4-ம் தொழில்புரட்சி – 2 (குங்குமச் சிமிழ் – அக்டோபர் 16 – 31)

சென்ற இதழின் தொடர்ச்சி (http://compcarebhuvaneswari.com/?p=2768)

Robatics

ரோபோட்டிக்ஸ் (Robotics)  எனப்படும் தொழில்நுட்பம்  பல்வேறு உற்பத்தித் தொழில்களில்  அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Nano Technology

நானோ தொல்நுட்பம் (Nano Technology) எனப்படும் தொழில்நுட்பம் நுண்ணிய மூலக்கூறு அளவில் பொருட்களை கையாளும் தொழில்களில் பெரும் வளர்ச்சியை உண்டாக்கும்.

Quantum computing

குவாண்டம் கம்ப்யூட்டிங் (Quantum computing) கம்ப்யூட்டர்களின் செயற்திறனை  பலமடங்கு உயர்த்தும் என கருதப்படுகிறது.

Biotechnology

பயோடெக்னாலஜி  (Biotechnology) என்பது  நுண்ணுயிர்கள் மற்றும் நன்மை பயக்கும் மரபணுக்களை அடிப்படையாகக் கொண்டு வேளாண்மை, மருத்துவம், சுற்றுச்சூழல் மற்றும் தொழிற்துறைகளில் பயன்படுத்தப்படும் நுட்பமாகும்.  இதன் அடிப்படையிலான வளர்ச்சியும் நான்காம் தொழிற்புரட்சிக் காலத்தின் சிறப்பம்சமாகும்.

3D printing

முப்பரிமாண அச்சுத் தொழில்நுட்பம் (3D Printing)  நான்காம் தொழிற்புரட்சிக் காலத்தின் அதி உன்னத கண்டுபிடிப்பாகும். இதன் வளர்ச்சியும் நம் தொழில்நுட்ப வளர்ச்சியை மேம்படுத்திப் பயன்படுத்த உதவி செய்யும்.

Artificial Intelligence

நான்காம் தொழிற்புரட்சிக் கட்டத்தில் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) துறையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியும் குறிப்பிடத்தக்கதாகும்.  கம்ப்யூட்டரையோ அல்லது கம்ப்யூட்டரால் இயங்கும் ரோமோவையோ அல்லது சாஃப்ட்வேரையோ மனிதனைப் போலவே சிந்தித்துச் செயல்பட வைக்கும் தொழில்நுட்பமாகும். வீடியோ கேம்கள், கண்காணிப்பு கேமராக்கள், ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்தும் வழிகாட்ட செல்லும் நேவிகேஷன் மேப்கள் (Navigation & Map), ஃபேஸ்புக்கில் பயன்படும் உருவத்தை அடையாளம் காட்டும் நுட்பம் (Image Recognition), ஆப்பிள் ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்தப்படும் சிரி (Siri) போன்றவை ஆர்ட்டிஃபிஷியல் இண்டலிஜென்ஸ் தொழில்நுட்பத்தின் அடிப்படையிலேயே இயங்குகிறது.

நம்மை வலுக்கட்டாயமாக இழுத்து வந்த தொழில்நுட்பம்!

இணையம் அறிமுகமாகி தவழ ஆரம்பித்திருந்த காலகட்டத்தில் (1990), அப்போதுதான் நம்நாட்டில் நடைபயிலவே தொடங்கியிருந்த டெஸ்க்டாப் கம்ப்யூட்டருடன் இணைந்து செயல்பட ஆரம்பித்தது.

இணையமும் கம்ப்யூட்டரும் இணைந்து செயல்பட ஆரம்பித்த நேரத்தில் இவை இரண்டும் மனித உழைப்பை முடக்குவதன்மூலம் வேலைவாய்ப்பை குறைத்துவிடும் என்று சொல்லி மக்கள் அச்சம் கொண்டிருந்தனர். ஒருசில இடங்களில் கம்ப்யூட்டர் மயமாக்குதலை எதிர்க்கவும், போராட்டங்களும் செய்தனர்.

