூக்கின் நுனியை…’ என கண்களுக்கே தெரியாத அந்த பிளவுபட்ட பகுதியைக் காண்பித்தார்.
அதற்கு அந்தப் பெரியவர், ‘இது யார் கண்களுக்குத் தெரியப் போகிறது… நீ சொன்னதால்தான் எனக்கே தெரிகிறது… இதையே பயன்படுத்தலாமே’ என்றார். அதற்கு சிற்பி, ‘ஐயா இந்தச் சிலையின் மூக்குப் பகுதியில் உள்ள சிறு பாதிப்பு யார் கண்களுக்கும் தெரியாது என்பது உண்மைதான். ஆனால் என் மனதுக்குத் தெரியுமே… இந்தக் கோயிலை கடந்து செல்லும்போதெல்லாம் எனக்கு உறுத்தலாய் இருக்குமே…’ என பதில் சொன்னார்.
நாம் செய்கின்ற செயலை நேர்மையாகச் செய்வதில்தான் அந்த செயலை செய்வதனால் கிடைக்கும் வெற்றி இருக்கிறது என்பதைச் சொன்ன சிற்பியின் பதிலில்தான் அவருடைய வெற்றிக்கான OTP உள்ளது.
ஒருமுறை சிவானந்தா குருகுலத்துக்கு வருகை தந்து அங்கு படிக்கின்ற மாணவர்களுக்காக உரையாற்றினார் அப்துல்கலாம். அப்போது மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் பகுதியில் ஒரு மாணவன் கேட்ட கேள்விக்கு கலாம் சொன்ன பதிலில் வெற்றியின் உண்மையான நோக்கத்துக்கான விடையும் இருக்கிறது.
‘நீங்கள் எத்தனையோ ஆராய்ச்சிகளில் வெற்றி பெற்றிருக்கிறீர்கள். நீங்கள் எந்த ஆராய்ச்சியில் வெற்றி பெற்றபோது மகிழ்ச்சி அடைந்தீர்கள்?’
‘நாங்கள் விண்வெளிக்கு ஏவுகணையை அனுப்பியபோது ஒரு பிரச்சனை ஏற்பட்டது. அந்த ஏவுகணை அதிக கணமாக இல்லாமல் இருந்தால்தான் எரிபொருளை தூக்கிக்கொண்டு மேலே எழும்ப சுலபமாக இருக்கும். எடையும் குறைவாக இருக்க வேண்டும். அதேநேரம் விண்வெளியில் ஏதேனும் தாக்கினால் சேதமாகாமலும் இருக்க வேண்டும். அப்போது நிறைய ஆராய்ச்சிகள் செய்தோம். கடைசியில் நார்த்தன்மை ஏற்றப்பட்ட பிளாஸ்டிக்கினால் (Fibre-reinforced plastic) ஒரு பொருளை உருவாக்கி அதில் ஏவுகணையை அனுப்பி வெற்றி பெற்றோம்.
அப்போது பிரசாத் என்ற பேராசிரியர் நிசாம் இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிகல் சயின்சஸ் என்ற நிறுவனத்தில் இருந்து வந்திருந்தார். நான் தயாரித்திருந்த எடை குறைவான பொருளைப் பார்த்தவர், என்னை தன்னுடன் அவர்களுடைய எலும்பியல் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு 15 வயதுக்குக் கீழ் உள்ள போலியோவால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மூன்று கிலோ எடை உள்ள சாதனத்தை கால்களில் பொருத்திக்கொண்டு செயற்கைக் கால்களால் கஷ்டப்பட்டு இழுத்து இழுத்து நடந்துகொண்டிருந்தார்கள். பேராசிரியர் பிரசாத் அறிவுரையின்படி விண்வெளிக்காக நான் தயாரித்த எடை குறைவான பொருளால், சோதனை முயற்சியாய் அங்குள்ள ஐந்து குழந்தைகளுக்கு 300 கிராம் எடையுள்ள சாதனத்தை (Floor Reaction Orthosis – FRO) தயாரித்துக் கொடுத்தேன். மூன்று கிலோவில் இருந்து 300 கிராம் எடை குறைந்ததால், அதைப் பொருத்திக்கொண்ட அந்தக் குழந்தைகள் ஆடி ஓடி விளையாடி சைக்கிள் ஓட்டி மகிழ்ந்தார்கள்.
எடை குறைவான நேர்த்தியான பொருளால் ஏவுகணையை விண்வெளிக்கு அனுப்பி அதன் மூலம் கிடைத்த வெற்றியால் எனக்கு உண்டானது மகிழ்ச்சி.
அதே பொருளால் போலியோவினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக சாதனம் தயாரித்துக் கொடுத்து அவர்களை மகிழ்வித்ததால் எனக்கு ஏற்பட்டது ஆனந்தம்.’
கலாமின் இந்த பதில், மாணவர்களுக்கு மட்டும் அல்ல நம் ஒவ்வொருவருக்குமே வெற்றிக்கான OTP.
வெற்றியின் இரகசியம் உழைப்பினால் கிடைக்கும் தொழில்/வேலை சார்ந்த மகிழ்ச்சியில் இருப்பதைவிட, உழைப்பின் பலன் பலருக்கு பயனாய் இருக்கும்போது கிடைக்கும் பேரானந்தத்தில் இருக்கிறது என்பதுதான் அவர் உணர்ந்த, பிறருக்கு உணர்த்திய உண்மை.
வாழ்க்கையைப் பொறுத்தவரை நம் இலக்கை நோக்கியப் பயணத்தில் மனநிறைவோடு சென்றுகொண்டிருப்பதை வெற்றி எனலாம். இந்த லாஜிக் விளையாட்டுக்குப் பொருந்தாது. விளையாட்டைப் பொறுத்த வரை வெற்றி என்பது பிறரை முந்துவதால் கிடைக்கும் வெகுமதியே.
ஆனால் விளையாட்டில்கூட தோல்வியிலும் மதிப்பையும் மரியாதையையும் பெருமையும் அடைந்த ஒரு வீரர் இருக்கிறார் என்றால் அவர்தான் உசேன் போல்ட். இவர் தடகள உலகின் ஜாம்பவான் என்று வர்ணிக்கப்படுபவர். ஜமைக்கா நாட்டில் பிறந்தவர்.
இவர் சாதாரண வீரர் அல்ல. ஓட்டத்தின் தலைவன், ஓட்டத்துக்கு மறுபெயர் உசேன் போல்ட், உலகின் அதி வேக மனிதர் என்றெல்லாம் உலகமே பிரமிக்கும் வீரர். இவரே தோற்றுப்போகும் சூழலும் வந்தது.
லண்டனில் நடைபெற்ற தடகள உலக சாம்பியன்ஷிப் போட்டியில் உசேன் போல்ட் 4 *100 மீட்டர் ஓட்டப் போட்டியில் கலந்து கொண்டார். அத்துடன் ஓய்வு பெறுவதாக ஏற்கனவே அறிவித்து இருந்ததால் அவர் மீதுதான் அனைவரின் பார்வையும்.
இந்நிலையில் போட்டியின் போது 4-வது நபராக ஓடிய உசேன் போல்ட் தனது பாணியில் கடைசி நேரத்தில் வேகமெடுத்து தனக்கு முன் ஓடுபவரை முந்தும் முயற்சியின்போது எதிர்பாராத விதமாக அவரது இடது தொடையில் பலத்த காயம் ஏற்பட்டு வலியால் துடித்து மைதானத்தில் படுத்தே விட்டார். வெற்றி வாகை சூடுவார் என்று ஆவலோடு காத்திருந்தவர்களுக்கு இவரது தோல்வி பேரதிர்ச்சி. இலக்கை நிறைவு செய்ய முடியாமல் போனதால் சக வீரர்களிடம் உசேன் போல்ட் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.
இவர் மன்னிப்புக் கோரியதெல்லாம் பெரிய விஷயம் அல்ல. போட்டி முடிந்ததும் இவரை வென்ற அமெரிக்க வீரர் ஜஸ்டின் காட்லின் அந்த மகிழ்ச்சியை வெறித்தனமாக வெளிப்படுத்துவார் என்றே எல்லோரும் எதிர்பார்த்தனர். ஆனால், அவர் செய்தது என்ன தெரியுமா?