இரண்டிலுமே படித்தவர்கள் மட்டுமே பயன்படுத்தும் விதமாக ஆங்கிலம் மட்டுமே கோலோச்சியிருந்தது. பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே சாத்தியம் என்ற நிலையில் விலையும் உச்சத்தில் இருந்தது.

இன்று அந்த நிலை மாறிவிட்டது. அவரவர் தாய்மொழியில் தொழில்நுட்பத்தைக் கையாளும் எளிய சூழலும், அனைத்து டிஜிட்டல் சாதனங்களும், இணைய சர்வீஸும் அவரவர் பட்ஜெட்டுக்கு ஏற்ற கட்டணத்தில் கிடைக்கும் அற்புத மாற்றமுமே டிஜிட்டல் மயமானதற்கு மிகமுக்கியக் காரணிகள்.

டெஸ்க்டாப் கம்ப்யூட்டரில் மட்டுமில்லாமல்  ஐபேட், டேப்லெட், ஸ்மார்ட்போன், தொலைக்காட்சி, கார், பைக், ஏசி,  மியூசிக் சிஸ்டம் என நம்மைச் சுற்றியுள்ள அனைத்திலும் இணையத்தின் ஆட்சிதான். கைகளில் கட்டியிருக்கும் கைகடிகாரம் (ஆப்பிள் வாட்ச்), கண்களுக்கான கண்ணாடி (கூகுள் கிளாஸ்), போன் பேச வசதியாக காதுகளில் ப்ளூடூத் என  நம் உடம்புடனும் ஒட்டி உறவாடத் தொடங்கிவிட்ட  இணையத்தையும் அது சார்ந்த டிஜிட்டல் சேவைகளையும் ‘வேண்டாம்’ என்று மறுக்கவோ, வெறுத்துப் புறந்தள்ளவோ முடியாத கட்டாயச் சூழல்.

நம்மைச் சுற்றி இயங்குகின்ற கல்விக்கூடங்கள், வங்கிகள், சிறு கடைகள் முதற்கொண்டு மெகா சைஸ் மால்கள், மருத்துவமனைகள், சினிமா தியேட்டர்கள், பஸ் ரயில் மற்றும் விமானப் பயணங்கள் டிக்கெட் முன்பதிவு, உணவங்கள், கால்டாக்ஸி சர்வீஸ்கள், வானொலி முதற்கொண்டு தொலைக்காட்சி பத்திரிகைகள் உட்பட அனைத்துவிதமான மீடியாக்கள் அத்தனையிலும் இணையம் சார்ந்த டிஜிட்டல் சர்வீஸ்.

இவைதவிர இணையம் சார்ந்த சமூக வலைதளங்களும் நம்மை நெருக்கி ‘நாங்களும் இருக்கோம்…’ என தாங்களாகவே முன்வந்து  தகவல்களையும் சேவைகளையும் கொட்டித் தரக் காத்திருக்கின்றன.

தினமும் வாட்ஸ் அப்பில் ‘குட் மார்னிங்’ மெசேஜ் அனுப்புவதில் இருந்து கதை, கவிதை, ஜோக்ஸ், மீம்ஸ் என பலதரப்பட்ட விஷயங்களையும் அதிகம் படிக்காதவர்கள்கூட பகிர ஆரம்பித்துவிட்டார்கள். அந்த அளவுக்கு எளிமையானதுதான் இணையம் சார்ந்த டிஜிட்டல் தொழில்நுட்பம்.

கிராமப்புறத்தில் இருந்து சென்னை போன்ற மாநகரங்களுக்கு வந்து கால்டாக்ஸி ஓட்டுகின்ற, அதிகம் படிக்காத கால்டாக்ஸி டிரைவர்கள்கூட ஜி.பி.எஸ் எனப்படும் இடம்காட்டும் கருவி ஆங்கிலத்தில் சொல்லும் வழிமுறைகளையும், மேப் காட்டும் வழிகளையும் புரிந்துகொண்டு வலம் வருவதைப் பார்க்கிறோம். அவர்களால் எப்படி தொழில்நுட்பத்தை அப்டேட் செய்துகொள்ள முடிகிறது? அப்டேட் செய்துகொண்டால்தான் சம்பாதிக்க முடியும் என்ற கட்டாயம். எனவே அவசியம் என்று வரும்போது அனைத்துமே சாத்தியம்தான். எளிமைதான்.