உசேன் போல்ட்டுக்கு முன்னால் மண்டியிட்டு வணங்கினார். காரணம், காட்லின் தோற்கடித்தது சாதாரண ஓட்டக்காரனை அல்ல. யாருமே வெல்ல முடியாத ஓட்டத்தின் தலைவனை. உசேன் போல்ட்டின் தடகள வாழ்வின் சகாப்தத்தில் ஜஸ்டின் காட்லின் இடம் பிடித்துவிட்டார். இது மாபெரும் சாதனை.
போட்டியில் சம்பிரதாயப்படி வெற்றிபெற்றது ஜஸ்டின் காட்லினாக இருந்தாலும், தன் இலட்சிய வாழ்க்கையில் வெற்றி பெற்றது உசேன் போல்ட்தான்.
வெற்றி பெற்றவன் தோல்வி அடைந்தவன் கால்களில் விழுந்து வணங்கி ஆசிர்வாதம் பெறும் வரம் எல்லோருக்கும் கிடைத்துவிடாது. உசேன் போல்டுக்கு எப்படி கிடைத்தது. தன் இலட்சியத்தில் தான் கொண்ட அபாரமான நம்பிக்கையினால் அதீத ஈடுபாட்டினால் அயராத உழைப்பினால் திறமையின் உச்சத்தை தன் வசப்படுத்தி உலகையே தன்மீது கவனம் கொள்ளச் செய்த வீரராயிற்றே. அதில் என்றுமே தோல்வியே கிடையாது உசேன் போல்டுக்கு. அதனால்தான் அந்தப் போட்டியில் தோல்வி அடைந்தாலும் வெற்றி பெற்றதை விட பல மடங்கு பெருமை அவருக்கு வந்து சேர்ந்தது.
போலவே, விளையாட்டில் வெற்றி பெற்ற ஜஸ்டின் காட்லின் மனிதாபிமானத்தின் அடிப்படையில் உசேன் போல்டின் கால்களில் விழுந்து வணங்கி வாழ்க்கையிலும் வெற்றி பெற்று இரட்டை வெற்றிக்குக் சொந்தக்காரராகி விட்டார்.
இப்படித்தான் ஜாக்பாட் அடிப்பதைப்போல நாம் அறிந்தோ அறியாமலோ நம்முடைய ஒழுக்கமும் நேர்மையும் நமக்கு வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ வெகுமதிகளை வெற்றி என்ற பெயரிலும், பேரானந்தம் என்ற பெயரிலும், பெருமகிழ்ச்சி என்ற பெயரிலும் வாரி வாரி வழங்கும். அவற்றை அள்ளிப் பருகி ஆனந்தமடைய நாம் தயாராக இருக்க வேண்டும் என்றால் தெளிந்த சிந்தனையோடு என்றென்றும் நம் இலக்கில் மட்டுமே உறுதியாகவும் நேர்மையாகவும் கொள்கைப் பிடிப்புடனும் இருக்க வேண்டும். மற்றவர்களை தோற்கடிக்க வேண்டும் என்ற உணர்வையே நம் அகராதியில் இருந்து தூக்கி எறிந்துவிட வேண்டும்.
நம் குறிக்கோளில் நாம் எத்தனை உறுதியாக இருக்கிறோம், எந்த அளவுக்கு நாம் ஈடுபாட்டுடனும் நேர்மையான வழியிலும் நம் உழைப்பை அர்பணிக்கிறோம் என்பதில் மட்டும் கவனம் வைத்து அதை நோக்கி ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். ஓட முடியாவிட்டால் ஊர்ந்தாவது செல்ல வேண்டும். நகர்தல் முக்கியம்.
இந்தா பிடிங்க உங்களுக்கான OTP… நேர்மை ஒழுக்கம் வெற்றியை வழங்கும்!
எழுத்தும் ஆக்கமும் காம்கேர் கே. புவனேஸ்வரி
புதிய தலைமுறை – பெண் மாத இதழ்
வாழ்க்கையின் OTP – 3
அக்டோபர் 2018