தனி மனிதர்களின் வாழ்க்கைத் தரம் உயரவும், அதன்மூலம் சமுதாயம் மேம்படவும் தொழில்நுட்பம் கைக்கொடுக்கிறது என்பதை யாராலும் மறுக்க இயலாது.

இன்று டிஜிட்டல் இந்தியாவுக்கு ஆதரவு கொடுக்கவும் முடியாமல், புறந்தள்ளி வாழவும் முடியாமல் அதை சரியாகக் கையாளத் தெரியாததாலேயே நம்மில் பெரும்பாலானோர் குழப்பத்துடன் அதன்போக்கில் சென்றுகொண்டிருக்கிறார்கள்.

டிஜிட்டல் மயமாக்கப்பட்ட இந்த இணைய உலகில் பாதுக்காப்பாக பயணிப்பது குறித்தும், அவற்றை சரியாகக் கையாள்வது குறித்தும் தெரிந்துகொண்டால் போதுமானது.

சைபர் வேர்ல்ட்

நாம் இயங்கிக்கொண்டிருக்கும் உலகம் போலவே இணையத்திலும் ஒரு உலகம் இயங்கிக்கொண்டிருக்கும். அந்த சைபர் வேர்ல்டிலும் நாம் இணைந்து வாழும்போது மட்டுமே நம்மால் இந்த உலகத்துடன் ஒட்டி வாழ முடியும். இப்போது இந்த உலகம் நமக்கு இரண்டு வாய்ப்புகளைக் கொடுத்துள்ளது. ஒன்று நேரடியாக அந்தந்த அலுவலகங்களுக்குச் சென்று வசதிகளைப் பெறுவது. மற்றொன்று இருந்த இடத்தில் இருந்தே ஆன்லைனில் அந்த வசதிகளைப் பெறுவது.

வரும் காலத்தில் எல்லாமே இணைய மயமாக்கப்பட்டிருக்கும். ஆன்லைன் சேவைகள் மட்டுமே நமக்குக் கிடைக்கும். அதற்கு இப்போதில் இருந்தே நம்மைப் பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும்.

இட்லியில் இருந்து இண்டலெக்ச்சுவல் வரை எல்லாமே நம் இருப்பிடத்துக்கே…    

முன்பெல்லாம் திருநெல்வேலி அல்வா வேண்டுமென்றால் திருநெல்வேலிக்கே சென்றால் சாப்பிடுவோம் அல்லது அங்கிருந்து வரும் நபர்கள் வாங்கி வந்தால் உண்டு. இன்று ஆன்லைனில் ஆர்டர் செய்தால் அடுத்த 24 மணி நேரத்துக்குள் அல்வா நம் வயிற்றில் ஜீரணமே ஆகி இருக்கும்.

இன்று அந்த நிலை இன்னும் முன்னேறி மொபைல் ஆப் மூலம் பசி எடுப்பதற்கு அரை மணி முன்பு ஆர்டர் செய்தால் நாம் விரும்பும் எந்த உணவானாலும் நம் இருப்பிடம் நோக்கி சுடச்சுட வந்துவிடுகிறது. அதுவும் நாம் எந்த உணவகத்தில் சாப்பிட விருப்பப்படுகிறோமோ அங்கிருந்தே.

சென்னையில் இருந்து சிங்கப்பூர் அலுவலகங்களுக்கு சுடச்சுட இட்லி தினமும் விமானத்தில் பயனமாகின்றன.

சென்னை அமைந்தகரையில் உட்கார்ந்துகொண்டு அமெரிக்காவில் உள்ள கடையில் இனிப்பு மிட்டாய் வியாபாரத்துக்கு அனுப்புகிறார்.

இவை மட்டுமே?

நம் வீட்டில் மண்டிக்கிடக்கும் குப்பையை சுத்தமாக்க வேண்டுமா… பழைய புத்தகங்களையும் பேப்பர்களையும் பழைய புத்தகக்கடையில் போட வேண்டுமா… மளிகைக்கடை செல்ல வேண்டுமா… நினைத்த நேரத்தில் சினிமாவுக்குச் செல்ல வேண்டுமா… டாக்டரிடம் அப்பாயிண்ட்மெண்ட் வேண்டுமா… நல்ல புத்தகங்களை லைப்ரரியில் இருந்து எடுத்துவர வேண்டுமா… வாடகைக் கார் வேண்டுமா… சுடச்சுட அல்வா சாப்பிட ஆசையா… இப்படி உங்களுக்கு எது தேவை என்றாலும் அது உங்கள் இருப்பிடம் நோக்கி வர காத்திருக்கும் அதிவேக டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

தேவை உங்களிடம் இணைய வசதியுடன் ஒரு ஸ்மார்ட்போன், வங்கி அக்கவுண்ட். இணையம், ஸ்மார்ட்போன், வங்கி அக்கவுண்ட் இஅவை மூன்றும் ஒன்றோடொன்று இணைந்து செயல்பட்டு நம் தேவைகளை சுலபமாக்கியுள்ளது.

கல்வித்துறையில்…

 வண்ணமயமான படங்களுடன் பாடங்கள், அசையும் அனிமேஷனில் அறிவியல் விளக்கங்கள், கம்ப்யூட்டர் சிடியில் ஆடியோ வீடியோவுடன் கணிதம், இணையத்தில் இலக்கியம், மொபைல் ஆப்ஸ்களில் மொத்த படிப்பும் என அச்சு முதல் ஆப்ஸ் வரை டிஜிட்டலில் கல்வித்துறை கலக்கி வருகிறது.

தமிழ்நாட்டில் ஒரு அரசுப் பள்ளியில் QR கோட் முறையை அறிமுகப்படுத்தியுள்ளனர். அதில் ஒவ்வொரு மாணவனின் பெயர், முகவரி, தொலைபேசி எண்கள் முதற்கொண்டு அன்றாடம் நடக்கின்ற பாடங்கள், வீட்டுப் பாடங்கள் என அனைத்தும் பதிவாக்கப்பட்டிருக்கும். பெற்றோர்களுக்கான அன்றாடம் சொல்ல வேண்டிய தகவல்களையும் அதில் அப்டேட் செய்துவிடுகிறார்கள்.

ஒவ்வொரு சப்ஜெக்ட்டுக்கான பாடங்களையும் அதிலேயே அப்டேட் செய்து வைக்கிறார்கள். அந்த QR கோடை ஸ்கேன் செய்தால் பாடங்கள் படம்போல விரிகின்றன. மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் மிக சுலபமாகவும் பயனுள்ளதாகவும் இந்த QR கோட் முறையிலான பாடதிட்டம்.

கல்வித்துறையில் உச்சகட்ட சாதனையாக இதைச் சொல்லலாம்.

வேலைவாய்ப்பில்…

ஆன்லைனில் ஏராளமான வேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. உங்களிடம் உள்ள ஒவ்வொரு திறமையையும் வெப்சைட்டுகள் மற்றும் மொபைல் ஆப்ஸ்கள் மூலம் அவற்றை வேலையாக்கவும் தொழிலாக்கவும் வாய்ப்புகள் ஏராளமாக கொட்டிக்கிடக்கின்றன.

உங்களிடம் எழுத்துத்திறமை இருந்தால் நீங்களே ஆன்லைனில் பத்திரிகை நடத்தலாம். நல்ல குரல்வளம் இருந்தால் வானொலி போல நீங்களே உங்கள் பெயரில் வனொலி சேனலே நடத்தலாம். வீடியோ மற்றும் புகைபபடம் எடுக்கும் ஆற்றலும் நல்ல கற்பனைத் திறனும் இருந்தால் உங்கள் பெயரில் யு-டியூப் சேனல் நடத்தலாம்.

மற்றவர்களின் பிசினஸுக்கு நீங்கள் ஃபேஸ்புக், டிவிட்டர், யு-டியூப் மற்றும் இதர சமூக வலைதளங்கள் மூலம் விளம்பரம் செய்துகொடுக்கும் விளம்பர நிறுவனம் தொடங்கலாம்.

ஆன்லைனில் டேட்டா எண்ட்ரி, மொழிபெயர்ப்பு, டிஸைனிங், அனிமேஷன், மெடிகல் டிரான்ஸ்கிரிப்ஷன், வெப்டிஸைனிங், ஆன்லைன் டியூஷன் என வேலைவாய்ப்புகளும் தொழில் வாய்ப்புகளும் கொட்டிக்கிடக்கின்றன.

உங்கள் திறமை என்னவென்று கண்டுபிடிக்க வேண்டியது மட்டுமே உங்கள் வேலை. அதை சம்பாத்தியமாக்கும் வழிகள் இணையத்தில் ஏராளம்.

தவிர நான்காம் தொழில்புரட்சியின் மூலம் (Internet of Things (IOT), Big Data, Nano Technology, Robatics, Quantum computing, Bio Technology, 3D printing, Artificial Intelligence) அந்தந்தப் பிரிவுகளில் உருவாகும் வேலைவாய்ப்புகளும் பெருகி வருகின்றன.

 பணம் பத்திரம்!

டிஜிட்டல் உலகில் பெரும்பாலானோரை பயமுறுத்துவது பணம் சார்ந்த விஷயம்தான். ஏடிஎம்மில் மூலமும் ஆன்லைனில் நம் அக்கவுண்ட்டில் இருந்தும் நம் அனுமதியின்றி நம் பணம் களவாடப்படுவதில் இருந்து பாதுகாப்பாக இருப்பதை தெரிந்துகொள்வோம்.

நேற்றுகூட  எனக்கு ஒரு போன் கால் வந்தது.

‘நான் பேங்க் மேனேஜர் பேசறேன்… உங்கள் டெபிட் கார்ட் எண் வெரிஃபிகேஷன் செய்யணும்… இல்லைனா பிளாக் ஆயிடும்…’ என்று வடநாட்டுக்குரல். இதே குரலில் எனக்கு பலமுறை போன் அழைப்பு வந்திருக்கிறது. ஒவ்வொரு முறையும் கடுமையாக எச்சரித்துத்தான் போனை வைப்பேன்.

இந்த முறை.. ‘ம் சொல்லுங்க… விரிவா சொல்லுங்க… ரெகார்ட் செய்துக்கறேன்…’ என்று சொன்னதும் போன் கால் கட் ஆனது.

எந்த வங்கியில் இருந்தும் நேரடியாக இப்படி உங்கள் டெபிட் கார்ட்/  கிரெடிட் கார்ட் எண்கள், அவற்றின் பின் எண்கள், ஆன்லைன் அக்கவுண்ட் எண்கள், பாஸ்வேர்ட் போன்றவற்றை போனிலோ இமெயிலிலோ அல்லது எந்த விதத்திலும் கேட்கமாட்டார்கள் என்பதில் உறுதியாக இருங்கள்.

டெபிட் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தும்போது உங்கள் கண்முன் நீங்களே நேரடியாக பின் எண்களை டைப் செய்து பயன்படுத்துங்கள்.

அதுபோல ஆன்லைன் அக்கவுண்ட் பாஸ்வேர்ட் விவரங்களை எங்கும் எதிலும் வெளிப்படையாக எழுதி வைக்காதீர்கள்.

வங்கிகளும் தங்கள் டிஜிட்டல் செக்யூரிட்டியை பலப்படுத்த வேண்டும்.

இணையத்துடன் இணைந்து செயல்படுவோம்.

ஆன்லைனில் வாசிக்க…  http://kungumam.co.in/CArticalinnerdetail.aspx?id=3694&id1=93&issue=20181016

(முற்றும்)

எழுத்தும் ஆக்கமும் காம்கேர் கே. புவனேஸ்வரி
குங்குமச் சிமிழ் – குங்குமம் குழுமப் பத்திரிகையில் வெளியான கட்டுரையின் இறுதிப் பகுதி

 

(Visited 194 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon